சூப்பர் டீலக்ஸ் பாய்ஸ்!



‘மச்சான் நேத்திக்குதான் அந்தப் படத்தை பார்த்தேன். மாஸ்! ஒவ்வொருத்தரும் என்னாமா நடிச்சிருக்காங்க? இப்படி ஒரு படத்தை நான் பார்த்ததே இல்லை மச்சி! இன்னும் பத்து வருஷங்களுக்கு இந்தப் படம் பத்தி பேசலாம். அவ்வளவு விஷயம் இருக்கு...’  

‘என்ன வெங்காயப்படம்? ஒரு மண்ணும் புரியலை. இப்படியெல்லாம் படம் எடுத்தா எப்படி நாட்டுல ஒழுக்கம் இருக்கும்? கொஞ்சம் கூட சமூகப் பொறுப்பே இல்லாம படம் எடுத்து வெச்சுருக்காங்க...’ இப்படி இருவிதமான கருத்துகளைப் படம் பார்த்தவர்கள் அடுக்கினாலும் ‘சூப்பர் டீலக்ஸ்’பார்த்த ஒட்டுமொத்த பார்வையாளர்களின் ஒரே கேள்வி ‘யாருப்பா அந்த அஞ்சு பசங்க? அவங்களுக்குனு இருக்கிற தனி டிராக்குல நின்னு விளையாடியிருக்காங்களே..!’ என்பதாகத்தான் இருக்கும்.

இதே கேள்வியுடன் ஐவரையும் சந்தித்தோம். படத்தில் இருக்கும் தோற்றத்துக்கு நேர் மாறாக நேரில் காட்சியளிக்கிறார்கள். அத்தனை மாற்றங்கள். உடல் எடையைக் குறைத்து, கூட்டி, முடி வளர்த்து, வளர்த்த முடியை வெட்டி... என ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைக் கொடுத்து நடித்திருக்கிறார்கள்.
‘‘நான் ஜபார். படத்துல அந்த 42 இன்ச் டிவிக்கு சொந்தக்காரன். தூயவன் கேரக்டர்ல நடிச்சவன். ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துல அசிஸ்டென்ட் டைரக்டரா வேலை செய்தேன். அப்படியே இந்தக் கேரக்டர்ல நடிச்சேன்.

சென்னைதான் சொந்த ஊரு. அப்பா செஸ் கோச். அம்மா ஹவுஸ் ஒயிஃப். அண்ணன் வெளிநாட்டுல வேலை பார்க்கறார். விஸ்காம் படிச்சேன், ஒரு படத்துல வேலையும் பார்த்திருக்கேன்.‘சூ டீ’ல காஜி பாலாஜியா நடிச்ச விஜயராம் மூலமா இந்தப் பட வாய்ப்புக் கிடைச்சது. டைரக்டராவதுதான் நோக்கம். நடிகனானது ஸ்வீட் ஆக்சிடெண்ட்...’’ என ஜாபர் முடிக்க, காட்சிக்குக் காட்சி கைதட்டல்களை அள்ளிய காஜி என்கிற காஜி பாலாஜியாக நடித்த விஜயராம் பேசத் தொடங்கினார்.

‘‘எனக்கும் சென்னைதான் சொந்த ஊரு. படிப்பை விட நடிப்புமேலதான் ஆர்வம். கூத்துப் பட்டறைல சேர்ந்து நடிப்புக் கத்துக்கிட்டேன். நிறைய இங்லீஷ் தியேட்டர் நாடகங்கள்ல நடிச்சிருக்கேன். ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்துல குற்றவாளி கேரக்டர்ல நடிச்சிருக்கேன்.

தியாகராஜா குமாரராஜா சார் என்னை அந்தப் படத்துல பார்த்திருக்கார். அப்பறம் என் நண்பர் மூலமா இந்த காஜி கேரக்டர் வாய்ப்பு எனக்குக் கிடைச்சது...’’

