லஞ்சம்... லஞ்சம் ஊரெல்லாம் லஞ்சம்!



அதிரவைக்கும் கருத்துக் கணிப்பு

சுதந்திரம் வாங்கிய இத்தனை ஆண்டுகளில் நாம் எதில் எல்லாம் உலக நாடுகளோடு போட்டியிட்டு முன்னணியில் இருக்கிறோம் தெரியுமா? நோயாளிகள் அதிகமாக இருப்பதில், பெண்கள் மீது வன்முறை செலுத்துவதில், குழந்தைகள் இறப்பு விகிதத்தில்... என வெளியில் சொன்னால் மானம் போகும் கறுப்புப் பட்டியல்களில்தான் நாம் முன்னணி வகிக்கிறோம். அந்த வரிசையில் கடந்த பிப்ரவரி மாதம் ‘ட்ரான்ஸ்பரன்சி இண்டர்நேஷன்’ நடத்திய கருத்துக் கணிப்பில் லஞ்ச ஊழல் குறைவான நாடுகள் பட்டியலில் 81வது இடத்தில் இந்தியா இருப்பதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

உலகம் முழுதும் உள்ள 180 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு இது. ஒரே ஆறுதல், நமக்குக் கீழே இன்னும் நூறு நாடுகள் உள்ளன என்பது மட்டும்தான். பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகள் நம்மைவிட மோசம். இலங்கை 91வது இடத்திலும், பங்களாதேஷ் 143வது இடத்திலும், பாகிஸ்தான் 117வது இடத்திலும் இருக்கின்றன. இருப்பதிலேயே சிரியா, தெற்கு சூடான், சோமாலியா ஆகிய நாடுகள்தான் லஞ்ச, ஊழல் தலைவிரித்தாடும் மோசமான நாடுகளாக இருக்கின்றன. வல்லரசு என்று மார்தட்டும் அமெரிக்காவே 16வது வரிசையில்தான் இருக்கிறது.

ஒப்பீட்டளவில் மேற்கு ஐரோப்பிய நாடுகளில்தான் லஞ்ச லாவண்யங்கள் மிகவும் குறைவு என்கிறது இந்த அறிக்கை. நியூசிலாந்து, டென்மார்க், ஃபின்லாந்து ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களை வகிக்கின்றன. நம் நாட்டைப் பொறுத்தவரை உச்சபட்ச லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடும் மாநிலம் எது தெரியுமா? உத்தரப்பிரதேசம்! ரொம்ப மகிழ வேண்டாம். இந்திய அளவில் லஞ்சம் நிறைந்த மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது! பஞ்சாப்புக்கு இரண்டாவது இடம். விரைவில் பஞ்சாப் முதல் இடத்துக்கு முன்னேறும் என்று கவலை காட்டுகிறார்கள் சமூக விஞ்ஞானிகள்.

அதைவிட தமிழகம் முதலிடத்துக்கு வருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன என்றும் சொல்கிறார்கள். பொருளாதார வளர்ச்சியில் இந்திய அளவில் மகாராஷ்ட்ராவுக்கு அடுத்த நிலையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் மாநிலம் நாம் என்பது நிஜமாகவே பெருமைகொள்ள வேண்டிய விஷயம்தான். ஆனால், இதே காரணத்தால்தான் நாம் லஞ்ச, ஊழல் தர வரிசையில் முதல் இடம் பிடிக்க வேகமாய் முன்னேறிக்கொண்டிருக்கிறோம். இது உண்மையாகவே வருந்த வேண்டிய விஷயம். இந்தியா முழுதும் பதினைந்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ட்ரான்ஸ்பரன்சி இண்டர்நேஷனல் இந்தியாவின் சர்வே கடந்த மாதம் நிகழ்த்தப்பட்டது.

இதில் பெரும்பாலான மக்கள் சொன்னது பத்திரப் பதிவின்போது அதிக மான அளவில் லஞ்சம் தர வேண்டியதாக இருக்கிறது என்பதைத்தான். கிட்டத்தட்ட இந்தியா முழுதும் எல்லா மாநிலங்களிலும் பத்திரப்பதிவு செய்யும்போது ஒரு குறிப்பிட்ட தொகையை வெட்டினால்தான் காரியம் சுலபமாய் முடிகிறது. சொந்தமாய் பிடிமண்கூட இல்லை, இதையாவது வாங்கி வைப்போம் என்று நினைப்பவரும் ‘சரி அழுதுதொலைப்போம்’ என்ற மனப்பான்மையில் லஞ்சம் கொடுக்கிறார். ஊரை அடித்து உலையில் போடும் நில மாஃபியாவும் ‘கவனிக்க வேண்டியவங்களை கவனிச்சாத்தான் தொழில் நிம்மதியா ஓடும்’ என்ற மனோபாவத்தில் கொடுக்கிறார்.

