முதல் படமே தலைவரோடு தலைவா!துள்ளிக் குதிக்கிறார் மேகா ஆகாஷ்

‘‘என் முதல் ரிலீஸே தலைவரோட! வானத்துல பறந்துட்டிருக்கேன் தலைவா! ‘பேட்ட’ பொங்கலா இந்த ஆண்டு எனக்கு அமையும்னு துளிக்கூட எதிர்பார்க்கலை!ஸ்கூல் படிக்கிறப்பவே தலைவர் ஃபேன். ஒரேயொரு செல்ஃபியாவது அவரோடு எடுத்துக்கணும்னு கனவு கண்டேன்.
பார்த்தா ரஜினி சாரோடயே நடிச்சுட்டேன்! அதுவும் ‘உங்க ஸ்டைல்ல அடிச்சுக்க ஆளே இல்லை’னு சொல்ற டயலாக் எனக்குத்தான் அமைஞ்சது!
கனவு மெய்ப்பட்டிருக்கு பாஸ்! ‘பேட்ட’ல சின்ன ரோல்தான். ஸோ வாட்? தலைவர் கூட காம்பினேஷன் சீன்ஸ் இருக்குனு சொன்னதும் மறுபேச்சே பேசலை. கபால்னு கமிட் ஆகிட்டேன்! படத்துல மல்டி ஸ்டார்ஸ் இருந்தும், நானும் ஸ்கோர் பண்ணியிருக்கேன்!

முதல்நாளே ரஜினி சாரை hug பண்ற சீன். அது தந்தைக்கும் மகளுக்குமான அரவணைப்பு. படபடப்பா இருந்தது. ஆனா, ரஜினி சார்... சான்ஸே இல்ல. ஸ்வீட் அண்ட் ஹம்புள். கேஷுவலா பேசி என் படபடப்பை குறைச்சார்.என்னை மாதிரி புதுமுகங்களுக்கு ரஜினி சார் படம்... அதுவும் ஃபெஸ்டிவல் ரிலீஸ் எல்லாம் வரம். நிறைய புண்ணியம் செய்திருக்கேன். அதனாலதான் எனக்கு அமைஞ்சிருக்கு!

எதிர்பாராத இடங்கள்ல இருந்தெல்லாம் பாராட்டு குவியுது. இதுக்கு முன்னாடி ‘ஒரு பக்க கதை’ல நடிச்சிருந்தாலும் ‘பேட்ட’தான் முதல்ல ரிலீஸ் ஆகியிருக்கு!’’ இமைகள் படபடக்க நம்ப முடியாத ஆச்சர்யத்துடன் நான்ஸ்டாப்பாகப் பேசுகிறார் மேகா ஆகாஷ். இப்போது தனுஷுடன் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, அதர்வாவுடன் ‘பூமராங்’, சுந்தர்.சியின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ தவிர பாலிவுட்டிலும் கமிட் ஆகியிருக்கிறார் இவர்.
மேகாவோட வரலாறை தெரிஞ்சுக்கலாமா..?

காவியமா என்ன..? சொல்லிட்டா போச்சு! அப்பா, அம்மா ரெண்டு பேருமே ஃபிலிம் மேக்கிங், விளம்பரப் படத்துறைல இருக்காங்க. அம்மா நிறைய கமர்ஷியல் விளம்பரங்களுக்கு ஸ்கிரிப்ட்ஸ் எழுதியிருக்காங்க.

அப்பாவுக்கு சினிமா இண்டஸ்ட்ரில நண்பர்கள் அதிகம். கேமராமேன் மணிகண்டன் சார், திரு சார், எடிட்டர் ஆண்டனி, கவுதம்மேனன் சார் எல்லாருக்குமே என்னைத் தெரியும். அவங்க என்னை நடிக்க கேட்கும் போதெல்லாம் ஸ்கூல் படிப்பு முடியட்டும்னு சொல்லியிருக்கேன்.

ஆனா, எதிர்பாராத விதமா சினிமால என்ட்ரி ஆகிட்டேன்! என் அக்காவோட ஃப்ரெண்ட்தான் நம்ம பார்த்திபன் சார் பெண் கீர்த்தனா. அவங்க ஒருநாள் எங்கிட்ட, ‘டைரக்டர் பாலாஜி தரணீதரன் சார் ‘ஒரு பக்க கதை’க்காக ஹீரோயின் தேடிட்டு இருக்கார். ஆடிஷன் போயிட்டு வா’னு சொன்னாங்க.

