இலங்கை அரசியல் : கொந்தளிக்கும் தீவுயாழ்ப்பாணத்திலிருந்து ஸ்ரீவத்ஸன்

கடந்த பல மாதங்களாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களும் ஒருவர் மீது ஒருவர் அதிருப்தி கொண்டிருந்தார்கள். அறிக்கைகள், குற்றச்சாட்டுகள் வழியாக இருவரும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். நான்கு சுவர்களுக்குள் நடந்த இந்த முறுகல் இப்போது அம்பலத்துக்கு வந்திருக்கிறது. ஜனாதிபதியிடமிருந்து கடந்த 26ம் தேதி மாலையளவில் வெளியான அறிவித்தல் பலரும் எதிர்பாராதது. அப்போது பிரதமராக இருந்த ரணிலை பதவியிலிருந்து விலக்குவதாகவும், முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷேவை புதிய பிரதமராக நியமிப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது.

தமிழர்களும், முஸ்லிம்களும் பெரும்பான்மையாக வாழும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தவிர இதர பகுதிகளில் இந்த மாற்றம் பட்டாசு வெடித்து உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. அரசியலில் நிரந்தர நண்பர்களோ, எதிரிகளோ கிடையாது எனக் கூறப்பட்டாலும்கூட ஜனாதிபதி மைத்திரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷேவை இவ்வளவு சீக்கிரமாக அரவணைத்துக் கொள்வார் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். சென்ற ஜனாதிபதி தேர்தலின் முடிவு வெளியாவதற்கு முந்திய கடைசித் தருணங்களில் தானும் தன் குடும்பமும் உயிர் பயத்தால் தலைமறைவாக இருந்தோம் என்றும், தேர்தலில், தான் தோற்றிருந்தால் தன் உயிர் தப்பியிருக்காது என்று அவர் சொன்னதையும் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்!

ஆனால், ஒரு குறுகிய காலத்துக்குள் காட்சிகள் மாறி விட்டன. மைத்திரிக்கும் ரணிலுக்கும் இடையிலான இந்த முறுகல் நிலைக்கு எவை காரணங்களாக இருந்திருக்கலாம்? தன் நடவடிக்கைகளுக்கான காரணங்களை மைத்திரி இவ்வாறு முன்வைக்கிறார். நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்துக்குத் தள்ளியமை, நாட்டின் பொருளாதார வளங்களைப் பிற நாடுகள் சூறையாட இடமளித்தவை, பாரிய ஊழல் நடவடிக்கைக்குத் துணை போனமையும், மூடி மறைக்க முயன்றமையும். எல்லாவற்றுக்கும் மேலாக, தன்னைக் கொல்ல சதி செய்தமை, விட்டுக் கொடுக்காத முரட்டு சுபாவம் என ரணில் மீதான குற்றப் பத்திரிகை நீண்டு செல்கிறது.

‘ஜனாதிபதி சிறு பிள்ளைகள் கூட நம்ப முடியாத கருத்துகளை இன்று வெளியிடுகிறார். வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளைக் காணக் கூடியதாக இருக்கவில்லை...’ என பதிலுக்கு ரணில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒரேயடியாக நிராகரிக்கிறார். இலங்கையின் அரசியலமைப்பு சட்டம் என்ன கூறுகின்றது? இலங்கையில் இப்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு 19வது திருத்தத்தின்படி ஜனாதிபதி, தான் நினைத்த போது ஒரு பிரதமரைப் பதவி நீக்கம் செய்ய முடியாது.

ஒரு பிரதமர் பதவியிழப்பது என்றால் தன் சுய விருப்பத்துடன் ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்திருக்க வேண்டும். அல்லது அரசுக்கு எதிராக வரும் நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்பில் தோல்வியடைந்திருக்க வேண்டும். இப்படி எந்த வழிமுறைகளும் பின்பற்றப்படாமலேயே இப்போது ரணில் பதவி நீக்கம் செய்யப்பட்டு மஹிந்த ராஜபக்‌ஷே பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கிறார். உண்மையிலேயே இந்த ஜனநாயகப் படுகொலைக்கு எதிராக இன, மத பேதமின்றி மக்கள் கிளர்ந்தெழுந்திருக்க வேண்டும். ஆனால், அப்படியெல்லாம் நடக்கவில்லை.

