மத்திய அரசின் சறுக்கல்கள்



நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் அனலடித்துக்கொண்டிருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழகத்துக்கும் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும்  இழைத்த தீங்குகளைப் பற்றி யோசித்தால் மலைப்பாக இருக்கிறது. அதில் முக்கியமான சில மட்டும் இங்கே...

சிதைக்கப்படும் உயர் கல்வி

மத்திய அரசு சமீபமாக கல்வித் துறையில் செய்துவரும் மாற்றங்கள் ஆரோக்கியமானவை அல்ல. பன்னெடுங் காலமாக அனைவருக்கும் கல்வி மறுக்கப்பட்ட சமூகமாகவே நம் சமூகம் இருந்திருக்கிறது. விடுதலைக்குப் பிறகுதான் பல குடும்பங்களில் படித்தவர்களே உருவானார்கள். இப்படியான சூழலில் மோடி அரசின் கல்விக் கொள்கை என்பது நாட்டை மீண்டும் சுதந்திரத்துக்கு முன்பிருந்த நிலைக்குக் கொண்டு செல்வதாக உள்ளது.

இந்தப் புதிய கல்விக்கொள்கை மக்களில் ஒரு பிரிவினருக்கு மட்டும் உயர் கல்வியும் மற்றொரு பிரிவினருக்கு திறன் பயிற்சியும் வழங்குவதாக அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவர்கள் குழந்தைகள் வேலைக்குப் போகும் வயது எல்லையைக் குறைத்துள்ளதையும் நாம் மறந்துவிடக் கூடாது. மோடி அரசின் Make in India கொள்கையும் இந்தப் பின்னணியில் உருவாவதே.

அதாவது உயர் ஆய்வுகள் எல்லாம் வெளிநாடுகளில். இங்கே எந்திரங்களைப் பொருத்தும் மெக்கானிக்குகள் போதும். வசதியானவர்களும் உயர் சாதியினரும் வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கலாம் என்பதற்கு ஏற்பவே திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. யூஜிசி என்னும் பல்கலைக்கழக மானியக் குழுவை சமீபத்தில் மத்திய அரசு கலைத்தது. இதன்மூலம் இனி ஆய்வுப் படிப்புகளுக்கான நிதியுதவியை பல்கலைக்கழகங்கள் பெறுவது தடை செய்யப்பட்டுள்ளது.

உயர்கல்வியில், குறிப்பாக மொழியியல், வரலாறு, சமூகவியல் முதலான கலைப் பாடங்களில் மேற்படிப்பே இருக்கக் கூடாது... வெறும் Applied Sciences, Technology Oriented Course படித்து மக்களை மந்தைகளாக வைத்திருந்தால் போதும் என்று நினைக்கிறார்கள்.

நீட் தேர்வு கொண்டுவந்ததுதான் இதன் உச்சம். இன்றைய தேதியில் கிராமப்புறங்களில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு என்பதெல்லாம் கானல் நீராகிவிட்டதற்கு இந்த அரசே பொறுப்பு. பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு மட்டும் எதிரானவர்கள் அல்ல; இவர்கள் இந்து மதத்தின் அடித்தட்டு சமூகத்தவர்களுக்குமே எதிரானவர்கள் என்ற ஐயத்தை உருவாக்கியிருக்கிறது இந்த அரசு.  

பாதுகாப்புத் துறையின் குழறுபடிகள்

ஒரு நாட்டின் பாதுகாப்பு என்பது அதன் இறையாண்மைக்கு மிகவும் முக்கியம். ஆனால், இந்த அரசில்தான் ரஃபேல் ஊழல் வெளிச்சத்துக்கு வந்து சந்தி சிரித்தது. மேலும், பாதுகாப்புத் துறையில் மலிந்துள்ள ஊழல்கள், ஊனமுற்ற இராணுவ வீரருக்கு பென்ஷன் வழங்காமல் வேண்டுமென்றே இழுத்தடிப்பது போன்ற குற்றச்சாட்டுகளும் இந்த அரசின் மேல் வைக்கப்படுகின்றன.

