தேவுடு!



‘இதெல்லாம் ஒரு படமா...’ என்றுதான் வட இந்திய ஊடகங்கள் கேட்கின்றன. தங்கள் திரைப்பட அறிவை பத்தி பத்தியாக எழுதிக் காண்பிக்கின்றன. திரைக்கதை குறித்து வார்த்தைகளில் வகுப்பு எடுக்கின்றன. ஐந்துக்கு இரண்டு ஸ்டார்ஸ் கொடுத்து சந்தோஷப்படுகின்றன.அவர்களைப் பொறுத்தவரை ‘என்டிஆர்: கதாநாயகடு’ வெறும் படம். ஒரு தெலுங்கு சினிமா. அவ்வளவுதான்.
ஆனால், அவ்வளவுதானா..?

சத்தியமாக இல்லை என்பதைத்தான் சீமாந்திராவும் தெலுங்கானாவும் பொட்டில் அறைந்து உணர்த்துகிறது. இந்தாண்டு சங்க்ராந்தியை (பொங்கல்) ஒட்டி ஒன்றிணைந்த ஆந்திராவான அவ்விரு மாநிலங்களிலும் வெளியான இப்படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்புவது இதைத்தான் உணர்த்துகிறது. ஏனெனில் அவர்களுக்கு இது படம் மட்டுமல்ல. தேவுடுவின் தரிசனம்!

இப்படிச் சொன்னதுமே சிரிக்கத் தோன்றும். இன்னமும் கற்காலத்திலேயே தெலுங்கர்கள் வாழ்வதாகத் தலையில் அடித்துக் கொள்ள கை பரபரக்கும்.
இதை எல்லாம் வெளி மாநிலத்தவர் தாராளமாகச் செய்யலாம். அதற்குமுன் இணையத்திலேயே அமெரிக்காவில் இப்படத்தின் வசூல் நிலவரம் என்ன என்று அறிந்துகொண்டு செய்வது நல்லது.

யெஸ். பகுத்தறிவு சிந்தனைகள் நாடி நரம்பெல்லாம் ஊடுருவி இருக்கும் மெத்தப் படித்த ஆந்திரர்கள் முதல் ஈரேழு உலகங்களிலும் கொலு வீற்றிருக்கும், பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் தெலுங்கர்கள் வரை இப்படத்தைக் கொண்டாடுகிறார்கள். வறண்ட ராயலசீமாவின் குக்கிராமத்தில் சுள்ளி பொறுக்கும் கொல்ட்டியைப் போலவே ‘என்டிஆர்: கதாநாயகடு’ திரைப்படத்தைப் பார்த்து கசிந்து உருகுகிறார்கள்.

என்ன காரணம்..?
இன்று அவர்கள் உண்ணும் ஒவ்வொரு பருக்கைக்குப் பின்னாலும் என்.டி.ராமாராவ் என்னும் மனிதர் இருப்பதாக உளமார அவர்கள் நம்புவதுதான்.அது மூடநம்பிக்கை அல்ல என்றுதான் வரலாறு சொல்கிறது. ‘என்டிஆர்: கதாநாயகடு’ சினிமாவும் அதைத்தான் தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது.ஜமீன்தார், பண்ணையார், பண்ணையடிமை என எழுத்தறிவில்லாமல் வாழ்ந்த ஒரு சமூகம் இன்று இந்தியாவுக்கே முன்மாதிரியாக விளங்கும் மாநிலமாக உருவெடுக்கக் காரணம் என்டிஆர் என்னும் மூன்றெழுத்து.

மட்டுமா? நிஜாமின் தலைநகரமாக, பிரியாணிக்கு மட்டுமே புகழ்பெற்றதாக இருந்த ஹைதராபாத், இன்று ஐடி சிட்டியாக பெங்களூருவைத் தாண்டி முன்னிலை வகிப்பதற்கும் அஸ்திவாரமிட்டது இதே மூன்றெழுத்துதான். மட்டுமல்ல. ‘மஞ்சள் சட்டை... ரோஸ் பேண்ட் அணிஞ்சு தையத்தக்கானு கண்றாவியா டான்ஸ் ஆடற மாதிரி படம் எடுப்பாங்க...’ என ஒரு காலத்தில் உதாசீனப்படுத்தப்பட்ட தெலுங்குத் திரையுலகம் இன்று இந்தியாவின் இரண்டாவது டாப் மோஸ்ட் இண்டஸ்ட்ரியாக தலைநிமிர்ந்து நிற்பதற்கும்; செப்பு மொழி பதினெட்டுடையாளிலும் தெலுங்குப் படங்கள் இப்போது ரீமேக் ஆவதற்கும்; அமெரிக்காவில் இந்திப் படங்களைத் தாண்டி தெலுங்குப் படங்கள் வசூல் சாதனை நிகழ்த்துவதற்கும் கூட இதே மூன்றெழுத்துதான் காரணம்.