பெரும்பான்மையான மக்கள் மஹிந்தவின் மீள் வரவால் உற்சாகம் பெற்றிருக்கிறார்கள். சிறுபான்மையின மக்கள் சோர்வும், சலிப்பும் மிக்க ஒரு மனநிலைக்குள் சென்று விட்டார்கள். ‘நடப்பதைப் பார்த்துக் கொண்டிருப்போம்...’ என்ற மனநிலையிலேயே இந்நாட்டின் பெரும்பான்மையான மக்கள் இருப்பதாகத் தோன்றுகிறது. 2015ல் மைத்திரிபால சிரி சேன, ரணில் விக்கிரமசிங்ஹ ஆகியோர் இணைந்து ஆட்சியமைக்க ஆதரவளித்த மக்கள் அனைவருமே ஏமாந்த மனநிலை யிலேயே உள்ளனர் என்றால் அது மிகையில்லை. சர்வாதிகாரம், ஊழல், கொடுங்கோன்மை என்பவற்றுக்கு எதிராகவும் மாற்றாகவுமே இந்த ‘நல்லாட்சிக்கு’ மக்கள் ஆணை வழங்கினார்கள்.

ஆனால், நடந்ததோ வேறு. கொடுத்த வாக்குறுதிகள் காப்பாற்றப்படவில்லை. முன்னைய ஊழல்களை எல்லாம் மிஞ்சிய வகையில் மிகப் பெரிய மத்திய வங்கி ஊழல் ஒன்று இடம் பெற்றது. முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் நிகழ்ந்ததைப் போன்றே இந்த அரசாங்கத்தின் காலத்திலும் முஸ்லிம்கள் மீது திட்டமிடப்பட்ட வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன. பெரிய அபிவிருத்தித் திட்டங்கள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை. குற்றவாளிகள், ஊழல் பேர்வழிகள் தண்டிக்கப்படவில்லை. மாறாக, பாதுகாக்கப்பட்டார்கள். பணத் தட்டுப்பாடு, வாழ்க்கைச் செலவு உயர்வு என சாமானிய மக்கள் சந்தித்த கஷ்டங்கள் ஏராளம்.

ரணிலின் அரசாங்கத்தில் திருப்திப்பட்டுக் கொள்ளக் கூடிய ஒன்றென்றால் அது கருத்துச் சுதந்திரம் மட்டுமே. மஹிந்த ராஜபக்‌ஷே சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் ஒரு வீரபுருஷன். வெற்றி கொண்டான். அவருடைய ஆளுமையின் முன் ரணிலோ, மைத்திரியோ தாக்குப் பிடிக்க எண்ணியிருந்தால் கடந்த மூன்று வருடங்களில் ஏதாவது உருப்படியாக நாட்டில் செய்திருக்க வேண்டும். நாடளாவிய ரீதியில் கடந்த பெப்ரவரியில் நடந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளில் ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலை வெளிப்பட்டது.

ஆளும் கட்சி பின்னடைவைச் சந்திக்க, மஹிந்த ராஜபக்‌ஷே ஏறுமுகத்தில் இருந்தார். இது ஜனாதி பதி சிரிசேனவுக்கு பல சங்கதிகளைப் புரிய வைத்திருக்கும்.  மூழ்கும் கப்பலைக் கைவிட்டு ‘பழைய நண்பனை’ சரணடைவதுதான் தன் எதிர்காலத்துக்குப் பாதுகாப்பானது என்பதை உணர்ந்திருப்பார். மஹிந்தவை அனுசரித்துப் போனால் இரண்டாவது தடவையும் ஜனாதிபதியாகும் வாய்ப்பு கிட்டலாம் என்பதும் அவர் மனக்கணக்காக இருக்கக்கூடும். இன்று தன் அரசியல் இருப்புக்காக ரணில் போராடிக் கொண்டிருக்கிறார். மக்களுக்கு நெருக்கமான ஒரு பிரதமராக அவர் இருந்திருந்தால் வெளிநாட்டுத் தூதுவர்களையும்,

ஊடகங்களையும் தன் இருப்பிடத்துக்கு அழைத்து நிலைமையின் பாரதூரத்தை விளக்கிக் கொண்டிருந்திருக்கத் தேவையில்லை. அது பிந்திச் செய்ய வேண்டியது. மாறாக, மக்களைத் திரட்டிக் கொண்டு வீதியில் இறங்கி நீதிக்கான போராட்டத்தை நிகழ்த்தி யிருக்க வேண்டும். அதற்கான சாத்தியம் இங்கில்லை. சாமானிய மக்களுக்கும் அவருக்குமான திரையும் தூரமும் அத்தகையன. இப்போது நடக்கும் போராட்டத்தில் அரசியலமைப்பு சட்டம், நீதிமன்றத் தீர்ப்பு என்பவற்றின் அடிப்படையில் ரணில் தப்பிப் பிழைத்தாலும் அது தற்காலிக வெற்றியாகவே அமையும்.