பகவான்-12நீட்ஷே காண்ட் சார்த்தர் கட்டுடைப்பு இருத்தலியல்வாதம்

சிஸ்டம் சரியில்லை!
சாகர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார் ரஜனீஷ்.
அடுத்து?

எல்லோரையும் போல வேலை தேடினார்.
அரசுப் பணியின் நேர்முகத் தேர்வுக்குச் சென்றார்.
அவரை நேர்முகம் செய்த அதிகாரி ரஜனீஷின் பின்புலத்தை விசாரித்தார்.

“உங்களுக்கு யாராவது நன்னடத்தைச் சான்றிதழ் தந்திருக்கிறார்களா?” என்று கேட்டார்.அப்போதெல்லாம் அரசு வேலையோ, தனியார் வேலையோ, நன்னடத்தைச் சான்றிதழ் என்பது கட்டாயம்.“என்னைப் பார்த்தால் கெட்டவனாகத் தெரிகிறதா? நானே சொல்கிறேன். நானே எனக்கு சான்றளித்துக் கொள்கிறேன். நான் நல்லவன்தான்!”

அந்த அதிகாரிக்கு ரஜனீஷை மிகவும் பிடித்துப் போயிற்று. இருந்தாலும் அலுவலக நடைமுறைக்காக சான்றிதழை வற்புறுத்தினார்.
“நீங்கள் படித்த கல்லூரியில் ஏதாவது பேராசிரியரிடமோ அல்லது துணைவேந்தரிடமோ ஒரு சான்றிதழ் வாங்கி வந்து
விடுங்களேன்...”ரஜனீஷ், இதற்குக் கொடுத்த பதில் விசித்திரமானது.

“எங்கள் பேராசிரியர்களுக்கோ, துணைவேந்தருக்கோ நல்லவர்கள் என்று நான் சான்றிதழ் கொடுக்க மாட்டேன். அப்படியிருக்க அவர்கள் மட்டும் எனக்கு அப்படியொரு சான்றிதழை எப்படி கொடுக்க முடியும்?”“ரஜனீஷ்! உங்களை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், என்னுடைய மேலதிகாரிகள் என்னைப் போல இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. நீங்கள் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டீர்கள். ஆனால், நன்னடத்தைச் சான்றிதழ் இல்லாமல் பணியில் சேரமுடியாது...”அரசு அலுவலகத்து நடைமுறைகளை நினைத்து மனதுக்குள் சிரித்தார் ரஜனீஷ்.
கல்லூரி துணைவேந்தரிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கி சந்தித்தார்.

“சார், நான் பணிக்கு சேர நன்னடத்தைச் சான்றிதழ் கேட்கிறார்கள்...”“அவ்வளவுதானே? இதோ எழுதிக் கொடுத்து விடுகிறேன். உனக்குக் கொடுக்காமல் வேறு யாருக்கு கொடுக்கப் போகிறேன்?” என்று சொன்னவர், உடனே ஒரு வெள்ளைத்தாளை எடுத்து எழுதி, கையெழுத்திட்டுக் கொடுத்தார்.
அவர் எழுதி கையெழுத்திட்ட தாளை வாங்கி ரஜனீஷ் வாசித்தார்.

“சார், இதென்ன அநியாயமாக இருக்கிறது. ‘இவன் நல்லவன். ஒழுக்கமானவன். நல்லபடியாகப் பணியாற்றுவான்’ என்று எழுதியிருக்கிறீர்களே?”
“உண்மையைத்தானே எழுதியிருக்கிறேன்?”“அப்படி அல்ல. எனக்கு நீங்கள் இப்படி சான்றிதழ் கொடுப்பது என் மனச்சாட்சிக்கு விரோதமானது!”
ரஜனீஷை துணைவேந்தர் அறிவார்.

“சரி. நீயே உனக்கான சான்றிதழை எழுதிக் கொடு. கையெழுத்து போட்டுக் கொடுத்துவிடுகிறேன்!”ரஜனீஷ் எழுதி, துணைவேந்தரிடம் நீட்டினார். அதை வாசித்தவர், வாய்விட்டுச் சிரித்தவாறே கையெழுத்திட்டார்.அந்தத் தாளில் இப்படி எழுதியிருந்தது.‘ரஜனீஷ் எங்கள் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது நல்லவனாகத்தான் இருந்தான் என்று சான்று கொடுக்கிறேன். எதிர்காலத்திலும் அவன் இப்படியேதான் இருப்பானா என்று என்னால் உறுதி கொடுக்க முடியாது!’இப்படியான அதிரடி சான்றிதழோடுதான் 1957ல் ராய்ப்பூர் சமஸ்கிருத மகாவித்யாலயாவில் பணிக்குச் சேர்ந்தார்.

