நியூஸ் வியூஸ்-வந்தாச்சு air taxi!



ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று துபாயைச் சேர்ந்த எமிரேட்ஸ் விமான நிறுவனம், டுவிட்டரில் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டது.“சிறிய அளவிலான ஹெலிகாப்டர் போன்ற பயணிகள் செல்லும் தானியங்கி டிரோன் விமானத்தை அறிமுகப்படுத்த இருக்கிறோம். இதில் முதல் வகுப்புக்கான சொகுசு வசதிகள் இருக்கும்.

நவீனமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த டிரோன்ஸ் துபாயில் இருந்து, நகரின் அனைத்து இடங்களுக்கும் செல்லும் வகையில் இயக்கப்படும். இயற்கைச் சீற்றங்களிலும் பயணம் செய்ய முடியும். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இது செயல்பாட்டுக்கு வர இருக்கிறது.

அடிக்கடி எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் சிறப்பு உறுப்பினர் அட்டை உள்ளவர்களுக்கு இதில் பயணிக்க முன்னுரிமை அளிக்கப்படும்...”
ஏப்ரல் ஒன்றாம் தேதி இந்த அறிவிப்பை வெளியிட்டதாலோ என்னவோ, பலரும் நம்பாமல் “பைலட் இல்லாத பயணிகள் விமானமா? எங்களை ஏப்ரல் ஃபூல் செய்கிறீர்களா?” என்று கேட்டிருந்தார்கள்.

எமிரேட்ஸ், ஏப்ரல் ஃபூல் செய்திருக்கிறதா அல்லது சீரியஸாகவே சொல்கிறதா என்று இந்தக் கட்டுரையை எழுதும் நேரம் வரை உறுதியாகவில்லை.ஆனால், பைலட் இல்லாத பயணிகள் விமானம் சாத்தியம்தான்.‘ஆட்டோ பைலட்’ என்கிற முறை ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது.

அதாவது விமானத்தை டேக்-ஆஃப் செய்வதற்கும், லேண்டிங் செய்வதற்கும் இடையிலான பயணத்தை பைலட்டுகள் தைரியமாக ஒரு கம்ப்யூட்டரிடம் ஒப்படைத்துவிடலாம்.

விமானம் முழுக்க பொருத்தப்பட்டிருக்கும் சென்சார்களின் துணைகொண்டு, அவை கொடுக்கக்கூடிய தகவல்களின் அடிப்படையில் கம்ப்யூட்டரே ஒரு விமானத்தை வெற்றிகரமாக வானில் செலுத்திக்கொண்டு போகும்.பைலட்டும், கோ-பைலட்டும் கம்ப்யூட்டர் சரியாக வேலை செய்கிறதா என்று அவ்வப்போது கவனித்துக்கொண்டு, ‘பொன்னியின் செல்வன்’ வாசித்துக் கொண்டிருக்கலாம். அல்லது தமிழ் ராக்கர்ஸில் டவுன்லோடு செய்யப்பட்ட ஏதாவது புதுப்படத்தை மொபைலில் பார்த்துக் கொண்டிருக்கலாம். லேண்டிங்கின்போதுதான் பைலட்டுகளுக்குத் திரும்ப வேலை வரும்.

ஒரு பைலட் என்னவெல்லாம் செய்யவேண்டுமோ, அதையெல்லாம் ஒரு கம்ப்யூட்டரே சிறப்பாக செய்து முடித்துவிடும். விமானத்தை கிளப்புவதற்கு முன்பாக (அதாவது டேக் ஆஃபுக்கு முன்பு) கம்ப்யூட்டரில் தேவையான ஆணைகளை பைலட் கொடுத்துவிட்டால் போதும். விமானம் பயணிக்கும் உயரம், வேகத்தையெல்லாம் கம்ப்யூட்டரே சூழலுக்கு ஏற்றமாதிரி முடிவெடுத்துக்கொள்ளும்.