விஜயராம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ‘‘ஓவர் வெயிலு புரோ... பசிக்கிது! எதுனா வாங்கிக் கொடுங்க...’’ என ஓரிடத்தில் நிற்காமல் நோபில் குறும்புத்தனம் செய்ய, ‘‘ஆரம்பிச்சுட்டான்டா! எங்க கேங்ல உண்மையான காஜி இவன்தாங்க...’’ என மற்றவர்கள் செல்லமாக அலுத்துக் கொண்டனர்.‘‘போங்கடா...’’ என உதட்டைப் பிதுக்கிய நோபில் வேறு யாருமல்ல... படத்தை முட்டை பப்ஸ் ஆக வெளுத்து வாங்கியவர்தான்!  

‘‘எஸ்! ஐயம் நோபில். என் கேரக்டர் வசந்த் என்கிற முட்டை பப்ஸ். நானும் சென்னைதான். அப்பா வெளிநாட்ல வேலை பார்க்கறார். அம்மா, நர்ஸ். 10வது படிக்கிறப்ப ‘சூது கவ்வும்’ வாய்ப்புக் கிடைச்சது. ஒரு வீடியோ கேம் ஸ்கூல் பையனை சேது சார் டீம் கடத்துவாங்களே... அந்தக் குழந்தையே நான்தான்!

அப்பறம் காலேஜ் முடிச்சுட்டு அடுத்து என்னனு யோசிச்சப்ப ஜபார் ப்ரோ என்னைக் கூப்பிட்டார்! ஆடிஷன் மூலமா ‘சூப்பர் டீலக்ஸ்’ வாய்ப்புக் கிடைச்சது. தட்ஸ் ஆல்...’’ என காலரை தூக்கிவிட்டு மார்வெல் சூப்பர் ஹீரோ போஸில் மேலே பார்த்த வண்ணம் நோபில் நிற்க... தலையில் அடித்தபடி ஜெயந்த் ஆரம்பித்தார்.

‘‘படத்துல மோகன் கேரக்டர்ல நடிச்சிருக்கேன். எனக்கு முழுக்க முழுக்க ரம்யா கிருஷ்ணன் மேம், மிஷ்கின் சார், அப்பறம் நவீன் கூடதான் சீன்ஸ் அதிகம். அப்பா, அம்மா ரெண்டு பேரும் பிஸினஸ் ஜோடி! ஸ்கூல் படிப்பு... அப்பறம் தனியார் டிவில பிரபல டான்ஸ் ஷோ டைட்டில் வின்னர்!

நடிப்புல ஆர்வம் அதிகம். தமிழ் & இங்கிலீஷ் தியேட்டர் ஆர்டிஸ்ட். ஃப்ரெண்ட்ஸுடன் சேர்ந்து டான்ஸ் கம்பெனி ஒண்ணு வெச்சிருக்கேன். தவிர சொந்தமா சினிமா அண்ட் விளம்பர ப்ரொடக்‌ஷன் கம்பெனி இருக்கு! ஜபார், என் ஃப்ரெண்ட். அவர் மூலமா ஆடிஷன்ல கலந்துகிட்டு செலக்ட் ஆனேன்.

சிவகார்த்திகேயன் சார் நடிச்ச ‘காக்கி சட்டை’ல ஒரு பெங்காலி பையன் ஏரோபிளேன் படங்களை எல்லாம் சேகரிப்பானே... அந்தப் பையன் நான்தான்!’’ என ஜெயந்த் முடிக்க, நவீன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார்.  ‘‘ரம்யா மேம், மிஷ்கின் சார் பையனா சூரி கேரக்டர்ல நடிச்சிருக்கேன். சொந்த ஊரு ஈரோடு. ஆனா, சென்னைல செட்டிலாகிட்டோம். அப்பா டான்ஸ் கொரியோகிராஃபர். அம்மா ஜும்பா டீச்சர். போதாதா..? எனக்கும் டான்ஸ் ஆர்வம் வந்துடுச்சு. முறைப்படி கத்துக்கிட்டேன். என்னை வளர்த்ததுல எங்க மாஸ்டருக்கும் பெரிய பங்கு இருக்கு.

