Race against Racism!நீங்களும்கூட எங்கேயாவது தீம் பார்க்கில் go-kart ரெய்டு அடித்திருப்பீர்கள். 25 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் ஒரு எட்டு வயது கருப்பினச் சிறுவன், இந்த kart ரேஸ் ஒன்றில் கலந்துகொண்டு ஓட்டியபோது, அந்த நிகழ்வை நடத்திய அமைப்பாளர் சொன்னார். “எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நெருப்பு மாதிரி பறக்கிறான். இந்தப் பையன் உலகின் தலைசிறந்த கார் டிரைவராக வரப்போகிறான்..!” அவர் தீர்க்கதரிசி. கடந்த வாரம் பார்முலா 1 கார் பந்தயத்தில் ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார் மெர்சிடிஸ் அணியைச் சார்ந்த 33 வயது லூயிஸ் ஹாமில்டன்.

1950களில் ஐந்து முறை சாம்பியனான அர்ஜென்டினாவின் மேனுவல் பாங்கியோவின் சாதனையை சமன் செய்திருக்கிறார். இன்னும் இருமுறை சாம்பியன் பட்டத்தை வெல்லும் பட்சத்தில் உலகிலேயே அதிகமுறை பார்முலா 1 சாம்பியனான ஜெர்மனியின் மைக்கேல் ஷூமேக்கரை தொட்டு விடுவார். 2004, 2008, 2014, 2015, 2018 ஆண்டுகளில் ஃபார்முலா 1 சாம்பியனான லூயிஸ்தான், ஃபார்முலா 1 பந்தயங்களில் கலந்துகொண்ட முதல் மற்றும் ஒரே (இன்றைய தேதிவரை) கருப்பின வீரர்! மேற்கிந்தியத் தீவுகளுள் கிரெனடா என்கிற சின்னஞ்சிறிய தீவு, தனி நாடாக இருக்கிறது.

மக்கள் தொகை ஒரு லட்சம்தான். அங்கிருந்துதான் பிழைப்புக்காக லூயிஸ் ஹாமில்டனின் தாத்தா, இங்கிலாந்துக்கு வந்து சேர்ந்தார். அப்பா ஆண்டனி ஹாமில்டன், இங்கிலாந்தைச் சேர்ந்த வெள்ளை இனப் பெண்ணான கேர்மனை காதலித்து கரம் பிடித்தார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் லூயிஸ். வெள்ளை - கருப்பு காம்பினேஷன் என்றாலும் தன்னை கருப்பினத்தவராகவே அடையாளம் காட்டிக் கொள்வதில் பெருமை கொள்கிறவர். லூயிசுக்கு இரண்டு வயதாக இருக்கும்போது கருத்து வேறுபாடு காரணமாக பெற்றோர் பிரிந்து விட்டனர்.

இருப்பினும் அப்பாவின் அரவணைப்பு அவருக்கு இருந்து கொண்டேதான் இருந்தது. ஆறு வயதாக இருக்கும்போது ரிமோட் கண்ட்ரோலில் இயக்கக்கூடிய ஒரு பொம்மைக்காரை பிறந்தநாள் பரிசாக அப்பா கொடுத்தார். இன்றைய பார்முலா 1 சாம்பியன், அந்த பொம்மைக் காரில்தான் டிரைவிங்கின் நுணுக்கங்களை கற்றுக் கொண்டார் என்று சொன்னால் ஆச்சரியமாகத் தான் இருக்கும். சாதனைகளின் அடிநாதமே ஆச்சரியங்கள்தானே?! அந்த ரிமோட் கண்ட்ரோல் காரை மகன் அழகாக ஓட்டுவதைக் கண்டு வியந்த அப்பா ஆண்டனி, ரிமோட் கார்களுக்காக நடத்தப்படும் பந்தயம் ஒன்றில் லூயிஸை கலந்துகொள்ள வைத்தார்.

