ஆப்பிரிக்க காடுகளில் படம் எடுக்கும் கோவை இளைஞர்!



‘‘எந்தச் சூழலிலும் விலங்குகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றல் உடையவை...’’ கண்கள் விரிய பரவசத்துடன் பேச ஆரம்பிக்கிறார் கோவையைச் சேர்ந்த கானுயிர் புகைப்படக் கலைஞரான சரவணன் சுந்தரம்.

‘‘வனவிலங்குகளையும் அவற்றின் வாழ்வியலையும் பதிவு செய்யறதுக்கு முன்னாடி இன்ஷூரன்ஸ் துறைல வேலைப் பார்த்தேன். அடிப்படைல காடு, மலைகள்ல சுற்றுலா செல்லப் பிடிக்கும். அங்கிருக்கும் பறவைகளையும் விலங்குகளையும் கண்கொட்டாம ரசிப்பேன்.

இப்படி அமர்ந்து விலங்குகளை சும்மா பார்த்துகிட்டே இருக்கறது பிடிச்சதால ராசிபுரம் பக்கத்துல இருந்த எங்க தோட்டத்துல வான்கோழி, வாத்து எல்லாம் வளர்த்தேன். ஒருமுறை இன்ஷூரன்ஸ்ல வேலைபார்த்த நேரத்துல பயிற்சிக்காக முதுமலை பக்கத்துல இருக்கிற மசினகுடிக்கு போக வேண்டி இருந்தது. அப்ப டிஜிட்டல் கேமரா ஒண்ணு வைச்சிருந்தேன். எதுக்கும் இருக்கட்டும்னு அதையும் கொண்டு போனேன். அங்க இரண்டு புலிகள் ஒண்ணா இருந்ததைப் பார்த்து படம் பிடிச்சேன்.

அந்த போட்டோவை பார்த்தப்பதான் நாம ஏன் புகைப்படக் கலைஞரா மாறக் கூடாதுனு தோணிச்சு.அவ்வளவுதான். பந்திப்பூர் வனப்பகுதிகளுக்கு ரெகுலரா போக ஆரம்பிச்சேன். நாலு குட்டிகளோடு இருக்கும் புலியை அங்கதான் பார்த்தேன். அதை ஒண்ணா படம் எடுக்க ஆசை. ஆனா, அப்ப வாய்ப்பு அமையலை. அதுக்காக மனம் தளரலை. அடுத்த வருஷம் திரும்பவும் போனேன்.

எதிர்பார்த்த மாதிரியே நாலு குட்டிகளும் தன் அம்மாவோடு இருந்தது! உடனே அதை க்ளிக்கி என் முகநூல் பக்கத்துல பதிவிட்டேன். இதன் வழியா ஏராளமான நண்பர்கள் கிடைச்சாங்க. சட்டப்படிப்பை முடிக்காத நான் முழுநேர தொழில்முறை போட்டோகிராஃபரா 2010ல மாறினேன்...’’ புன்னகைக்கும் சரவணன் சுந்தரம், கானுயிர் புகைப்படம் எடுக்கும் நுணுக்கங்களை தன் நண்பர்கள்தான் கற்றுத் தந்தனர் என்கிறார்.

‘‘2010ல இருந்து இப்ப வரை தனியாதான் காடுகளுக்குப் போறேன். ஆனா, 2011ல் இருந்து ஆர்வம் உள்ளவர்களுக்கு போட்டோகிராஃபி டூர் ஏற்பாடு செய்து காடுகளுக்கு அனுப்பி வைக்கறேன். இதுக்கு கட்டணம் உண்டு. இந்திய வனங்கள்ல படம் எடுப்பதற்கான சூழலும் வசதியும் இருக்கு.

என்னைக் கவர்ந்த போட்டோகிராஃபர் டி.என்.ஏ.பெருமாள் சார். அதேமாதிரி தொழில்நுட்பம் சார்ந்த உயர்தர கேமராக்களை விட துறை சார்ந்த அறிவுதான் கானுயிர் புகைப்படக் கலைக்கு முக்கியம்.

