கல்லறை தொழில்நுட்பத்தை கண்ட இந்தியா மிஷன் சக்தி



புதிதாக ஒரு வார்த்தையை மக்கள் மத்தியில் புழக்கத்துக்குக் கொண்டு வர எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன.

அவற்றில் ஒன்றைப் பயன்படுத்தி இப்போது துல்லிய தாக்குதல், புல்வாமா, பாலக்கோட், அபிநந்தன் வரிசையில் ‘மிஷன் சக்தி’ என்ற சொல்லை மக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்! கடந்த மார்ச் 27ம் தேதி பிரதமர் மோடி ‘மிஷன் சக்தி’ குறித்து அறிவித்ததும் அது நடத்தை விதிமீறலா என்று தேர்தல் கமிஷன் விளக்கம் கோரியது, நாட்டின் ரகசியத்தை வெளியிட்டது தவறு என்று எதிர்க்கட்சிகள் சாடியது, ேதர்தல் தோல்வி பயத்தில் ஆளும்தரப்பு ஏற்கனவே உள்ள விஷயத்தை பகிரங்கமாக அறிவித்திருக்கிறது... என்று பல விமர்சனங்கள் வெவ்வேறு கோணங்களில் முன்வைக்கப்பட்டன.

இத்தனை விஷயங்களுக்கு மத்தியில் ‘மிஷன் சக்தி’ திட்டத்ைத செயல்படுத்திய இந்திய விண்வெளி மையத்துக்கு ஒரு ‘கிரேட் சல்யூட்’ வைக்க வேண்டும். காரணம், உலக நாடுகளின் வரிசையில் ‘எலைட் சூப்பர் கிளப்’ எனப்படும் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்து 4வது இடத்தை இந்தியா பெற்றிருப்பதாக பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

சரி, ‘மிஷன் சக்தி’ என்றால் என்ன? அதனால் நமக்கு என்ன பயன்?  

‘இல்லறமின்றி கூட வாழ்ந்துவிடலாம்; இணையம் இல்லாமல் வாழமுடியாது’ என்ற நிலைக்கு தள்ளப்பட்ட நமக்கு, ஆன்லைன் வழியாக தொலைத் தொடர்பு சேவைகள் எங்கிருந்தெல்லாம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் செயற்கைக்கோள்களின் பங்களிப்பு உள்ளது. மட்டுமல்ல; தேசப் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ தகவல் தொடர்புகளுக்கும், ஏவுகணை செயல்பாடுகளுக்கும் செயற்கைக்கோள்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

இப்போதெல்லாம் ஒரு நாட்டைத் தாக்க வேண்டுமானால், அந்நாட்டின் இராணுவ நிலைகளையோ, முக்கிய கட்டடங்களையோ தாக்க வேண்டியதில்லை. நேராக அந்த நாட்டின் செயற்கைக்கோள்களைத் தாக்கினாலே போதும். தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டு அந்நாடே ஸ்தம்பித்துவிடும். இதற்கு, அந்நாட்டால் இராணுவ பதிலடி கொடுக்க முடியாது.

தரைப்படை, விமானப்படை, கடற்படை வரிசையில் 4வது இடத்தில் விண்வெளிப் படையை வல்லரசு நாடுகள் வைத்துள்ளன. இவற்ைறக் கொண்டுதான் உலக மகா தீவிரவாதிகளைெயல்லாம் போட்டுத் தள்ளுவதுடன், பிறநாட்டின் பாதுகாப்பு தொடர்பான அசைவுகளையும் கண்காணிக்கின்றன.

மேற்கண்ட நான்குக்கும் முத்தாய்ப்பாக 5வது தளமாக இணையவழி சைபர் பாதுகாப்புக் குழுக்கள் இயங்கிவருகின்றன.சமீபத்தில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (டிஆர்டிஓ) விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்ட ‘மிஷன் சக்தி’ ஏவுகணை(A-SAT), விண்வெளியில் இருக்கும் செயற்கைக்கோள் ஒன்றைச் சுட்டு வீழ்த்தும் சோதனையை வெற்றிகரமாகச் செய்து பார்த்தது. இது, பல நாடுகளின் புருவத்தை உயர்த்தி உள்ளது.