சும்மா ஜாலிக்காக பாலாஜி சாரை போய் பார்த்தேன். ஆடிஷன்ல கலந்துகிட்டேன். செலக்ட் ஆகிட்டேன்! அதுல ஜெயராம் சார் பையன் காளிதாஸ் ஜோடியா நடிச்சிருக்கேன். விரைவில் அந்தப் படம் ரிலீசாகப் போகுது.

இந்தப் பட ஷூட்டிங் நடக்கிறப்பவே கவுதம்மேனன் சாரோட ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ ஆஃபர் வந்தது. கவுதம் சார் படமாச்சே! மிஸ் பண்ணத் தோணுமா? அதுவும் தனுஷ் சாரோட ஜோடி. பெரிய யெஸ் சொன்னேன்! அடுத்து தெலுங்கில் ‘லை’ (பொய்), ‘சல் மோகன ரங்கா’ பண்ணினேன். ரெண்டுமே டோலிவுட்ல ரிலீஸ் ஆகி, அங்கயும் ஒரு ஆக்ட்ரஸா ஃபார்ம் ஆகிட்டேன்!

தமிழ்ல அடுத்து அதர்வா ஜோடியா ‘பூமராங்’ பண்ணியிருக்கேன். ‘இவன் தந்திரன்’ ஆர்.கண்ணன் சார் இயக்கியிருக்கார்.என்ன சொல்றாங்க தனுஷும் அதர்வாவும்..? ‘பூமராங்’ல ரொம்ப க்யூட்டான கேரக்டர்.

அதர்வாவுடன் காம்பினேஷன் சீன்ஸ், டூயட் எல்லாம் இருந்தாலும் அவர்கிட்ட அவ்வளவா பேசினதில்ல. அந்தமான்ல ஒரு பாடல் ஷூட் போயிட்டு வந்தோம். அது மனசுக்கு பிடிச்ச லொக்கேஷனாகிடுச்சு. பொதுவாவே எனக்கு கடல் பிடிக்கும். கடலை கண்ணுக்குள்ளயே க்ளிக் பண்ணிட்டு வந்துட்டேன்!  

‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ என் ரெண்டாவது படம். சினிமால எப்படி இருக்கணும்..? ஸ்கிரீனில் என்ன தேவை... இதெல்லாம் அதுல கொஞ்சம் இம்ப்ரூவ் ஆகியிருக்குனு நினைக்கறேன். காரணம் தனுஷ் சார்.நடிப்பு சம்பந்தமா நிறைய விஷயங்கள் கத்துக்கொடுத்தார்.

துருக்கில ஒரு பாடல் ஷூட் போயிட்டு வந்தேன். அப்ப அங்க செம வெயில். காலை ஒன்பது மணிக்கு தொடங்கின ஷூட், முடிய நைட் ஆகிடுச்சு. தொடர்ந்து மூணு நாட்கள் அங்க ஷூட். மொழி தெரியாத ஒரு ஹோட்டல்ல மாட்டிக்கிட்டது மறக்க முடியாத கலகல மொமன்ட்.

தெலுங்கில் நான் நடிச்ச ‘சல்மோகன ரங்கா’வைப் பார்த்து சுந்தர்.சி சார் பட வாய்ப்பு வந்தது. அவரே பேசினார். ‘பேட்ட’ ரிலீஸுக்கு முன்னாடியே அவரோட ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ல கமிட் ஆகிட்டேன். இப்ப இந்தில ‘சாட்டிலைட் சங்கர்’னு ஒரு படம் பண்றேன். அதுல நான் தமிழ்ப் பொண்ணா வர்றேன். அதோட ஷூட் போயிட்டிருக்கு.

மேகாவின் பர்சனல் பேசலாமா?
தாராளமா! ஆக்‌ஷன், அட்வென்ச்சர் கேம்ஸ்னா ரொம்ப பிடிக்கும். ஸ்கூபா டைவிங்ல இன்ட்ரஸ்ட் உண்டு. ஓரளவு நல்லா பாடுவேன். ‘மறுவார்த்தை பேசாதே...’ ரொம்ப பிடிச்ச பாட்டு. பாடகியாக சான்ஸ் கிடைச்சா... அதையும் ஒரு கை பார்க்க ரெடி!நம்ம மெரீனா பீச்னா ரொம்ப பிடிக்கும். ஃப்ரெண்ட்ஸோடு மெரீனாலில் ஒரு ஜாலி வாக் போயிட்டு வந்தால் போதும், எல்லா டென்ஷனும் பறந்துடும்!   

மை.பாரதிராஜா