இந்தியாவில் மீண்டும் தொழுநோய்! ஷாக் ரிப்போர்ட்



‘‘தொழுநோயை முற்றிலுமாக ஒழித்துவிட்டோம்...’’ என்று கெத்தாக 2005ல் அறிக்கை வெளியிட்டு உலக நாடுகளின் பாராட்டுகளை அள்ளியது இந்தியா.
‘‘இது உண்மையல்ல; பெரும் ஏமாற்று வேலை...’’ என அண்மையில் வெளியாகும் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.‘‘இந்தியாவில் 2017ல் மட்டுமே சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் புதிதாக தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்...’’ என்று அதிர்ச்சியளிக்கிறது இந்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய தொழுநோய் பிரிவின் சமீபத்திய ஆய்வு.

‘‘உலகில் புதிதாக தொழுநோயால் பாதிக்கப்படுபவர்களில் 60% பேர் இந்தியர்கள்...’’ என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆண்டறிக்கை பீதியைக் கிளப்புகிறது.‘மிக்கோபாக்டீரியம் லெப்ரே’ எனும் பாக்டீரியாதான் தொழுநோய்க்கு மூல காரணம்.

 இந்த பாக்டீரியா தசை வழியாக ஊடுருவி நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும். இதனால் கை, கால்களில் சொரணையின்மை ஏற்பட்டு நாளடைவில் கையும் கால்களும் ஊனமடையும். இந்நோய் உள்ள ஒருவர் கவனக்குறைவாக இருந்தால் மற்றவர்களையும் தொற்றக்கூடிய அபாயம் உள்ளது.

ஒரு காலத்தில் தொழுநோயை கணக்கிடவும், சிகிச்சையளிக்கவும் இந்தியா முழுவதும் தனிப்பட்ட அரசு மருத்துவ அலுவலர்கள் சூறாவளியாக சுழன்று வேலை செய்துகொண்டிருந்தார்கள்.

ஆனால், 2005ல் இந்தியா இந்த நோயை ஒழித்துக்கட்டியதாக தம்பட்டம் அடித்தபோது அந்த அலுவலர்கள் எல்லாம் மற்ற மருத்துவத்துறைக்கு மாற்றப்பட்டனர். இதனால் இந்தியாவில் வருடம் தோறும் உருவாகக்கூடிய புதிய தொழுநோயாளிகள் பற்றிய கணக்கீட்டைக் கூட அரசாங்கத்தால் வெளியிட முடியவில்லை.

தொழுநோய் குறைவாக இருந்த இடங்கள் கூட இன்று அதிக தொழுநோய் உள்ள பகுதிகளாக மாறிவிட்டன. உதாரணமாக தில்லி, சண்டிகர், ஒடிசா, மேற்குவங்காளத்தைச் சொல்லலாம். பத்து வருடங்களுக்கு முன்பு கேரளாவில் தொழுநோயாளிகளின் எண்ணிக்கை மிகக்குறைவு. இன்று வடநாட்டுத் தொழிலாளிகள் வேலைக்காக கேரளாவில் தஞ்சமடைவதால் அங்கேயும் தொழுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தவிர, தொழுநோய் குறித்து நம் சமூகத்தில் மூடநம்பிக்கைகளும் பெருமளவில் உள்ளன. குறிப்பாக தொழுநோயாளிகள் குறித்த தீண்டாமை நம் இந்திய சட்டங்களிலேயே சுமார் 119 இடங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது. திருமணம், வேலைவாய்ப்பு, விவாகரத்து என இந்த தீண்டாமை விரிந்திருக்கிறது.

சமீபத்தில் இந்தச் சட்டங்களில் இந்திய அரசு சில சீர்திருத்தங்களைச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒருவருக்கு தொழுநோய் இருக்கிறதா என்று கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினமானதுதான். முதலில் உடலின் சில பாகங்களில் திட்டு போன்ற ஒரு அறிகுறி தோன்றும். இது இருந்தாலே மருத்துவரைப் பார்த்து சிகிச்சை பெற வேண்டும்.

ஆரம்ப நிலை என்றால் முற்றிலுமாக நோயைக் குணமாக்கலாம். இதற்கான மருத்துவத்தையும் அரசு இலவசமாக வழங்கி வருகிறது. இந்த நோய் குறித்து கணக்கீடு செய்வதும், அதற்கு சரியான சிகிச்சை அளித்து குணப்படுத்துவதும் அரசின் கடமை என்றாலும் தனிப்பட்ட ரீதியில் ஒவ்வொருவரும் இந்த நோய்க்கான அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகுவது நலம்.

‘‘கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் தொழுநோயின் தாக்கம் அதிகரித்திருப்பதாக செய்திகள் சொல்கின்றன. அதிலும் இந்த நோய் பெண்கள், குழந்தைகளைத்தான் இன்று அதிகமாகத் தாக்குகிறது. இதை சில தனியார் ஆய்வாளர்கள்தான் தகுந்த புள்ளி விவரங்களுடன் சுட்டிக்காட்டுகிறார்கள்.

பெருவெள்ளத்தின்போது சென்னைவாசிகள் சிலருக்கு தொழுநோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தார்கள். ஆனால், அதற்குப் பிறகு எந்த தகவலும் பெரிதாக வெளிவரவில்லை. இதில் ஏதோ ரகசியம் காக்கிறார்களோ என்று தோன்றுகிறது.

தொழுநோய் குறித்த விழிப்புணர்வு இல்லாமை, சரியான சிகிச்சையின்மை, அரசின் மெத்தனமான போக்கு, சர்வே எடுக்காதது போன்றவைதான் தமிழகத்தில் தொழுநோய் அதிகரிக்க முக்கிய காரணங்கள். இன்று தொழுநோயைக் குணப்படுத்த நவீன மருந்துகள் எவ்வளவோ வந்துவிட்டன. காசநோய், டைபாய்டு போன்ற நோய்களுக்குக் கொடுக்கக்கூடிய ஆன்டிபயாட்டிக் மாத்திரை மருந்துகள்கூட தொழுநோயைக் குணப்படுத்துகிறது. அந்தளவுக்கு மருத்துவம் முன்னேறிவிட்டது. தொழுநோயால் உடல் ஊனமானவர்களைக்கூட குணமாக்கக்கூடிய மருத்துவம் இருக்கிறது.

ஆனால், தொழுநோய்க்கான அரசு சுகாதாரத் துறை அலுவலர்கள் வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதால் தொழுநோயின் தாக்கம் கொஞ்சம் கூடுதலாகவே உள்ளது. அரசும் தனியார் அமைப்புகளும் தனிக்கவனம் எடுத்து செயல்படும்போதுதான் முழுவதுமாக இந்தியாவில் இருந்து தொழுநோயை அப்புறப்படுத்தமுடியும்...’’ என்றார் மருத்துவர் ரவீந்திரநாத்.

டி.ரஞ்சித்