ரத்த மகுடம்-36



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘இதில் வியப்பதற்கோ அல்லது சந்தேகத்தின் சாயல் படியவோ என்ன இருக்கிறது..?’’
மனதைச் சுற்றி ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்த எந்த ஐயமும் தன் முகத்தில் படராதபடி வெகு கவனமாக அந்த பாலகனிடம் கேட்டான் கரிகாலன்.

அனுபவம் கற்றுக் கொடுத்த பாடம்.
குருவான புலவர் தண்டி செதுக்கி செதுக்கி கற்பித்த கல்வி. முழுமையாக அறிந்த ஒருவரிடம் ஓரளவு அகத்தை வெளிப்படுத்தலாம். அறியாதவர்களிடமும்,  ஐயம் கொள்ளத்தக்க நடவடிக்கைகளில் இறங்குபவர்களிடமும் ஒருபோதும் அறிந்ததை அள்ளிக் கொடுக்கக் கூடாது.

அதுபோன்ற தருணங்களில் எது வெளிப்படுவதாக இருந்தாலும் அது எதிராளியின் சொற்களிலும் செயல்களிலுமே வெளிப்படும்படி கவனமாகக் காய்களை நகர்த்தவேண்டும். வெளிப்படுவதில் இருந்து உண்மைகளைக் கண்டறியவேண்டும். உதிர்க்கும் சொற்களுக்குள் புதைந்திருக்கும் மவுனங்களுக்கான அர்த்தங்களைத் தோண்டி எடுக்க வேண்டும். எடுத்தது எவற்றை மறைக்க முற்படுகிறது என்பதைப் பகுத்தறிய வேண்டும்.

இந்த ராஜதந்திரத்தைத்தான் சிவகாமி விஷயத்தில் கடைப்பிடித்தான்; கடைப்பிடிக்கிறான். இதையேதான் இந்தப் பாலகன் விஷயத்திலும் பயன்படுத்தத் தொடங்கினான். அதற்கான தொடக்கமாகவே ‘ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது...’ என்ற வினாவையும் தொடுத்தான்.இதைக் கேட்டு அப்பாலகன் அசரவேயில்லை. மாறாக, ‘‘அதுதானே... அஸ்வ சாஸ்திரியான சிவகாமியின் திறமைகள் குறித்து என்னைவிட தங்களுக்கல்லவா அதிகம் தெரியும்..?!’’ எனப் புன்னகைத்தான்.

கரிகாலன் எதிர்வினை ஆற்றாமல் அவன் நயனங்களையே உற்றுப் பார்த்தான். அந்தப் பார்வை எதை உணர்த்தியதோ... கிண்டலைக் கைவிட்டு பாலகன் பேசத் தொடங்கினான். ‘‘வணிகரே... சிவகாமி அஸ்வ சாஸ்திரி மட்டுமல்ல... ஆய கலைகள் அறுபத்து நான்கிலும் கைதேர்ந்தவர்தான். அத்துடன் சீனர்களின் போர் முறைகளைக் கசடறக் கற்று அதற்குத் தக நிற்பவர்தான். என்னைவிட இந்த உண்மை தங்களுக்கு நன்றாகவே தெரியும். கண்கூடாக அத்திறமைகளை மல்லைக் கடற்கரையிலும் பிறகு வனத்திலும் காணவும் செய்திருக்கிறீர்கள்...’’

கரிகாலனின் கண்கள் கூர்மை அடைந்தன. அருகில் இருந்து பார்த்ததுபோல் இந்தப் பாலகனால் எப்படி அவ்வளவு துல்லியமாக அதுவரை நடந்ததை எல்லாம் சொல்ல முடிகிறது..? யார் வழியாக இதை அறிந்தான்..? அறிந்து கொள்ளும் அளவுக்கு சக்தி படைத்தவனாக இருக்கிறான் என்றால்... உண்மையில் இந்தப் பாலகன் யார்..?

‘‘புரிகிறது வணிகரே... இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும் என்றுதானே யோசிக்கிறீர்கள்..? சாளுக்கிய மன்னர்தான் சொன்னார்!’’
கரிகாலன் தன் புருவத்தை மட்டும் உயர்த்தினான். ‘‘உங்கள் இருவரது திறமையையும் சொல்லிச் சொல்லி ஆச்சர்யப்பட்டார். குறிப்பாக சாளுக்கிய வீரர்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு அடர்ந்த காட்டிலிருந்து நீங்கள் இருவரும் தப்பித்த விதம் அவரை சிலிர்க்க வைத்தது. மரத்துக்கு மரம் தாவினீர்களாமே... நுனிக் கிளை உடையாதபடி அதன்மீது தக்கையைப்போல் நின்றீர்களாமே... சுவாசப் பயிற்சி பெற்றவர்களுக்கு மட்டுமே கைகூடும் வித்தை என்று சொல்லி சிலாகித்தார்..!’’