சூரிய மண்டலத்தில் பூமியைத் தனது சுற்றுப் பாதையில் சுற்றிவரும் வளிமண்டலக் கோள்களை `இயற்கைக் கோள்கள்’ என்கிறோம். இதற்கு மாறாக மனிதனால் உருவாக்கப்படும் கோள்கள், தமது சுற்றுப் பாதையில் சுற்றிவந்தால் அைவ‘செயற்கைக் கோள்கள்’.

இயற்கையான கோள்கள் தமது வேலையை சரியாகச் செய்து கொண்டிருக்கின்றன. ஆனால், மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட கோளானது விண்வெளியில் சில ஆண்டுகள் மட்டுமே பயணத்தைத் தொடர முடியும். பின்னர் நிர்ணயிக்கப்பட்ட காலத்தை அவை முடித்துக்கொண்டு, அவற்றின் சுற்றுப் பாதையைவிட்டு இறக்கிச் செயலிழக்க வைக்கப்படும் அல்லது அழிக்கப்படும்.

இப்படி ஒவ்வொரு நாடும் பல்வேறு காரணங்களுக்காக விண்ணில் செலுத்திய செயற்கைக் கோள்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பின் (அதிகபட்சமாக 25 ஆண்டுகள் வரை) தனது செயல்திறன் குறைந்து பழுதாகி, செயலற்றதாகி விடும்.

இவை சில சமயத்தில் மற்ற செயற்கைக் கோள்களுடன் மோதி விபத்துகளும் ஏற்படுவதுண்டு. அதனால் பயன்பாடற்ற அந்த செயற்கைக்கோளை பாதுகாப்பாகச் செயலிழக்கச் செய்ய வேண்டியுள்ளது. அப்போது பூமியில் வசிக்கும் மனிதர்களுக்கு எவ்வித ஆபத்தும் வந்துவிடக் கூடாது என சர்வதேச சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எப்படி இதை அழிக்கிறார்கள்..?

முதல் வழி, வெகுதொலைவில் இருக்கும் செயற்கைக்கோளை மேலும் தொலைவுக்கு அனுப்புவது. அதாவது அதன் சுற்று வட்டப் பாதையை விட்டு விலக்கி 300 கிலோமீட்டர் தூரத்துக்கு மேல் அதிதொலைவில் அனுப்பிவிடுவது. இந்த மர்மமான இடத்தை ‘கல்லறை கோளப் பாதை’ என்கின்றனர். இப்படி கல்லறை கோளப் பாதைக்கு அனுப்பப்படும் செயற்கைக்கோள் பல மில்லியன் ஆண்டுகளுக்கு அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும். இதற்குத்தான் `விண்வெளிக் குப்பைகள்’ என்று பெயர்.

காலாவதியாகி செயலற்ற கோளை பூமிக்குக் கொண்டு வந்து எரிப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. காரணம், அந்த செயற்கைக் கோளில் எரிபொருள் சொல்லும்படியாக இருக்காது. எனவேதான் தொலைவில் இருப்பதை மேலும் தொலைவுக்கு அனுப்பிவிடுகின்றனர்.

இரண்டாவது வழி, செயற்கைக் கோளை அப்புறப்படுத்துவது. பூமிக்கு அருகில் சுற்றும் செயற்கைக் கோளாக இருந்தால் அதன் எரிபொருளைக் காலிசெய்து வேகத்தைக் குறைத்து, பூமியை நோக்கி வரவைத்து வளிமண்டலப் பாதையிலேயே எரித்து விடுவது.

