தல புராணம்-மெட்ராஸ் சேம்பர்



மெட்ராஸின் வணிக வளர்ச்சிக்கும் பல்வேறு பொதுத் துறை நிறுவனங்கள் இங்கே உருவாகவும் வித்திட்ட ஓர் அமைப்பு மெட்ராஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் (Madras Chamber of Commerce & Industry). சுருக்கமாக, மெட்ராஸ் சேம்பர்!வர்த்தக நலன்களைக் காப்பாற்றி, அதைப் பாதுகாக்கும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு, 183 வருடங்களைக் கடந்து இன்றும் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.

எதற்காக உருவாக்கப்பட்டது? அதைப் பார்ப்பதற்கு முன் ஆரம்ப கால வணிகம் குறித்து ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்!மெட்ராஸைச் சுற்றி மலிவாகக் கிடைத்த அச்சடிக்கப்பட்ட காலிகோ துணிகளே ஆங்கிலேயர்கள் இங்கே தங்கி வணிகம் செய்யக் காரணம். இந்த வணிகத்தை அவர்கள் ஏகபோகமாக நடத்தி வந்தனர். அதாவது, கிழக்கிந்தியக் கம்பெனி மட்டுமே மெட்ராஸில் அங்கீகாரம் பெற்ற ஒரே வர்த்தகர்.


இவர்களுக்கு துபாஷிகளாக இருந்த (இருமொழி தெரிந்தவர்கள்) இந்தியர்கள் உதவினர். இதில் பெரும்பாலான துபாஷிகள் கம்பெனியின் வணிகர்களாகவும் இருந்தனர்.

முதலில் பேரி திம்மப்பா கம்பெனியின் தலைமை வணிகராக இருந்தார். அவரின் மறைவிற்குப் பிறகு காசி வீரண்ணா வந்து சேர்ந்தார். இவர்களுக்கு கம்பெனியும் நிறைய சலுகைகள் அளித்தது.  ஆனால், தங்கள் குடியிருப்பைப் பயன்படுத்தி தனியார்களோ அல்லது வெளிநபர்களோ இங்கே வணிகத்தில் ஈடுபடுவதை கம்பெனி கடுமையாக எதிர்த்தது. ஆனாலும், தனியார்களின் கப்பல்கள் மெட்ராஸில் நங்கூரமிடத்தான் செய்தன. காரணம், தனியார் வணிகத்திலேயே அதிக லாபம் கிடைத்தது.

இதனால், கம்பெனி பணியாளர்கள் தங்கள் சொந்தக் கணக்கில் உள்ளூரில் பொருட்களை வாங்கி, அதை இப்படியான தனியார் கப்பல்கள் மூலம் அனுப்பி அதிக லாபம் ஈட்டினர். ஒருமுறை கோட்டையிலிருந்த கம்பெனியின் அதிகாரிகள், யாருக்கும் தெரியாமல் சாந்தோம் பகுதிக்குள் வந்த கப்பலுக்குச் சென்று தனி வணிகத்தில் ஈடுபட்டு லாபம் பார்த்தனர்.

கம்பெனி கொடுத்த குறைவான சலுகைகளே பணியாளர்கள் இப்படியான சொந்த வர்த்தகத்தில் ஈடுபடக் காரணம். இந்த விஷயங்கள் எல்லாம்
கம்பெனிக்குத் தெரிந்தபிறகும் பணியாளர்களை மறைமுகமாக ஊக்கப்படுத்தவே செய்தது.இதனால், கம்பெனி பணியாளர்கள் இங்கிலாந்தில் உள்ள தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களைத் தனியார் வர்த்தகத்தில் ஈடுபட அழைத்தனர். இதன்பிறகு, Free merchants of Madras எனப்படும் தனி
வணிகர்கள் அதிகரித்தனர்.

அதுவரை வணிகத்தில் ஏகபோகமாக ஆட்சி செய்த கிழக்கிந்தியக் கம்பெனியினர், இந்தத் தனி வணிகர்களையும் ஆதரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வராத பொருட்களை வணிகம் செய்ய இந்தத் தனி வணிகர்களை அனுமதித்தனர்.  

