மேல்சாதியினருக்கும் இட ஒதுக்கீடு தேவையா?



சமீபத்தில் மத்திய அரசு பொருளாதார ரீதியாகப் பின்தங்கியிருக்கும் உயர்சாதியினருக்கும் கல்வி மற்றும் அரசுத் துறை வேலைவாய்ப்பில் பத்து சதவீத இட ஒதுக்கீடு வழங்க சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளது. மோடி அரசின் இந்த அறிவிப்பும் வழக்கம்போல சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகளிடையே பெரும் விவாதமாக உருவெடுத்துள்ளது. பெரும்பான்மையான சமூக ஆர்வலர்கள் இதைத் தவறான கண்ணோட்டம் என வர்ணித்துள்ளார்கள்.

அதே சமயம், அதி தீவிர வலதுசாரி கருத்தியல் கொண்டவர்கள் இதை வரவேற்கிறார்கள்.இட ஒதுக்கீடு என்பது என்றுமே சலுகை இல்லை. அது ஒருவகை உரிமை. நீதியற்ற, சமதர்மமற்ற ஒரு சமூகத்தில் அரசு எனும் நிறுவனம் இழைக்கப்பட்ட அநீதிக்குப் பிராயச்சித்தம் தேடும் முகமாகவும், சமூக அந்தஸ்தில் கீழ்நிலையில் இருப்பவர்களும் மேலேறி வருவதற்கு வாய்ப்பளிப்பதற்காகவும் செய்யப்பட்ட ஏற்பாடு அது.

இந்தியா, சாதியால் பிளவுண்ட நாடு. சாதி ஆணவக் கொலைகளும், சாதிய வன்முறைகளும், படுகொலைகளும் நாள்தோறும் நடந்துகொண்டிருக்கும் நிலப்பரப்பு இது. இங்கு சமூகத்தின் அடித்தட்டில் இருக்கும் மக்கள் மேலேறி வர இருக்கும் ஒரே வழி இட ஒதுக்கீடு மட்டுமே.  
வெள்ளையர் காலம் முதலே சில பகுதிகளில் குறிப்பிட்ட சில சமூகப் பிரிவினருக்கு மட்டும் வழங்கப்பட்ட சிறப்பு கோட்டா, பின்னாட்களில் சுதந்திர இந்தியாவிலும் தொடர்ந்தது.

இட ஒதுக்கீடு தொடர்பாக உலகம் முழுதும் பல்வேறு சிந்தனையாளர்கள் அவ்வப்போது பேசி வந்திருக்கிறார்கள். இவர்களில், அமெரிக்காவின் ஜான் ரால் முக்கியமானவர். இவர்தான் சென்ற நூற்றாண்டில் இட ஒதுக்கீடு என்ற சமூக நீதிக்கான கொள்கையை வடிவமைத்த சிந்தனையாளர்களில் முக்கியமானவர்.

ஜான் ரால் உட்பட பல சமூக விஞ்ஞானிகளும் முன்வைத்த சமூகவியல் கோட்பாட்டை ஏற்று இந்திய அரசு மண்டல் ஆணையத்தை அமைத்தது. 1979ம் ஆண்டு இந்த ஆணையம் தங்களின் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தது. அதில் இந்தியாவில் உள்ள 27% மக்களுக்கு கல்வி மற்றும் அரசுப் பணிகளில் இருபத்தேழு சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது.

அப்போது, நாடு முழுதும் இந்த அறிக்கைக்கு கடும் எதிர்ப்பு உருவானது. பத்து வருடங்கள் கழித்து 1989ல் அதை தூசி தட்டிய வி.பி.சிங் அரசு, பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டு சட்டத்தைக் கொண்டுவந்தது.இந்த சட்டம் தங்களைப் பாதிக்கும் என்று உயர் சாதியினர் கடுமையாகப் போராடவே, நீதிமன்றம் தலையிட்டு இந்த இட ஒதுக்கீடு 50%க்கு மேல் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தியது. உச்ச நீதிமன்றம் அதிகபட்சம்  50%க்குள்ளாக நாட்டின் மொத்த இட ஒதுக்கீட்டையும் அடக்கிவிட வேண்டும் என்றும், மீதமுள்ள 50% பொதுப்போட்டிக்கு விடப்படவேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அதாவது 27% OBC இனத்தவருக்கும், 15% SC இனத்தவருக்கும், 7.5% ST இனத்தவருக்கும் என மொத்தம் 49.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
மீதமுள்ள 50% கல்வி வாய்ப்பு இடங்கள், அரசுப் பணிகள் பொதுப்போட்டிக்கு என அறிவிக்கப்பட்டது. நாட்டில் உள்ள OBC இனத்தவர்களின் விகிதம் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாயிருக்கலாம் என்பதாலும், அவ்வினத்தவர்க்குள்ளாகவே சமூக அங்கீகாரம், மற்றும் பொருளாதார நிலை ஆகியவற்றுள் மிகுந்த வேறுபாடு இருப்பதாலும் க்ரீமி லேயர் என்ற வடிகட்டும் உத்தியைப் பயன்படுத்தியது அரசாங்கம்.

