இங்கே முதல்வரே குற்றவாளி... அவரே நீதிபதி!



ஆதாரங்களை அடுக்குகிறார் ஆர்.எஸ்.பாரதி...

ஆளுங்கட்சியின் வெவ்வேறு துறைகளில் நடக்கும் ஊழல்களைத் தோண்டி எடுத்து வழக்குத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் கதவுகளை விடாமல் தட்டுபவர் திமுகவின் அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி. அண்மையில் குட்கா மற்றும் நெடுஞ்சாலைத்துறை வழக்குகள் சிபிஐ வசம் போனதில் இவர் பங்கு முக்கியமானது. ஆர்ப்பாட்டமான பேச்சில் நம்பிக்கையில்லாதவர்... தன் செயலில் எதிரிக்கு ‘அதிர்ச்சி’ வைத்தியம் தருபவர்... என ஆர்.எஸ்.பாரதி பற்றி சொல்ல நிறைய இருக்கிறது! தொடர்ந்து ஆளுங்கட்சி மீது வழக்குப் போடுகிறீர்கள்... ரகசியமாக ஏதாவது உளவுப் படை வைத்திருக்கிறீர்களா?

எங்களிடம் திறமைசாலிகள் அடங்கிய வழக்கறிஞர்கள் குழுவே உள்ளது. இது தனிப்பட்ட முயற்சி அல்ல. கட்சியின் முயற்சி. 1991ம் வருடம் ஜெயலலிதா அரசாங்கம் வந்தவுடன் இங்கே ஊழல் தலையெடுத்தது. வளர்ப்பு மகன் திருமணம், டான்ஸி நிலம் வாங்கியது... என்று பலவற்றில் ஊழல் விஸ்வரூபமெடுத்தது. ‘ஜெயா பப்ளிகேஷன்ஸ்’ நிறுவனத்திற்காக ஒரு லட்சத்தை முதலீடு செய்கிறார்கள்! 1992ம் வருடத்திலேயே டான்ஸி நிலத்தை மூன்றரை கோடிக்கு வாங்குகிறார்கள். தலைவர் கலைஞர் எதையுமே அறிவியல் ரீதியாக பார்ப்பார்.

ஒருநாள் ‘ஜெயா பப்ளிகேஷன்ஸ் புத்தகமோ, எதுவுமோ வெளியிடவில்லை. அப்புறம் எப்படி பணம் வந்தது? விசாரணை செய்யணும்...’ என்றார். இப்படி ஊழலைத் தோண்டி எடுப்பது அப்போது ஆரம்பித்தது. சண்முகசுந்தரம் உட்பட வழக்கறிஞர்கள் குழு அமைக்கப்பட்டது. தினமும் தலைவர் வருவார்! எல்லோரிடமும் இதுபற்றி விவாதிப்பார். முரசொலி மாறன் போன்றவர்களும் உடன் இருப்பார்கள். இப்படித் துவங்கியதுதான் ஊழலுக்கு எதிரான எங்கள் வேட்டை. இப்போது நெடுஞ்சாலைத்துறையில் நடக்கும் மெகா ஊழலை கண்டுபிடிக்கும் அளவிற்கு ‘எங்கள் டீம்’ வளர்ந்துள்ளது.

குட்கா வழக்கைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கு ஆரம்ப கட்டத்தில் இருக்கும்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பதவி விலகச் சொல்வது சரியா? நூற்றுக்கு நூறு சரி. அவரது துறையில்தானே ஊழல் நடக்கிறது? அப்புறம் எப்படி நியாயமாக விசாரணை நடத்த முடியும்? தான் செய்தவற்றுக்கு தானே நீதிபதியாக இருந்து எப்படி ஒருவர் தீர்ப்பளிக்க முடியும்? இங்கே குற்றவாளியும் அவரே... நீதிபதியும் அவரே! சரிப்பட்டு வருமா? சாதாரண ஓர் அரசாங்க குமாஸ்தா மேல் குற்றம் சொன்னால் கூட வேலையிலிருந்து அவரைத் தற்காலிகமாக நீக்கிவிட்டுத்தான் விசாரணை நடத்துவார்கள்!

