ரத்த மகுடம்-47



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் தன் புரவியை வேகமாகச் செலுத்தியபடி காஞ்சி அரண்மனையை அடைந்தபோது பொழுது சாய்ந்திருந்தது.அவரைக் கண்டதும் அரண்மனை வாயிலில் காவல்புரிந்து கொண்டிருந்த வீரர்கள், ‘‘வாழ்க! வாழ்க! சக்கரவர்த்திப் பெருமான் வாழ்க!’’ என கோஷமிட்டு வணங்கி வழிவிட்டார்கள்.

காவலர்களுடைய வாழ்த்து ஒலியுடன் அங்கே வரிசை வரிசையாக நின்ற குதிரைகளின் கனைப்பு ஒலியும் சேர்ந்தது. அரண்மனை முன் வாசலைத் தாண்டி அவர் உள்ளே நுழைந்ததும் அங்கேயிருந்த விசாலமான நிலா முற்றத்தில் வீரர்கள் பலர் அணி வகுத்து நிற்பது தெரிந்தது.
சக்கரவர்த்தியைக் கண்டதும் அந்த வீரர்களும் ஜயகோஷம் செய்தார்கள். எல்லோருக்கும் முன்னால் நின்ற ஒருவர் மட்டும் தனியே பிரிந்து முன்னால் வந்து பணிவுடன் நின்றார்.

‘‘சேனாதிபதி! தூதர்களுக்கு எல்லா விஷயமும் சொல்லியாகி விட்டதா! புறப்படுவதற்கு ஆயத்தமாயிருக்கிறார்களா?’’ நிதானமாகக் கேட்டார் விக்கிரமாதித்தர். ‘‘ஆம், பிரபு! எல்லோருக்கும் சொல்லியாகிவிட்டது. அவரவர்களும் இன்னின்ன திக்குக்குச் செல்ல வேண்டுமென்று தெரிவித்து விட்டேன். எல்லோரும் கிளம்ப ஆயத்தமாகித் தங்கள் கட்டளைக்காகக் காத்திருக்கிறார்கள்!’’

எதுவும் சொல்லாமல் சுற்றிலும் தன் பார்வையைச் சுழற்றிய சாளுக்கிய மன்னரின் கண்களில் அந்த இளைஞன் தட்டுப்பட்டான். கங்கநாட்டு இளவரசன்!முகத்தில் மலர்ச்சியுடன் அவனை அருகில் அழைத்தார்.பணிவுடன் அவர் முன்னால் வந்து வணங்கினான். ‘‘சக்கர
வர்த்திக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!’’அன்புடன் அவனை ஏறிட்டார். குழந்தையாகப் பார்த்தவன்... எப்படி வளர்ந்து நிற்கிறான்! ‘‘குழந்தாய்! எப்போது வந்தாய்..? வீட்டில் அனைவரும் நலமா..?’’

‘குழந்தையா’ என்ற சொல் கங்க இளவரசனை சங்கடப்படுத்தியது! அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ‘‘இப்போதுதான் வந்தேன் சக்கரவர்த்தி...’’ என்றான்.‘‘நல்லது! உன் தாயார் அந்தப்புரத்தில்தான் இருக்கிறார். அவருடன் அளவளாவியபடியே போஜனத்தை முடித்துவிட்டு மேல் மாடத்துக்கு வா. தூதர்களை அனுப்பிவிட்டு நானும் அங்கு வந்து சேர்கிறேன்!’’‘‘உத்தரவு சக்கரவர்த்தி...’’ மீண்டும் அவரை வணங்கிவிட்டு கங்க இளவரசன் அரண்மனைக்குள் நுழைந்தான்.

தாயார் என சாளுக்கிய மன்னர் குறிப்பிட்டது அவனது சொந்த தாயாரைத்தான். சாளுக்கியர்களின் நட்புச் சக்தியாக கங்கநாடு இருப்பதால் இரு குடும்பத்தாரும் உறவு முறையுடன்தான் பழகி வந்தார்கள். அந்த வகையில் காஞ்சி மாநகரத்தையும் இங்கிருக்கும் கோயில்களையும் பார்க்க வேண்டும் என்ற தன் ஆவலைப் பூர்த்தி செய்யும் விதமாக அவன் தாயார் பத்து நாட்களுக்கு முன் காஞ்சிக்கு வந்திருந்தார்.

