ரஜினி என் சீனியர்... சிரஞ்சீவி என் கிளாஸ்மேட்!



கண்மணி மெகா தொடரின் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் சொல்லும் ஆச்சரியங்கள்

வெள்ளித்திரையில் டாப் ஹீரோயின்களாக ஜொலித்துக் கொண்டிருந்த குஷ்பு, மீனா, பூர்ணிமா பாக்யராஜ் என பலரையும் சின்னத்திரைக்குள் அழைத்து வந்த பெருமை தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரையே சேரும். இவரது ‘ஹோம் மூவி மேக்கர்ஸ்’ சார்பில் தயாரித்த ‘ஜனனி’, ‘குங்குமம்’, ‘மனைவி’, ‘சிவசக்தி’, ‘லட்சுமி’, ‘மாதவி’, ‘உதிரிப்பூக்கள்’, ‘பாசமலர்’, ‘கங்கா’, இப்போது ஒளிபரப்பாகி வரும் ‘கண்மணி’ வரை அனைத்து மெகா தொடர்களும் குடும்ப உறவுகளின் உன்னதத்தை உணர்த்தியவை. பாராட்டுகளை அள்ளியவை!

பெரியதிரையில் சுந்தர்.சி.யை வைத்து ‘வீராப்பு’ படத்தை தயாரித்த சுஜாதா, இப்போது நீண்ட இடைவெளிக்குப் பின் தன் மருமகன் ஜெயம் ரவியை வைத்து ‘அடங்கமறு’ படத்தை தயாரித்து வருகிறார். ‘‘சின்னத்திரைல இது எனக்கு 19வது வருஷம்! ஒரு தயாரிப்பாளரா தொடர்ந்து வெற்றிகரமா பயணிக்க சன் டிவி சப்போர்ட்தான் காரணம். சன் குடும்ப விருதுகள்ல தங்களோட எட்டு தூண்கள்ல ஒருத்தரா என்னையும் தேர்வு செஞ்சு கவுரவப்படுத்தினாங்க. இப்ப அதை நினைச்சாலும் சிலிர்ப்பா இருக்கு! அதே மாதிரி நாங்க தயாரிச்ச ‘லட்சுமி’ தொடருக்கு தமிழக அரசின் சிறந்த சீரியலுக்கான விருது கிடைச்சது.

அன்றைய முதல்வர் கலைஞர் ஐயா கையால அதை வாங்கினேன்...’’ நெகிழும் சுஜாதா விஜயகுமாரின் வீட்டுக்கும் ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்கிறது! ‘‘இந்த வீட்டுக்கு ‘கல்பனா ஹவுஸ்’னு பேரு. ஒருகாலத்துல முக்கியமான ஷூட்டிங் ஹவுஸ். எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதால இருந்து மணிரத்னம் வரை இங்க ஷூட்டிங் நடத்தியிருக்காங்க; நடிச்சிருக்காங்க. ‘நாயகன்’ல கமல் வீடு, ‘இருவர்’ல மோகன்லால் வீடுனு காட்டப்பட்டது எல்லாம் இதுதான்! அப்ப தெலுங்கு, கன்னடம், இந்திப் படங்களோட ஷூட்டும் சென்னைல நடக்கும். அப்ப தயாரிக்கப்பட்ட படங்கள்ல எல்லாம் இந்த வீடும் இடம்பெற்றிருக்கு!

இப்ப சில வருஷங்களா இதை படப்பிடிப்புக்கு விடறதில்ல. எங்க தயாரிப்புல உருவாகற ‘அடங்கமறு’ படத்துக்கும் ‘கண்மணி’ சீரியலுக்கும் கூட வெளியேதான் ஷூட் பண்ணினோம்...’’ புன்னகைக்கும் சுஜாதா, தயாரிப்பில் இறங்குவதற்கு முன் ஹீரோயினாக நடித்திருக்கிறார்!‘‘சென்னைல உள்ள தென்னிந்திய ஃபிலிம் சேம்பர் ஆஃப் காமர்ஸ்ல இருந்த திரைப்படக் கல்லூரில ஆக்ட்டிங் அண்ட் டெக்னிகல் கோர்ஸ் படிச்சேன். ரஜினிகாந்த் என் சீனியர்! சீரஞ்சீவி, ராஜேந்திரபிரசாத் எல்லாம் என் கிளாஸ்மேட்ஸ்! படிச்சு முடிச்சதும் தெலுங்குப் படங்கள்ல ஹீரோயினா நடிச்சேன்.

தெலுங்கில் நடிச்ச 17 படங்கள்ல எட்டு படங்கள்ல சிரஞ்சீவிக்கு ஜோடி! சிவாஜி சாரோட ‘விஸ்வரூபம்’, ராதிகாவோட ‘இளமைக்கோலம்’னு சில தமிழ்ப் படங்கள்ல நடிச்சிருக்கேன். ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டுல படிக்கிறப்ப இருந்து நானும் என் கணவரான விஜயகுமாரும் ஃப்ரெண்ட்ஸ். மூணு வருஷங்கள் நடிச்சபிறகு கல்யாணம் செஞ்சுகிட்டேன். ‘கல்பனா ஹவுஸ்’ அவரோடதுதான். நடிப்பை விட்டு ஒதுங்கினேனே தவிர சினிமா இண்டஸ்ட்ரியை விட்டு விலகலை. எங்க வீட்ல தினமும் படப்பிடிப்பு நடக்கும். பிரேக்குல நடிகர்களும் டெக்னீஷியன்களும் எங்க வீட்டுக்கு வருவாங்க.

