பகவான் -23



நிஜமான அமெரிக்கா!

நமக்கு ஊடகங்களில் காட்டப்பட்டிருக்கும் அமெரிக்கா வேறு. நிஜ அமெரிக்கா வேறு. நமக்கு காட்டப்படும் நவீனமான அமெரிக்கா என்பது, நிஜமான அமெரிக்காவில் ஐந்து சதவிகிதம் கூட இல்லை.

மீதி?

காடுகள், ஆறுகள், பாலைவனங்கள், மனிதர்களே வசிக்காத no man land எனப்படும் தரிசு நிலங்கள்.அதிலும் ரஜனீஷ் ஆசிரமம் அமைக்கப்படுவதற்காக வாங்கப்பட்டிருந்த 64,000 ஏக்கர் நிலம் அமைந்திருந்த ஒரேகான், அமெரிக்காவின் மேற்கு மாநிலங்களில் ஒன்று.Western America என்பது இன்றும்கூட தனித்துவமான பண்பாடு கொண்ட ரத்தபூமி. கடந்த நூற்றாண்டின் தொடக்கம் வரை பழங்குடியினரான செவ்விந்தியர்கள் கூட்டம் கூட்டமாக வசித்து வந்த இடம். அறுபது சதவிகித இடங்கள் இன்றும் கூட காடுகள்தான்.

அமெரிக்காவிலும் சேலம் என்றொரு நகரம் இருக்கிறது என்று பத்திரிகைகளில் துணுக்குச் செய்தியாக எப்போதோ படித்திருப்பீர்களே? அந்த சேலம்தான் ஒரேகானின் தலைநகரம்.ஏராளமான நிலங்கள் இருப்பதால் ஏகத்துக்கும் பண்ணை விவசாயம். ஆறுகளிலும், ஏரிகளிலும் மீன்பிடித்தொழில் என்று நாம் அறிந்த வாஷிங்டன், நியூயார்க்குக்கு நேரெதிரான பகுதி அது. இன்றும் கூட அமெரிக்காவின் டிம்பர் (மரங்கள்) தேவையை பெரும்பாலும் ஒரேகான் காடுகள்தான் பூர்த்தி செய்து வருகின்றன.

ஒரேகான் மாகாணத்தில் ரஜனீஷின் பக்தர்கள் இடம் வாங்கியது ஆண்டலோப் என்கிற கைவிடப்பட்ட நகரத்துக்கு அருகில். அப்போது ஆண்டலோப்பில் 60க்கும் குறைவானவர்களே வசித்து வந்தார்கள். அவர்கள் சிறிய அளவில் மாட்டுப்பண்ணை வைத்திருந்தவர்கள்.

அன்னியர்கள் திடீரென தங்கள் பகுதியில் பெரும் நிலங்களை வாங்கியதை அவர்கள் தங்கள் வாழ்க்கைக்கு இடையூறாகக் கருதினார்கள்.மா ஷீலா ஆனந்த்தான் ஆசிரமத்தை எப்படி கட்ட வேண்டும் என்று திட்டமிடுவதற்காக அடிக்கடி அங்கே வருவார்.

ஒரு பணக்கார விதவை பெரிய நிலப்பரப்பை வாங்கி, பெரிய பண்ணை அமைக்கப் போகிறார் என்றுதான் அவர்கள் நினைத்தார்கள். ரஜனீஷ் பற்றியோ, அவருக்கு அங்கே ஒரு நகரம் அளவுக்கு ஆசிரமம் அமைக்கப்படுவதற்கு திட்டமிட்டிருப்பது பற்றியோ அவர்களுக்கு அப்போது தெரியாது.

உள்ளூர்வாசிகளை சரிக்கட்ட அடிக்கடி தங்களது நிலத்தில் டெண்ட் அமைத்து பார்ட்டி கொடுக்கத் தொடங்கினார் ஷீலா.இம்மாதிரி பார்ட்டி கொடுத்தால், உள்ளூர் வாசிகளோடு நட்புறவினை ஏற்படுத்திக் கொள்ள முடியும்; தங்களது திட்டங்களுக்கு அவர்களது ஆதரவினைப் பெற முடியும் என்பது அவரது எண்ணம்.