கங்க இளவரசன் அகன்றதும் விக்கிரமாதித்தர் தன் சேனாதிபதியைப் பார்த்தார்.‘‘மன்னா...’’ மரியாதையுடன் சற்றே அருகில் வந்து அவர் நின்றார்.‘‘தூதுவர்களிடம் சொல்லி அனுப்ப வேண்டிய செய்தி இது; தொண்டை மண்டலத்திலும் சோழ மண்டலத்திலும் உள்ள
ஒவ்வொரு கோட்டத்திலும் ஆயிரம் வீரர் அடங்கிய படைகளைத் திரட்டி ஆயத்தமாக வைத்திருக்க வேண்டியது. மறுபடியும் செய்தி அனுப்பியவுடனே படை புறப்படச் சித்தமாயிருக்க வேண்டும்! புரிந்ததா..?’’ ‘‘புரிந்தது பிரபு!’’

‘‘காஞ்சிக் கோட்டையைப் பாதுகாப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் செய்தாகிவிட்டதல்லவா?’’

‘‘துறவிகளைத் தவிர வேறு யாரையும் விசாரிக்காமல் கோட்டைக்குள் விடக்கூடாதென்று கட்டளையிட்டிருக்கிறேன். வெளியே போகிறவர்களையும் கவனிக்கச்சொல்லியிருக்கிறேன். நகருக்குள்ளேயும் யார் பேரிலாவது சந்தேகத்துக்கு இடமிருந்தால் சிறைப்படுத்திக் காவலில் வைக்கச் சொல்லியிருக்கிறேன்!’’ ‘‘கோட்டைச் சுவர்கள்..?’’

‘‘பழுது பார்க்கும் வேலைகள் மும்முரமாக நடக்கின்றன மன்னா!’’
‘‘கடிகையில்..?’’‘‘காவலைப் பலப்படுத்த வேண்டுமா மன்னா..?’’ சேனாதிபதியின் குரலில் ஆவல்.விக்கிரமாதித்தர் புன்னகைத்தார். ‘‘போர் அமைச்சரை
எதிரொலிக்கிறீர்கள்! கடிகையில் மட்டும் காவல் தேவையில்லை!’’

‘‘புரிந்தது மன்னா!’’ தலையசைத்த சேனாதிபதி ஒவ்வொரு தூதுவரையும் தனித்தனியாக அழைத்து எந்தெந்த கோட்டத்துக்கு யார் யார் செல்கிறார்கள் என சக்கரவர்த்தியிடம் தெரியப்படுத்தினார். ஒவ்வொரு தூதுவரும் தனித்தனியே விக்கிரமாதித்தரை வணங்கி விடைபெற்றுக்கொண்டு தத்தம் குதிரை மீதேறி விரைந்து சென்றார்கள்.சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரின் கட்டளைக்கு அடிபணிந்து அரண்மனை நிலா முற்றத்தைக் கடந்து சென்ற கங்க இளவரசன், உள்வாசலை நெருங்கியதும் குதிரை மீதிருந்து இறங்கினான்.

சித்தமாகக் காத்திருந்த பணியாட்கள் புரவியைப் பிடித்து கொட்டடிக்குக் கொண்டு சென்றார்கள். பிறகு, கங்க இளவரசன் விசாலமான அந்த அழகிய அரண்மனைக்குள் பிரவேசித்து, தீபம் ஏந்துவோர் தம்மைப் பின் தொடர்ந்து வருவதற்குத் திணறும்படியாக விரைவாக நடந்து சென்றான்.

புதிதாக அரண்மனைக்குள் பிரவேசிக்கிறவர்கள் அங்கே குறுக்கும்நெடுக்குமாகச் சென்ற நடைபாதைகளில் வழி கண்டுபிடித்துச் செல்வது அசாத்தியமாயிருக்கும். கங்க இளவரசனும் புதிதாகத்தான் காஞ்சிக்கு வந்திருக்கிறான். என்றாலும் பழக்கப்பட்டவன் போல் வளைந்துவளைந்து சென்று அரண்மனை அந்தப்புரத்தை அடைந்தான்.

அங்கே சிற்ப வேலைகளினால் சிறப்படைந்த வாசலை அணுகியதும், ‘‘குழந்தாய்! வந்தாயா?’’ என்று உள்ளே இருந்து ஒரு குரல் கேட்டது.அழைத்தவர் அவனது சொந்தத் தாயார் அல்ல! சாளுக்கிய மன்னரின் பட்டத்தரசி! அவருடைய கம்பீரமான தோற்றமும் முதிர்ந்த சவுந்தர்ய வதனமும், ‘திரிபுவன சக்கரவர்த்தினி’ என்று சாளுக்கிய சாம்ராஜ்யத்தின் மக்கள் அவரைக் கொண்டாடுவது முற்றும் பொருந்தும் என்று தெரியப்படுத்தின. ‘‘அம்மா!’’ பாசத்துடன் அழைத்தபடி அருகில் சென்று அவர் கால்களைத் தொட்டு வணங்கினான்.

‘‘நன்றாக இருக்கிறாயா..?’’

