இந்தியாவில் முதன்முறையாக மக்களிடம் நிதி திரட்டி நடத்தப்பட்ட திரைப்பட விழா!



நல்ல சினிமாவின் அசராத போராளி அருண்! ‘தமிழ் ஸ்டூடியோ’ என்னும் பெயரில் அமைப்பு ஒன்றை நடத்தி வரும் இவர், சமீபத்தில் இரு நாட்கள் நடத்தி முடித்த சென்னை சுயாதீன திரைப்பட விழா (Chennai Independent Film Festival) பலரின் கவனத்தையும் இழுத்திருக்கிறது.
லண்டனில் கல்வி பயின்று, இங்கே ெமன்பொருள் நிறுவனத்தின் வேலை துறந்து, சினிமா பற்றிய புரிதலுக்காக வெற்றிகரமாக தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறார். அருண் போராடிய விஷயம் இன்று பல நல்ல பலன்களைப் பெற்றுத் தந்திருக்கிறது.

இந்தியாவில் முதன்முறையாக மக்களிடம் நிதி திரட்டி நடத்தப்பட்ட விழா என்பதாலேயே இந்தத் திரைப்பட திருவிழா முக்கியமானதாகிறது. சினிமாவின் நிலைப்பாடுகள் காரணமாக சில எதிர்ப்புகளைச் சந்தித்தாலும் கறாராகத் தன் கருத்துக்களைச் சொல்வதற்கு அருண் தயங்குவதில்லை.

‘‘சுயாதீன திரைப்படங்கள் என்பது சுதந்திரமான மனநிலையில் செய்வது. கட்டற்று, யாருடைய பெரும் துணையும் இல்லாமல் நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதன் வார்ப்பைச் செய்து பார்ப்பதுதான்.

இப்போது சினிமா உலகம் முழுக்க கார்ப்பரேட்டுகளின் கையிலோ அல்லது மிகப்பெரிய முதலாளிகளின் வசமோ அல்லது ஏதாவது ஓர் அமைப்பின் தலைமையின் கீழோதான் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதில் அசலான படைப்பு உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு.

கலை என்பது பெரிய முதலாளிகளின் கையில் இருந்தால், அது வியாபாரமாகத்தான் மதிக்கப்படும். மக்களுக்குத்தான் கலையையும், பண்பாட்டையும் மீட்டெடுக்கக் கூடிய சக்தி இருக்கிறது.

குழந்தைகளின் உயிர் காக்கும் மருந்துகள் முதற்கொண்டு பெரும் கார்ப்பரேட்களின் கையில் சிக்கியிருக்கும் வேளையில் கலையையும் அப்படிப் போய்விடாமல் காக்க வேண்டும். அது கார்ப்பரேட்டுகள், வியாபாரிகள் கையிலிருந்தால் சமூகம் சிக்கலாகிவிடக் கூடிய நிலை இருக்கிறது. கண்ணெதிரே அவை மாண்பு கெட்டுப் போவதைப் பார்த்துக்கொண்டு நாம் சும்மா இருந்துவிட முடியாது.

பிரான்ஸ், இத்தாலி, செக் குடியரசு போன்ற நாடுகள் கலைகளில் சிறந்து விளங்குகின்றன. இத்தகைய புரிதல் இங்கேயும் வரவேண்டும். கலை மக்கள் கைக்கு திரும்பி வந்தால் எல்லாம் நலமாகும். இதுமாதிரி சுயாதீன திரைப்பட விழாக்களில் நிறைய நிகழ்கிறது. மக்கள் தங்கள் அசல் கலையை அடையாளம் கண்டு கொள்கிறார்கள். அவர்களுக்கு புரிதல் கிடைக்கிறது.

இதற்கான அனைத்து முன்னெடுப்புகளையும் மக்களை நம்பித்தான் ஆரம்பித்தோம். மக்களின் ஒவ்வொரு பைசாவும் வரவேற்கப்பட்டது. அவர்களால் முடிந்த அன்பளிப்பு மனதார ஏற்றுக்கொள்ளப்பட்டது. ‘தமிழ் ஸ்டூடியோ’வின் செயல்பாடுகளில் எப்பொழுதும் பிரியமும், நம்பிக்கையும் கொண்டிருக்கிற இயக்குநர் மிஷ்கின் ஒரு தனிப்பட்ட சினிமா வகுப்பை நடத்திக் கொடுத்து இரண்டு லட்சத்திற்கு மேல் நன்கொடை திரட்டக் காரணமானார். ஒரு நாளின் பெரும் பகுதி தங்கியிருந்து அவர் செயலாற்றிய விதம் அருமையானது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் 50,000 அளித்து ஒரு பங்களிப்பையும், இயக்குநர் பாலாஜி சக்திவேல் 25,000 அளித்து மற்றொரு பெரும் பங்களிப்பையும் செய்தார்கள். இந்தியாவின் முக்கிய ஒளிப்பதிவாளர் ரவி வர்மனும், நடிகர் நாசரும் இப்படி ஒரு வகுப்பு நடத்திக் கொடுத்தார்கள்.
வெறும் சினிமா பற்றிய  புரிதலுடன், அதனோடு இணைந்த தொழில்நுட்பத்தையும் புரிந்துகொள்ள இங்கே தயார் செய்கிறோம். தொழில்நுட்ப அறிவும் இணைந்திருக்கிற மனிதனால்தான் சினிமாவிலும் வெற்றிகரமாக இயங்க முடிகிறது.