இப்ப பெருமாள் சாரையே எடுத்துப்போம். அவர் காலத்துல ஃபிலிம் போட்டு படம் எடுக்கற கேமராதான் பயன்பாட்டுல இருந்தது. வனவிலங்கு புகைப்படக் கலைஞர்களும் அப்ப விரல்விட்டு எண்ணக் கூடிய அளவுலதான் இருந்தாங்க. ஒவ்வொரு கேமராவுக்கும் ஒவ்வொரு லிமிட் இருந்த காலம் அது. இந்தக் குறைகளை எல்லாம் தாண்டிதான் அவ்வளவு நல்ல புகைப்படங்களை பெருமாள் சார் எடுத்தார்.

இன்னைக்கு டிஜிட்டல் கேமரா வந்த பிறகு திறமையான புகைப்படக் கலைஞர்கள் நிறைய பேர் வெளிச்சத்துக்கு வந்திருக்காங்க. அதையும் நாம ஏத்துகிட்டுதான் ஆகணும்...’’ என்று சொல்லும் சரவணன் சுந்தரம், இயற்கையை, அதைச் சார்ந்த வன உயிரினங்களைப் பேணிப் பாதுகாப்பதில் தன் பங்களிப்பும் இருப்பதாக அடக்கத்துடன் சொல்கிறார்.

‘‘எப்ப காடுகளுக்கு போட்டோ எடுக்கப் போனாலும் அங்கிருக்கும் வனத்துறை ஊழியர்களுக்கு ஆடைகள், காலணிகள் வாங்கித் தருவேன். வறட்சிக் காலங்கள்ல உணவு, தண்ணீர் தேடி ஏராளமான வனவிலங்குகள் மனிதர்கள் வசிக்கிற குடியிருப்புக்கு வருது. இதைத் தவிர்க்க அங்கங்க காடுகளுக்குள்ள தொட்டிகள் அமைச்சு தண்ணீர் வசதி ஏற்படுத்தறேன். இதையெல்லாம் தனியா நான் செய்யலை. முகநூல் வழியே பலர் உதவறாங்க. நண்பர்கள் தோள் கொடுக்கறாங்க.

இந்த எட்டாண்டுகள்ல மறக்க முடியாத பல சம்பவங்களை சந்திச்சிருக்கேன். ஒவ்வொரு முறையும் நான் எடுக்கற படங்கள்தான் எனக்குப் போட்டியே!
மேற்கு வங்காளத்துல இருக்கிற சதுப்பு நிலக் காடுகளான சுந்தர்பன் வனப்பகுதி முழுக்க தண்ணீரால சூழப்பட்டிருக்கும். உயரம் குறைவான மரங்கள்தான் அங்க இருக்கும். புலி மாதிரியான விலங்குகளை இங்க படம் பிடிக்கறது சவாலான விஷயம். ஏன்னா இயல்பாவே புலிகள் நல்லா நீந்தும். 200 அடி ஏரியைக் கூட சுலபமா கடந்துடும். மூர்க்கத்தோடு தாக்கும் குணமும் புலிக்கு உண்டு.

அப்படிப்பட்ட காட்டுல நான்கு புலிகளை தனித்தனியா பார்த்தேன்! அதுல இரண்டு புலிகளை உயிரைக் கைல பிடிச்சுட்டு படம் பிடிச்சேன்!

மீன்கொத்திப் பறவைனு சாதாரணமா சொல்லிடறோம். ஆனா, அதுலயே பல வகைகள் இருக்கு. அதுல ஒண்ணு Albino Kingfisher. ரொம்ப அரிய வகை. இதனோட உடல் முழுக்க வெள்ளையா இருக்கும். ஊட்டச்சத்து குறைபாட்டால வரும் பாதிப்பு. இந்தப் பறவையையும் நான் காத்திருந்து படம் பிடிச்சேன்.