‘‘சாளுக்கிய சக்கரவர்த்தியின் ஆட்சியில் நலத்துக்கு என்ன குறை...’’ என்றபடி தன் பார்வையைச் சுழலவிட்டான்.
‘‘உன் அம்மா கோயிலுக்குச் சென்றிருக்கிறார்!’’ பட்டத்தரசி புன்னகைத்தார்.
சங்கடத்துடன் தலைகுனிந்த கங்க இளவரசன், ‘‘இளவரசர்
எங்கிருக்கிறார்..?’’ என்று கேட்டான்.

‘‘விநயாதித்தனைக் கேட்கிறாயா..?’’
‘‘ஆம்...’’
பட்டத்தரசி பெருமூச்சு விட்டார். ‘‘என் மைந்தனைத்தான்
நானும் தேடிக்கொண்டிருக்கிறேன்!’’
‘‘என்ன சொல்கிறீர்கள் தாயே!’’ கங்க இளவரசன் அதிர்ந்தான். ‘‘உங்களுடன்தானே இளவரசரும் காஞ்சிக்கு வந்தார்..?’’
‘‘ஆம்! வந்தான். அதன் பிறகு எங்கு சென்றான் என்று தெரியவில்லை...’’

‘‘சக்கரவர்த்தியிடம் விசாரிக்கலாமே..?’’
‘‘அனுப்பியதே அவர்தானே குழந்தாய்!’’ பட்டத்தரசியின்
கண்கள் கலங்கின. ‘‘வந்துவிடுவான் என ஒவ்வொரு நாளும்
காத்திருக்கிறேன்...’’ துயரத்தை மீறிப் புன்னகைத்தார்.
கங்க இளவரசன் எதுவும் சொல்லவில்லை. இருவரும் உள்ளே சென்றார்கள்.

தனது தலை அணியையும் ஆபரணங்களையும் எடுத்து வைத்துவிட்டுக் கால் கை சுத்தம் செய்துகொண்டு கங்க இளவரசன் வந்தான். இருவரும் அந்தப்புர பூஜா மண்டபத்துக்குள் நுழைந்தார்கள். அங்கே, மத்தியில் நடராஜ மூர்த்தியின் திருவுருவம் திவ்ய அலங்காரங்
களுடன் ஜொலித்தது. பின்புறச் சுவர்களில் சிவபெருமானுடைய பல வடிவங்களும், பாலகோபாலனுடைய லீலைகளும் வர்ணங்களில் அழகாகச் சித்தரிக்கப்பட்டிருந்தன.

பூஜையெல்லாம் முன்னமே முடிந்தபடியால், இருவரும் அந்தத் திருவுருவத்தை வழிபட்டுவிட்டு வெளியே வந்து போஜன மண்டபத்தை அடைந்தார்கள்.
உணவருந்த அமர்ந்ததுமே பட்டத்தரசி வாயைத் திறந்தார். ‘‘குழந்தாய்! காஞ்சி மாநகரமே அல்லோலகல்லோலப்படுகிறது. யாரோ கரிகாலனாம்... சிவகாமியாம்... ரகசியமாக நகரத்துக்குள் நுழைந்துவிட்டு வெளியேறிவிட்டார்களாம். உனக்கு ஏதாவது தெரியுமா..?’’

‘‘கேள்விப்பட்டேன் தாயே! ஆனால், விவரம் தெரியவில்லை. சக்கரவர்த்தி மேல்மாடத்துக்கு வரச் சொன்னார். அவரைக் கேட்டால் முழுவிவரம் கிடைக்கலாம்!’’ உணவு பரிமாறிக் கொண்டிருந்த பணியாட்களைப் பார்த்து சாளுக்கியப் பட்டத்தரசியிடம் ஜாடை காட்டிவிட்டு மவுனமாக உணவருந்தினான்.புரிந்துகொண்டதற்கு அறிகுறியாகச் சக்கரவர்த்தினி பெருமூச்சு விட்டார்.

காஞ்சி அரண்மனையில் பகல் போஜனம் ராஜரீக சம்பிரதாயங்களுடன் ஆடம்பரமாக நடக்கும். அதாவது பல்லவர்கள் இருந்தபோது எப்படி நடக்குமோ அப்படி. பெரிய சாம்ராஜ்ய உத்தியோகஸ்தர்கள், அந்நிய நாடுகளிலிருந்து வந்த பிரமுகர்கள், சிவனடியார்கள், வைஷ்ணவப் பெரியார்கள், பிரசித்தி பெற்ற கலைஞர்கள், தமிழ்க் கவிஞர்கள், வடமொழிப் பண்டிதர்கள் முதலியோரைச் சாளுக்கிய மன்னரும் விருந்தாளிகளாக அழைத்து கவுரவப்படுத்தினார்.