இப்படியாகவே 1788ல் தாமஸ் பாரி தனி வணிகராக லைசென்ஸ் பெற்று வணிகத்தைத் தொடங்கினார். இவருக்கு முன்பே பின்னி குடும்பம் மெட்ராஸ் வந்துவிட்டாலும் 1797ம் வருடம் வந்த ஜான் பின்னியே, பின்னி அண்ட் கோவினை ஆரம்பித்தார். தொடர்ந்து, தனி வணிகர்கள் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கினர்.

குறிப்பாக நவாப்பின் ஆட்சி முடிவுக்கு வந்த நேரம், இங்கே நிறைய தனி வணிகர்களின் நிறுவனங்கள் முளைத்தன. இதில், பெரும்பாலானவை வங்கிகளாகச் செயல்பட்டன.சில நிறுவனங்கள் நவாப் வாங்கிய கடனுக்கு வட்டியுடன் அவருக்கு நிதி அளித்தன. சில நிறுவனங்கள் கடல் பயணிகளுக்குப் பணம் கொடுத்தன. இன்னும் சில, கிழக்கிந்தியக் கம்பெனி பணியாளர்கள் தனியார் வர்த்தகத்தில் சம்பாதித்த பணத்தை இங்கிலாந்திற்கு அனுப்பி வைத்தன.

இப்படியாக வளர்ந்த தனி வணிகர்கள் கோட்டையின் உள்ளேயே தங்களுக்கென ஒரு கட்டடத்தைச் ெசாந்தமாகப் பெறும் அளவிற்கு சக்தி வாய்ந்தவர்களாக மாறினர்.அப்போது தனி வணிகராக வலம் வந்த பீட்டர் மாஸ்ேச காசின் என்பவர் கோட்டையின் உள்ளிருந்த ஒரு கட்டடத்தை வாங்கினார். ஒருகாலத்தில் வீடாக இருந்த அந்தக் கட்டடத்தை, தன்னைப் போல தனி வணிகர்கள், வணிகம் சம்பந்தமாக கலந்துரையாடும் இடமாக மாற்றினார் காசின்.

மேலும் அதன் வளர்ச்சிக்கு லாட்டரி மூலம் வந்த நிதி பயன்பட்டது. 1795ம் வருடம் இந்தக் கட்டடம் எக்ஸ்சேஞ்ச் ஹவுஸ் என்ற பெயரில் பெரிதாகக் கட்டி முடிக்கப்பட்டது. இதுவே இன்று கோட்டை அருங்காட்சியகமாக உள்ளது.

இதன் கீழ்த்தளம் சேமிப்புக் கிடங்காகவும், முதல் தளத்திலிருந்த நீண்ட அறை எக்ஸ்ேசஞ்ச் ஹாலாகவும் இருந்தன. இந்த ஹாலில் வணிகர்கள், தரகர்கள், வங்கியாளர்கள், கப்பல் கமாண்டர்கள் சந்தித்துக் கொண்டனர். அன்று இந்தக் கட்டடத்தின் மேல்தான் மெட்ராஸின் முதல் கலங்கரைவிளக்கம் அமைக்கப்பட்டது.

இதற்கிடையே 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வணிகம் தேக்கநிலை கண்டது. ‘‘இதற்கு முதல் காரணம் உள்நாட்டுப் போர்கள். இதனால், மண்ணின் மைந்தர்கள் கிராமங்களை விட்டு வெளியேறினர். அடுத்தது, ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழில்புரட்சி. இதனால், நீராவியால் இயங்கும் இயந்திர விசைத்தறிகள் அறிமுகமாகி தொழில் நிறுவனங்கள் பெருகின. இது உள்ளூர் நெசவாளர்களைப் பாதித்தது. தவிர, பிரான்ஸுக்கும், பிரிட்டிஷுக்கும் இடையே இருந்த ஆதிக்கப் போட்டி. இந்தப் போட்டி மெட்ராஸைச் சுற்றியே நடந்தது’’

என ‘The Madras Tercentenary Commemoration Volume’ நூலில் குறிப்பிடுகிறார் அன்றைய பாரி அண்ட் கோவின் இயக்குநரும், மெட்ராஸ் சேம்பரின் தலைவருமான சர் ஜி.ஹெச்.ஹாட்ஜ்சன். இந்நிலை, 1815ல் நெப்போலியனுடன் வாட்டர்லூ என்ற இடத்தில் நடந்த சண்டைக்குப் பிறகே மாறியது.