எனக்கு இளைஞர்களை வழிநடத்துவது தேவையில்லாதது எனத் தோன்றுகிறது. அவர்களே முடிவெடுப்பார்கள். இங்கே பங்குபெற்ற குறும்படங்களை, அதன் தன்மையைப் பார்த்தபோது எனக்கு இப்படித்தான் தோன்றியது. இப்போதிருக்கும் இளைஞர்களுக்கு ‘உண்மை’ மிகவும் பிடித்த விஷயமாகி இருக்கிறது. அதிலிருந்தே அவர்கள் படைப்பாக்கம் ஆரம்பிக்கிறது. இந்த திரைப்பட விழாவிற்கு வந்தவர்களுக்கு குறைந்த விலையில் உணவு ஏற்பாடு, அடுத்தடுத்த திரையரங்கு செல்ல வாகன வசதி, உலகின் மிக முக்கியமான படங்கள் காணக் கிடைத்தன.

தேர்வான 32 திரைப்படங்களின் உண்மைத்தன்மை உணரப்பட்டது. 12 தமிழ் குறும்படங்களின் ரசனையும் முக்கியமானது. வெறும் திரையிடலோடு முடிந்துவிடாமல் மாஸ்டர் கிளாஸ் மற்றும் கலந்துரையாடலும் நடந்தது. அதை பொறுப்பேற்று நடத்தியவர்களும் இயக்குநர்களும் படம் பார்க்க வந்திருந்த ரசிகர்களின் தேர்ந்த கேள்விகளை ரசித்தார்கள். அவர்களின் இடையீடுகள் குறிப்பிடத்தக்கதாகி இருந்தது பற்றி சந்தோஷப்பட்டார்கள். சினிமாவின் புரிதலுக்காக மிகக்குறைந்த விலையில் புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

அவை சினிமாவின் எளிய புரிதலுக்கு வழிவகுத்தன.அசுரத்தனமான அளவில் திரைப்படங்களைத் தயாரித்துத் தள்ளும் பெரு நிறுவனங்களின் சினிமா யுகத்தில் இப்படியான சுயாதீன திரைப்படங்களின் இடமென்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் வேறுவேறு வடிவமெடுக்கும் சினிமாவில் நாம் எங்கிருக்கிறோம் என்ற கேள்வியைக் கேட்டு நமக்கே விடை தெரிய வேண்டிய நிலையிருக்கிறது.

தேர்ந்தெடுத்து, திரையிடப்பட்ட ஒவ்வொரு திரைப்படமும் ஏதோ ஒரு விதத்தில் முக்கியமானது. மனதிற்கு அருகிலும் இருந்தன. இன்னமும் யார் கண்ணிற்கும் அதிகம் தென்பட்டிராத அரிய வகை படங்களும் அதிலிருந்தன. நிறைவுப்படமாக ‘Nude’ திரையிடப்பட்டது. அதன் பெயர் காரணமாக அதிர்ச்சி மதிப்பு அடையாமல், கேள்விகள் கேட்டு தெளிவான மக்களின் ரசனையைப் பெற்றதாக, கலந்துகொண்ட கல்யாணி முலாய் மிகவும் சந்தோஷப்பட்டார்.

தமிழ் மக்களை வெவ்வேறு விதங்களில் தொடர்பு கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தில் ‘பேசாமொழி’ பதிப்பகமும், ‘படச்சுருள்’ என்ற அர்த்தம் பொதிந்த சினிமா மாத இதழும், ‘கருப்பு’ என அழைக்கப்படுகிற அரசியல் இணையதளமும் நடத்திக் கொண்டிருக்கிறேன். ‘தமிழ் ஸ்டூடியோ’ பெரும் பொருளாதாரப் பிரச்னையில் இருந்தாலும், வேறெங்கும் கையேந்தும் திட்டமில்லை. மக்களுக்கான இயக்கத்திற்கு மக்கள்தான் பணம் தர வேண்டும்!
அரசிடமோ, கார்ப்பரேட் நிறுவனத்திடமோ பணம் பெறுவது கடினமான காரியமல்ல. அப்படிப் பணம் தருகிற அமைப்பு, நம் உழைப்பை மக்களுக்காக செலவிட விரும்பாது.

நல்ல சினிமாவிற்கான அறிதல் கைகூடும் வரையிலும் தமிழ் ஸ்டூடியோவின் இயக்கம் தொடர்ந்து நடக்கும்...’’ எனத் தொடர்ந்த அக்கறையில் பேசும் அருணின் அடுத்த முயற்சியையும் எதிர்பார்த்து காத்திருக்க வைக்கிறது மனம்.

நா.கதிர்வேலன்

ஆ.வின்சென்ட் பால்