பூனைகளின் காதலனாக வாழும் 96 இயக்குநர்



முகநூலைத் திறந்தால் ‘96’ இயக்குநர் பிரேம்குமாரும், பூனைகளுமாக நிரம்பித் திரிகிறார்கள்! காதலின் மீது செளந்தர்யம் கொண்ட இயக்குநர்,  பூனைகளின் மீது கொண்ட அன்பு கொஞ்ச நஞ்சமல்ல.
அவரிடம் பூனைகள் பிரியத்தையும், பாசத்தையும், காதலையும் ஒருசேர தன் எல்லா அசைவுகளின் மூலமும் வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. இந்தப் பூனைகளின் உரையாடல் கூட அவரின் உணர்வையும்,உயிரையும் கலந்தே நடந்தது.

பொதுவா எனக்கு மிருகங்களின் மீது ஈடுபாடு உண்டு. நான் wildlife போட்டோகிராபரா இருந்திருக்கேன். எட்டாவது படிக்கும்போது ஒயிட் அல்சேஷன், ஆடுகள் நாலைந்து, சிட்டுக்குருவிகள், வாலாட்டும் குருவிகள் என் கவனிப்பில் இருந்தன. சிட்டுக்குருவிகள் என்னை நம்பிய கதை விசேஷமானது. வெளியே யாரிடம் சொன்னாலும் அதை நம்புவதாக இல்லை. வாலாட்டும் குருவிகள் நம் அருகாமையை துளியும் ஏற்காது. அவையே என் பிரியத்தை ஏற்றுக் கொண்டன.

தஞ்சையிலிருந்து சென்னைக்கு வந்தபிறகு எனக்கு வாய்த்தது மூன்றாவது மாடி. அங்கே காக்கைகளுக்குச் சோறு இடுவதைத் தவிர எந்த உபசரிப்பையும் பிராணிகளுக்குச் செய்ய முடிவதில்லை. இப்போது இந்த ஃபிளாட்டுக்கு வந்து ஐந்து வருடம் முடிந்துவிட்டது. இங்கே வந்ததும், ஒரு தாய்ப்பூனை வந்தது. வந்த புதிதில் போக வர என்று அவர்கள் பிஸியாக இருந்தார்கள். பூனையைப் பொறுத்தவரை அது பாதுகாப்பான இடத்தில்தான் குட்டி போடும். நம்பியவர்களிடம்தான் குட்டிகளை விட்டுச்செல்லும்.

முதல் விஷயம், பூனையை நாய் மாதிரி நினைக்கக்கூடாது. கட்டிப்போடலாம், வீட்டில் இருக்கணும் என்று கனவு காணக்கூடாது! பூனைகள் கிட்டே நீங்கள் சேவகன் மாதிரிதான் இருக்க வேண்டும். அப்படித்தான் உங்களை எதிர்பார்க்கும். மனதிலும் அப்படித்தான் நினைக்கும்.

Cats are like kings. ராஜா மாதிரிதான் இருக்கும். அதற்கு இஷ்டமில்லாதபோது கொஞ்சக்கூடாது. நாய் மாதிரி மிரட்டி, பணிய வைக்க நினைத்தால் தோல்வி உறுதி. பூனைகளுக்கு ஒரு குணம் இருக்கு. அதைப் புரிஞ்சுக்கணும். நாய்கள் நன்றியுடையவை. பூனைகள் அவ்விதம் இல்லையென்று சொல்கிறார்கள். திருட்டுப் பூனையென்றே ஒரு வார்த்தை உண்டு.

அப்படியெல்லாம் கிடையாது. நாயை சீக்கிரம் பழக்கலாம். இது முடியாது. மற்றபடி அன்பு வைப்பதில் பூனைக்கும், நாய்க்கும் வித்தியாசம் கிடையாது.
என் பைக் தெருவில் வரும்போதே எங்கிருந்தாலும் தூக்கத்திலிருந்து எழுந்து நெளிந்துகொண்டே வரும். பல்வேறு இடங்களிலிருந்து ஒன்று திரளும். பூனைகள் அடிமைகள் கிடையாது.

அதை கழுத்தில் கயிறு கட்டி இழுத்துப் போக இயலாது. அலைபேசியில் பேச ஆரம்பித்தால் காலைச் சுத்தி R.T.O. Office போல எட்டு போட்டுக்கொண்டேயிருக்கும். உங்களிடம் அன்பைக் காட்ட காலைத் தட்டிவிட்டுத்தான் போகும். புரிஞ்சுக்கணும்.
இதைத்தான் ‘96’ல் கார்த்திக் நேத்தா ‘இரு காலின் இடையிலே உரசும் பூனையாய் வாழ்க்கை போதும், அடடா எதிர் காணும் யாவுமே தீண்டத்தூண்டும் அழகா..!’ என்று எழுதினார். அவர் இங்கே வந்துபோயிருக்கிறார்.

பூனைகளுக்கு அன்பு செலுத்த வராது... வெறுமனே சோறு தின்று போய்விடும் என்ற கருத்து தவறானது. அவற்றுக்கு உணவிடுவது ஆழ்ந்த கவனிப்பில் நடைபெற வேண்டியது. சரியாகப் பிரித்து வைக்கப்பட வேண்டும். இல்லைன்னா, ஒன்றிரண்டு கோபத்தில் பட்டினி கிடந்து விடுவார்கள். மேலும், வேறு பூனைக்குட்டிகள் வந்து சேரும்போது அவர்களுக்குள் சிறிது முன்விரோதம் தலைதூக்கும்.