மாணவர்கள் தங்கும் விடுதியிலேயே அவரும் தங்கினார்.சமஸ்கிருதக் கல்லூரியில் ஏழை மாணவர்களே அதிகம் படித்தார்கள். ஏனெனில் சமஸ்கிருதம் கற்றால் அரசு உதவித்தொகை கிடைத்தது.அக்கல்லூரியில் பிரார்த்தனை என்பது கட்டாயம். பிரார்த்தனை வகுப்புக்கு வராதவர்களுக்கு அட்டெண்டன்ஸில் விடுப்பு என்று குறிக்கப்பட்டது.

விடியற்காலையிலேயே பிரார்த்தனை வகுப்பு.இதற்காக மாணவர்கள் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்திருக்க வேண்டியிருந்தது.
பனிக்காலங்களில் அவர்களுக்கு சுடுநீரில் குளிக்கும் வசதி, விடுதியில் இல்லை.குளிர்ந்தநீரில் குளித்து வெடவெடத்துக் கொண்டே பிரார்த்தனைக்கு வருவார்கள்.இதனால், பல மாணவர்களுக்கு பிரார்த்தனை வகுப்பு என்றாலே வேப்பங்காயாய் கசக்கும்.

ஆசிரியராக இல்லாமல் தங்களோடு நண்பராகப் பழகும் ரஜனீஷிடம் இந்தப் பிரச்னையை மாணவர்கள் எடுத்துச் சொன்னார்கள்.
ரஜனீஷ், மாணவர்கள் சார்பாக நிர்வாகத்திடம் பேசினார்.ராய்ப்பூர் சமஸ்கிருத மகாவித்யாலயாவின் துணைவேந்தர் எரிச்சல் அடைந்தார்.
“பிரார்த்தனைக்கு வர மனமில்லாதவர்கள் வரவேண்டாம்...” என்றார்.ரஜனீஷ் அவரிடம், “அப்படி அவசரப்பட்டு சொல்லாதீர்கள். நாளை காலை நீங்களும் பிரார்த்தனைக்கு வாருங்கள்.

வந்துவிட்டு முடிவெடுங்கள்!” என்று கேட்டுக் கொண்டார்.இதனால், மறுநாள் அதிகாலையில் எழுந்து துணைவேந்தரும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டியிருந்தது.வெடவெடத்துக்கொண்டே பிரார்த்தனைக்கு வந்தவர், மாணவர்களைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு, “உங்கள் பிரார்த்தனை நேரம் மாற்றப்படும்..!” என்று அறிவித்தார்.

மாணவர்கள் கரகோஷம் எழுப்பி, ரஜனீஷை வாழ்த்தி கோஷம் போட்டனர்.மாணவர்கள் மத்தியில் புரட்சிகரமான ஆசிரியராக ரஜனீஷ் உருவெடுத்தார். கிட்டத்தட்ட மாணவர் சங்கத் தலைவர் மாதிரி அவர் செயல்பட்டார்.மாணவர் பிரச்னைகளுக்காக அடிக்கடி துணைவேந்தரை சந்தித்தார். கோரிக்கைகளை வைத்தார்.

ஒரு கட்டத்தில் ரஜனீஷை தாக்குப் பிடிக்க முடியாத நிர்வாகம், அவரை ஜபல்பூர் பல்கலைக்கழகத்துக்கு இடமாற்றம் செய்தது.
1960ல் தத்துவப் பேராசிரியராக ஜபல்பூர் பல்கலைக்கழகத்துக்கு வந்தார் ரஜனீஷ்.தத்துவ வகுப்பில் பத்தே பத்து மாணவர்கள்தான்.
வழக்கமான ஆசிரியர்கள் மாதிரி ரஜனீஷ் பாடம் எடுக்க மாட்டார்.

மாணவர்கள் விருப்பப்பட்ட பாடத்தை வாசித்துவிட்டு அவரிடம், தங்கள் சந்தேகங்களை கேள்விகள் கேட்பார்கள்.
அவர்களுக்கு விடையளிப்பதையே தன்னுடைய போதனைமுறையாக மாற்றிக் கொண்டார்.லெக்சர் என்கிற பெயரில் பிளேடு போடமாட்டார்.
இதனால் ரஜனீஷின் வகுப்பு என்றால் மாணவர்களுக்கு குஷி.

தத்துவப் பாடம் போதிக்கும் ஆசிரியரின் இந்த நூதனமுறையிலான போதிப்பு பற்றிய செய்தி பல்கலைக்கழகமெங்கும் பரவியது. மற்ற துறைகளில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களும், ரஜனீஷின் வகுப்புக்கு வருவார்கள்.பாடப்புத்தகம் தவிர்த்த வெவ்வேறு சந்தேகங்களையும் எழுப்புவார்கள். அரசியல், சமூகம், கலாச்சாரம் பற்றியும் கேட்பார்கள்.

தனக்குத் தெரிந்த அத்தனையையும் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார் ரஜனீஷ். அவருக்கு விடை தெரியாத கேள்விகளுக்கு வாசித்துத் தெரிந்து கொண்டு விளக்கம் அளிப்பார்.“பல்கலைக்கழக பாடமுறையில் அறிந்துகொள்வது நீங்கள் வேலைக்குச் சேரத்தான் உதவுமே தவிர, வாழ்க்கைக்கு வழிகாட்டாது...” என்று அடிக்கடி சொல்வார்.