டிவி சேனல் நிகழ்ச்சிகள்ல ஆடியிருக்கேன். ‘மாணிக்’, ‘ஆர்.கே. நகர்’ படங்கள்ல நடிச்சிருக்கேன். ‘சூப்பர் டீலக்ஸ்’ கூட எங்க மாஸ்டர் மூலமா கிடைச்ச வாய்ப்புதான்...’’ என நவீன் முடித்ததுமே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தக் கேள்வியைக் கேட்டோம். ‘படத்தில் இருக்கும் கேரக்டர் களுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இருக்கா?’

‘‘எங்கடா இன்னும் இதைக் கேட்கலையேனு பார்த்தோம்! எங்க எல்லார் சார்பாகவும் ஜபார் இதுக்கு பதில் சொல்வார்...’’ என கோரஸாக பந்தைத் தூக்கிப் போட அதை கேட்ச் பிடித்தபடி ஜபார் தொண்டையைக் கனைத்தார்.  ‘‘யார்தான் அந்த கேரக்டர்ஸ்ல இல்லை..? எல்லாருக்குள்ளயும் ஒரு பிரைவேட் இருக்கு. என்ன... வெளில சொல்லிக்க மாட்டோம்.

ஆக்சுவலா நாங்க யாருமே இந்த கேரக்டர்ஸை நெகடிவ்வா பார்க்கலை. எல்லாத்துக்கும் மேல ‘சூப்பர் டீலக்ஸ்’ மாதிரியான படத்துல நடிக்க வாய்ப்பு கிடைச்சதே பெரிய விஷயம். அதிலும் தியாகராஜா குமாரராஜா சார் டைரக்‌ஷன்ல நடிக்கறதுனா சும்மாவா..?இப்ப எல்லாருக்கும் எங்களைத் தெரிஞ்சிருக்கு. பாருங்க நீங்களே பேட்டி எடுக்க வந்திருக்கீங்க! சேது சார், ஃபகத் சார், சமந்தா மேம்க்கு கைதட்டல் கிடைக்கறது வேற. அவங்க சீனியர்ஸ். அதே கைத்தட்டல் எங்களுக்கும் கிடைக்குதே... அதுதான் முக்கியம்.

இப்ப நாங்க அனுபவிக்கற அதே சந்தோஷத்தை எங்க வீடுகள்லயும் அனுபவிக்கறாங்க. வி ஆர் ஹேப்பி...’’ என ஜபார் முடிப்பதற்குள் காஜி விஜயராம் இடைமறித்தார்.‘‘அதுக்காக நான் ரியல் லைஃப்லயும் பெண்கள் விஷயத்துல வீக்குனு நினைச்சுடாதீங்க! நான் ரொம்ப நல்ல பையன். நல்ல மகன். நல்ல பேரன். நல்ல குடிமகன்! மறக்காம இதை பதிவு பண்ணிடுங்க...’’ என்று சொன்னதும் ஹோ... என மற்றவர்கள் கூச்சலிட்டனர்!

‘‘இருங்கடா... இன்னும் முடிக்கலை...’’ அலுத்தபடி விஜயராம் தொடர்ந்தார். ‘‘எங்க எல்லாருக்குமே நடிப்பு தவிர இயக்கம், தியேட்டர் ஆர்டிஸ்ட், டான்ஸ், புரொடக்‌ஷன் கம்பெனி... இப்படி இன்னொரு புரொஃபஷனும் இருக்கு! உண்மையான சந்தோஷம் என்னனா... எல்லாருமே +1 படிக்கிற பசங்களா கரெக்டா பொருந்தியிருந்தோம். எல்லாரும் எங்களை டீன் ஏஜ்னு நினைக்கறாங்க. நவீன் தவிர மத்த எல்லாருமே 20 வயசுக்கு மேற்பட்டவங்க. குறிப்பா ஜபாருக்கு 28 வயசு!’’ காஜி விஜயராம் இப்படி முடித்ததும் அனைவரும் கெத்தாக நிமிர்ந்து நின்றனர்.

‘‘அண்ணா... என் சிக்ஸ் பேக் தெரியறா மாதிரி போட்டோ எடுங்க!’’ என முட்டை பப்ஸ் நோபில் வேண்டுகோள் வைக்க... அனைவரும் அவரை அடிக்கப் பாய்ந்தனர்!   

ஷாலினி நியூட்டன்

ஆ.வின்சென்ட் பால்