எல்லோரையும் சமமாகப் பாவிப்பதில் இதைச் சரிசெய்யலாம். இவர்களை விட்டு ஊருக்குப் போவது டிக்கெட் கிடைப்பதைவிட கடினமானது. நண்பர்களோ, என் உதவியாளர்களோ வீட்டில் தங்கிக் கவனிப்பார்கள்.‘அம்மா கூப்பிடுறா பாரு...’, ‘அக்கா கூப்பிடுறது கேட்கலையா...’, ‘அப்பா எழுதிட்டு இருக்காரு... டிஸ்டர்ப் பண்ணாதே...’ என்றுதான் சொல்லிக் கொள்வோம். அவர்களுக்கு உறவு வைத்து அழைப்பது புரியுமோ, இல்லையோ, நாம் எதோ சொல்ல விரும்புறோம்னு நல்லா புரிஞ்சிருக்கு.

என் மனைவி தனலட்சுமி சற்றே என் அருகிருந்தால் ஆகாது. ‘நான் இருக்க, நீ ஏன் வருகிறாய்...’ என்பதுபோல காலை வைத்து தள்ளும். ரொம்ப நேரம் என் பொண்ணு வேதாகிட்டே பேசிட்டிருந்தால் அதுவும் வந்து சேர்ந்துக்கும். நல்ல உடை உடுத்தினால், போனை கையிலெடுத்தால் குறுக்கமறுக்க ஓடி கத்தி போனை கட் பண்ண வைச்சிடும். என்ன வேணுங்கிறதை கத்தியே புரிய வைக்கும். கதவைத் திறக்கணுமா, பசிக்குதா, மத்த பூனைகள் துணைக்கில்லையா, எல்லாத்தையும் எங்களுக்கு உணர்த்தும்.

ஹயானா என நாங்கள் பெயர் வைத்திருக்கும் பூனை வந்தால் அந்த சப்தமே உங்களுக்குச் சிரிப்பு வந்திடும். சங்கீதத்தில் ஆலாபனை மாதிரியே இருக்கும். இது ‘மியாவ்’னு கத்தி பார்த்ததேயில்லை. ‘இது சின்மயி மாதிரி பாடுது பாரு’ன்னு சொல்லி சிரிப்போம். இன்னொன்று க்யூட்டி. இதுவும் மியாவ் சொன்னதே இல்லை. ஆனா, வேளாவேளைக்கு சாப்பிட்டுப் போயிடும். சமத்து.

இப்ப எழுதினால் வந்து புக் மேலே உட்கார்ந்து கொள்கிறார்கள். ஒண்ணு உட்கார்ந்ததோடு இல்லாமல், இன்னும் பூனைகளைக் கூப்பிடுவாங்க. ரொம்பப் பிடிச்சா நம்ம நெஞ்சு மேலேயே படுத்துத் தூங்கும். என் பார்வையில் பூனையை குட்டிப் புலியாகத்தான் பார்க்கிறேன். புறாவை, எலியைப் பிடிச்சுக்கிட்டு வந்து எங்ககிட்டே பெருமையா காட்டும். பிள்ளைகள் Sports day இல் ஜெயிச்சு கப்பு காட்டுகிற மாதிரி கெத்துகாட்டும்!

‘சாதாரண பூனையினு நினைச்சிடாதே’னு ‘சாப்பாடு’ முடிச்சிட்டு போயிடும்! அப்பதான் புலிகளின் தூரத்துச் சொந்தத்தை ட்ரீட் பண்றோம்கிற நினைவு வரும். பூனை வேட்டையாடும்போது பதுங்குவது, பாய்வது, அடிப்பது, துரத்துவது... எல்லாம் காவிய அழகு. மிக உயரத்திலிருந்து குதிக்கும். அவ்வளவுதான் என நினைக்கும்போது அப்படியே பொசுக்குன்னு எழுந்து நடக்கும்.

மார்பிள் கலரில் இருப்பதால் ‘மார்பிள்’னு ஒருத்தருக்குப் பெயர். ஒருத்தன் செமயா இருப்பான். சினிமாவில் வர்ற ஹீரோ மாதிரியிருப்பான். அவன் நடவடிக்கை அப்படியே இருக்கும். பெண் பூனை பக்கத்திலே ேபாய் உரசுவான். நாங்கள் அவனுக்கு Handsomeனு பெயர் வைச்சிருக்கோம். என் பூனைகள் பிரசவித்ததை வீடியோ எடுத்து வைச்சிருக்கோம்.

அவங்களுக்கு முதல் பிரசவம் என்பதால் என்ன ஏது எனத்தெரியாமல் தவித்த மாயம் உன்னதமானது. ஒரு பூனைக்கு முதுகில் அப்படியே ஒரு திரிசூலம் இருக்கு. இவளுக்கு த்ரிஷான்னு பெயர் வைக்கலாமானு த்ரிஷாகிட்டயே கேட்டேன். ‘ரொம்ப சந்தோஷம். வை’னு சொல்லிட்டாங்க!இவர்களுக்கு மரியாதை குடுக்கலைன்னா அடுத்த நாள் வீட்டை விட்டு புறப்பட்டு விடுவார்கள்.

பக்கத்து வீட்டில் ஒரு பூனை வாங்கி வந்தார்கள். அது என் வீட்டுக்கு வந்து பிரியமாகி விட்டது. அவர்கள் அதை அறையில் அடைத்துப் பார்த்தார்கள். இப்போது ‘போனால் போய்க்கோ’ எனச் சொல்லிவிட்டார்கள். எங்களின் அரவணைப்பில் 12 பூனைகள் இருக்கின்றன. எங்கள் வேதாவையும் சேர்த்து எங்களுக்கு 13 குழந்தைகள் என்பதே உண்மை!

நா.கதிர்வேலன்

ஆ.வின்சென்ட் பால்