ஆர்கானிக் காஸ்மெடிக்ஸ்!



தன் குழந்தைக்காக பிசினஸ்வுமன் ஆகியிருக்கும் ஒரு பெண்ணின் கதை

எவ்வளவுதான் பார்த்துப் பார்த்து இயற்கையான வாழ்க்கை முறைக்கு மாற நினைத்து மாற்றங்களை செய்தாலும் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு, பயன்படுத்தும் சோப்பு, சோப்புத் தூள்... என சகலமும் இயற்கையாக வாழ்வதைக் கேள்விக்குறியாக்கி விடுகின்றன.

இந்நிலையில்தான் தன் இரண்டு வயதுக் குழந்தைக்கு ஏற்பட்ட தோல் பிரச்னைக்கு தீர்வு காணப் புறப்பட்டு இன்று தொழிலதிபராக உயர்ந்திருக்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த ஸ்மிதா காமத்.  ‘‘சொந்த ஊரு பெங்களூருதான். ஐடில சாப்ட்வேர் இன்ஜினியரா இருந்தேன். கல்யாணம், குழந்தைனு ஆனதும் வேலையை விட்டுட்டேன். எங்க அன்பான வாழ்க்கைக்கு அடையாளமா அழகான குழந்தையும் பொறந்துச்சு.

சீராட்டி வளர்த்தோம். குழந்தைக்கு ெரண்டு வயசானப்ப திடீர்னு தோல் அலர்ஜி மாதிரி வந்துச்சு. அதை சாதாரணமா நினைச்சு மருந்து கொடுத்தோம். அப்பதான் இந்தப் பிரச்னைக்கான வேர் காரணத்தை அறிய நினைச்சேன்...’’ என்று சொல்லும் ஸ்மிதா காமத், நாம் சாப்பிடும் உணவு முதல் பயன்படுத்தும் பொருட்கள் வரை சகலத்திலும் கெமிக்கல்ஸ் கலந்திருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்.

‘‘தினம் தினம் நாம சமைக்கிற, சாப்பிடுற பொருட்கள் முதல் ஹேண்ட்வாஷ், குளியல் சோப்பு, துவைக்கிற சோப்பு வரை எல்லாமே கெமிக்கல்ஸ். அதாவது இந்தியர்களோட சமையல் அறைல ஏதோ ஒரு வடிவுல கெமிக்கல் பொருட்கள் இருந்துகிட்டே இருக்கு. தோல் அலர்ஜிக்கு இதெல்லாமும் காரணம்.

இந்த நுனி பிடிபட்டதும் ஆர்கானிக் சம்பந்தப்பட்ட மீட்டிங்ஸ், யூடியூப் செமினார்ஸ், இயற்கை வாழ்வியல் கருத்தரங்கம்னு எல்லாத்துலயும் கலந்துக் கிட்டேன். ஓரளவு தெளிவு பிறந்தது. அதோட நாமளா இறங்கினா மட்டும்தான் மாற்றம் கொண்டு வர முடியும்னும் புரிஞ்சது...’’ என்னும் ஸ்மிதா காமத், அதில் நிறைய சவால்களை சந்தித்திருக்கிறார்.

‘‘முதல்ல நாம சாப்பிடுற மத்த நாட்டு, மத்த மாநில பழங்கள், காய்கறிகளைத் தவிர்க்கணும். ஏன்னா அந்த ஊர்ல சீசன் முடிஞ்சபிறகுதான் நம்ம கடைகளுக்கே வருது. தவிர நம்மூர் க்ளைமேட்டுக்கு என்ன காய்கறிகள், பழங்கள் விளையுதோ, கிடைக்குதோ அதைத்தான் சாப்பிடணும். முக்கியமா லோக்கல் வியாபாரிகள்கிட்ட இருந்து வாங்கணும்.

