இறந்தவர்களைத் தோண்டி அலங்கரிக்கிறார்கள்!



டொராஜன் பழங்குடிகளின் விசித்திர சடங்குகள்

உலகின் மிகப்பெரிய சுற்றுலாத் தலங்களில் டானா டொராஜாவும் ஒன்று

இந்தோனேஷியாவின் தெற்கு சுலவேசி பகுதியின் தீவு ஒன்றில் வாழ்ந்து கொண்டிருக்கும் பழங்குடியினர் டொராஜன் மக்கள். சுமார் பதினொரு லட்சம் மக்கள் தொகை கொண்ட இவர்களில் பெரும்பகுதியினர் டானா டொராஜா (டொராஜன்களின் பூர்வ நிலம்) என்ற பகுதியில் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

இங்குதான் இறந்தோரின் சடலங்களைத் தோண்டி எடுத்து அவற்றுக்குப் புத்தாடை அணிவித்து மீண்டும் புதைக்கும் மா’நிநி திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.டொராஜன்களில் இப்போது பெரும் பகுதியினர் கிறிஸ்துவர்கள். சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கு சென்ற டச்சுக்காரர்கள் இந்த நிலத்தை தங்களின் காலனியாக்கி, இம்மக்களை தங்களின் அடிமைகளாக்கியதோடு, இவர்களுக்கு டொராஜன் (மேல் நிலத்து மக்கள்) என்ற பெயரையும் வழங்கினார்கள்.

கிறிஸ்துவத்தைப் போலவே இஸ்லாமும் இங்கு உண்டு. கிறிஸ்துவம் நுழையும் முன்போ அதே காலகட்டத்திலோ இஸ்லாம் இங்கு நுழைந்திருக்க வேண்டும். ஆனால், இப்போதும் இந்தப் பழங்குடிகளில் சிலர் இந்த பெரு மதங்களில் கரைந்து போகாமல் தங்கள் பூர்வீகமான அலூக் மதத்தில் உள்ளார்கள். இந்தோனேஷிய அரசு மூதாதையர்களின் வழி எனப்படும் அலூக் டூ டோலோ மதத்தை சட்டரீதியாக அங்கீகரித்துள்ளது.

டொராஜன்களில் அலூக் மதத்தைப் பின்பற்றும் மக்களின் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது. இயற்கையோடு இணைந்து வாழும் அற்புதமான மக்களாக இவர்கள் உள்ளார்கள். தங்கள் பிரச்னைகள், தேவைகள் அனைத்தையும் இயற்கையிடமே ஒப்படைக்கிறார்கள். இயற்கையோடு இயற்கையாகக் கலந்த முன்னோர்களின் ஆசி நம்மை வழி நடத்தும் என்று நம்புகிறார்கள்.

நீத்தார் சடங்குகள் அலூக் மதத்தில் மிக விரிவாக நடைபெறுகிறது. இறப்பவரின் சமூக அந்தஸ்து, தகுதிக்கு ஏற்ப நாட்கணக்கில் தொடங்கி மாதக் கணக்கில், ஏன் - வருடக் கணக்கில் கூட நீத்தார் சடங்குகளைச் செய்கிறார்கள். டொராஜன்களைப் பொறுத் தவரை மரணம் என்பது திடீரென ஏற்படுவதல்ல. அது பன்னெடுங் காலமாக சிறிது சிறிதாக நிகழும் பெரும் பயணத்தின் ஒரு முக்கிய பகுதி.

புயா எனப்படும் ஆன்மாக்களின் நிலம் நோக்கி ஒவ்வொரு உயிரும் பயணிக்கும் புனித யாத்திரையின் தொடக்கமே மரணம். ஒவ்வொரு உயிரும் அந்த புயாவை அடைந்து, பயணத்தை வெற்றிகரமாக நிறைவேற்றினால்தான் அந்தக் குடும்பம் செழிப்போடு நன்றாக இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. எனவே, ஒவ்வொரு மரணத்தையும் ஒரு திருவிழா போல கொண்டாடுகிறார்கள்.

நீத்தார் சடங்குகள் செய்தே தங்கள் மொத்த செல்வத்தையும் இழப்பவர்கள்கூட இச்சமூகத்தில் இருக்கிறார்கள். ஆனால், இதற்காக அவர்கள் வருத்தப்படுவதில்லை. அதைச் செய்ய வேண்டியது தங்கள் வாழ்நாள் கடமை என நினைக்கிறார்கள்.