இந்த ஆட்டோபைலட் முறைதான் இப்போது பெருமளவில் விமானங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது. சில நவீனரக விமானங்களில், விமானத்தைத் தரையிறக்கும் லேண்டிங்கையும் ஆட்டோபைலட்டே சிறப்பாகச்செய்துதரும் அளவுக்கு தொழில்நுட்பம் முன்னேறிவிட்டது.எனினும், மனிதன் இன்னும் முழுமையாக மெஷினை நம்புவதில்லை. ஆட்டோபைலட் முறையில் கம்ப்யூட்டரிடம் முழுமையாக விமானத்தை ஒப்படைக்க சட்டவிதிகளும் அனுமதிப்பதில்லை.

காக்பிட் எனப்படக்கூடிய விமானக் கட்டுப்பாட்டு அறையில் எப்போதும் இரண்டு பைலட்டுகள் இருக்க வேண்டும். ஆட்டோபைலட் முறையில் விமானம் பயணிக்கும்போதும் கூட, கம்ப்யூட்டர் எவ்விதக் கோளாறுமில்லாமல் பணியைச் செவ்வனே செய்து கொண்டிருக்கிறதா என்று கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அதில் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால் ஆட்டோபைலட் முறையை ஆஃப் செய்துவிட்டு, விமானிகளே விமானத்தை கட்டுப்பாட்டுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.பெரும்பாலான விமான நிறுவனங்கள், விமானம் வானில் கிளம்பியதுமே ‘ஆட்டோ பைலட்’ முறையைப் பயன்படுத்தச் சொல்லியே விமானிகளுக்கு அறிவுரை வழங்குகின்றன.

மனிதனைவிட கம்ப்யூட்டர் சிறப்பாகச் செயல்படும் என்பது அவர்கள் நம்பிக்கை.ஆனால், மனிதர்களின் உணர்ச்சி கம்ப்யூட்டர்களுக்குக் கிடையாது என்பதுதான் உண்மை. தங்களை நம்பி நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிர் இருக்கிறது என்கிற அடிப்படையான பொறுப்புணர்வே ஒரு பைலட்டை, கம்ப்யூட்டரிலிருந்து வேறுபடுத்துகிறது.

“தானியங்கி முறை சிறந்ததுதான். எனினும் சில நேரங்களில் அது சரியாகச் செயல்படுவதைப்போன்று தோற்றமளித்தாலும், மனிதர்களுக்கே உரிய சில முன்னெச்சரிக்கை நுண்ணுணர்வுகள் இல்லாத காரணங்களால் கடந்த காலங்களில் விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன...” என்று எச்சரிக்கிறார்கள் பைலட்டுகள்.

மேலும், “தானியங்கி முறையில் ஒரு கம்ப்யூட்டர் மட்டுமே விமானத்தை செலுத்துவதில்லை. விமானத்தை எப்படி செலுத்த வேண்டும் என்று அந்த கம்ப்யூட்டருக்கு ஆணையிடுவதன் மூலமாக இன்னமும் பைலட்டுகள்தான் ஓட்டுகிறார்கள். அவர்களுக்கு கம்ப்யூட்டர் உதவுகிறது. அவ்வளவே...” என்கிறார்கள்.எனவேதான் - டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் விஷயத்தில் விமானத்தில் அவற்றுக்கான தானியங்கித் தொழில்நுட்பம் இருந்தாலும் கூட பைலட்டுகள், கம்ப்யூட்டர்களிடம் பொறுப்புகளை ஒப்படைப்பதில்லை.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு முழுக்கவே பைலட்டுகளிடம்தான் விமானங்களின் கட்டுப்பாடு இருந்தது. இன்று ஆட்டோ பைலட் முறை வந்து அவர்களின் பணிச்சுமை குறைந்திருக்கிறதே தவிர, அதே பொறுப்புணர்வுடன்தான் இன்றைய நவீன பைலட்டுகளும் பணிபுரிகிறார்கள்.ஓகே, கமிங் டூ த பாயிண்ட்.எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ள ஓட்டுநர் இல்லா ஏர்டாக்ஸி திட்டத்துக்கு வருவோம்.