1800ம் வருடம் மெட்ராஸின் கவர்னராக வந்த எட்வர்டு கிளைவ் கம்பெனி பணியாளர்கள் தனியார் வர்த்தகத்தில் ஈடுபடுவதை கடுமையாகக் கண்டித்தார். அத்துடன், ‘இராணுவம் மற்றும் நிர்வாகத்திற்காக மட்டுமே கோட்டைப் பகுதி பயன்படுத்தப்படும்’ என அறிவித்தார்.

இதனால், தனி வணிகர்கள் நகரத்தை நோக்கி நகர வேண்டியதாகியது. ஆரம்பத்தில் இதை வணிகர்கள் எதிர்த்தாலும் கம்பெனி அதன்வழியில் சரிக்கட்டியது. இந்நேரம் நகரமும் வளர தொழிலுக்கான வாய்ப்புகள் அதிகரித்தன.இவர்களுக்காக முதல் பீச் லைன் ரோடில் கட்டடம் கட்டப்பட்டது. இதுவே பின்னாளில் கஸ்டம்ஸ் ஹவுஸாக மாறியது. இந்தக் கட்டடத்தினுள்தான் நிறைய தனி வணிகர்கள் தங்கள் நிறுவனங்களை அமைத்தனர்.

இதனருகே இருந்த இன்னொரு கட்டடத்திற்கு கஸ்டம்ஸ் அலுவலகம் வந்து சேர்ந்தது. அதுவே, நவீனப்படுத்தப்பட்டு பென்டிங்க் பில்டிங் என்றானது.
இந்நேரம், பாரியும், பின்னியும் தங்கள் தொழில்களில் மும்முரம் காட்டினர். அத்துடன், ஆர்பத்நாட் நிறுவனமும் வேகமாக வளர்ந்தது. இவர்கள் மூவருமே அன்று தொழிலில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

இதற்கிடையே, 1813ம் வருடம் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஏகபோக உரிமையை பிரிட்டிஷ் அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது. கவர்னர் ஜெனரலாக இருந்த லார்டு கார்ன்வாலிஸ், ‘இந்தியாவிலிருந்து பயணிக்கும் ஒவ்வொரு கப்பலிலும் தனி வணிகர்களின் சரக்குகளுக்காக மூன்றாயிரம் அடி இடம் ஒதுக்க வேண்டும்’ எனச் சலுகை காட்டினார். ஆனால், இது 1833ம் வருடமே முடிவுக்கு வந்துவிட்டது.

இருந்தும் இந்தச் சலுகையை தாமஸ் பாரி சரியாகப் பயன்படுத்தினார். தனக்குச் சொந்தமான ‘ஜெனரல் பால்மர்’, ‘கோல்கொண்டா’ கப்பல்களில் தனி வணிகர்களை அதிகமாக ஏற்றினார். சரி, தனி வணிகர்களுக்கும், மெட்ராஸ் வர்த்தக சபைக்கும் என்ன சம்பந்தம்? இருக்கிறது. அவர்கள்தான் மெட்ராஸ் சேம்பரை உருவாக்கியவர்கள்.

இந்தியாவில் முதல் தொழில் வர்த்தக சபை கல்கத்தாவில் தொடங்கப்பட்டது. 1833ம் வருடம் சுமார் 79 நிறுவனங்கள் சேர்ந்து அந்த வர்த்தக சபையை உருவாக்கினர்.‘‘ஆனால், அந்தச் சபை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. சுமார் இருபது வருடங்கள்தான் அந்தச் சபை இருந்தது. காரணம்,அங்குள்ள உறுப்பினர்கள் மிகக் குறைவாகவே ஒத்துழைப்பு தந்தனர்’’ என்கிறார் இப்போதைய மெட்ராஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸின் தலைவர் ராம்குமார் ராமமூர்த்தி.

