தை பிறந்தது...தமிழ் சினிமாவுக்கு வழி பிறந்தது!ஸ்பெஷல் ஸ்டோரி

வேண்டாம். ‘கொண்டாட்டம் என்றால் என்ன...’ என்றெல்லாம் வகுப்பெடுத்து படிப்பவர்களின் டிரவுசரை கழற்ற விரும்பவில்லை. எல்லாருக்கும் எல்லாமும் தெரியும் என்பதால் இதுதொடர்பான எல்லாவற்றையும் ஸ்கிப் செய்துவிடலாம்!போலவே ஃபெஸ்டிவல், விழா தொடர்பான சைகலாஜிக்கல் விளக்கங்களையும் ரப்பரால் அழித்துவிடலாம்.
குடும்பத்துடன் சேர்ந்து ஒரு பண்டிகையை கொண்டாடி முடித்ததுமே குதூகலம் மனதில் பற்றிக் கொள்ளும்; ஸ்ட்ரெஸ் குறையும்; புத்துணர்ச்சியுடன் மறுபிறவி எடுத்த ஃபீல் கிடைக்கும்; ஃப்ரெஷ் ஆக அடுத்து வரும் நாட்களை எதிர்கொள்ளத் தயாராவோம்... என்பதெல்லாம் கல்தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்து வழி வழியாக வாழ்ந்து வரும் நமக்குத் தெரியாதா என்ன..? அறிந்ததால்தானே மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒரு பண்டிகை வருமாறு திட்டமிட்டிருக்கிறோம்!நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களல்ல!

நேரடியாக விஷயத்துக்கு வந்துவிடலாம். விஷயம்..? சினிமா ரிலீஸ்தான். இந்தியாவைப் பொறுத்தவரை திரைப்படம் என்பதும் பண்டிகை என்பதும் வேறுவேறு அல்ல. குறிப்பாக தமிழகத்துக்கு. அதனாலேயே எழுதப் படிக்கத் தொடங்கியது முதல் கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை தலையாய பணியாக தமிழர்கள் பின்பற்றி வருகிறார்கள்.

ஆலயங்கள் கட்டப்பட்டதும் அது சார்ந்த திருவிழாக்களை உருவாக்கியதும் வெறும் பக்திக்காக மட்டுமல்ல. கொண்டாட்டத்துக்காகவும்தான். எனவேதான் ஆலயங்களில் நடனமாடினார்கள்; திருவிழாக்களில் விடிய விடிய கூத்து கட்டினார்கள்!இவை எல்லாமே மனதை லேசாக்கும் காரணிகள் மட்டுமல்ல... அடுத்து வரும் நாட்களில் உழைப்பை செலுத்துவதற்கான உத்வேகத்தை கலைகளே அளிக்கும் என்பதாலும்தான்.

அப்படியிருக்க கலை, கூத்தின் எக்ஸ்டென்ஷனாக வளர்ந்த சினிமா மட்டும் விதிவிலக்கா என்ன..?

அதனால்தான் வேறு எந்தக் கலையையும் விட சினிமாவுக்கு நாம் சின்சியராக இருக்கிறோம், கண்டிஷன்ஸ் அப்ளையுடன்!
யெஸ். ஒரு படத்தை எப்படி வேண்டுமானாலும் உருவாக்கலாம். புரியும்படி அவை இருக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கும் ரசிகர்கள் கூடவே ஒரு விஷயத்தை அடிக்கோடிட்டு அழுத்தம் கொடுக்கிறார்கள்.

அது -‘தீபாவளி, பொங்கல், சித்திரைத் திருநாள், ஆயுத பூஜை, சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, கிறிஸ்துமஸ், ரம்ஜான்... என பண்டிகைக் காலங்களில் வெளியாகும் படங்களில் என்டர்டெயின்மென்ட் இருக்க வேண்டும். அட்வைஸ் செய்யாதீர்கள். கலைப்படம் என்னும் பெயரில் கழுத்தை அறுக்காதீர்கள். இதையெல்லாம் மற்ற நாட்களில் ரிலீசாகும் படங்களில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். ஃபெஸ்டிவல் கொண்டாட்டத்துக்குத்தான்! போதனைக்கு அல்ல!

