மதுரை உழவன் உணவகம் : லன்ச் மேப்இன்று தமிழகம் முழுவதும் ஊருக்கு நான்கு இயற்கை அங்காடிகளும், சிறுதானிய உணவகங்களும் உள்ளன. இதற்கெல்லாம் முன்னோடியாக மக்களுக்கு சிறுதானியங்கள் மீது விழிப்புணரவு வர வேண்டும் என 2009லேயே தொடங்கப்பட்ட கடைதான் உழவன் உணவகம்!அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம் ஐஏஎஸ், விவசாயிகள் நேரடியாக பயன்பெறவும், சிறுதானியங்களை விளைவிப்பவர்களை ஊக்கப்படுத்தவும் பொதுமக்களுக்கு சிறுதானியங்கள் மீது ஆர்வம் ஏற்படுத்தவும் கொண்டு வந்த திட்டம் இது!

ஆம். நேரடியாக மாவட்ட ஆட்சியரக கண்காணிப்பிலேயே இதைத் தொடங்கினார்கள்! மதுரை நத்தம் ரிசர்வ் லைன் அருகே இருக்கும் இந்த உணவகத்தில் சிறுதானிய உணவுகள்தான் ஸ்பெஷல். 

மாலையில் மூலிகை சூப் வகைகள், வாழைப்பூ வடை, தானியப்புட்டு, முளைகட்டிய பயிர்வகைகள்... என தினம்ஒரு பதார்த்தம் தருகின்றனர். இரவு வரகரிசி இட்லி, சாமை பொங்கல், பொன்னாங்கண்ணி கீரை தோசை, முள் முருங்கை தோசை, வரகரிசி பிரியாணி, தினை சப்பாத்தி... என வெரைட்டிகள்.

இவை அனைத்துமே உடலுக்கு ஆரோக்கியம் தருபவை. அத்துடன் சுவைக்கும் பஞ்சமில்லை.இந்த உணவகத்தில் தயாராகும் அனைத்துமே ஸ்பெஷல்தான் என்றாலும் வரகரிசி,பாசிப்பருப்பு கலந்த முறுக்கு, வாழைப் பூவினால் செய்த கோலா உருண்டை ஆகியவை மக்களால் அதிகம் விரும்பப்படுகின்றன.

பொதுவாக சிறு தானியங்களில் சத்துகள் அதிகம் இருந்தாலும் அன்றாடம் நாம் சாப்பிடும் உணவு போன்ற ருசியை அவை தருவதில்லை என பலரும் நினைக்கிறார்கள்; நம்புகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இங்கு வந்து எதைச் சாப்பிட்டாலும் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள்!
பாலாஜி, தங்கபெருமாள், உமாராணி, ரவி ஆகிய நால்வர் காலையில் விவசாயம் பார்த்துவிட்டு மாலையில் இந்த உணவகத்தை நடத்துகின்றனர்.

மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை கூட்டம் அலைமோதுகிறது. ஒவ்வொரு ஐட்டத்தின் விலையும் ரூ.5ல் தொடங்கி ரூ.25க்குள் முடிகிறது!“விவசாயிங்க உற்பத்தி செய்யற பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கணும்னா அந்தப் பொருள் மதிப்புக் கூட்டுப் பொருளா மாறணும். உதாரணத்துக்கு, வெறும் சோளத்தை விட சோள மாவுக்கு விலை அதிகம் இல்லையா..?

இதை அடிப்படையா வைச்சுதான் இந்த உணவகத்தை ஆரம்பிச்சோம். அதாவது சிறு தானியங்களை தனியா விக்காம அதையே உணவா மாற்றித் தருவது! இதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு...’’ மகிழ்ச்சியுடன் சொல்கிறார் பாலாஜிஇவர்கள் 70 வகையான பாரம்பரிய உணவு களைச் செய்கின்றனர்! விவசாயிகள் பலர் தங்கள் பொருட்களை இங்கு விற்பனை செய்கிறார்கள்.