அதுவே, மிகப் பெரிய செயற்கைக் கோளாகவோ அல்லது விண்கலமாகவோ இருந்தால் இந்தத் திட்டம் சரிவராது. அதையும் மீறி பூமியை நோக்கி வர வைத்தால் அது பூமிக்கு வந்து எரிந்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். இவற்றைத் தவிர்க்க, நியூசிலாந்து நாட்டின் வெலிங்டன் நகரின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள தென்பசிபிக் பெருங்கடலில் செயற்கைக் கோளை விழச்செய்து அழித்து விடுவார்கள். இந்தப் பகுதிதான் `விண்கலங்களின் கல்லறை’ என்றழைக்கப்படுகிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் விமானப் படைகளிலோ, முப்படைகளிலோ ஓர் உட்பிரிவாக விண்வெளி பாதுகாப்புப் பிரிவுகள் இயங்கி வருகின்றன. சீனா, 2016ம் ஆண்டு தனியாக விண்வெளிப் படை ஒன்றை அமைத்தது. அமெரிக்காவும் 2020ம் ஆண்டு தனி விண்வெளிப் படை அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை ‘ஒருங்கிணைந்த விண்வெளிப் பிரிவு’, முப்படைகளை ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறது. பொதுவாக செயற்கைக்கோள்களை தரையில் இருந்து லேசர் கதிர்களைச் செலுத்தி அழிக்கலாம் அல்லது தொலைதூர உந்துவிசை ஏவுகணைகளைச் செலுத்தி அழிக்கலாம். இல்லையென்றால் தரையில் இருந்தோ, போர் விமானத்தில் இருந்தோ, கப்பலில் இருந்தோ ஏவலாம். இந்த ஏவுகணைகள் செயற்கைக்கோள்களை மோதியோ, வெடிப்பொருளை வெடிக்க வைத்தோ அழிக்கும்.

இதுதவிர செயற்கைக்கோள்களைப் போல ஆயுதத்தையும் விண்வெளிக்குச் செலுத்தி நீள்வட்டப் பாதையில் பயணிக்க வைத்து,  தாக்க வேண்டிய செயற்கைக்கோளுக்கு அருகில் சென்றதும் வெடிக்கச் செய்யலாம்.

ஓர் இராணுவ நிலையத்தை விண்வெளிச் சுற்றுப்பாதையில் வலம் வரச்செய்து, தேவைப்படும் போது ஆயுதங்கள் அல்லது லேசர் கதிர்களைக் கொண்டு விண்வெளி இலக்குகளைத் தாக்கலாம். இதுதவிர ஜாமர் கருவிகள் மூலம் செயற்கைக்கோள்களின் தொலைத்தொடர்புகளை முடக்கும் நுட்பங்களும் உண்டு.

இத்தொழில்நுட்பங்களை வைத்திருக்கும் நாட்டின் செயற்கைக் கோள்களை பிறநாடுகள் தாக்காது. ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் தமது செயற்கைக்கோள் எதிர் ஆயுதங்களை வெற்றிகரமாக சோதித்துள்ளன. இந்தப் பின்புலத்தில்தான் இந்தியாவின் ‘மிஷன் சக்தி’ முக்கியத்துவம் பெறுகிறது.

எதிரிகளின் ஏவுகணைத் தாக்குதல்களை முறியடிக்கக் கூடிய ‘உந்து ஏவுகணைப் பாதுகாப்பு’ (Ballistic Missile Defense) அமைப்பை இந்தியா கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் ெதரிவிக்கின்றனர்!                  

ஆயுதக் களமாக மாறும் விண்வெளி?

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் செயலாளர் பேட்ரிக் ஷனாஹன், ‘‘செயற்கைக்கோள்களை இடைமறித்து அழிக்கும் ஏவுகணையை இந்தியா சோதனை செய்துள்ளதால், விண்வெளியில் அதன் கழிவுப்பொருட்கள் பாதிப்பை உண்டாக்கலாம். விண்வெளியை அசுத்தமாக்க வேண்டாம். விண்வெளி என்பது நாம் வணிகம் நடத்தும் இடமாக இருக்க வேண்டும்.

நாம் சுதந்திரமாக அங்கு செயல்பட வேண்டும்...’’ என்று எச்சரித்துள்ளார்.அதேபோல், ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தியில், ‘இந்தியா, தாழ்வான உயரத்தில் பறக்கும் ஒரு செயற்கைக்கோளை ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை இடைமறித்து தாக்கியுள்ளதை அறிகிறோம்.

இந்த சோதனை எந்தவொரு நாட்டுக்கும் எதிரானதல்ல; விண்வெளியில் ஆயுதப் போட்டியில் நுழையும் நோக்கம் இல்லை; விண்வெளியில் ஆயுதங்களை செலுத்துவதைத் தடுப்பது குறித்தும், இந்திய வெளியுறவுக் கொள்கை மீண்டும் உறுதியாகக் கூறியிருக்கிறது என்பதை முன்னிலைப்படுத்துகிறோம்.