அனைத்தையும் விட உலக வங்கியே கடன் கேட்கும் அளவுக்கு செல்வத்தில் கொழிக்கும் சிங்கிள் பிளேஸ் ஆக திருப்பதி கோயில் இந்நூற்றாண்டில் ஜெகஜோதியாக மின்னுவதற்கும் சாட்சாத் என்டிஆர் என்ற த்ரீ லெட்டர்ஸ்தான் ரீசன்.இதையெல்லாம் 2K கிட்ஸ் புரிந்து கொள்வதற்காக எடுக்கப்பட்ட படம்தான் ‘என்டிஆர்: கதாநாயகடு’!அரசு அலுவலகத்தில் ‘குமாஸ்தாவாக’ப் பணிபுரியும் இளைஞனுக்கு நடிகனாக வேண்டும் என்பது ஆசை.

அப்போது தென்னிந்திய மொழிகளின் படப்பிடிப்புகள் அனைத்தும் ‘மதராஸில்’தான் நடக்கும். எனவே, வேலையை உதறிவிட்டு சினிமா சான்ஸ் தேடி ஆந்திராவிலிருந்து அந்த இளைஞன் மதராஸ் பட்டணத்துக்கு வருகிறான். வாய்ப்பு தேடி அலைகிறான். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மெல்ல மெல்ல கதாநாயகனாக உயர்கிறான். சூப்பர் ஸ்டாராக உருவெடுக்கிறான். அரசியலில் குதித்து முதலமைச்சர் ஆகிறான். கால வெள்ளத்தில் இறக்கிறான்...

இதுதான் என்.டி.ராமாராவின் வாழ்க்கைச் சுருக்கும். எல்லோருக்குமே தெரிந்த இந்தக் கதைக்குள் இருக்கும் தெரியாத பக்கங்களை மிக அழகாகவும் நேர்த்தியாகவும் படமாக எடுத்திருக்கிறார்கள். அரசு வேலையை என்டிஆர் உதறியதற்கும், உறக்கத்தைத் தொலைத்து இரவு பகல் பாராமல் அவர் நடித்ததற்கும், தன் இனத்துக்காக கட்சி தொடங்கி அரசியலில் குதித்து ஆட்சியை அவர் கைப்பற்றியதற்கும் இறப்பும் இறப்புகளும்தான் காரணமாக இருந்திருக்கின்றன. அநீதியைக் கண்டு பொங்கும் மனநிலைதான் வேராக திகழ்ந்திருக்கின்றன. இதை அழுத்தமான காட்சிகளின் வழியே விவரித்திருக்கிறார்கள்.

உண்மையில் இது என்.டி.ராமாராவின் முழு வாழ்க்கைப் படமல்ல. அவரது திரையுலக சாதனைகளை மட்டும் ‘என்டிஆர்: கதாநாயகடு’ என முதல் பாகமாக வெளியிட்டிருக்கிறார்கள். அவரது அரசியல் வாழ்க்கையை  ‘என்டிஆர்: மஹாநாயகடு’ என இரண்டாம் பாகமாக அடுத்த மாதம் வெளியிடப் போகிறார்கள்.

1949ம் ஆண்டு எல்.வி.பிரசாத் இயக்கத்தில் ‘மன தேசம்’ படத்தில் அறிமுகமான என்.டி.ராமாராவ், 1993ம் ஆண்டு ரிலீசான ‘நாதா கவி சர்வபவ்முடு’ வரை கிட்டத்தட்ட 300 படங்களில் நடித்திருக்கிறார். 45 ஆண்டுகளுக்கும் மேல் தெலுங்கு சினிமாவில் கோலோச்சியிருக்கிறார்.சமூகப்படங்கள், புராணப் படங்கள், மாயாஜாலப் படங்கள், ஜேம்ஸ்பாண்ட் படங்கள், ராபின்ஹுட் படங்கள்... என அவர் ஏற்காத கதாபாத்திரங்கள் இல்லை. முத்திரை பதிக்காத வேடங்கள் இல்லை.

