சர்வதேச படத்தை இயக்கும் தமிழர்!



உலக அரங்கில் நம் தமிழ் சினிமா பாராட்டுகளை குவிக்கத் தொடங்கிவிட்ட நிலையில் அடுத்த கட்டம் என்ன..? இங்கிருக்கும் ஓர் இயக்குநர் உலக சினிமா உருவாக்கத்தில் இடம்பிடிப்பதுதானே!அதைத்தான் ஆறுமுகம் இளந்திரையன் என்ற தமிழர் செய்து வருகிறார்!

‘Aiyai: Wrathful Soul’ என்னும் சர்வதேச ஹாரர் த்ரில்லர் படத்தை இவர் இயக்கி வருகிறார். ஆனால், இந்தியாவில் மட்டுமல்ல; தமிழகத்திலும் இவரை அதிகம் தெரியவில்லை என்பதுதான் சோகம்.  ஆஸ்திரேலிய ஆங்கிலத்துக்கு இடையில் சுத்தமாக அதுவும் சரளமாக தமிழில் பேசுகிறார் ஆறுமுகம் இளந்திரையன். ‘‘சினிமாதான் எனக்குத் தெரிஞ்ச மொழி. அதுதான் என் உலகம். சின்ன வயசுல இருந்தே தேடித் தேடி படங்கள் பார்ப்பேன். படிச்சது பிபிஏ அக்கவுண்டன்zசி. ஆனாலும் சினிமா சார்ந்து எல்லாத்தையும் கத்துக்கிட்டேன்; கத்துக்கிட்டும் இருக்கேன்!

இந்தியாவுல சினிமா மேக்கிங்கான டிப்ளமா, ஆஸ்திரேலிய ஃபிலிம் டெலிவிஷன் (AFT), ‘Acting For Life France’, இப்படி என் படிப்பும் அதன் வழியிலேயே வந்துச்சு. கடந்த பத்து வருடங்களா இந்திய மற்றும் உலகப் படங்கள் பலவற்றில் வேலை செய்திருக்கேன்...’’ என்று சொல்லும் ஆறுமுகம் இளந்திரையன், இந்த அனுபவம் வழியாகவே தனக்கு ‘GVKM Elephant Pictures மற்றும் Aiyai பிரைவேட் லிமிடெட்’ என்னும் தயாரிப்பு நிறுவனத்தின் அறிமுகம் கிடைத்தது என்கிறார்.

‘‘சைக்கலாஜிக்கல் ஹாரர் படத்தை இப்படித்தான் இயக்க ஆரம்பிச்சேன். ஓர் இளைஞனுக்குள் நடக்கும் அமானுஷ்ய தொந்தரவுகள் எப்படியெல்லாம் அவனை செயல்பட வைக்குது... இதனோட முடிவு என்ன என்பதுதான் ‘Aiyai: Wrathful Soul’ படம்.சின்ன வயசுல இருந்தே கதை கேட்கவும் சொல்லவும் பிடிக்கும். நான் சொல்ற கதையைக் கேட்டு மத்தவங்க அசந்து போய் உட்காரணும்னு நினைப்பேன். இந்தப் படத்துல அது ஒர்க் அவுட் ஆகியிருக்குனு நம்பறேன்...’’ நம்பிக்கையுடன் சொல்லும் ஆறுமுகத்துக்கு இந்தியப் படங்களையும் இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

‘‘எல்லா கலைஞனுக்குமே தன் சொந்த மண்ணுல படம் எடுக்கணும்னு கனவு இருக்கும். இதுல நான் மட்டும் விதிவிலக்கு இல்லையே... ஒரு கதை ரெடி பண்ணியிருக்கேன். நல்லதே நடக்கும்னு நம்புவோம்...’’ புன்னகைக்கும் ஆறுமுகம் இப்போது ‘Hantu’ என்னும் கேங்ஸ்டர் படம், ‘Apsu’ என்னும் வார் கிரைம், ‘NR’ என்கிற திரில்லர் டிராமா ஆகியவற்றை அடுத்தடுத்து இயக்கப் போகிறார். இதில் ‘NR’ மும்பையில் படமாக்கப்பட உள்ளது!  

ஷாலினி நியூட்டன்