எனவே பகல் போஜன நேரத்தில் அரண்மனைவாசிகள் ஒருவரோடொருவர் அளவளாவுதல் இயலாத காரியம். தவிர பகல் நேரமெல்லாம் சக்கரவர்த்தியும் ராஜரீககாரியங்களில் ஈடுபட்டிருப்பார். எனவே அவருடன் சற்றே பேச வாய்ப்பு கிடைப்பது இரவு போஜனத்தின்போதுதான்.அப்பொழுதெல்லாம் தன் மகன் விநயாதித்தன் குறித்து பட்டத்தரசி பேச்செடுப்பார்.

அதை நாசுக்காக சாளுக்கிய சக்கரவர்த்தி தட்டிக் கழிப்பார். இப்படியே நாட்கள் சென்றுகொண்டிருந்த நிலையில்தான் மகனுக்குச் சமமான கங்க இளவரசன் வந்து சேர்ந்திருக்கிறான். இவனிடமாவது விவரம் பெறலாம் என்றால் அதற்கும் வழியில்லாதபடி எதுவும் தெரியாதவனாக இருக்கிறான். ம்... கடவுள் விட்ட வழி...இருவரும் போஜனத்தை முடித்துக்கொண்டு மேல் மாடத்துக்குச் சென்றார்கள்.

‘‘சக்கரவர்த்தி வருவதற்குச் சற்று நேரமாகும்... உங்களைக் காத்திருக்கச் சொன்னார்...’’ பக்தியுடன் அறிவித்துவிட்டு அந்த வீரன் அகன்றான்.இருவரும் அங்கிருந்த பளிக்குத் திண்ணையில் அமர்ந்தார்கள். ‘‘குழந்தாய்! சிவகாமி என்னும் பெண்ணைக் குறித்து உனக்கு ஏதேனும் தெரியுமா..? அவளைக் குறித்து இந்த அரண்மனை முழுக்க ஏதேதோ பேசுகிறார்களே..!’’   ‘‘தெரியும் அம்மா..!’’ என்றபடி கங்க இளவரசன் மர்மமாகப் புன்னகைத்தான்!

இரவு போஜனம் முடிந்து அவரவர் அவரவர் இடங்களுக்குச் சென்றதும் மெல்ல கடிகையை விட்டு நழுவி வெளியே வந்தான் அந்த பாலகன். கரிகாலனுக்கு உதவினானே... அவனேதான்! கடிகையைச் சுற்றிக் காவல் இல்லாததால் அவனை யாரும் தடுக்கவில்லை. நூலகம் செல்வதாகத் தன்னுடன் தங்கும் வித்யார்த்தியிடம் அவன் ஏற்கனவே தெரியப்படுத்திவிட்டதால் அவன் இல்லாததை ஒருவரும் பொருட்படுத்தவில்லை.

மகேந்திரவர்மர் வீதிக்கு வந்தவன் மக்களோடு மக்களாகக் கலந்தான். யாருக்கும் எந்த ஐயமும் எழாத வண்ணம் நடந்தான். வீரர்கள் நடமாட்டம் தென்படும்போது இருளடர்ந்த பகுதிக்கு நகர்ந்தான். செல்ல வேண்டிய இலக்கு அவனுக்குத் தெரியும். நரசிம்ம
வர்மர் வீதி. நேர்வழியில் அங்குச் செல்லாமல் குறுக்குவழியாக அந்த வீதிக்கு வந்தான்.

இருபக்கமும் மாட மாளிகைகள் அணிவகுத்தன. ஆங்காங்கே பந்தங்கள் எரிந்துகொண்டிருந்தன. ஒளி ஏதும் தன் முகத்தில் விழாதபடி நடந்தவன் ஐந்தாவதாக இருந்த மாளிகைக்குள் நுழைந்தான்.அவனது வருகையை எதிர்பார்த்து கதவு திறந்திருந்தது. நுழைந்தவனைத் தடுக்க அங்கு யாரும் இல்லை. மடமடவென்று படிக்கட்டில் ஏறி உப்பரிகையை அடைந்தான். ‘‘அமர்வதற்காக வரவில்லை மன்னா!’’ என்ற குரல் பாலகனை தடுத்தது.பதுங்கி குரல் வந்த அறைக்குள் எட்டிப் பார்த்தான்.

சாளுக்கிய மன்னருடன் ஸ்ரீராமபுண்ய வல்லபர் சற்றே ஆவேசமாக உரையாடிக்கொண்டிருந்தார்.அவர்களுக்குப் பின்னால் இருந்த திரைச்சீலையில் ஒரு பெண்ணின் உருவம் வரையப்பட்டிருந்தது.அந்தப் பெண், சிவகாமி!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்