ரஜனீஷ், கல்லூரியில் பணியாற்றியது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அப்போது பெரும்பாலான பெண்களை படிப்பதற்கு பள்ளிக்கூடங்களுக்கே அனுப்ப மாட்டார்கள். கல்லூரிக்கு வரும் பெண்கள் மிகவும் அரிது.
அவ்வாறு கல்லூரிகளுக்கு சில பெண்கள் வந்தாலும், அவர்களுக்கு கடுமையான உடை கட்டுப்பாடு இருந்து வந்தது.
மாணவர்களிடம் பேசவும், அவர்கள் அருகில் அமரவும் தடை செய்யப்பட்டார்கள்.

ரஜனீஷுக்கு இது வினோதமாக இருந்தது.ஆண் - பெண் இருவரும் சமம் என்று போதிக்கவேண்டிய பல்கலைக்கழகங்களே இம்மாதிரி பத்தாம்பசலித்தனமாக நடந்துகொள்ளக் கூடாது என்று கருதினார்.அவருடைய வகுப்புகளில் மாணவர்கள் ஆண் - பெண் பேதமின்றி பழகுவதற்கு அனுமதிக்கப் பட்டார்கள்.அவரவர் விரும்பிய உடையை அணிந்து வரலாம் என்று சொன்னார்.

மாணவர்களின் தயக்கத்தை உடைக்க, அவரே கைலி அணிந்துகொண்டு பாடமெடுக்கத் தொடங்கினார். அப்போதெல்லாம் பேராசிரியர்கள் கோட் அணிந்துகொண்டுதான் வகுப்பறைகளுக்குள்ளேயே நுழைவார்கள்!ரஜனீஷின் புரட்சிகரமான நடவடிக்கைகள் சக ஆசிரியர்களுக்கும், பல்கலைக்கழகத்துக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

ரஜனீஷின் தத்துவ வகுப்புகளில் கிடைக்கும் சுதந்திரம், தங்களுக்கும் வேண்டுமென்று மற்ற துறை மாணவர்களும் அவரவர் துறைத்தலைவர்களிடம் முறையிடத் தொடங்கினார்கள்.துணைவேந்தர், இந்தப் பிரச்னையைக்கையாள ரஜனீஷையும், சக ஆசிரியர்களையும் அழைத்து ஒரு கூட்டம் போட்டார்.
ரஜனீஷின் மீது மற்ற ஆசிரியர்களும், பல்கலைக்கழக அதிகாரிகளும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளித்தார்கள்.

குறிப்பாக - “ரஜனீஷ் இதுபோல எல்லாம் நடந்துகொள்வதால் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தரவேண்டிய மரியாதையைக் கொடுக்க மாட்டார்கள்...” என்று ஒரே குரலில் சொன்னார்கள்.எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டார் ரஜனீஷ்.“மாணவர்கள் நிஜமாகவே நம்மை மதிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா அல்லது மதிப்பது போல நடிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?” என்று கேட்டார்.
“இதென்ன கேள்வி?” என்று பொங்கியெழுந்தார்கள் மற்ற ஆசிரியர்கள்.

“உங்களையெல்லாம் மதிப்பது போல நடிக்கிறார்கள். என்னை நிஜமாகவே மதிக்கிறார்கள். அவர்கள் மாணவர்கள். அடிமைகள் அல்ல!” என்றார்.
பல்கலைக்கழகத்துணைவேந்தருக்கு ரஜனீஷின் அணுகுமுறை புரிந்தது.ஆனால், காலம் காலமாக நிலவிவந்த நடைமுறைகளை மாற்ற முடியாது என்கிற நெருக்கடி அவருக்கு இருந்தது.“சிஸ்டம் சரியில்லை ரஜனீஷ்..!” என்றார்.

(தரிசனம் தருவார்)

குரு சிஷ்யன்

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். அதாவது கடவுளைவிட அன்னையும், தந்தையும், ஆசிரியரும் முக்கியமானவர்கள் என்று பொருள். எனவேதான் குருவுக்கு சேவை செய்வது சீடர்களின் கடமை என்று மரபாக நமக்கு போதிக்கப்பட்டு வருகிறது.ஓஷோ, இதையெல்லாம் ‘ஜஸ்ட் லைக் தட்’ ஆகக் கடந்து போகிறார்.

குரு - சிஷ்ய உறவுக்கு இலக்கணமோ, வரையறையோ கூடாது என்று வலியுறுத்துகிறார்.“ஒரு குருவுக்கு அளவற்ற சுதந்திரம் உண்டு. அதே சுதந்திரத்தை அவர் தன்னுடைய சீடர்களுக்கும் அளிக்கவேண்டும். சீடர்கள் மீது குருவுக்கு கருணை இருந்தால்தான், குருவின் மீது சீடர்களுக்கு அன்பு பிறக்கும்...” என்கிறார் ஓஷோ.

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்