‘‘தோசைல நிறைய வெரைட்டி இருந்தாலும் கீரை தோசைக்கு வரவேற்பு அதிகம். காரணம், எல்லா கீரையும் மருத்துவ குணம் கொண்டது என்பதுதான். இதுல பொன்னாங்கண்ணியையும், முள் முருங்கையையும் விரும்பிச் சாப்பிடறாங்க. விசேஷங்களுக்கு ஆர்டரும் எடுக்கறோம்...’’ என்கிறார் உமாராணி.   

“பொன்னாங்கண்ணி கீரையை இட்லி குக்கர்ல துணி வைச்சு ஒரு நிமிஷம் வேக வைக்கணும். அப்பதான் சத்துகள் போகாம கீரைல இருக்கிற கிருமிகள் அழியும். அப்புறம் உப்பு சேர்த்து நல்லெண்ணெய்ல வதக்கி தோசை மாவு ஊத்தி அதுமேல பொன்னாங்கண்ணி கீரையை தூவறோம். இதுல தோசை மாவுக்கு பதிலா தானிய வகை மாவுகளை பயன்படுத்தினா இன்னும் சுவையா இருக்கும்.

முள் முருங்கை கொஞ்சம் சிரமம். ஏன்னா கீரைல இருக்கிற முள், நரம்புகளை எடுத்துட்டு நல்லெண்ணெய்ல தேய்ச்சு அப்புறம் இட்லி குக்கர்ல ஒரு நிமிஷம் துணில வேக வைச்சு மிக்சில கூழா அரைச்சு தோசை மாவுல கலக்கணும். இந்த மெனக்கெடல் அவசியம். தோசைக்கு காம்பினேஷனா முள்ளங்கி, பீர்க்கங்காய், பிரண்டை சட்னிகள் செய்யறோம்! விரைவில் சிறுதானிய சமையல் பயிற்சியை மக்களுக்கு வழங்கப் போறோம். விருப்பம் இருக்கிறவங்க வந்து கத்துக்கலாம்...’’ என்கிறார் பாலாஜி.

வாழைப்பூ கோலா உருண்டை

வாழைப்பூ - 3
மஞ்சள்தூள் - அரை சிட்டிகை
தினை மாவு - 200 கிராம்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க‌
வதக்கி அரைக்க‌:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 2
சோம்பு - 1 சிட்டிகை
கசகசா - 1 சிட்டிகை
தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி
இஞ்சி - 1 சிறு துண்டு
பூண்டுப்பல் - 4
கறிவேப்பிலை - 1 கொத்து
பட்டை - சிறு துண்டு
கிராம்பு - 2

பக்குவம்: வாழைப்பூவை நறுக்கி மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும். எண்ணெயில் வதக்கிய பொருட்கள் ஆறியதும் அதை மைய அரைக்கவும். மசித்த வாழைப் பூவுடன் உப்பு, தினைமாவு என அனைத்தையும் சேர்த்து பிசைந்து உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். கடலையெண்ணையில் பொரித்தால் சுவையாக இருக்கும். பட்டை, கிராம்பு சம அளாவில் இருந்தால்தான் வாசனையாக இருக்கும்!    
வரகு, பாசிப்பருப்பு முறுக்கு

வரகு - 200 கிராம்
பாசிப் பருப்பு - 100 கிராம்
பொட்டுக் கடலை மாவு - 3 டீ ஸ்பூன்
சீரகம் - ஒரு சிட்டிகை
எள் - அரை சிட்டிகை
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

பக்குவம்: வரகு மற்றும் பாசிப் பருப்பை வாசம் வரும் வரை அடி கனமான வாணலியில் வறுத்துக் கொள்ளவும். ஆறியவுடன் மிக்சியில் அரைத்து, சலித்து எடுக்கவும். இதனுடன் பொட்டுக் கடலை மாவு, சீரகம், எள், வெண்ணெய், உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.பின்னர் தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் முறுக்குக் குழலில் பிசைந்த மாவை வைத்து தேவையான அளவுகளில் பிழிந்து, வேக வைக்கவும்.எண்ணெய், மிதமான சூட்டில் இருக்க வேண்டும். அடுப்பை குறைவான தீயில் வைத்து பொரிக்க வேண்டும்.

திலீபன் புகழ்

அருள்ராஜ்