காஷ்மீர் விவகாரம் பற்றியும் தீவிரவாதம் பற்றியும் பாதுகாப்புத்துறை ஆய்வறிஞர் ஹாப்பி மோன் ஜேக்கப் சொல்லும் விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். புளுவாமா தாக்குதலில் ஈடுபட்டவர் பாகிஸ்தான் தீவிரவாதி அல்ல. அவர் உள்ளூர் காஷ்மீரி. பயன்பட்ட வாகனமும் உள்ளூர் வாகனமே. காஷ்மீர் மக்கள் மத்தியில் இந்திய அரசின் மீதான கசப்புணர்வு இந்த அரசால் மேலும் அதிகரித்துள்ளது.

கடந்த 2013ம் ஆண்டில் காஷ்மீர் இளைஞர்களில் ஆறு பேர் மட்டுமே தீவிரவாதப் பாதையை நோக்கிச் சென்றனர். ஆனால், கடந்த ஐந்து
ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இருநூறைத் தொட்டுவிட்டது. இதேபோல் இந்த அரசில்தான் சீஸ் ஃபயர் தாக்குதல்களும் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளன. எல்லை தாண்டிய ஊடுருவல் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.

இப்படி சூழல் மோசமாகிக்கொண்டே சென்றாலும் இந்த அரசு இதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அத்துடன் மென்மையாக இருந்த பிரிவினை வாதக் குரல்களை ஒடுக்கி அவற்றை பயங்கரவாதத்தின் பக்கம் திசை திருப்பும் வேலையையே செய்துள்ளது.எல்லாவற்றையும்விட நமது மத்திய உளவுத்துறை படுதோல்வி அடைந்திருக்கிறது. புளுவாமாவின் கொடூரமான தாக்குதலே இதற்கு சாட்சி.

அயலுறவுக் கொள்கையின் சரிவுகள்

நம் மத்திய அரசின் அயலுறவுக் கொள்கை முன்பைவிட அதிகமாக அமெரிக்காவுடன் நெருக்கம் காட்டுவதாகவும், ரஷ்யாவுடன் விலகுவதாகவும் உள்ளன. ஆனால், அமெரிக்கா நம்முடன் அதனுடைய வணிக நலன் நோக்கிலேயே நட்பாக இருக்க விரும்புகிறது. அதை சாதித்தும் கொண்டிருக்கிறது.
பொதுவாக, இரு நாடுகளுக்கு இடையிலான வணிக உறவு என்றால் பரஸ்பர நலன்கள் இருக்க வேண்டும். இங்கோ அமெரிக்காவுக்குச் சாதகமான ஒப்பந்தங்களே பெருமளவு கையெழுத்தாகின்றன.

வணிக உறவுகளில் சுயலாப நோக்கில் அமெரிக்கா அளிக்கும் நியாயமற்ற அழுத்தங்கள், வட கொரியா, ஈரான், ரஷ்யா முதலான நாடுகளுடனான உறவுகள், அவற்றின் மீது அது விதிக்கும் தண்டனை நோக்கிலான கட்டுப்பாடுகள் முதலியன இந்திய நலன்களையும், அதன் இழப்புகளையும் கணக்கில் கொள்ளாதவை.

எடுத்துக்காட்டாக. ஈரானுடன் எண்ணெய் வர்த்தகம் கூடாது என ட்ரம்ப் விதிக்கும் தடையின் விளைவாக இந்தியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு, விலை உயர்வு முதலியன ஏற்படுவதைச் சொல்லலாம்.

இந்தியாவின் அமெரிக்க பாசம் அதிகரிக்க அதிகரிக்க ஏற்கெனவே நம்முடைய நண்பனாக இருந்த ரஷ்யா, பாகிஸ்தான் பக்கம் நகர்கிறது. ராணுவ ஹெலிகாப்டர்களை ரஷ்யா பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளதே இதற்கு சாட்சி. மேலும் ஆப்கானிஸ்தானுடனான பாகிஸ்தானின் உறவு, சில பயங்கரவாத அமைப்புகள் மீதான அதன் நடவடிக்கைகள் ஆகியவற்றை ரஷ்யா பாராட்டியுள்ளது.