இந்த பார்ட்டிகளில் மது தாராளமாக ஓடும். பெரிய ஸ்பீக்கர்களை வைத்து மைக்கேல் ஜாக்சன் பாடல்களை சப்தமாக ஒலிக்கச் செய்வார்கள். நாட்டுப்புறத்தான்களாகிய ஆண்டலோப் பண்ணையாட்களோடு ஷீலா நடனமாடுவார். வெகு குறைவான எண்ணிக்கையிலான சன்னியாசிகளே அப்போதும் ஷீலாவுடன் இருந்தனர்.

ரஜனீஷ்புரத்தின் ஆரம்பகால நாட்களை நாம் தெரிந்து கொள்ள சாட்சியாக, முன்னாள் சன்னியாசியான சூஸன் ஹார்ஃபோ என்கிற அமெரிக்கப் பெண் எழுதிய கட்டுரை உதவுகிறது.‘ஒரேகான் மாகஸின்’ என்கிற பத்திரிகையில் ‘Memoirs of an Ex-Sannyasin’ என்கிற தலைப்பில் 1983ல் அவர் எழுதிய கட்டுரை, முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பான சூழலை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது.

இனி சூஸனின் குரலிலேயே அந்நாட்களுக்குள் செல்வோமா?

நீண்ட நாட்களாக நான் காத்துக் கொண்டிருந்த அழைப்பு அது. புதியதாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ரஜனீஷ் நகரத்தை நிர்மாணிக்க உதவுவதற்காக ஒரு கோடை நாளில் அழைத்திருந்தார்கள். ஏற்கனவே மா ஷீலா ஆனந்துக்கு நான் கடிதம் எழுதியிருந்தேன். பகவானுடன் நானும் இருக்க பிரியப்படுகிறேன் என்று கேட்டிருந்ததைத் தொடர்ந்து இந்த அழைப்புக் கடிதம் வந்திருந்தது.

அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் நான் பகவானின் பக்தை ஆனேன். கடிதம் வாயிலாகவே எனக்கு சன்னியாசம் வழங்கப்பட்டு சன்னியாசியாகவும் ஆகியிருந்தேன். அதுநாள் வரை நான் இந்தியாவின் பூனா நகரத்துக்கும் சென்றதில்லை. பகவானை நேரில் தரிசித்ததும் இல்லை.

இந்தியாவுக்குச் செல்ல திட்டமிட்டு, அதற்காக கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்துக் கொண்டிருந்த வேளையில்தான் பகவானே அமெரிக்காவுக்கு இடப்பெயர்வு செய்கிறார் என்கிற இனிய செய்தி எங்களுக்குக் கிடைத்தது. அமெரிக்க பக்தர்கள் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

அவர் அமெரிக்காவுக்கு வந்துவிட்டார் என்றார்கள்.ஆனால், எங்கே தங்கியிருக்கிறார், என்ன செய்துகொண்டிருக்கிறார் என்கிற தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்பட்டது. எங்களுக்கெல்லாம் அது மர்மமாகவே இருந்தது.

சில மாதங்கள் கழித்துதான் ஒரேகான் மாகாணத்தில் ஆண்டலோப் நகருக்கு அருகே புதியதாக ‘ரஜனீஷ்புரம்’ என்கிற நகரம் நிர்மாணிக்கப்படுவதாக கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. எங்கள் ஒவ்வொருவருக்கும் அங்கே இடமுண்டு என்கிற வாக்குறுதியும் கொடுக்கப்பட்டது.

நமக்கான நகரத்தை நாமே அமைக்கிறோம் என்பதால் அவரவரவால் முடிந்தளவு பொருளுதவி செய்யவேண்டும்; உடல் உழைப்பும் தேவைப்படும் என்றார்கள். ஏற்கனவே என்னிடம் வங்கியில் இருந்த பணத்தைத் தர நான் முடிவு செய்தேன். என்னைப் போன்ற பக்தர்கள் சிலர் அவர்களது சொத்துகளை விற்று ஆசிரமத்துக்கு பணம் கொடுத்தார்கள்.

கையிருப்போ, சொத்தோ இல்லாதவர்கள் உறவினர்கள், நண்பர்களிடம் கடனாகக் கேட்டு பணம் அனுப்பினார்கள். பகவானுடனேயே வசிக்கும் பாக்கியம் நமக்கெல்லாம் கிடைக்கப் போகிறது என்கிற எண்ணம்தான் இதற்கெல்லாம் காரணம்.