‘‘மகிழ்ச்சி. மன்னர் எங்களைப் புகழ்ந்ததற்காக மட்டுமல்ல... தனது எண்ணங்களை உன்னிடம் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு அவருக்கு நெருக்கமாக நீ இருக்கிறாய் என்பதைக் குறிப்பால் எனக்கு உணர்த்தியதற்காகவும்!’’‘‘ஆம் வணிகரே... எதன் காரணமாகவோ விக்கிரமாதித்த மாமன்னர் என்னை நம்புகிறார். அதனாலேயே தங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்திருக்கிறார். அதை நிறைவேற்ற வேண்டியது என் கடமை...’’
‘‘குறைவில்லாமல் அதை நிறைவேற்றுகிறாய்... நல்லது. நீ யார்..?’’

‘‘கடிகையில் படிக்கும் மாணவன்!’’
‘‘உன்னை இதற்குமுன் பார்த்ததில்லையே..?’’
‘‘சமீபத்தில்தான் கடிகையில் சேர்ந்தேன்...’’
‘‘அதாவது..?’’
‘‘பல்லவ நாட்டை கத்தியின்றி ரத்தமின்றி சாளுக்கியர்கள்
கைப்பற்றிய பிறகு!’’

கரிகாலன் புன்னகைத்தான்.
‘‘நீங்கள் எண்ணுவது போல் சாளுக்கிய மன்னர் என்னை
கடிகையில் சேர்க்கவில்லை...’’‘‘கற்கும் ஆசையில் நீயாகச் சேர்ந்திருக்கிறாய்... அப்படித்தானே..?’’
‘‘ஆம்...’’‘‘புரிகிறது. சூழல் காரணமாக எனக்குப் பாதுகாப்பு அளிக்க வந்திருக்கிறாயே தவிர ஆத்மார்த்தமாக அல்ல. அப்படித்தானே..?’’
‘‘அதை தவறென்று நினைக்கிறீர்களா..?’’

‘‘நிச்சயமாக இல்லை. சொல்லப் போனால் சாளுக்கிய மன்னரின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு நீ நடப்பது உன்மீதான மதிப்பை அதிகரிக்கத்தான் செய்கிறது. என்னைப்பற்றி நீ அறிந்ததுபோல் உன்னைப் பற்றியும் நானாகத் தெரிந்துகொள்கிறேன்... ஒருபோதும் உன்னைக் கேள்வி கேட்டு சங்கடப்படுத்த மாட்டேன்..!’’பாலகன் முகத்தில் திருப்தி படர்ந்தது.
‘‘ஒன்றை மட்டும் தெளிவுபடுத்திவிடு...’’
‘‘என்ன வணிகரே..?’’

‘‘உன்னை ஒருமையில் அழைக்கலாம் அல்லவா..?’’
‘‘அப்படித்தான் அழைக்கவேண்டும்! வயதிலும் அனுபவத்திலும் ஆற்றலிலும் நீங்கள் மூத்தவர். சகலத்தையும் கற்றவர். எனவே, கற்பவரை எப்படி விளிக்கவேண்டுமோ அப்படி அழைக்கிறீர்கள். பன்மையில் பேசாமல் இருப்பதே எனக்கும் பிடித்திருக்கிறது. இனம்புரியாத நெருக்கத்தையும் உண்டாக்குகிறது. தவிர...’’

‘‘தயங்காமல் சொல்...’’ கரிகாலன் ஊக்கப்படுத்தினான்.
‘‘உங்களை என் மூத்த சகோதரர் போல் கருதி பழகச் சொன்னார்...’’
‘‘யார்..? சாளுக்கிய மன்னரா..?’’

‘‘ஆம். எதற்காக அப்படிச் சொன்னார் என்று எனக்குத் தெரியாது. ஆனால், முதன்முதலில் தங்களைப் பார்த்ததுமே எனக்கு அப்படித்தான் தோன்றியது. அவர் சொல்லாவிட்டாலும் என் அண்ணனாகத்தான் உங்களைப் பாவித்திருப்பேன்...’’கரிகாலன் பதிலேதும் சொல்லாமல் தன் முகத்தைத் திருப்பி உப்பரிகைக்கு வெளியே பதித்தான். இனம் புரியாத உணர்வுகள் மனதில் பூத்து விருட்சமாகின. எண்ணங்களும் எங்கெங்கோ பறந்தன.

