பஸ்ஸில் பயணம் செய்த எஸ்.ஏ.பி!



தன் 50 ஆண்டுகால ஓவிய வாழ்க்கையை பகிர்ந்து கொள்கிறார் ராமு

தமிழ்ப் பத்திரிகை உலகின் ‘ஐகான்’ ஓவியர்களில் ஒருவர், ராமு. கால நதியால் அடித்துச்செல்ல முடியாத ஓவியங்களைத் தந்த கலைஞர் ராமுவுடன் பேச நேர்ந்தது ஒரு சுகானுபவம். அடங்கி ஒலிக்கும் அவரது சிறு குரலில் அன்பு வழிகிறது.
ஓவியங்கள் குறித்த பிரியமும், ஆர்வமும் கொஞ்சமும் குறையவில்லை.‘‘ஓவியம்தான் உலகம்னு இருந்திட்டேன். அதில் எனக்கு எந்த மனவருத்தமும் இல்லை. மக்களோடு புழங்கிக்கிட்டு இருந்த, இருக்கிற பத்திரிகைகள்தான் நம்ம உலகம். அதிலிருக்கிற மனிதர்களை உருவாக்கி வெளியே நடமாட விடுவதுதான் நம்ம பணி.

50 வருஷங்களுக்கு மேலாச்சு. இன்னும் எதுவுமே சலிக்கலை...’’ என்ற ராமுவின் கண்களில் இன்னும் மின்னுகின்றன ஏராளமான ஓவியங்கள். பல கதைஆசிரியர்களின் கனவுகளுக்கு உயிர் கொடுத்தவர், அனுபவத்தின் முற்றத்தில் அமர்ந்து இன்னும் பேசுகிறார்.‘‘சின்ன வயதில் ஓவியம் வரைய ஆரம்பிச்சிட்டேன்னு சொல்வாங்க.
எங்க அம்மாவுக்கு அதில் ரொம்ப பெருமிதம். அதை ஒவ்வொருத்தர் கிட்டேயும் ரசித்து சொல்வாங்க.இந்தப் பாராட்டு எனக்குள்ள போய் இறங்கியிருக்கலாம். இதில் எதையாவது சாதிக்கணும்னு எண்ணம் வந்திருக்கணும். ஆர்ட்ஸ் காலேஜில் சேர்ந்திட்டேன். அதெல்லாம் ஒரு அருமையான காலம். கனவுகளும், கற்பனைகளுமா அலைஞ்சு திரிஞ்ச கட்டம்.

நடிகர் சிவகுமார், எழுத்தாளர் ராஜேந்திரகுமார் என்னோடதான் படிச்சாங்க. நான் ஓவியராக தொடர்ந்ததும், சிவகுமார் நடிகராக திசை திரும்பியதும், ராஜேந்திரகுமார் எழுத்தாளர் ஆனதும் இன்னிக்கும் ஆச்சர்யமாயிருக்கு. எங்க மூணு பேரையும் நிறைய இடங்களில் சேர்ந்து பார்க்கலாம்.

அப்ப பழகிய சிவகுமார் இன்னும் நிறம் மாறாமல் அதே பிரியத்தோடு பழகுகிறார். என்னை ஒரு நிகழ்ச்சிக்கு நடுவராக அமர வைத்து சந்தோஷப்படுத்தினார்.
சென்னையின் கலாசார அடையாளமான கடற்கரையில் இருக்கும் உழைப்பாளர் சிலையின் மாடலாக நான் இருந்திருக்கிறேன்! நாங்கள் நட்பு சூழ பேசிக்கொண்டிருப்போம். அப்பொழுது பக்கத்தில் இருக்கிற தன் பங்களாவிற்கு ராய் செளத்ரி எங்களைப் பார்த்தபடியே செல்வார்.

திரும்பித் திரும்பிப் பார்த்து எங்களைக் கூர்ந்து கவனிப்பார். ஒரு நாள் நின்று ஒருவரை அழைத்தார். திடுக்கிட்டு எழுந்து நாங்கள் அனைவரும் அவருடன் செல்ல முயல, அவர் அழைத்தது என்னைத்தான் என்பதை சுட்டிய விரல் காட்டியது.

‘நீ என் படைப்பு ஒன்றிற்கு மாதிரியாக இருக்கவேண்டும். அதற்கான நேரம் ஒதுக்கித் தந்து, உதவவேண்டும்...’ என்றார். எனக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. பலவிதங்களில் என்னை நிற்கச்சொல்லி வரைந்தார். கொஞ்ச காலம் கழித்துப் பார்த்தால் அதுவே சிற்பமாகி சென்னைக்கே ஓர் அடையாளமாக அமைந்துவிட்டது!

அன்றிருந்த பெரும் தழுதழுப்பு, நிறைவை இப்போது வார்த்தைகளில் கொண்டு வருவது கடினம். இன்னும் அந்தக் கனவிலிருந்து என்னால் வெளியேறிவிட முடியவில்லை...’’ நெகிழும் ராமு, தன் ஓவியத்தில் மணியம், கோபுலுவின் பாதிப்பு இருக்கிறது என்கிறார்.

‘‘அவர்களை மனதில் ஒரு பெரும் இடத்தில் வைத்திருக்கிறேன். மணியம் அவர்கள் உடல் பலவீனமாக இருந்தபோது அவரைப்போய்ப் பார்ப்பேன். அவரது ஓவியங்களில் நான் லயித்துப்போய்க் கிடப்பேன். யாரும் அவரைப் போல் வரைய முடியாது. அவரது கோடுகளும், வீச்சும் அபாரமானது. அப்படி ஒரு நாள் போயிருந்த போது, ‘ராமு... எனக்கு உடம்பு தாளலை. இந்த ஓவியத்தை முக்கால் பாகம் முடித்துவிட்டேன். கால்பாகத்தைத்தான் முடிக்கணும். முடித்துத் தருவாயா?’ என்றார்.