இல்லாவிடில் அந்தத் துறை அதிகாரிகள் எப்படி ஒத்துழைப்பார்கள்? முதல்வர் பதவி விலகினால்தான் விசாரணை ஒழுங்காக நடக்கும். அவரது கட்சி ஆட்சியில் தொடரட்டுமே... அதிமுகவில் மற்றவர்கள் யாரும் இருக்கக்கூடாது என்று நாங்கள் சொல்லவில்லையே! பீகாரில் லல்லு பிரசாத் யாதவ் இதே போன்ற ஒரு வழக்கில் தன் பதவியை ராஜினாமா செய்தபோது தன் மனைவியை முதல்வராக்கவில்லையா? இந்தியாவில் இதுவரை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட அனைவரும் பதவி விலகவில்லையே..? இதுவரை சிபிஐ விசாரணை எந்த முதல்வர் மீதும் தமிழகத்தில் நடக்கவில்லை.

எங்கள் ராஜா மீது தணிக்கைக் குழு (சி.ஏ.ஜி) அறிக்கை கொடுத்தவுடனேயே பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் பாரதீய ஜனதா ரகளை செய்தது. ‘அவர் பதவி விலகும்வரை ஓய மாட்டோம்’ என்றார்கள்! ‘நம்மால் அரசாங்கத்திற்கு ஒரு பிரச்னையும் வரக்கூடாது. ராஜினாமா செய்துட்டு வாருங்கள்’ என்றார் தலைவர் கலைஞர். ராஜாவும் உடனடியாக பண்ணிவிட்டு வந்தார். அதேபோல் எடப்பாடியும் நிரூபித்துவிட்டு வரட்டுமே..! இல்லாவிட்டால் நமது கவர்னரே முதல்வரை டிஸ்மிஸ் பண்ணிவிட்டு அரசை நடத்தலாமே! மாநிலத்தின் தலைமைப் பொறுப்பில் ஆளுனர் உள்ளார்.

அவரிடம்தான் புகார் தந்தோம். வழக்கு நடவடிக்கைக்கு அவர் ஒப்புதல்தான் வேண்டும். அதற்குத்தானே அவரிடம் ஒப்புதல் வாங்கறோம்? உயர் நீதிமன்றமே சிபிஐயிடம் அனுப்பிய பிறகு, ‘நீங்கள் ராஜினாமா செய்யுங்கள்’ என்று சொல்லவேண்டும். மறுத்தால் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்!‘நெடுஞ்சாலைத்துறைக்கு டெண்டர்கள் விடும்போது நாங்கள் திமுக ஆட்சிபோல ‘பாக்ஸ் டெண்டர்’ விடவில்லை. ‘ஆன்லைன் டெண்டர்’ விட்டோம். இதில் தவறு நடக்க வாய்ப்பில்லை...’ என்கிறாரே அதிமுகவின் முன்னணித் தலைவரான பொன்னையன்? வழக்கு போட்ட நான் இதுகுறித்து பத்திரிகைக்கு சொல்ல முடியாது.

ஆனால், ஒன்று. பொன்னையன் காலையில் ஒண்ணு சொல்வார். மாலை வேற சொல்வார். இதே பொன்னையன்தான் ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்தபோது ‘அம்மா இட்லி சாப்பிடறாங்க... தோசை சாப்பிடறாங்க...’ என்று சொன்னார்! ஜெயலலிதா இறந்தபின்பு ‘சின்னம்மாதான் வழி நடத்தணும்’ என்று சொன்னதும் அவரே! அப்புறம் தடாலென்று கதையை மாற்றிவிட்டார். இப்போது நெடுஞ்சாலைத்துறை வழக்கில் அப்பீல் போகப் போறோம் என்கிறார். அவர் அமைச்சரும் கிடையாது. பப்ளிக் ப்ராஸிகியூட்டரும் கிடையாது. ஆக இப்படிச் சொல்ல அவருக்கு எந்த உரிமையும் இல்லை!