அந்தப் பந்தயத்திலேயே லூயிஸ்தான் சாம்பியன். அவருடைய போட்டியாளர்கள் அத்தனை பேருமே அவரைவிட பத்து வயதாவது அதிகமானவர்கள் என்பதுதான் இங்கே குறிப்பிடத்தகுந்த செய்தி. மகனின் வெற்றியால் அக மகிழ்ந்த அப்பா, “நீ ஒழுங்காக ஸ்கூலில் படித்தால் உன்னை பெரிய கார் ரேஸ் சாம்பியனாக ஆக்குவேன்...” என்று வாக்குறுதி கொடுத்தார். மேலும், kart ரேஸ்களில் கலந்து கொள்வதற்கு வாகாக ஒரு மினி காரையும் வாங்கிக் கொடுத்தார்.

அதுவரை ரிமோட்டில் கார் ஓட்டிக் கொண்டிருந்த லூயிஸ், முதன்முறையாக நிஜ கார் ஓட்டும் இன்பத்தை அடைந்தார். கார் பந்தயம் மட்டுமின்றி பள்ளியில் ஃபுட்பால் வீரராகவும் பிரபலமானார் லூயிஸ். ஒருவேளை அவர் கார் பந்தயத்துக்குள் பிரபலமாகி இருக்கா விட்டால், இங்கிலாந்து கால்பந்து அணி வீரராக உருவெடுத்திருப்பார். பள்ளி அணிக்காக கிரிக்கெட்டிலும் கலக்கினார். சின்ன வயதிலிருந்தே கராத்தே பயிற்சியும் பெற்றவர். ஆக, ஒட்டுமொத்த விளையாட்டுகளிலும் சகலகலா வல்லவன்!

எட்டு வயதிலிருந்து kart ரேஸ்களில் கலந்துகொள்ள ஆரம்பித்தார். அதுமாதிரி ஒரு டோர்னமென்டின் போது மெக்லாரென் பார்முலா 1 டீமின் உரிமையாளர் ரோன் டென்னிஸை சந்தித்து, ஆட்டோகிராப் கேட்டார்.“சார், என் பெயர் லூயிஸ் ஹாமில்டன். இன்னும் சில ஆண்டுகளில் நான்தான் கார் பந்தயத்தில் பிரிட்டிஷ் சாம்பியனாக இருப்பேன். உங்களுடைய குழுவில் இணைந்து அப்போது கார் ஓட்ட விரும்புகிறேன்!”எட்டு வயது சின்னப் பையனின் ஆர்வக்கோளாறு என்று ஒதுக்கித் தள்ளாமல் புன்னகைத்தவாறே டென்னிஸ், லூயிஸின் ஆட்டோகிராப் புத்தகத்தில் இவ்வாறு எழுதி கையெழுத்திட்டார்.

“ஒன்பது ஆண்டுகள் கழித்து எனக்கு போன் செய். நாம் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம்!”ஒன்பது ஆண்டுகள் எல்லாம் தேவையே படவில்லை. டீன் ஏஜை எட்டுவதற்கு முன்பே பிரிட்டிஷ் பெட்டிங் ரேஸ்களில் லூயிஸ் காட்டிய வேகம், அடுத்த ஐந்து ஆண்டுகளிலேயே மெக்லாரென் குழுவின் பயிற்சி நிகழ்வில் லூயிஸைச் சேர்த்துக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் டென்னிஸை கையெழுத்திட வைத்தது. அந்த ஒப்பந்தத்தில், எதிர்காலத்தில் பார்முலா 1 பந்தயங்களில் மெக்லாரென் சார்பாக லூயிஸ் கலந்துகொள்ள வேண்டும் என்கிற ஷரத்தும் கொண்டிருந்தது.