இந்த க்ரீமி லேயர் எனப்படும், பொருளாதாரரீதியாக வலுவானவர்கள் இட ஒதுக்கீட்டிலிருந்து நீக்கப்படுவதற்கான உச்சபட்ச தொகை நிர்ணயம் அவ்வப்போது அதிகரித்து வருகிறது. கடந்த 2017ம் ஆண்டின் திருத்தங்களின்படி, ஓபிசி சமூகங்களின் ஆண்டு வருமானம் எல்லாவகை வருமானங்களையும் சேர்த்து ரூ.8 லட்சங்களுக்கும் குறைவாக இருந்தால் மட்டுமே இட ஒதுக்கீடு கிடைக்கும். தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இந்த உச்சவரம்பை பதினைந்து லட்சங்களாக உயர்த்த வேண்டும் என்று கோரி வருகிறது.

ஓபிசி சமூகங்களில் க்ரீமி லேயர் முறையில் இட ஒதுக்கீடு நீக்கம் நிகழ்வதைப் போலவே, இத்தனை ஆண்டுகால இட ஒதுக்கீட்டு பயன்பாட்டால் பொருளாதாரரீதியாக வலுவாகிவிட்ட எஸ்.சி மற்றும்எஸ்.டி பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும், பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள உயர்த்தப்பட்ட சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில்தான் மத்திய அரசு இந்த சட்டத்தை நிறைவேற்ற முன்வந்துள்ளது. இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல. இதனால் வறுமை ஒழியும் என்றாலும் இட ஒதுக்கீடு செய்யப்படுவதன் நோக்கம் சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வைக் களைவதுதான்.
பொருளாதார வளம் அல்லது ஏழ்மை என்பது நிலையான, நீடித்த மற்றும் மாற்ற முடியாத அடையாளமல்ல. ஒரு ஏழை நாளை செல்வந்தராகலாம். ஆனால், ஒரு தலித் செல்வந்தராகி அதிகாரமிக்க பதவியில் அமர்ந்தாலும் அவர் தலித்தாகத்தான் பார்க்கப்படுகிறார்.  

இந்தப் பண்பாட்டு இழிவை நீக்குவதன் ஒரு படிதான் இட ஒதுக்கீடு. கல்வி, வேலை வாய்ப்பு மூலம் இந்தப் பண்பாட்டு அவமானத்திலிருந்து ஒருவர் வெளியேற முடியும் என்பதுதான் இட ஒதுக்கீட்டின் அசலான நோக்கம். வெறும் பொருளாதார முன்னேற்றம் மட்டுமே இதன் குறிக்கோள் அல்ல.
தமிழகத்தில் இப்போது அறுபத்தொன்பது சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. உலக அரங்கில் தமிழகத்தின் இட ஒதுக்கீடுதான் முற்போக்கானது என்பதை சர்வதேச சமூகங்களே ஒப்புக்கொண்டுள்ளன.

ஆனால், இது மத்தியில் அதிகாரத்தில் இருப்பவர்கள் உட்பட பலரின் கண்களை உறுத்திக்கொண்டுள்ளது. இட ஒதுக்கீடு ஐம்பது சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்ற உச்சநீதி மன்றத்தீர்ப்பைக் காட்டி இட ஒதுக்கீட்டைக் குறைக்க கொக்கரித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது, தங்களுக்கும் பத்து சதவீத ஒதுக்கீடு கேட்பதன் மூலம் அதை அபகரிக்க முயல்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

பொது ஒதுக்கீட்டிலிருந்துதான் அரசு பத்து சதவீத கூடுதல் இட ஒதுக்கீட்டை உயர்சாதிகளுக்குச் செய்யப்போவதாக அறிவித்துள்ளது என்றபோதும் நாளையே நீதிமன்றம் அதனை உள் ஒதுக்கீடாக மாற்றக் கூறினாலும் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.இன்னொரு முக்கியமான விஷயம். இந்தியாவில் இப்போது உள்ள காலிப் பணியிடங்களில் எத்தனை நிரப்பப்படுகிறது? கள நிலவரம், பல லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படுவதேயில்லை என்கிறது. தனியாரிலோ இட ஒதுக்கீடு கிடையாது.

மறுபுறம் அரசும் தீவிரமாக அரசு துறைகளை தனியார் மயமாக்கி வருகிறது. இப்படியான சூழலில் ஏற்கெனவே இட ஒதுக்கீட்டில் படித்து பட்டம் பெற்றவர்களுக்கு, அரசு வேலையின்றி அதன் உண்மையான லாபங்கள் போய்ச் சேராத நிலையில் கூடுதலாக உயர் சாதியினருக்கும் இட ஒதுக்கீடு என்று வந்தால், இட ஒதுக்கீடு என்ற கொள்கையின் நோக்கமே அர்த்தமிழந்துவிடும்.

இளங்கோ கிருஷ்ணன்