பிற்பாடு புயா எனப்படும் தங்கள் ஆன்மாவின் நற்பயணத்துக்காக குடும்பத்தவர் நமக்கு சடங்கு சம்பிரதாயங்களைச் செய்ய வேண்டும் என்றால் நாம் இப்போது இறந்தவர்களுக்குச் செய்ய வேண்டும் என்ற மனோபாவமும் இதற்குப் பின் இருக்கிறது.

சிலர் தங்களுடைய நீத்தார் சடங்குக்காக தாங்களே காசு சேர்த்து வைத்து விட்டுச் செல்வதும் உண்டு. எப்படி இருந்தாலும் டொராஜன்களில் மரணச் சடங்கு என்பது பிரமாண்டமானது.நீத்தார் சடங்கு நடக்கும் இடத்தை ரண்டி என்பார்கள். அங்குதான் நிகழ்வுக்கான பார்வையாளர்கள், இறந்தோர் குடும்பத்தார், உறவுகள், நட்புகள் என அனைவரும் கூடுவார்கள்.

ஒரு பக்கம் குடும்பத்தவர்களும் நெருங்கியவர்களும் அழுது கொண்டிருப்பார்கள். பெண்கள் மார்பில் அடித்துக்கொண்டு அழுவார்கள்.மறுபுறம் நீத்தார் சடங்கின் போது ஓதப்படும் புனித மந்திரங்கள் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும். இன்னொருபுறம் புல்லாங்குழல் இசையும் வாத்தியக் கருவிகளும் அவ்விடத்தின் துக்கத்தை கனக்கச் செய்யும். இறந்தவர்களின் உடலை பல்வேறு வகையான துணிகள் கொண்டு பலமுறை சுற்றுவார்கள்.


விரிவான நீத்தார் சடங்குகள் முடிந்த பிறகே அதை நல்லடக்கம் செய்வார்கள். அதுவரை அவ்வுடல் டாங்கோனான் எனப்படும் கட்டடத்தில் வைக்கப்படும்.

மிகப்பெரிய படகைப் போன்ற அமைப்புகொண்ட விசித்திரமான கட்டடம் இது. இங்குதான் இறந்தவர் சடங்குகளும் செய்யப்படும். உடலை நல்லடக்கம் செய்யும்வரை அந்த ஆன்மா கிராமத்தையே சுற்றிக்கொண்டிருக்கும் என்பது நம்பிக்கை. நல்லடக்கம் செய்தால்தான் அவ்வுயிர் புயா எனும் ஆன்மாக்களின் நிலம் நோக்கிச் செல்லும்.

நல்லடக்கம் செய்யும் முன் பலவிதமான சடங்குகளைச் செய்ய வேண்டும். பலிகள் இங்கு மிகவும் முக்கியம். எருமை மாடுகள், பன்றிகள், கோழிகள் என விதவிதமான உயிர்ப்பலிகள் தரவேண்டும். இறந்தோரின் ஆவி, எருமைகள் மீது ஏறியே புயாவை அடையும் என்பதால் எவ்வளவு அதிகமான எருமைகள் படைக்கப்படுகிறதோ அவ்வளவு விரைவாக அவர்கள் பயணம் நிறைவடையும் என்பது நம்பிக்கை.

பத்து எருமைகள், நூற்றுக்கணக்கான பன்றிகள், அதைவிட அதிகமான கோழிகள் கொடுப்பது என்பது உயர்வானவர்களுக்கான சடங்கு. எருமைகளின் தலையையும் பன்றிகளின் தலையையும் சீவி வரிசையாக வைத்து வணங்குவார்கள். இந்தப் படையலின்போது உச்சபட்ச இசை முழங்கும். இளையோர் வெறிகொண்டு ஆடுவார்கள். சன்னதம் வந்தது போல் மக்கள் துடியான மனநிலையில் இருப்பார்கள். மூத்தோர்களின் ஆவி அதைப் பார்க்க ஆங்காரத்துடன் காத்திருக்குமாம்.

சேவல் சண்டையும் இந்த சடங்கில் மிகவும் முக்கியம். சேவல் சண்டைகளின்போது ஏற்படும் அடிதடிகளில் மரணம்கூட ஏற்படுமாம். இத்தனை களேபரமாக ஒரு நீத்தார் சடங்கைச் செய்கிறார்கள் இம்மக்கள்.