அவ்வகையில் பார்க்கப் போனால் பார்முலா 1 ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்ட உலகின் மிக இளம் வயது டிரைவர் லூயிஸ் ஹாமில்டன்தான். மெக்லாரென் பயிற்சியில் பெற்ற நுணுக்கங்களோடு படிப்படியாக முன்னேறி தன் பதினைந்தாவது வயதிலேயே ஐரோப்பிய சாம்பியன் என்கிற அந்தஸ்தை கார் பந்தயங்களில் எட்டினார் லூயிஸ். ‘வளரும் சூரியன்’ என்று தலைப்புச் செய்தி எழுதி, இவருடைய வண்ணப்படங்களை இங்கிலாந்து ஊடகங்கள்  பிரசுரித்தன. 2001ல் தன் பதினாறாவது வயதில் அன்றைய தேதியின் கார் பந்தயங்களில் முடிசூடா மன்னனாக விளங்கிய மைக்கேல் ஷூமேக்கரோடு ஒரு பந்தயத்தில் மோதினார்.

இவரது அசராத ஓட்டும் திறனைக் கண்டு அதிசயித்த ஷூமேக்கர், “16 வயதில் இவ்வளவு திறமையான ஒரு டிரைவரை என் வாழ்நாளில் நான் கண்டதே இல்லை. எதிர்காலத்தில் இவன் பார்முலா 1 பந்தயங்களில் கலக்கப் போகிறான்!” என்றார். கார் பந்தயங்களின் கடவுளே சொல்லிவிட்டார் என்கிற ‘கெத்’தோடு உலகெங்கும் இருக்கும் பந்தய டிராக்குகளில் இடைவிடாமல் ஆக்ஸிலேட்டரை மிதித்துக் கொண்டே இருந்தார் லூயிஸ். ஐந்தே ஆண்டுகளில் ஷூமேக்கரின் ஆரூடம் மெய்யானது. 2007ல் தன் 22வது வயதில் பார்முலா 1 பந்தயமான ஸ்பானிஷ் கிராண்ட்பிரிக்ஸில் கலந்துகொண்டார் லூயிஸ்.

அதன் மூலமாக உலக சாம்பியன் போட்டிகளில் கலந்துகொண்டவர்களிலேயே வயதில் இளையவர் என்கிற சாதனையை இன்றுவரை தக்க வைத்திருக்கிறார்.
கடந்த 11 ஆண்டுகளில் ஐந்து முறை முதலிடம், இருமுறை இரண்டாம் இடம், மூன்று முறை நான்காம் இடம், இரண்டு முறை ஐந்தாம் இடம் என்று சமகாலத்தில் உலகின் தலைசிறந்த கார்பந்தய வீரராக பார்முலா 1 போட்டிகளில் கோலோச்சுகிறார் லூயிஸ். பார்முலா 1 பந்தயங்களில் ஒரு கருப்பர் கலந்துகொள்வதா என்று ஐரோப்பிய இனவெறியர்கள் ஆரம்பத்தில் அவரை இழிவுபடுத்தக்கூடிய செயல்களில் ஈடுபட்டனர்.

சிறுவயதிலிருந்தே இனவெறிக் கொடுமையைச் சந்தித்து போராடி வென்றுகொண்டிருந்த லூயிஸ், இதைக் கண்டுகொள்ளவில்லை. சர்வதேச மோட்டார் ஃபெடரேஷன் லூயிஸுக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கியது. ‘Race against Racism’ என்கிற இயக்கத்தை நடத்தி ரசிகர்களை லூயிஸின் பின்னால் அணிவகுக்க வைத்தது. 2007ம் ஆண்டு இங்கிலாந்தை விட்டு வெளியேறி சுவிட்சர்லாந்தில் வசிக்க ஆரம்பித்தார் லூயிஸ். உலகிலேயே அதிகம் பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் ஒருவரான இவர், இங்கிலாந்தின் வரி விதிக்கும் முறைக்கு அஞ்சி நாடு விட்டு நாடு ஓடினார் என்கிற கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தார். இப்போது மொனாக்கோ தேசத்தில் வசிக்கிறார். சுவிட்சர்லாந்தை ஒப்பிடும்போது மொனாக்கோவில் கிட்டத்தட்ட வரியே இல்லை!  

- யுவகிருஷ்ணா
படங்கள் : தமிழ்வாணன்