ஏனெனில் பழைய சோறை தினமும் சாப்பிடுகிறோம். ஆனால், பண்டிகைக் காலங்களில் தலைவாழை இலையில் விருந்து சாப்பிடவே விரும்புகிறோம். இந்த சோற்று விஷயத்தில் கை வைத்து விடாதீர்கள்!போலவே கஞ்சி போட்டு இஸ்திரி செய்த உடைகளை அணியும் கணக்காக மற்ற நாட்களில் விறைப்புடன் சமூக அவலங்கள், அரசியல் நெருக்கடிகளைக் குறித்து பேசுகிறோம்; வாட்ஸ் அப் செய்திகளை ஃபார்வர்ட் செய்கிறோம். குறைந்தபட்சம் பண்டிகை நாட்களிலாவது இதெல்லாம் மறந்து mass madness உடன் எங்களை துள்ளிக் குதிக்க விடுங்கள்!’

இந்தக் கூக்குரலை செவிமடுத்து படம் எடுத்து விழாக் காலங்களில் ரிலீஸ் செய்பவர்கள் கண்டிப்பாக கல்லா கட்டுவார்கள். சம்பந்தப்பட்ட படம் கூடக் குறைய இருந்தாலும் ரசிகர்கள் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள்.அதுவே இந்த அம்சம் மட்டும் பண்டிகைக் காலங்களில் ரிலீசாகும் படங்களில் மிஸ் ஆனால்  போச்சு. எவ்வளவு நல்ல தரமானபடமாக இருந்தாலும் ரசிகர்கள் அதைப்  புறக்கணித்து விடுவார்கள்.

எம்ஜிஆர் - சிவாஜி காலம் முதல் இதுதான் நிலை. கொண்டாட்டத்தை அடிப்படையாகக் கொண்ட படங்களை இவர்கள் இருவரும் பண்டிகைக் காலங்களில்தான் வெளியிட்டார்கள்.இதற்குப் பிறகு வந்த ரஜினி, கமல், விஜய்காந்த், சத்யராஜ், அர்ஜுன், பிரபு, கார்த்திக்... இப்போது அஜீத், விஜய், சூர்யா, விக்ரம்... என நீளும் பட்டியலில் மாஸில் கலக்கும் அனைவருமே இந்த ஃபார்முலாவில்தான் நடைபோடுகிறார்கள். வசூல் மன்னர்களாக வலம் வருகிறார்கள்.

2019 பொங்கல், இப்படி கொண்டாட்டமாகத்தான் அமைந்திருக்கிறது!ரஜினியின் ‘பேட்ட’, அஜீத்தின் ‘விஸ்வாசம்’ இரண்டுமே பர்ஃபெக்ட் ஃபெஸ்டிவல் மூவி. தத்தம் ரசிகர்களை மட்டுமல்ல... ஒட்டுமொத்த தமிழக மக்களையும் இவ்விரு படங்களுமே ரசிக்க வைத்திருக்கிறது; ரசித்து ரசித்துப் பார்க்கும்படி எடுக்கப்பட்டிருக்கிறது.

‘பேட்ட’யைப் பொறுத்தவரை பழைய ரஜினி அதே ஃப்ரெஷ்னெஸுடன் காட்சிக்கு காட்சி தோன்றுகிறார். எந்த ஸ்டைல், மேனரிசம் காரணமாக கொண்டாடப்படுகிறாரோ அவை அத்தனையும் ‘பேட்ட’யில் மறுவார்ப்பு செய்யப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு சீனும் ஒவ்வொரு டயலாக்கும் ரஜினிக்கான டிரிபியூட்.

கவனத்தில் கொள்ள வேண்டியது கடந்த சில ஆண்டுகளாக இவை அனைத்தும் ரஜினி படங்களில் மிஸ் ஆகி இருந்தது என்பது!