எங்கள் தலைவர் தளபதி இதை உடனே கேட்டபோது, ‘நான் அப்படிச்சொல்லவில்லை. பத்திரிகைக்காரங்க திரிச்சுட்டாங்க’ என்கிறார். அவர் நாக்கிற்கு நரம்பு கிடையாது! பொய் சொல்லவே பிறந்தவர். கடந்த கால சரித்திரம் அது. திமுக ஆட்சியில் டெண்டர் எடுத்த ‘ராமலிங்கம் நிறுவனத்திற்கு’த்தான் அதிமுக ஆட்சியிலும் விட்டுள்ளதாக தமிழக அரசு குற்றம் சுமத்துகிறதே? திமுக ஆட்சியில் மட்டுமல்ல... வெள்ளைக்காரன் காலத்திலிருந்தே டெண்டர் எடுத்த ஒப்பந்தக்காரர்கள் இருக்கிறார்கள்! மிகப் பெரிய நிறுவனங்கள் தொன்று தொட்டு காண்ட்ராக்ட் தொழில் செய்கிறார்கள்.

கேள்வி அதுவல்ல. இந்தக் கம்பெனிக்கு உரிமையாளர் எடப்பாடிக்கு சொந்தக்காரர். இப்படி இருக்கும்போது தரக் கூடாது. எங்கள் ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களுக்கும், ‘ராமலிங்கம் நிறுவனத்திற்கும்’ எந்த சம்பந்தமும் இல்லாமல் இருந்தது. தவிர தொகையை மதிப்பீடு செய்வதிலும் திரும்பத் திரும்ப மாற்றி வந்துள்ளனர். எங்கள் காலத்தில் இப்படி நடக்கவில்லை! ‘செலவிட்ட தொகை எங்களைவிட திமுக காலத்தில் மூன்று மடங்கு அதிகம்’ என்கிறதே ஆளும்கட்சி? தவறான புள்ளிவிவரம். கோர்ட்டில் அதை நிருபிக்கட்டும். தாராபுரம்-அவினாசி சாலை ஏறத்தாழ 70 கி.மீ. இருக்கு!

ஒரு கி.மீ.க்கு ஏறத்தாழ இரண்டு கோடியே இருபது லட்ச ரூபாய் செலவாகும். இந்த கணக்குப்படி பார்த்தால் 140 லிருந்து 150 கோடி ரூபாய்க்கு மேல் ஆகாது. முதலில் ஒரு ‘எஸ்டிமேட்’ வைக்கிறார்கள்.. 713 கோடி என்று! அப்புறம் அதை மாற்றி 1515 கோடி வைக்கிறார்கள். அதை அந்த கம்பெனிக்கு தருகிறார்கள். இதுபோல தி.மு.க காலத்தில் நடந்ததா? அப்படி நடந்திருந்தால் ஜெயலலிதா எங்களை விட்டுவைத்திருப்பாரா? கோர்ட்டில் எல்லாவற்றையும் சொல்லட்டும். அப்புறம் தப்பு என்றால் எங்கள் மேல் வழக்கு தொடரட்டும். ஏன்... என் மீதே வழக்கு போடட்டும்!

எதிர்கொள்கிறேன். குட்கா வழக்கு எப்படிப் போகிறது? போய்க் கொண்டிருக்கிறது! தோண்டத் தோண்ட வருகிறதே! கொஞ்ச பேர்கள்தான் என்று நினைத்தோம். காவல் துறையிலேயே நிறைய பேர் மாட்டியிருக்கிறார்கள். இந்த ஆட்சி மீது ஏகப்பட்ட புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன! உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி மேல் மூவாயிரம் பக்க ‘டாக்குமெண்ட்’ தந்திருக்கோம். கோவை கார்ப்பரேஷனில் மட்டும் அவ்வளவு ஊழல் நடந்திருக்கு. துணைவேந்தர் நியமனங்களில் கோடிகள் புரண்டிருப்பதாகச் சொன்ன தமிழக ஆளுநர் ‘இந்தக்காலத்தில் நடக்கவில்லை’ என்கிறார்.