ஆனாலும் ஒரு கேள்வி இருந்துகிட்டே இருந்தது. இதெல்லாம் இயற்கையா வளர்க்கப்படுதா? பதில் தேடி பெங்களூரு பக்கத்துல இருக்கிற சன்னபட்னா கிராமத்துக்கு போனேன். அங்கிருந்த விவசாயிகளை ஒண்ணு திரட்டி இயற்கையான முறைகள்ல, எந்தவித மருந்தும் தெளிக்காம வீட்டுக் காய்கறிகள், பழங்கள் பயிரிட ஆரம்பிச்சோம். இந்த ப்ராஜெக்ட்டுக்கு ‘தேவாரக் காடு’னு - அதாவது புனிதத் தோப்புகள் - பெயர் வைச்சேன்.

எங்க குழுவுல 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் இருக்காங்க. அவங்களுடைய பொருட்களை அவங்க சொல்ற விலைக்கே வாங்கி இயற்கையா வாழ நினைக்கிறவங்களுக்கு கொடுக்கறோம். ஆன்லைன் வழியா ஆர்டர் செஞ்ச இரண்டு மணிநேரத்துல பொருட்கள் கிடைக்கிற மாதிரி ஏற்பாடும் செஞ்சோம்...’’ என்ற ஸ்மிதா காமத்தின் கவனம் இதன் பிறகு காஸ்மெடிக்ஸ் பொருட்கள் மீது திரும்பியிருக்கிறது.

‘‘நாம பயன்படுத்தற காஜல், லிப்ஸ்டிக்கைக் கூட இயற்கையா தயாரிச்சா என்னனு தோணிச்சு. உதாரணமா ஹோம்வேக்ஸ் அல்லது பீவேக்ஸ்கள்ல பீட்ரூட் போன்ற காய்கறிகளின் சாற்றை சேர்த்து லிப்ஸ்டிக் உருவாக்கறது. தேங்காய் எண்ணெய் கூட கரிப்பொடி சேர்த்து காஜல், சோப் நட்ஸ், சிட்ரஸ் பீல் மூலமா டாய்லெட் கிளீனர், டிடர்ஜன்ட் பவுடர் / சோப்.ஆரம்பத்துல இதையெல்லாம் தயாரிக்க சிரமப்பட்டோம். சிக்கலாகவும் இருந்தது. ஆனா, கிடைச்ச ரிசல்ட் பக்காவா பொருந்தினது. மென்மையாகவும் அடர்த்தியாகவும் தோல் மாறுவதை கண்கூடா பார்த்தோம்; உணர்ந்தோம்.

சோப் நட்ஸ், வேம்பு, மஞ்சள், லெமன், உப்பு... இதையெல்லாம் விடவா நமக்கு கிளீனிங் புராடக்ட்ஸ் வேணும்? வெறுமனே எஸன்ஸைத்தானே கடைகள்ல கலந்து விற்கறாங்க... அதை ஏன் நாம உருவாக்கக் கூடாது?இந்தக் கேள்வி என்னை மாதிரியான சில இயற்கை ஆர்வலர்களைக்  கைகோர்க்க வைச்சது. ஆரம்பத்துல என் தேவைக்கு மட்டும்தான் இந்த புராடக்ட்ஸை உருவாக்கினேன். அப்பறம், நண்பர்கள், உறவினர்களுக்குனு கொடுக்கத் தொடங்கி... இப்ப ஒரு பிசினஸா எங்க ‘பிராணபூர்ணா’ குழு செய்துட்டு இருக்கு!

அந்தக்கால கண் மை, காஜலை எல்லாம் இன்றைய லேட்டஸ்ட் டிரெண்டுக்கு மாத்த முயற்சி செய்துட்டு இருக்கோம். எங்க பாட்டியும் அவங்க வயதுள்ள மத்த பெரியவங்களும் இதற்கான தேடல்ல இப்ப இருக்காங்க!’’ என்று சொல்லும் ஸ்மிதா காமத், தன் வீட்டில் சமைக்க மண் அடுப்புகளையே பயன்படுத்துகிறார். வேம்புக்  குச்சியாலேயே பல் துலக்குகிறார்!          

ஷாலினி நியூட்டன்