இந்த அம்சங்கள் அனைத்தையும் கச்சிதமாகக் கோர்த்து நவரத்தின மாலையாக மாற்றியது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் சாமர்த்தியம். அதனால்தான் ‘பேட்ட’யில் ரஜினியின் என்ட்ரி முதல் கடைசி ஃப்ரேம் வரை ரஜினிஃபைட் ஆக இருக்கிறது. ஒவ்வொரு பார்வையாளனையும் மயக்குகிறது. ஒவ்வொருவரையும் அவரவர் பால்ய காலத்துக்கு அழைத்துச் செல்கிறது. வயதானவர்களையும் குழந்தைகளாக மாற்றுகிறது, குதூகலப்
படுத்துகிறது.

‘விஸ்வாசம்’ மாஸ் அண்ட் ஃபேமிலி ஜானர். பொங்கலை ஒட்டி கிடைக்கும் நீண்ட விடுமுறையில் எல்லோருமே தத்தம் ஊர்களுக்கு செல்வார்கள். குடும்பம் + உறவினர்களுடன் பண்டிகையைக் கொண்டாடுவார்கள்.இந்த சைக்காலஜியை அப்படியே ‘விஸ்வாசம்’ கதையில் இயக்குநர் சிவா சரியாகத் தூவியிருக்கிறார். படம் முழுக்க முழுக்க அஜீத் ராஜாங்கம். கணவன் - மனைவி; அப்பா - மகள் சென்டிமென்ட் படம் முடியும்போது கிடைக்கும் ஃபீல் குட் உணர்வு எல்லாம் இப்படத்தையும் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட காரணமாக அமைந்திருக்கிறது.

போதாதா? பொங்கலை ஒட்டி இந்தாண்டு வெளியாகியிருக்கும் இவ்விரு படங்களுமே பாக்ஸ் ஆபீசை அதிர வைத்துக் கொண்டிருக்கின்றன. தட்ஸ் இட். ஆண்டுத் தொடக்கத்தில் இப்படியொரு திரையரங்க திருவிழா நடந்தால்தான் சினிமா சந்தை வலுப்பெறும். தொடர்ந்து ரிலீசாக இருக்கும் படங்களை வரவேற்கவும் மக்கள் தயாராக இருப்பார்கள். ஏனெனில் பண்டிகைக் கால சினிமா ருசியை இப்போது அனுபவிக்கிறார்கள். இந்த ருசி அடுத்தடுத்து தியேட்டரை நோக்கி அவர்களைப் படையெடுக்க வைக்கும்.

‘படம் பார்க்க தியேட்டருக்கு இப்ப எல்லாம் யார் வர்றாங்க..?’ என இதுநாள் வரை நொந்து கொண்ட தமிழ் சினிமா ‘பேட்ட’ - ‘விஸ்வாசம்’ காரணமாக சோர்வை உதறி கம்பீரமாக எழுந்து நிற்கிறது. அலைகடலென தியேட்டரை நோக்கி மக்கள் படையெடுப்பதே இதற்கு சாட்சி.
இதை தக்க வைத்துக் கொள்ள வேண்டியது அடுத்தடுத்து வெளியாகும் படங்களின் கதையில், என்டர்டெயின்மென்ட் வேல்யூவில் இருக்கிறது.

எது எப்படியிருந்தாலும் இந்த தை மாதப் பிறப்பு தமிழ் சினிமாவுக்கு பிரகாசமான ராஜபாட்டையை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. தியேட்டருக்குச் சென்று படம் பார்க்க வேண்டும் என்ற விதையை மக்கள் மனதில் விதைத்திருக்கிறது.வேறென்ன... 2019 தமிழ் சினிமாவுக்கு ஹேப்பியோ ஹேப்பி ஆக இருக்கும் என செல்லுலாயிட் அம்மன் மீது தாராளமாக சத்தியம் செய்யலாம்!

கே.என். சிவராமன்