பத்திரப் பதிவு அலுவலக ஊழியர்களும் அதிகாரிகளும் கமுக்கமாக இதையெல்லாம் வாங்கி சட்டைப் பைக்குள் விட்டுக்கொள்கிறார்கள். உண்மையில் இந்தப் பணம் சாதாரண ப்யூனில் தொடங்கி மந்திரிகள் வரைக்கும் செல்கிறது என்கிறார்கள். சரி, பத்திரப்பதிவு அலுவலகங்களில் மட்டும்தான் லஞ்சமா, நாங்கள் என்ன சளைத்தவர்களா என்று போட்டியிட்டு லஞ்சம் வாங்குகிறார்கள் ஆர்.டி.ஓ ஆபீஸிலும் வருவாய்த் துறை அலுவலகங்களிலும், போலீஸ் ஸ்டேஷனிலும், வருமான வரி, ஜி.எஸ்.டி வரி அலுவலகங்களிலும்! ஆம்; இங்கெல்லாம் லஞ்சம் அதிக அளவில் தலைவிரித்தாடுகிறது என்கிறார்கள்.

சொல்லப்போனால் இந்தியாவில் முதன்மையாக லஞ்சம் ஆறாகப் பெருகி ஓடும் துறைகள் இவைதான். உத்தரப்பிரதேசத்தில் கருத்துக் கணிப்பில் பங்கேற்ற அறுபது சதவீதம் பேர் அரசு அலுவலகங்களில் வேலை நடப்பதற்காக லஞ்சம் கொடுத்துள்ளோம் என்கிறார்கள். இதில், இருபத்திரண்டு சதவீதம் பேர் பலமுறை திரும்பத் திரும்ப நேரடியாகவும் மறைமுகமாகவும் லஞ்சம் கொடுத்துள்ளார்களாம். எஞ்சியுள்ள முப்பத்தெட்டு சதவீதம் பேர் ஒன்றிரண்டு முறை லஞ்சம் கொடுத்துள்ளார்கள்.

கருத்துக் கணிப்பில் பங்கேற்ற பஞ்சாபிகளில் ஐம்பத்தாறு சதவீதம் பேரும் தமிழர்களில் ஐம்பத்திரண்டு சதவீதம் பேரும் சர்வ சாதாரணமாக லஞ்சம் கொடுத்துள்ளார்களாம். உத்தரப்பிரதேசத்திலும் தமிழகத்திலும் பத்திரப்பதிவுக்காகவும் பஞ்சாப்பில் போலீஸ் ஸ்டேஷன் விவகாரங்களுக்காகவும் அதிக லஞ்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் பொருள் மற்ற இடங்களில் லஞ்சம் இல்லை என்பதல்ல. ஒப்பீட்டளவில் குறைவு என்பதே சரி. சிக்கிம், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஒடிஷா, ஜார்கண்டு, சத்தீஸ்கர், சிக்கிம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், நாகலாந்து ஆகிய மாநிலங்களில் கருத்துக் கணிப்பே நடத்தப்படவில்லையாம்!

தொழில்வளமும் பொருளாதார நடமாட்டமும் நிறைந்த இரு நூற்றுப் பதினைந்து நகரங்களில் மட்டுமே இந்த கருத்துக் கணிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீதியிலும் ஒவ்வொரு குடியிருப்புப் பகுதியிலும் முக்கிய இடங்களிலும் அலுவலகங்களிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று ஆணையிடும் போலீசார் அரசு அலுவலகங்களில் இதைச் செய்வதில்லை. பேருக்கு வாசலில் அல்லது படிக்கட்டில் மட்டும் ஒரு கேமரா இருக்கும். அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது பதிவாகாமல் தடுக்கவே இப்படிச் செய்கிறார்களா என மக்கள் கேட்கிறார்கள்.

போலீஸ் ஸ்டேஷனில் கொடுக்கப்படும் லஞ்ச விகிதம் ஒப்பீட்டளவில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைந்திருக்கிறது. ஆனால், பத்திரப் பதிவு அலுவலகங்களில் லஞ்சம் தருவது அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு முப்பது சதவீதம் காவல்துறைக்கும், இருபத்தேழு சதவீதம் முனிசிபாலிட்டிக்கும், இன்னொரு இருபத்தேழு சதவீதம் பத்திரப் பதிவுக்கும் லஞ்சமாகக் கொடுக்கப்பட்டிருந்தது. இவ்வருடம் கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் இருபத்தைந்து சதவீதம் பேர் காவல்துறைக்கும்,

பதினெட்டு சதவீதம் பேர் முனிசிபாலிட்டிக்கும், முப்பது சதவீதம் பேர் பத்திரப்பதிவுக்கும் லஞ்சம் கொடுத்துள்ளார்களாம். இருபத்திரண்டு சதவீதம் பேர் வேலை முடிந்த பிறகு லஞ்சம் கொடுத்துள்ளார்கள். இவர்கள் கறாரான ஆட்கள்தான். முப்பத்தாறு சதவீதம் பேர் வேலை துரிதமாக நடப்பதற்காக லஞ்சம் கொடுத்துள்ளார்கள். லஞ்சம் கொடுப்பதும் குற்றம் வாங்குவதும் குற்றம் என்பது எல்லாம் ஏட்டளவில்தான் உள்ளது. லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்ற பெருமித வாசகங்களுக்கு இந்த மண்ணில் இடமே இல்லை. அதனால் லஞ்சம்  கொடுத்து நெஞ்சம் தளர்த்து என்றுதான் சொல்ல வேண்டியதாக இருக்கிறது!     
                 
- இளங்கோ கிருஷ்ணன்