தேர்தல் 2019-தமிழக பெண் எம்பிக்கள்!



கடந்த 1952ல் உருவான இந்தியாவின் முதல் மக்களவையில், 24 பெண் எம் பிக்களில் தமிழகத்திலிருந்து திருவள்ளூர் மரகதம் சந்திரசேகர்; திண்டுக்கல் அம்மு சுவாமிநாதன் ஆகியோர் எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
அதன்பின், 1957ல் 24 பேரில், கோவை பார்வதி கிருஷ்ணன், 1962ல் 37 பேரில் மாயூரம் (இன்றைய மயிலாடுதுறை) மரகதம் சந்திரசேகர், திண்டுக்கல் டி.எஸ்.சவுந்தரம் ராமச்சந்திரன் ஆகியோர் மக்களவை உறுப்பினர்களாயினர். 1967ல் தேர்வான 33 பேரில் ஒருவர் கூட தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படவில்லை.

தொடர்ந்து 1971ல் 28 பேரில் சிவகாசி ஜெயலட்சுமி வெங்கடசாமி, கோவை பார்வதி கிருஷ்ணன்; 1977ல் 21 பேரில் கோவை பார்வதி கிருஷ்ணன், சிவகாசி ஜெயலட்சுமி வெங்கடசாமி ஆகியோர் தேர்வாகினர். 1980ல் 32 பேரில் ஒரு பெண் உறுப்பினர் கூட தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படவில்லை.

1984ல் 45 பேரில் தென்சென்னை வைஜெயந்திமாலா பாலி, பெரும்புதூர் மரகதம் சந்திரசேகர்; 1989ல் 41 பேரில் பெரும்புதூர் மரகதம் சந்திரசேகர், தென்சென்னை வைஜெயந்திமாலா பாலி; 1991ல் 42 பேரில் பெரும்புதூர் மரகதம் சந்திரசேகர், நாகப்பட்டினம் பத்மா, திருச்செங்கோடு டி.எஸ்.சவுந்தரம் ஆகியோர் தேர்வான நிலையில் 1996ல் 41 பேரில் தமிழகத்திலிருந்து ஒருவர் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை.

1998ல் 44 பேரில் ராசிபுரம் வி.சரோஜா; 1999ல் 52 பேரில் ராசிபுரம் வி.சரோஜா, ஆங்கிலோ - இந்தியன் நியமன உறுப்பினராக பெட்ரிக்ஸ் டிசோசா; 2004ல் 52 பேரில் ராமநாதபுரம் எம்.எஸ்.கே.பவானி ராஜேந்திரன், திருச்செங்கோடு சுப்புலட்சுமி ஜெகதீசன், ராசிபுரம் கே.ராணி, திருச்செந்தூர் வி.ராதிகா செல்வி; 2009ல் 64 பேரில் கன்னியாகுமரி ஹெலன் டேவிட்சன்; 2014ல் 66 பேரில் காஞ்சிபுரம் கே.மரகதம், தென்காசி எம்.வசந்தி, திருப்பூர் வி.சத்யபாமா, திருவண்ணாமலை ஆர்.வனரோஜா ஆகியோர் தமிழகத்தின் சார்பில் மக்களவைக்கு அனுப்பப்பட்டனர்.

இப்போது நடக்கும் மக்களவைத் தேர்தலில் எத்தனை பெண் பிரதிநிதிகள் தமிழகத்திலிருந்து தில்லி செல்வார்கள்?

மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது அது தெரிந்துவிடும்!

நெட்டிசன்