சூப்பர் டீலக்ஸ்



நான்கு கதைகள் இணைந்து பயணமாகும் ‘சூப்பர் டீலக்ஸ்’!கணவன் அறியாமல் காதலனின் மனச்சுமை அகற்ற வீட்டிற்கு வரவழைக்கும் சமந்தா; ஸ்கூலுக்குப் போகாமல்  போர்ன் படங்களைப் பார்க்கத் துடிக்கும் மாணவர்கள்; பார்த்தறியாத அப்பாவைக் காணத்துடிக்கும் மகனும் குடும்பமும்; சுனாமியில் பிழைத்துத் திரும்பி கடவுளில் கரையும் ஒருவன்... என நான்கு கதைகளின் பின்இணைப்புகள் கதைக்குள் உருண்டோடி, தமிழ் சினிமா கண்டுகொள்ளாத புதுப்போக்கில் மனிதர்களின் இயல்பை உள்ளது உள்ளபடி சொல்கிறது ‘சூப்பர் டீலக்ஸ்’.

கதை பார்த்து அதன் முடிவு நோக்கி பயணப்படும் நம் சம்பிரதாயங்களை இயக்குநர் பொருட்படுத்தவில்லை. புனிதப்படுத்தவுமில்லை. நம் மனிதர்களின் இயலாமையை, அழுத்தத்தை, பொய் மனதை, புறக்கணிப்பை உள்ளங்கை பனித்துகள்கள் பொலபொல என கரையும் வேகத்தில் துலக்கமாகச் சொன்ன வகையில் இயக்குநர் தி.குமாரராஜாவுக்கு சலாம்!

ஹீரோயிசத்தைத் தள்ளி வைத்துவிட்டு பகத் அருமை. மனதில் கனன்றுகொண்டிருக்கும். கோபத்தையும் பதற்றத்தையும் வார்த்தைகளில் அள்ளிச் சுருட்டுகிறார். படத்திற்கு ஆகச்சிறந்த கொடை சமந்தா. உடன் அவர்களைத் தொடரும் பகவதி பெருமாள். கற்பு, ஆண் - பெண் உறவின் போதாமைகள் நமக்கு அறிமுகமாகின்றன.

அப்பாவின் வரவிற்காக வழிமேல் விழிவைக்கும் சிறுவன் அஸ்வந்த் காவியத்தனத்தை எட்டி நிற்கிறான். வருடம் கழித்து வந்து, தன் ‘மனைவி’ முன் உடை மாற்றும் அந்த உண்மை, பதறி நிற்கும் காயத்ரி. எப்படியிருந்தாலும் தன் ‘அப்பா’வை வேண்டும் இடங்கள் எல்லாம் நாம் பார்த்து பழக்கப்பட்ட தடத்தில் இல்லாதவை.

விஜய் சேதுபதி ‘ராசுக்குட்டி’ என அழைக்கும் போதெல்லாம் குடல் நடுக்கம் ஏற்படுவது இயற்கை. திருநங்கையின் உடல்மொழியில் சேதுபதி இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். ஏலியன்..? ஒட்டவேயில்லை. பகவதி பெருமாள், அதிகாரத்தின் குறுக்கு வெட்டுத்தோற்றம். மிஷ்கின் பாத்திரம் உணர்ந்திருக்கிறார். நான்கு மாணவர்களின் உலகம் நம் பரிசீலனைக்குரியது. தன் கடந்த காலத்தைப் புதைத்துக்கொண்டு, மகனின் உடல் நலத்திற்காகப்  பதறி ஓடி கலங்கும் ரம்யா கிருஷ்ணனின் நிமிடங்கள் மனதைப்  பிசைகிறது.

ஆண்ட்ராய்ட் போன் காலத்தில் பிட்டு படம் பார்க்க டிவிடி தேடி அலைவது இடறுகிறது. போலவே டீன் ஏஜ் பருவத்திலேயே திருநங்கையாக மாற வீட்டை விட்டு வெளியேறி விடுவார்கள். படத்திலோ ஒரு குழந்தை பிறந்த பிறகு வெளியேறுவதுபோல் பதிவு செய்திருக்கிறார்கள். இப்படி படத்தை விட்டு விலக வைக்கும் இடங்கள் அநேகம் இருக்கின்றன.

யுவன் ஷங்கரின் பின்னணி வன்மமும் சோகமும், பிரியத்தையும், சமயங்களில் பதற்றத்தையும் தருகிறது. வினோத் - நீரவ்ஷா படத்தோடு அழகில் அப்படியே பயணிக்கிறார்கள்.நமது பார்க்கப்படாத பக்கங்கள் சுவாரஸ்யம் நிரம்பியவை. அப்படிப்பட்டவர்களை குமாரராஜாவின் அரிய வண்ணத்தில் பார்க்க பெரும் வாய்ப்பு.

குங்குமம் விமர்சனக் குழு