மறுபுறம் இராணுவம் உட்பட பலவகைகளில் ராட்சஷத்தனமாக சீனா வளர்ந்துகொண்டே போக நம் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்றவை நம்மைவிட  சீனாவுடன் நட்பாக இருக்கத் தொடங்கியுள்ளன.

இவற்றை எல்லாம் புரிந்துகொண்டு முறியடிக்கும் எந்த அயலுறவுக் கொள்கையும் இப்போதைய மத்திய அரசிடம் இல்லை. மேலும், அணு உலை மூலப் பொருள் விநியோகக் குழுவில் (NSG) இந்தியா உறுப்பினராவது, செய்சல்ஸ் தீவில் கடற்படைத் தளம் அமைப்பது ஆகியவற்றில் இந்திய அரசின் முயற்சிகள் தேக்க நிலையிலேயே உள்ளன.

அதேபோல், ஐநா பாதுகாப்பு அவையில் உறுப்பினர் ஆகும் இந்தியக் கனவு மோடி ஆட்சியிலும் தள்ளிப் போய்க்கொண்டே உள்ளது.
நம் பிரதமரோ இதுபற்றி எல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல் வெளிநாட்டு டூர் அடித்து நாட்டை அடமானம் வைத்துக்கொண்டிருக் கிறார்

நிர்மூலமாகும் நிதித்துறை

நாட்டின் இப்போதைய நிலவரம் கஜானா காலி என்பதுதான். இந்தியாவின் பொருளாதார ஸ்திரத்தன்மை கடந்த ஐந்தாண்டுகளில் ஆட்டம் கண்டது போல வேறு எப்போதுமே இருந்ததில்லை. உள்நாட்டு உற்பத்தி விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. அதுபோலவே, பணவீக்கமும் அதிகரித்துள்ளது. விலைவாசி விண்ணுக்கு எகிறியுள்ளது. நாட்டில் அத்தியாவசியப் பொருட்களில் தொடங்கி அனைத்தின் விலையும் அதிகரிக்க மறுபுறம் ஆடம்பரப் பொருட்களான கார், ஏசி ஆகியவற்றின் விலைகள் கணிசமாகக் குறைகின்றன.

இவையெல்லாம் திட்டமில்லாத அரசின் லட்சணங்கள். ஏழைக்கும் பணக்காரருக்குமான வேறுபாடு முன்னிலும் பல மடங்கு அதிகரித்துள்ளது. மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற வரி விதிப்புகள் நாட்டின் தொழில்துறையையும் நிதித் துறையையும் கபளீகரம் செய்துள்ளன.

அரசுக்கும் நிதித்துறை அமைச்சக அதிகாரிகளுக்குமான முரண்பாடு என்பது மிக வெளிப்படையாக மோதலாக வெடித்து தலைக் குனிவை
ஏற்படுத்தியுள்ளது. மோடி அரசால் வெறும் மதவெறி நோக்கில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளால் ஏற்படும் பொருளாதாரப் பின்னடைவைச் சமாளிக்க முடியாமல் இதுவரை நான்கு பொருளாதார நிபுணர்கள் பல்வேறு நிதித் துறைப் பதவிகளிலிருந்து விலகியுள்ளார்கள்.

முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் அவர்கள் மோடி அரசின் பணமதிப்பிழப்புக் கொள்கையை வெளிப்படையாக விமர்சித்தார். பொருளாதார அறிஞர் சுப்பிரமணியமோ ‘மாட்டுக்கறித் தடை இந்தியப் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதிக்கிறது. சமூகப் பிளவுகளை இவ்வரசுக்கு பொருளாதார இழப்பு இல்லாமல் கையாளத் தெரியவில்லை’ என்றார்.  இப்படி, எல்லா முக்கிய துறைகளைப் போலவே நிதித் துறையையும் நிர்மூலமாக்கி வைத்திருக்கிறது மோடி அரசு.

இளங்கோ கிருஷ்ணன்