ஆனால், ஆயுதக் கட்டுப்பாட்டுக் களத்தில் இப்போதைய சூழ்நிலை சீரழிந்திருப்பதின் விளைவால் இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக நாங்கள் பார்க்கிறோம்...’ எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், ‘‘ரஷ்ய - சீன வரைவு ஒப்பந்தத்தின் அடிப்படையில் விண்வெளியில் ஆயுதப் போட்டியைத் தடுக்க ஒருமித்த சிந்தனையுள்ள நாடுகளுடன் இணைந்து விண்வெளியில் கட்டுப்பாட்டுக் கருவிகளை நிறுவ திட்டம் இருக்கிறது. சர்வதேசக் குழுவின் இந்தக் கூட்டு முயற்சியில், தீவிரமாக இணைய இந்தியாவுக்கும் அழைப்பு விடுக்கிறோம்...’’ என்று ரஷ்யா கூறியிருக்கிறது.

அமெரிக்க விமானப்படை உயரதிகாரி டேவிட் தாம்ப்சன், ‘‘விண்வௌியில் இந்தியா நடத்திய ஏவுகணையின் 270 துண்டுகளை கண்காணித்து வருகிறோம். இந்தத் துண்டுகளால் செயற்கைக்கோள்களுக்கு பாதிப்பு நேரக்கூடிய சூழல் ஏற்பட்டால், அந்த செயற்கைக்கோள்களின் உரிமையாளர்களுக்கு உடனடியாக தெரிவிக்கப்படும். சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை...’’ என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வானியல் அறிஞர் ஜொனாதன் மெக்டவல், ‘‘செயற்கைக்கோளைத் தாக்கி அழிக்கும் சோதனையை நடத்திய இந்தியா, சீனாவைவிட பொறுப்புடன் நடந்து கொண்டுள்ளது. சிதை துண்டுகளின் நிலை, அவற்றின் அளவு, இப்போது எவ்வளவு உயரத்தில் உள்ளன ஆகிய விவரங்களை முழுமையாகத் தொகுத்த பின்னரே, அவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து முடிவுக்கு வர முடியும்...’’ என்று கூறியுள்ளார்.

செயற்கைக்கோளைத் தாக்கி அழிக்கும் தொழில்நுட்பம் இப்போது வரை பாகிஸ்தானிடம் இல்லை. ஆனால், அந்த நாடு தெரிவித்துள்ள கருத்தில், ‘விண்வெளி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் சொந்தமான ஓர் இடம். அதை இராணுவமயமாக்கும் செயல்களைத் தவிர்க்கும் பொறுப்பு என்பது ஒவ்வொரு நாட்டுக்கும் இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளது.

7,500 டன் குப்பை

செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனையை 1959ம் ஆண்டு அமெரிக்கா மேற்கொண்டது. சீனா 2007ம் ஆண்டு மேற்கொண்டபோது, 865 கிலோ மீட்டர் உயரத்தில் செயலிழந்த வானிலை செயற்கைக்கோள் ஒன்றை அழித்தது. இது, சுற்றுப்பாதையில் பெரும் கழிவுப்பொருள் ஒன்றை விட்டுச் சென்றது.

இதற்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்தன. கடந்தாண்டு லண்டனில் இருந்து செயற்கைக்கோள் ஒன்று விண்ணுக்கு ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோளானது விண்வெளி நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்து விண்வெளியில் உள்ள குப்பைகளை அகற்றும் வேலையைச் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்சமயம் விண்வெளி நிலையத்தில் தொழில்நுட்பக் காரணங்களுக்காக இந்த செயற்கைக்கோள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், வருகிற மே மாதம் முதல் விண்வெளிக் குப்பைகளை அகற்றும் தனது பணியை அந்த செயற்கைக்கோள் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் பல செயற்கைக்கோள்கள் ஆயுட்காலம் முடிந்தபின்பும், சில பழுதடைந்து செயலிழந்தும் விண்வெளியிலேயே குப்பைகளாகத் தங்கிவிடுகின்றன. இதுவரை மொத்தம் 7,500 டன் செயற்கைக்கோள்கள் தங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவற்றால், எந்த நேரமும் பூமிக்கு ஆபத்து ஏற்படும் என்கிறார்கள்!