எனக்கு பதறிவிட்டது. ‘அய்யா, நீங்கள் எவ்வளவு சீனியர். உங்கள் ஓவியத்தை நான் முடிப்பதா?’ என்றேன். ‘இல்லை ராமு, உன்னால் இது முடியும்...’ என்றார். அவர் ஆசீர்வாதமோ, என்னவோ, அந்த ஓவியம் நல்ல வண்ணம் நிறைவடைந்தது.

அப்போது சிறு வயதாக அங்கிருப்பார் மணியம் செல்வன். ‘எந்தச் சந்தேகம் வேண்டுமானாலும் கேட்டுக்கோ. ராமு சொல்லித் தருவார்’னு அவரிடம் சொல்வார். அதுபோல எந்தச் சந்தேகம் என்றாலும் ஒரு சைக்கிளை எடுத்துக் கொண்டு என்னைத் தேடி வருவார் ம.செ. எவ்வளவு வேலையிருந்தாலும் ஒதுக்கி வைத்துவிட்டு அந்தச் சிறு பையனுக்கு சந்தேகங்களை நிவர்த்தி செய்வேன்.

முதலில் நான் வரைந்தது ‘குமுத’த்தில்தான். எனக்குப் பேராதரவு அளித்தார் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அவரை மாதிரி எளிமையான ஆசிரியரை நான் பார்த்ததேயில்லை. இத்தனைக்கும் தனவான். பெரும் செல்வக்குடும்பத்தில் பிறந்தவர். அவரிடம் எங்கே தேடினாலும் அதன் அடையாளம் தெரியாது.

ஒரு நாள் புரசைவாக்கம் செல்லும் பஸ்ஸில் ஏறினேன். உட்கார இருக்கை தேடிய போது ஒரு குரல், ‘இங்கே வரலாமே ராமு. இடம் இருக்கிறது’ எனக் கேட்டது. பார்த்தால் எஸ்.ஏ.பி!

‘சார்... நீங்கள்... பஸ்ஸில்...’ எனத் துண்டு துண்டாகப் பேசினேன். ‘மக்களோட பழகணும் சார். அப்பதான் எதுவும் தெரியும். புரியும்...’ என்றார். இறங்கி அவர் பின்னால் நடக்க முயன்றேன். அவர் எனக்கும் சேர்த்து வெயிலுக்குக் குடை பிடிக்கிறார்! பெரும் மதியாளர்கள் இப்படித்தான் பிறக்கிறார்கள். தமிழ்வாணனும் எனக்கு வாய்ப்புகள் ஏராளம் அளித்தார்.

‘என்னய்யா, என்னை ஹீரோவாகப் போட்டு யாரும் படம் எடுக்க மாட்டேங்கிறாங்க...’ என்று நகைச்சுவையாகப் பேசுவார். நான் அவரையே ஹீரோவாக்கித் துப்பறியும் கதைகளை  ‘கல்கண்டி’ல் வரைந்தேன். அவருக்கு மகிழ்ச்சி...’’ என்று சொல்லும் ராமு, தன் ஆட்சிக்கால வளர்ச்சித் திட்டங்கள் குறித்து படம் வரைய கலைஞர் நிறைய வாய்ப்பளித்ததாகக் குறிப்பிடுகிறார்.

‘‘அவருக்கு மிகவும் பிடித்த படங்கள் அவை. ‘உங்கள் படங்கள் சரியாக போய்ச் சேர்ந்திருச்சுயா...’ என்று மகிழ்ச்சியோடு சொல்வார். ‘ரோமாபுரிப் பாண்டியன்’ கதைக்கான படக்குறிப்புகளை அவர் கைப்பட எழுதி, சிறு படமும் வரைந்து தருவார். அந்தக் காகிதங்களைச் சேமிப்பில் வைத்திருக்கிறேன்.

சோ அவர்கள் எனக்கு மிகவும் மதிப்பளித்தார். கருத்துப் படங்கள், கேளிக்கைச் சித்திரங்கள் வரை எனக்கு சுதந்திரமளித்தார்.
இப்போது என் ஓவியத்தை மக்களிடம் பகிர்ந்துகொள்ள தீர்மானித்திருக்கிறேன். ‘ராமு... ஓவியக்கலை’ என்ற பெயரில் தமிழகம் ஓவியம் பயில உதவப் போகிறேன். நம்மிடம் இருப்பதை மக்களுக்கு பகிரும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவேது..?!

என் மனைவி பாலசரஸ்வதி எனக்கு துணை நிற்கிறாள். என் மகன் சூர்யகுமார், மகள் கீதாலட்சுமி, மருமகன் வருண்ராஜ், பேரன் நரேன் கார்த்திக் எனக்கு இன்முகம் தருகிறார்கள். வீடு சந்தோஷமாக இருந்தால்தான் எதுவும் சாத்தியம்.

என் பேரன் போட்டியாக சிறு மேஜை தயார் செய்து வரைய ஆரம்பிக்கிறான்! ‘உனக்கு எதாவது சந்தேகம் வந்தால் தயங்காமல் கேளு தாத்தா’ என ரகளையாகப் பேசுகிறான்!எனக்கு பெருவிருப்பங்கள் கிடையாது. எவ்வளவோ மக்கள் என்னை ஞாபகத்தில் நிறுத்தியிருக்கிறார்கள். அதற்கே நான் சந்தோஷப்பட வேண்டும்!’’ ராமுவின் வார்த்தைகளில் அவ்வளவு நிறைவு!                       

நா.கதிர்வேலன்

ஆ.வின்சென்ட் பால்