ஆனால், பக்தர்களாக இருக்கும் காரணத்தால் எல்லோருக்குமே அங்கே உடனடியாக இடம் கிடைக்காது என்று சில காலம் கழித்துதான் தெரியவந்தது. அழைப்பு இருப்பவர்கள் மட்டுமே அங்கே செல்ல முடியும். அதற்கு அவர்கள் சொன்ன காரணமும் ஏற்புடையதாகவே இருந்தது.
இப்போதுதான் நகரத்தை உருவாக்க ஆரம்பித்திருக்கிறோம். கட்டுமான வேலை தெரிந்தவர்கள், பண்ணை வேலையாட்கள் போன்றவர்கள் வந்தால் மட்டும் போதும்.

ஏனெனில், அங்கே நிலம் இருக்கிறதே தவிர, மனிதர்களுக்கு தங்குமிடங்களை இனிமேல்தான் உருவாக்க வேண்டும். இப்போதைக்கு ஒரு பண்ணை, சிறிய கட்டடங்கள் இருக்கின்றன. பனிக்காலம் வேறு ஆரம்பித்துவிட்டது. அங்கே டெண்ட் அடித்தும் தங்க முடியாது என்று காரணம் சொன்னார்கள்.

அப்போது முப்பத்தாறு வயது குண்டுப் பெண்மணி நான். ஒரு நகரத்தை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபடுமளவுக்கு எவ்வித திறமைகளும் என்னிடம் இல்லை. இருப்பினும் வெகுவிரைவிலேயே பகவானுக்கு அருகில் எனக்கும் ஒரு இடம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருந்தது.

வேலை நேரம் போக என்னுடைய சிறிய அப்பார்ட்மெண்டிலேயே மீதி நேரத்தையெல்லாம் கழித்துக் கொண்டிருப்பேன். என்னுடைய இருப்பிடத்தில் எங்கு நோக்கினாலும் பகவான் படம் இருக்கும். எப்போதும் அவரது நூல்களை வாசித்துக் கொண்டிருப்பேன். பஜனை கேசட்டுகளை கேட்டுக் கொண்டிருப்பேன். பகவான் செய்யச் சொல்லியிருந்த யோகாவை பயிற்சி செய்து கொண்டிருப்பேன்.

பகவானுக்கு கடிதம் எழுதுவேன். எனக்குள் ஊற்றெடுத்த ஒட்டுமொத்த அன்பையும் எழுத்துகளில் கொட்டுவேன். ஒரே ஒரு முறை மட்டும் அவரிடமிருந்து பதில் கடிதம் வந்திருந்தது. அந்நாட்களில் என்னுடைய ஒரே லட்சியம் எப்படியாவது பகவானுக்கு அருகில் வசிக்க எனக்கு ஒரு இடம் என்பதாகத்தான் இருந்தது.

எனவேதான் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மா ஷீலா ஆனந்துக்கு ஒரு கடிதம் எழுதினேன். எத்தகைய கடினமான வேலையாக இருந்தாலும் செய்வதற்குத் தயாராக இருக்கிறேன். பகவானுக்கு அருகில் ஓரிடம் என்பதே போதும் என்று அந்தக் கடிதத்தில் உருக்கமாகக் குறிப்பிட்டிருந்தேன்.இச்சூழலில்தான் நான் முதலில் சொன்ன அழைப்புக் கடிதம் எனக்கு வந்திருந்தது.

உடனடியாக நான் பார்த்துக்கொண்டிருந்த வேலையை ராஜினாமா செய்தேன். புதிய இருப்பிடத்தில் தங்குவதற்கு அவசியமான சில விஷயங்களை வாங்கிக் கொண்டேன். ஒரேகான் மாகாணத்தில் இருந்த போர்ட்லேண்ட் நகருக்கு விமான டிக்கெட் வாங்கினேன்.

இதற்கெல்லாம் கிட்டத்தட்ட 2000 டாலர் பணம் செலவானது. என் கையிருப்பாக வெறும் 400 டாலரை வைத்துக்கொண்டு என் எதிர்காலத்தை பகவானிடம் ஒப்படைக்க கிளம்பினேன்.

(தரிசனம் தருவார்)

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்