அதை அறுத்து எறிவது போல் ‘‘ஹூ... ஹா...’’ என கூச்சல்கள் கிளம்பின. தாவித் தாவி அந்தரத்தில் பறந்த சிவகாமியை ஆச்சர்யத்துடன் பார்த்து காஞ்சிபுர மக்கள் எழுப்பிய குரல் அது எனப் புரிந்தது. நடப்புக்கு வந்தான்.

இதற்குள் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலிருந்து மீண்ட பாலகன், ‘‘சிவகாமியின் இந்தச் செயல்தான் நீங்கள் கேட்டதற்கான பதில் வணிகரே...’’ என்றான்.‘‘எது..? அந்தரத்தில் அவள் தாவித் தாவிப் பறப்பதா..?’’

‘‘இல்லை... காஞ்சி மாநகரத்தில் இப்படிச் செய்வது! இங்கு அவரைத் தடுப்பவரோ துரத்துபவரோ யாருமில்லை. அப்படியிருக்க, சாலைகளில் நடக்காமல் அல்லது புரவியில் செல்லாமல் எதற்காக இந்த சாகசத்தை மேற்கொள்ள வேண்டும்..?’’

பாலகனே தொடரட்டும் என கரிகாலன் அமைதியாக நின்றான்.புரிந்துகொண்டதற்கு அறிகுறியாக அவனே தொடர்ந்தான். ‘‘பல்லவ இளவல் எங்கிருக்கிறார் என்ற தகவல் சிவகாமிக்குத் தெரிந்திருக்கவேண்டும்! அதனால்தான் உங்களுக்கு முன், தான் அங்கு செல்லவேண்டும் எனப் பறக்கிறார்!’’
கரிகாலன் வாய்விட்டுச் சிரித்தான்.

‘‘எதற்காக நகைக்கிறீர்கள் வணிகரே..?’’
‘‘பல்லவ இளவரசர் இருக்கும் இடம் ஒருவேளை அவளுக்குத் தெரிந்திருக்கலாம் என்று சொன்னாய் அல்லவா... அதற்காகத்தான் நகைத்தேன்...’’
‘‘அதற்கு வாய்ப்பில்லை என்கிறீர்களா..?’’‘‘ம்...’’

‘‘பிறகு ஏன் சிவகாமி இப்படி அந்தரத்தில் பறந்து செல்லவேண்டும்..?’’
‘‘ஒரு சந்தேகம் இருக்கிறது... உறுதியானதும் சொல்கிறேன்..! ஆனால், ஒன்று. என் வழியாக அவளுக்கு நடக்க வேண்டிய காரியம் முடியும்வரை என்னைவிட்டு அகலமாட்டாள்!’’ சொன்ன கரிகாலனின் கண்கள் பளிச்சிட்டன.கேட்ட பாலகனின் நயனங்களும் ஒளிர்ந்தன.

இருவரும் கண்களால் உரையாடினார்கள். அதன் முடிவு இருவரது உதடுகளிலும் புன்னகையாகப் பூத்தது.‘‘சரி...’’ மகிழ்ச்சியுடன் தலையசைத்த பாலகன், ‘‘இரண்டு விஷயங்களை மட்டும் இப்போது தெளிவுபடுத்தி விடுகிறேன்...’’ என்றான்.
‘‘என்ன..?’’

‘‘சாளுக்கிய மன்னர் இதுவரை சிவகாமியைச் சந்திக்கவும் இல்லை... அவளிடம் பேசவும் இல்லை...’’‘‘இதைத்தான் முன்பே கூறிவிட்டாயே!’’‘‘திரும்பவும் இதற்கு அழுத்தம் தரவேண்டியது என் கடமை வணிகரே!’’‘‘சரி... இரண்டாவது..?’’‘‘விக்கிரமாதித்த மாமன்னர் உங்களிடம் அந்தரங்கத்தில் பேசியதும், முத்திரை மோதிரம் கொடுத்ததும் எப்படி சிவகாமிக்குத் தெரியும் என்று சற்று நேரத்துக்குமுன் கேட்டீர்கள்... அந்த சந்தேகம் உனக்கு வரவில்லையா என்றும் என்னிடம் விசாரித்தீர்கள்...’’