ஆப்ரிக்க காடுகள்லயும் மறக்க முடியாத பல அனுபவங்கள் இருக்கு. சரங்கட்டி - மசாய்மாரா இடைல மாடும் மானும் சேர்ந்த கலவை மாதிரி ஒரு விலங்கு மாரா நதியைக் கடந்து போகும். இப்படி கடக்கறப்ப முதலைங்க அவற்றை இழுத்துட்டுப் போயிடும். பிணமா ஆத்துல மிதக்கற இந்த விலங்கை வல்லூறுகள் கொத்திச் சாப்பிடும்.

இக்காட்சியைப் படம் பிடிக்க பொறுமை அவசியம். சாப்பிடாம, தூங்காம காத்திருந்து இதை போட்டோ எடுத்தேன். அப்ப சிறுத்தையும் கூட சேர்ந்து வேட்டையாடின ஒரு காட்சி கிடைச்சது. உடனே க்ளிக்கிட்டேன்! பொதுவா நூறு நாட்கள் காத்திருந்தாதான் ஏதாவது ஒரு நாள்ல நாம் எதிர்பார்க்காத சம்பவம் நடக்கும். அந்த தருணத்தை சரியா பதிவு பண்றதுதான் சவால்.

சிங்கம், புலி, கரடினு எந்த விலங்கா இருந்தாலும் அவை இரண்டு இரண்டா இருப்பது அபூர்வம். பறவை பறக்கிற நொடியை சிறை பிடிக்கறது அவ்வளவு சுலபமில்ல. கும்மிருட்டுல போட்டோ எடுக்க திறமையும் கற்பனை வளமும் தேவை.

ஷட்டர் ஸ்பீட், கேமரா செட்டிங்ஸ், கேமரா பொசிஷன் எல்லாமே அவசியம்; முக்கியம். மைக்ரோ நொடில கேமரா பொசிஷனை மாத்தணும். இதெல்லாம் சரியா இருந்தாதான் படத்துல ஷார்ப்னஸ் கிடைக்கும்...’’ உற்சாகத்துடன் சொல்லும் சரவணன் சுந்தரம், குடும்பம் தனக்குப் பக்கபலமாக இருப்பதாக நெகிழ்கிறார்.

‘‘ஆரம்பத்துல என் மனைவி விஜயராணியும் மகள்கள் சவிதா, சஞ்சிதாவும் கானுயிர் புகைப்படக்கலைஞனா நான் மாறுவதை விரும்பலை. காடுகளுக்கு நான் போறப்ப பிரிய முடியாம தவிச்சாங்க. ஆனா, போகப் போக என் ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் பார்த்து எனக்குத் தோள் கொடுக்கத் தொடங்கினாங்க. இப்ப என் பலமே அவங்கதான்!’’ கசிபவர், காடுகள் சட்டப்படியாக இப்போது அழிக்கப்பட்டு வருவதை எண்ணி வருத்தப்
படுகிறார்.

‘‘மகாராஷ்டிராவுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் - 7 காட்டுக்கு நடுவேதான் போகுது. வனவிலங்கு ஆர்வலர்கள் கேஸ் போட்டும், மக்கள் வசதிக்காக, வனப்பகுதிகள்ல குடியிருப்புகளை உருவாக்கறாங்க. இதெல்லாம் தவிர்க்கணும். காடுகளை ரசிக்கவும் படம் பிடிக்கச் செல்பவர்களும் இரவுப் பயணத்தை தவிர்க்கணும். அதிக சத்தம் எழுப்பாம போறது நல்லது. சாலையோரம் நிற்கும் விலங்குகளுக்கு உணவு கொடுக்கக் கூடாது.

ஆர்வக்கோளாறுல இப்படி செய்யறதாலதான் குரங்குகள் காடுகளுக்குள்ள போகாம இருக்கு. சத்தியமங்கலம் வனப்பகுதில இருக்கிற குரங்குகள்ல பல கை, கால்கள் இல்லாம இருக்க மனிதனோட இந்தத் தவறுதான் காரணம்...’’ என்கிறார் சரவணன் சுந்தரம்.    
                              
பாலு விஜயன்