 ‘‘அதன்பிறகு, 1836ம் வருடம் செப்டம்பர் 22ம் தேதி பம்பாய் சேம்பர் ஆஃப் காமர்ஸ் உருவாக்கப்பட்டது. இதற்கு ஒரு வாரம் கழித்து, செப்டம்பர் 29ம் தேதி மெட்ராஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் உருவானது. இன்றும் உயிர்ப்புடன் தன் பணியைச் செய்துகொண்டி ருக்கும் இந்தியாவின் இரண்டாவது சேம்பர் ஆஃப் காமர்ஸ் என ெமட்ராஸ் சேம்பரைச் சொல்லலாம்...’’ என்கிறவர் மெட்ராஸ் சேம்பரின் வளர்ச்சிப் பாதையைப் பகிர்ந்து கொண்டார்.

‘‘ஆர்மேனியன் தெருவிலிருந்த பின்னி அலுவலகத்தில் பதினெட்டு பிரிட்டிஷ்காரர்கள் கூடி, இந்தச் சேம்பரைத் தொடங்கினர். தலைவராக ஜான் ஆல்வ்ஸ் ஆர்பத்நாட் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னி நிறுவனத்தைச் சேர்ந்த டபிள்யு.ஹெச்.ஹார்ட் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இந்த அமைப்பு, எல்லாரும் சேர்ந்து சுமுகமாக வணிகம் செய்ய வேண்டும் என்பதற்காகவும், வணிகத்தில் உள்ள இடர்ப்பாடுகளைக் களையவும், அதிலுள்ள சிக்கல்களை அரசிடம் கோரிக்கையாகக் கொண்டு செல்லவும் உருவாக்கப்பட்டது.

குறிப்பாக, வர்த்தகத்திற்குத் தேவையான அடிப்படை விஷயங்கள் எதுவும் இங்கில்லை. அதனால், அதை ஒரு அமைப்பின் வழியே செய்ய முடியும் என உணர்ந்ததால் ஆங்கிலேய வணிகர்கள் சேம்பரை உருவாக்கினர். முதல்கட்டமாக, அன்றைய மெட்ராஸ் கவர்னருக்கு சேம்பர் ஒரு ேகாரிக்கை வைத்தது. அதில், அரசின் கீழ் உள்ள பல்வேறு துறைகளும் சேம்பருக்குத் தேவையான தகவல்களை அளிக்க உத்தரவிட வேண்டும் என்றது.

அரசுத் துறைகள், சேம்பருடன் நேரடியாகத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும்படியாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது. இதை கவர்னர் சர் ஃபிரடெரிக் ஆடம் ஏற்றுக் கொண்டு சேம்பருக்கு ஒத்துழைப்புக் கொடுக்க உத்தரவிட்டார்.அடுத்ததாக, அன்று நடைமுறையிலிருந்த வரி வசூலிக்கும் முறை வணிகத்திற்கு ஒரு ெபரிய தடையாக இருந்தது. உள்நாட்டு வரி ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு விதமாக வசூலிக்கப்பட்டது.

அன்று அங்கீகரிக்கப்பட்ட ஒரே நாணயம் என்பதும் இல்லாமல் இருந்தது. அந்தந்தப் பகுதியை ஆண்ட குறுநில மன்னர்கள், அவர்கள் பகுதி வழியாக சரக்குகள் கொண்டு செல்லும் போது வரி விதித்தனர். சேலம் மாவட்டத்தில் மட்டும் 25 செக் போஸ்ட்கள் இருந்தன. 1800களில் இவற்றின் வழியாக பொருட்களைக் கொண்டு செல்லும்போது வணிகர்கள் கூடுதலாக 40 சதவீதம் சுங்க வரி கட்ட வேண்டியிருந்தது.

இதனால், பொருட்களின் விலை தாறுமாறாக ஏறியது. இதை எதிர்த்து சேம்பர் போராடியது. நீண்ட போராட்டத்திற்குப் பின்னர், 1844ல் இந்த முறை ஒழிக்கப்பட்டது. இதுதான் சேம்பரின் முதல் ெவற்றி. ஆனால், இத்துடன் சேம்பர் நிற்கவில்லை...’’ என்கிற ராம்குமார் ராமமூர்த்தி, அன்று எதற்கெல்லாம் வரிகள் விதிக்கப்பட்டன என்பது பற்றியும் குறிப்பிட்டார். அதுகுறித்து அடுத்த வாரம்…  

பேராச்சி கண்ணன்

ராஜா

ஆ.வின்சென்ட் பால்