‘‘அப்போது கேட்டேன்... இப்போது பதில் கிடைத்துவிட்டது!’’
பாலகனுக்குத் தூக்கி வாரிப்போட்டது. ‘‘என்ன... விடை
கிடைத்துவிட்டதா..?’’‘‘ஆம். ஸ்ரீராமபுண்ய வல்லபர் அவளிடம் சொல்லியிருப்பார்!’’

பாலகனின் கண்கள் தெறித்து விழுந்துவிடுவதுபோல் விரிந்தன. கரிகாலன் அவனை நெருங்கி அணைத்துக் கொண்டான். ‘‘ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பதுபோல்தான் இது! மன்னராகவே இருந்தாலும் அவரைக் கண்காணிக்க வேண்டியதும்; அவரது அந்தரங்க மெய்க்காப்பாளர்களில் ஒருவனை தனது நம்பிக்கைக்குரிய ஒற்றனாக மாற்றுவதும் ஓர் அமைச்சரின் கடமை! அப்படியிருக்க, சாளுக்கிய போர் அமைச்சர் மட்டும் இப்படிச் செய்யாமலா இருப்பார்?! தன் கடமையைத்தான் அவர் செய்கிறார். அது நாட்டுப்பற்று.

நீயாக இருந்தாலும் நானாக இருந்தாலும் அப்படித்தான் செய்வோம்!’’நிம்மதியுடன் அந்த அணைப்பிலிருந்து பாலகன் அகன்றான். ‘‘சாளுக்கிய மன்னர் எதனால் உங்கள் மீது அவ்வளவு மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார் என்பது இப்போது புரிகிறது! இதைத்தான் இரண்டாவது விஷயமாகத் தெளிவுபடுத்த முயன்றேன்...’’

கரிகாலன் தன் கேசத்தைக் கோதிவிட்டான். ‘‘விக்கிரமாதித்த மன்னர் என்னைக் காப்பாற்ற நினைக்கிறார். இதை சாளுக்கிய போர் அமைச்சர் விரும்பவில்லை. என்னைப் பிணைக் கைதியாகப் பிடித்து, மறைந்திருக்கும் பல்லவ இளவலை வெளியில் வரவைக்கலாம் எனத் திட்டம் வகுக்கிறார்.

இதற்காக மன்னருக்குப் பிடிக்காத செயலிலும் இறங்கத் துணிந்துவிட்டார். இதற்காகவே சிவகாமியையும் பயன்படுத்துகிறார்... பதிலுக்கு அவள் இவரைப் பயன்படுத்துகிறாள்! இருவருக்குமே தாங்கள் ஒருவரையொருவர் நம்பவில்லை என்று தெரியும். ஆனாலும் பல்லவ இளவலை என் வழியாகப் பிடிக்கும் விஷயத்தில் கூட்டணி அமைத்திருக்கிறார்கள்!’’

‘‘இப்படிச் சரியாக நீங்கள் கணக்கிடுவீர்கள் என்று மன்னர் சொன்னார்..!’’ பாரம் இறங்கிய திருப்தி பாலகனின் குரலில் வழிந்தது. ‘‘இனி தாமதிக்க நேரமில்லை வணிகரே. சாளுக்கிய போர் அமைச்சர் எப்போது வேண்டுமானாலும் இங்கு வந்துவிடுவார். அதற்குள் நாம் வெளியேற வேண்டும்...’’ ‘‘சரி... வா...’’ பாலகனின் கரங்களைப் பிடித்தபடி கரிகாலன் அறையை விட்டு வெளியேற முற்பட்டான்.

‘‘நேர் வழியில் அல்ல வணிகரே! காவலுக்கு நிற்கும் வீரர்களை மீறி நீங்கள் வெளியேறுவீர்கள் என்று தெரியும். ஆனால், இந்த மாளிகையில் சண்டை நடக்கவும், மக்களின் கவனம் இதன்மீது திரும்பவும் மன்னர் விரும்பவில்லை...’’சொன்ன பாலகன், நேராக அறையின் மூலையில் இருந்த சிற்பத்தை மூன்று முறை வலப்பக்கமாகத் திருப்பினான்.

மறுகணம் சிலை அகன்று சுரங்கம் விரிந்தது. சிலைக்குப் பின்னால் இருந்து பந்தத்தை எடுத்த பாலகன், அறையில் எரிந்துகொண்டிருந்த தீபத்தில் அதைப் பற்ற வைத்துவிட்டு கரிகாலனைப் பார்த்து வரும்படி செய்கை செய்துவிட்டு சுரங்கத்தினுள் நுழைந்தான்.பல்லவர்களின் சுரங்க ரகசியம் கடிகை மாணவனுக்கும் தெரிந்திருக்கிறது!  

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்