ஒருவேளை திமுக காலத்தை மறைமுகமாகச் சொல்கிறாரா? நேரடியாக எந்தக் காலத்தில் நடந்தது என்று சொல்ல வேண்டியதுதானே! பொத்தாம் பொதுவாக ஏழு வருஷங்கள் கழித்து இப்போது சொன்னால் எப்படி? முதலில் வெளிப்படையாகச் சொன்னவர் இப்போது புரண்டு புரண்டு பேசுகிறார். முதல்வர் மற்றும் பிரதமரைப் பார்ப்பதற்கு முன்பு ஒரு பேச்சு. அப்புறம் ஒரு பேச்சு. இந்த அரசை எப்படியாவது காப்பாற்றப் பார்க்கிறார் கவர்னர்! என் அனுபவத்தில், கல்வித் துறையில் இவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் இதற்கு முன் நடந்ததாகத் தெரியவில்லை!

காங்கிரஸ், எம்ஜிஆர் பீரியடிலிருந்து நானும் பார்த்து வருகிறேன். மார்க் போடுவதில் பட்டவர்த்தனமாக காசு வாங்குவது என்பது என்ன கொடுமை! அண்ணா பல்கலைக்கழகம் உலகம் பூராவும் எவ்வளவு பிரசித்தி பெற்றது! அங்கேயே இப்படி என்பது அசிங்கமாக உள்ளது! காசை வாங்கிக்கொண்டு துணைவேந்தரைப் போட்டால் எப்படி யோக்கியமாக இருக்க முடியும்? முதலீடு பண்ணின ஒருத்தர் அதை எடுக்கத்தானே பார்ப்பார்? பெயிலானவனை, பாஸ் ஆக்குவது, பாஸை பெயிலாக்குவது... இப்படித்தானே செய்ய முடியும்?

ஜெயலலிதா இல்லை என்றாலும் ‘இரட்டை இலை மேஜிக்’ இருக்கும்போது வரும் தேர்தலில் அவர்களை எதிர்கொள்வது திமுகவுக்கு சிரமம்தானே? முதலில் இரட்டை இலைக்கு எந்த மேஜிக்கும் இல்லை! இதே இரட்டை இலையில் நின்றுதான் பர்கூரில் ஜெயலலிதா தோற்றார்! தமிழக மக்கள் முடிவெடுத்துவிட்டால் சின்னம் முக்கியமில்லை. வெறி பிடித்த கட்சிக்காரர்கள் எல்லா கட்சியிலும் உள்ளனர். அது பத்து அல்லது பதினைந்து சதவிகிதம்தான். அதுவே தேர்தல் முடிவை நிர்ணயித்து விடாது.

1996 தேர்தலில் இலை எப்படி தோற்றது? எம்ஜிஆர் இருக்கும்போதே உள்ளாட்சித் தேர்தல்களில் ஜெயித்தோமே..! அடுத்த பெரிய வழக்கை தயார் செய்துவிட்டீர்களா..? அண்ணா 1967ல் சொன்னார்... ‘நான் விரித்த வலையில் சின்ன மீன்கள் தப்பலாம்! பெரிய மீன்கள் தப்ப முடியாது’ என்று. இப்போது முதல்வர், துணை முதல்வர், சீனியர் அமைச்சர்கள் போன்ற பெரிய மீன்களைப் பிடித்தாகிவிட்டது. அடுத்து முட்டை, பருப்பு இதெல்லாம் வருது! அதாவது சின்ன மீன்கள்! இதற்கு தனி ‘நெட்’ வைத்திருக்கிறோம்! பொறுத்திருந்து பாருங்கள்!

- வி.சந்திரசேகரன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்