எவ்வளவு வறியவர்கள் என்றாலும் குறைந்தபட்சம் மூன்று கோழிகளை அறுத்தாவது சடங்கு செய்ய வேண்டும். இல்லாவிடில் அந்த ஆன்மா புயாவை அடையாது. பொதுவாக, இருபத்தைந்து ஜோடி கோழிகளைப் பலியிட்டு இச்சடங்கை நிறைவு செய்கிறார்கள்.

இந்தச்  சடங்குகளை இறந்த குடும்பத்தாரின் பொருளாதார நிலைக்கு ஏற்ப வெவ்வேறு காலகட்டத்தில் செய்யலாம் என்பதால், சில வசதியில்லாத குடும்பத்தவர்கள் வருடக்கணக்கில்கூட செய்கிறார்கள். அதுவரை இறந்தோர் உடல் துணிகள் சுற்றப்பட்டு டாங்கோனானில் வைக்கப்பட்டிருக்கும்.

பொதுவாக, மூன்று முறைகளில் இங்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது. சவப்பெட்டியை ஏதேனும் குகைகளிலோ தோண்டப்பட்ட பாறைக் குடைவுகளிலோ வைக்கிறார்கள். சிலர்  மலை உச்சிகளில் மரங்களில் சவப்பெட்டியைக் கட்டிவிடுகிறார்கள்.

இறந்தவர்கள் ஏதேனும் காரணத்துக்காக அவ்வுடலைத் தேடி மறுபடியும் வருவார்கள் என்ற காரணம் இருப்பதால் அவ்வுடலை தொங்கிய நிலையிலேயே கட்டுகிறார்கள். குழந்தைகளை இப்படித்தான் அடக்கம் செய்கிறார்கள். வசதியானவர்கள் உயரமான மலை உச்சிகளின் பக்கவாட்டில் புதைக்கிறார்கள். இதைத் தயாரிக்க மாதக்கணக்கில் ஆகும். சில இடங்களில்  மொத்த குடும்பத்தையும் புதைக்கும் அளவுக்கான இடம்கூட தோண்டப்
படுகிறது.

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் மா’நிநி எனும் திருவிழாதான் இச்சடங்குகளின் உச்சம். இந்த சடங்கை ஒவ்வொரு சடலத்துக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்ய வேண்டுமாம். இந்தச் சடங்கின்போது இறந்தவரின் உறவினர்கள் இடுகாட்டில் கூடுகிறார்கள்.

புதைக்கப்பட்ட தங்களின் உறவினர் உடலைத் தோண்டி எடுத்து அதனை சுத்தம் செய்கிறார்கள். பிறகு, தாங்கள் கொண்டு வந்திருக்கும் புத்தாடைகளை அந்த சடலங்களுக்கு அணிவித்து வணங்குகிறார்கள்.

சிலர், அந்த சடலங்களை ஊருக்குள்ளும் ஊர்வலமாக எடுத்துச் செல்கிறார்கள். புயாவை நோக்கிச் செல்வதற்கான பயணத்தில் தங்கள் முன்னோருக்கு உதவினால் அவர்களின் ஆன்மா தங்களை வழிநடத்தும்; ஆபத்துக் காலங்களில் உடன் இருக்கும். நல்லவற்றை ஆசீர்வதிக்கும் என்பது இந்தச் சடங்குகளின் பின்னுள்ள நம்பிக்கையாக இருக்கிறது.

கடந்த 1970ம் ஆண்டுக்குப் பிறகு டோராஜன் மக்கள் சர்வதேச கவனம் கிடைக்கப்பெற்றார்கள். இவர்களின் விநோதமான சடங்கு உலகப் புகழ்பெற்றதால் மானுடவியல் ஆய்வாளர்களும் வரலாற்று மாணவர்களும் படையெடுக்க டானா டொராஜா பகுதியே இன்று மிகப் பெரிய சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது.

மறுபுறம் சர்வதேச சமூகத்தோடு உறவு ஏற்பட்டதால் தங்கள் தனித்துவமான வாழ்வை இழந்து இம்மக்கள் மையநீரோட்டத்துக்குள் நுழைவதால் இந்தச் சடங்குகளும் அரிதாகிக் கொண்டிருக்கின்றன.           

இளங்கோ கிருஷ்ணன்