இந்த டிரான்ஸ்ஃபர்மேஷனை ‘என்டிஆர்: கதாநாயகடு’ கச்சிதமாக 171 நிமிடங்களில் பதிவு செய்திருக்கிறது. கிருஷ்ணராக, ராமராக, ராவணனாக எல்லா ரசிகர்களின் மனதிலும் இன்று வரை இடம்பிடித்திருக்கும் அவரது தோற்றத்துக்கும் நடிப்புக்கும் பின்னால் இருந்த விஷயங்களை இப்படம் சொல்கிறது. ‘சீதாராமா கல்யாணம்’ படத்தில் 10 தலை ராவணனாக எப்படி அவர் நடித்தார்... எந்தளவுக்கு இதற்காக மெனக்கெட்டார் என்று விவரித்திருப்பது ஒரு சோறு பதம்.

ஒன்றுவிடாமல் அவரது புகழ்பெற்ற அனைத்துப் படங்களையும் ‘என்டிஆர்: கதாநாயகடு’வில் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்கள். அந்தந்த வசனங்களை அப்படியே என்டிஆர் பேசியதில் இருந்து அதே குரலில் எடுத்துப் போட்டிருப்பது சிறப்பு. இந்த இடங்களில் என்.டி.ராமாராவாக நடித்திருக்கும் பாலகிருஷ்ணா வாய் மட்டும்தான் அசைத்திருக்கிறார்!

என்டிஆரின் அனைத்து சாதனைகளுக்கும் பின்னால் அவர் மனைவி பசவதரகம் இருந்திருக்கிறார் என்பது உண்மையிலேயே நெகிழ வைக்கிறது.
இப்படத்தை தயாரித்திருப்பதுடன் என்.டி.ராமாராவ் வேடத்திலும் நடித்திருப்பவர் அவரது மகன் பாலகிருஷ்ணா! அதனாலேயே தத்ரூபமாக பொருந்திப் போகிறது. பசவதரகமாக வித்யா பாலன், முதல் மகன் ஹரி கிருஷ்ணாவாக கல்யாண் ராம், நாகேஸ்வர ராவ் ஆக சுமந்த், சந்திரபாபு நாயுடுவாக ராணா... என காஸ்டிங் அனைத்தும் பக்கா.

பிளசண்ட் சர்ப்ரைஸ் என்றால் ரகுல் ப்ரீத் சிங், ஸ்ரேயா, நித்யா மேனன், ஹன்சிகா, ஷாலினி பாண்டே, பிரணீதா... உள்ளிட்டவர்களை சொல்லலாம். அந்தக் காலத்து நடிகைகளாக இக்கால நடிகைகள்! ரகுல் ப்ரீத் சிங்தான் ‘மயிலு’ ஸ்ரீதேவி! எம்.எம்.கீரவாணியின் இசை, குணசேகரின் ஒளிப்பதிவு, ராமகிருஷ்ணாவின் எடிட்டிங், சாஹி சுரேஷின் ஆர்ட் டைரக்‌ஷன்... என சகல தொழில்நுட்பக் கலைகளும் கலைஞர்களும் படத்துக்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... க்ரிஷ்! இவர்தான் இப்படத்தை திரைக்கதை அமைத்து இயக்கியிருப்பவர். ஏற்கனவே சாவித்திரியின் வாழ்க்கையை ‘நடிகையர் திலகம்’ ஆக எடுத்து முத்திரை பதித்தவர் இதில் 64 அடி பாய்ந்திருக்கிறார்.

உண்மையிலேயே ஒரு மனிதரின் வாழ்க்கையை - குறிப்பாக திரையுலகைச் சேர்ந்தவர்களின் சரித்திரத்தை - எப்படி படமாக எடுக்க வேண்டும் என்பதற்கு ‘என்டிஆர்: கதாநாயகடு’ ஓர் உதாரணம். யெஸ். இது வெறும் படமல்ல... ஒரு இண்டஸ்ட்ரியின் வரலாறு. ஓர் இனத்தின் முன்னோக்கிய பாய்ச்சல். சுருக்கமாக, தேவுடுவின் தரிசனம்!

கே.என். சிவராமன்