முதல் நாள் முதல் ஷோ...லேடீஸ் ஸ்பெஷல்!தியேட்டரில் விசில் அடித்து குத்தாட்டம் போட்ட பெண்கள்

புதியது என்று சொல்ல முடியாது. 2000ம் ஆண்டு தொடக்கம் வரை சென்னை உட்பட பல ஊர்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தவைதான். வார நாட்களில் ஒரு பகல் காட்சியை முழுக்க முழுக்க பெண்களுக்காக திரையரங்க உரிமையாளர்களும் தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் சேர்ந்து ஒதுக்குவார்கள். வழக்கமான டிக்கெட் விலையிலிருந்து சற்றுக் குறைவாகவே அன்று அக்காட்சிக்கு நிர்ணயிப்பார்கள். பெண்களும் அலைமோதுவார்கள்.

சொல்லப் போனால் ‘மேட்னி ஷோ’ என்பதே பெண்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் என்கிறார்கள் சமூக ஆராய்ச்சியாளர்கள். ஆண்களை வேலைக்கும் பிள்ளைகளை பள்ளிக்கும் அனுப்பிவிட்டு வீட்டு வேலைகளை முடித்துவிட்டு தியேட்டருக்கு பெண்கள் செல்வார்கள். இதனாலேயே பகல் காட்சிகளும் அன்று வசூல் சாதனை நிகழ்த்தின.

1990களில் இராம.நாராயணன் இயக்கிய பக்திப் படங்களை இப்படி பெண்களுக்காகவே தனிக் காட்சி என அறிவித்து திரையிட்டிருக்கிறார்கள். எம்ஜிஆர் நடித்த ‘காவல்காரன்’ உட்பட சில படங்களும் இப்படி வுமன்ஸ் ஸ்பெஷலாக ஓட்டப்பட்டிருக்கின்றன. இதெல்லாம் தனியார் தொலைக்காட்சிகள் வராத காலத்தில் அரங்கேறியவை.
அத்துடன் அன்று பெண்களுக்கான காட்சிகளைக் கண்டுகளித்த மங்கையர்கள் அதிக
பட்சம் கத்தி குரல் கொடுத்திருப்பார்கள்; வில்லனைப் பார்த்து திட்டியிருப்பார்கள்; சென்டிமென்ட் காட்சிகளில் வாய்விட்டு அழுதிருப்பார்கள்; சாமி வந்து ஆடியிருப்பார்கள்.

ஆனால், ஆண் ரசிகர்களைப் போலவே விசில் அடித்து ஸ்கிரீன் முன்னால் குத்தாட்டம் போட்டிருப்பார்களா..? நிச்சயமாக இல்லை. இந்த வரலாற்றை திருத்தி எழுதியிருக்கிறது சென்னை திருநின்றவூரில் உள்ள ‘வேலா’ திரையரங்கம்.பொங்கலை ஒட்டி அஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்தை முழுக்க முழுக்க பெண்களுக்காகவே ஒதுக்கி சாதனை புரிந்திருக்கிறார்கள்.

டிக்கெட் கிழிப்பவர் உட்பட எந்த ஆணும் தியேட்டருக்குள் நுழைய அனுமதி இல்லை என்பதால் பெண்கள் சுதந்திரமாக படத்தைக் கண்டு களித்திருக்கிறார்கள். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என வெளுத்து வாங்கியிருக்கிறார்கள்.‘‘கேரளாவுக்கு ஒருமுறை போயிருந்தப்பதான் இந்த ஐடியா வந்தது. அங்க ஒரு தியேட்டர்ல விஜய் படம் ரிலீசாகி இருந்தது. ஒரு காட்சி முழுக்க பெண்களுக்காக திரையிட்டிருந்தாங்க. என்னனு விசாரிச்சப்ப மோகன்லால், விஜய் படங்கள் வெளியாகறப்ப முதல் நாள் ஒரு ஷோவை இப்படி பெண்களுக்காகவே ஒதுக்குவாங்களாம்.

அப்பவே இதுமாதிரி நாமும் செய்யணும்னு தீர்மானிச்சேன். ஏன்னா, அந்தக் காலத்துல பெண்களுக்குனு தனி சீட்டு இருந்தது. மல்டிப்ளக்ஸ் பெருக ஆரம்பிச்சதும் அது மறைஞ்சுடுச்சு. பெண்களுக்கும் கைதட்டி விசில் அடிச்சு குத்தாட்டம் போட்டு படம் பார்க்கணும்னு ஆசை இருக்கத்தானே செய்யும்..?

அதை நிறைவேத்தலாம்னு முடிவு செய்ஞ்சோம். ‘சர்கார்’ அப்பவே செய்யணும்னு நினைச்சோம். ஆனா, அப்ப தியேட்டரை புதுப்பிக்கிற வேலை நடந்ததால செய்ய முடியலை. இப்ப ‘விஸ்வாசம்’ ரிலீசான முதல் நாள் முதல் ஷோவை (காலை 10 மணி) முழுக்க முழுக்க லேடீஸ் ஸ்பெஷலா மாத்தினோம்....’’ உற்சாகமாகப் பேசுகிறார் ‘வேலா’ திரையரங்க உரிமையாளரான சூரியமணி.

‘‘ஓர் ஆணைக் கூட நாங்க தியேட்டருக்குள்ள அனுமதிக்கலை. பெண் ஊழியர்களைத்தான் எல்லா வேலைக்கும் நியமிச்சோம். அதனால பெண்கள் தைரியமா வந்தாங்க. ஆசை தீர படத்தை என்ஜாய் பண்ணினாங்க... பாடல் காட்சிக்கு ரிப்பீட் கேட்டு சத்தம் போட்டாங்க! அப்பவும் நாங்க உள்ள போகலை. பெண் ஊழியரை அனுப்பி, ‘இது க்யூப் சிஸ்டம். டிஜிட்டல். ரிப்பீட் எல்லாம் செய்ய சான்ஸ் இல்லை’னு சொல்லி புரிய வைச்சோம்.

நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு. இனி எல்லா பெரிய நடிகர்களின் படத்துக்கும் இப்படிச் செய்யலாம்னு தீர்மானிச்சிருக்கோம்!’’ நிறைவுடன் சொல்கிறார் ‘வேலா’ திரையரங்க மானேஜரான சார்லஸ். பிள்ளையார் சுழியை ‘வேலா’ போட்டிருக்கிறது. இனி என்ன... தமிழகத்தில் இருக்கும் அனைத்து நகரங்களிலும் இது மெல்ல மெல்ல அரங்கேறத்தான் போகிறது.தவறே இல்லை. Why should boys have all the FUN! Enjoy Girls..!

திலீபன் புகழ்