Drones என்று சொல்லப்படக்கூடிய ஆளில்லா பறக்கும் ஊர்திகள் இன்று சர்வசாதாரணமாகி விட்டது. நம் கல்யாண வீடுகளில் கூட ‘விர்’ரென்ற சப்தத்துடன் கேமிரா சுமந்து பறந்து நம்மையெல்லாம் வளைத்து வளைத்து படமெடுக்கின்றன.சீனாவில் டிரோன் தயாரிப்பில் பிரபலமான ஈஹாங் கார்ப் என்கிற நிறுவனம், ஆட்களைச் சுமந்து செல்லும் பறக்கும் ஊர்திகளைத் தாங்கள் வெற்றிகரமாகத் தயாரித்துவிட்டதாக இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிவித்திருக்கிறார்கள்.

Ehang 184 flying taxis என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த டிரோன்ஸை பல நூறு முறை பரிசோதித்து, இந்த திட்டம் வேலைக்கு ஆகும் என்கிற நூறு சதவிகித நம்பிக்கைக்கு வந்திருக்கிறார்கள். இதுவரையில் தோராயமாகத் தாங்கள் ஆயிரம் ஏர்டாக்ஸிகளை தயாரித்து வைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படியொரு தானியங்கி டாக்ஸியை தாங்கள் செய்து கொண்டிருப்பதாகச் சொல்லி, அடிப்படை மாடலை அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் பறக்கவிட்டு காண்பித்தார்கள். இப்போது துபாய் நகரிலும் சோதனையை மேற்கொள்ள தயாராகி வருகிறார்கள். எமிரேட்ஸ் நிறுவனம், அனேகமாக இவர்களிடம் ஒப்பந்தம் ஏதேனும் கையெழுத்திட்டிருக்கலாம்.

இந்த பறக்கும் ஊர்திகள் உறுதியான, அதே நேரம் எடைகுறைவான அலுமினியக் கட்டமைப்பு கொண்டவை. நடுவானில் கைவிடாத தலைசிறந்த பேட்டரிகள், ஒருவேளை பேட்டரி கைவிட்டால் உடனடியாகப் பயணியை பாதுகாப்பாக தரையிறக்க கூடிய  எலெக்ட்ரிக் மோட்டார்கள் என்று பாதுகாப்பு அம்சங்கள் எல்லாம் பக்காவென்று உறுதியளிக்கிறார்கள்.

எனினும் இவை இப்போதைக்கு மிகவும் குறுகிய தூரம் வரைதான் செல்லும். அதாவது நகரின் ஒரு பகுதியில் இருந்து வேறொரு பகுதிக்கு செல்லலாம். அதிகபட்சமாக 25 நிமிடங்கள் பயணிக்கக்கூடிய அளவுக்குதான் பேட்டரி ஆற்றல் கொண்டிருக்கிறது.சென்னை டூ செங்கல்பட்டு கூட போக முடியாது.

ஆனால், நெரிசல் மிகுந்த பாரிமுனையில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு ஒரு சில நிமிடங்களில் வானில் ஜிவ்வென்று பறந்து வந்துவிடலாம். இப்போதைக்கு 225 கிலோ எடையை தாங்கக்கூடிய அளவுக்குதான் செய்திருக்கிறார்கள் என்பதால் அதிகபட்சம் இருவர்தான் பயணிக்க முடியும்.

விமானங்களில் இருக்கும் ஆட்டோ பைலட் வசதிகள் உண்டு என்பதோடு கூடுதலாக, சேட்டிலைட்டோடு தொடர்பு கொண்டும் பயணத்துக்குரிய தகவல்களைப் பெற்று, இந்த ஓட்டுநரில்லா ஊர்திகள் செயல்படுமாம்.நகர்ப்புறப் போக்குவரத்து நெரிசல்களைக் கணக்கில் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஊர்தியை, நிஜமாகவே அடுத்த வருடம் எமிரேட்ஸ் கொண்டு வராவிட்டாலும் கூட இன்னும் பத்து ஆண்டுகளில் சென்னையிலேயே கூட பறக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

யுவகிருஷ்ணா