பேசிட்டு இருப்போம்...’’ என்ற சுஜாதா சின்னத்திரையில் என்ட்ரி ஆனது சுவாரஸ்யமான விஷயம். ‘‘சன் டிவில முதன்முதல்ல ‘கிளியோபாட்ரா’ டெலிஃபிலிம் பண்ணினேன். சுந்தர்.சி. இயக்கியிருந்தார். இதுக்கு அப்புறம் வரிசையா ‘ஜனனி’, ‘குங்குமம்’, ‘மனைவி’, ‘லட்சுமி’, ‘சிவசக்தி’, ‘மாதவி’, ‘உதிரிப்பூக்கள்’, ‘பாசமலர்’, ‘கங்கா’னு தயாரிச்சேன். எல்லாமே வலுவான, வெரைட்டியான கதைகள். தொடக்கத்துல நானும் எங்க ஃபேமிலி ஃப்ரெண்ட் குஷ்புவும் சேர்ந்துதான் சீரியல் தயாரிச்சோம். இப்ப இரண்டு பேருமே தனித்தனி கம்பெனி நடத்தறோம். என் மூணு சீரியல்கள்ல குஷ்பு நடிச்சிருக்காங்க.

அதைப் பார்த்து மத்த ஆர்ட்டிஸ்ட்களுக்கும் என் மேல நம்பிக்கை வந்தது. மீனா, ஷமிதா, பூஜா, மானஸா, லட்சுமி கோபாலசாமினு பெரியதிரைல மின்னின பலரும் தைரியமா டிவி சீரியலுக்கு வந்தாங்க...’’ என்ற சுஜாதாவுக்கு சீரியல் தயாரிப்பில் இன்ஸ்பிரேஷன் ராதிகாதானாம். அழுத்தமாக இதைக் குறிப்பிட்டவர், இப்போது டெலிகாஸ்ட் ஆகும் ‘கண்மணி’ சீரியல் பற்றி விவரித்தார். ‘‘இது சந்தோஷமான கூட்டுக்குடும்பக் கதை. ‘ஃபாரீன்ல படிச்ச பெண் படிக்காத கிராமத்துப் பையனை கட்டிக்கிட்டா அவ வாழ்க்கை என்ன ஆகும்..?’ இதுதான் ஒன்லைன்.

இந்த சீரியல் வழியா முதன்முறையா பூர்ணிமா பாக்யராஜ் சின்னத்திரைக்கு வந்திருக்காங்க. ‘கண்மணி’யோட ஒரு போர்ஷனை ரஷ்ய நாட்ல இருக்கிற ஜார்ஜியாலயும் இன்னொரு போர்ஷனை பூலாம்பட்டி என்கிற குக்கிராமத்துலயும் ஷூட் பண்ணியிருக்கோம். இது ஆரம்பம்தான். இன்னும் நிறைய நாடுகள்ல ஷூட் நடக்கப் போகுது. சினிமா மாதிரியே ‘கண்மணி’யை ரெட் கேமரால ஷூட் பண்றோம். ‘ஃபைவ் பாயின்ட் ஒன்’ சவுண்ட் குவாலிட்டில தயாரிக்கறோம்...’’ என்ற சுஜாதா, தன் நெருங்கிய சிநேகிதியான குஷ்பு பற்றி பேசும்போது நெகிழ்கிறார்.

‘‘நாங்க ஆத்மார்த்தமான தோழிகள். 20 வருஷங்களுக்கு முன்னாடி ‘பிரிட்டி உமன்’னு ஒரு  துணிக்கடை ஆரம்பிச்சேன். திறப்பு விழாவுக்கு யாராவது நடிகை வந்தா நல்லா இருக்கும்னு தோணிச்சு. என் நண்பரும் தெலுங்கு நடிகருமான ராஜேந்திர பிரசாத்கிட்ட பேசினேன். அவர் என் சார்பா குஷ்புகிட்ட பேசினார். அவங்களும் வந்து கடையைத் திறந்து வைச்சாங்க. முதல் சந்திப்புலயே நாங்க நெருக்கமாகிட்டோம். ஒரு ஃபெஸ்டிவலுக்கு குஷ்பு எனக்கு ஒரு சேலை எடுத்துக் கொடுத்து ‘நீங்க எங்க வீட்டு பெரிய அண்ணி’னு நெகிழ்ந்தாங்க. அதுக்கு அப்புறம் நாங்க ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸானோம்.

என் முழுப்பெயரையும் சொல்லி அவங்க குழந்தைகளுக்கு கூப்பிட வராது. அதனால சின்ன வயசுல ‘தா’னு கூப்பிடுவாங்க. அதுவே இப்ப வரை நிலைச்சுடுச்சு!
என் பேரக் குழந்தைகளுக்கும் ‘குஷ்பு’ வாய்ல நுழையலை. அதனால ‘பூ பாட்டி’னுதான் கூப்பிடறாங்க! ஒளிவுமறைவு இல்லாம எதையும் வெளிப்படையா குஷ்பு பேசுவாங்க. தைரியசாலி. எதிரிகள்கிட்ட கூட வெறுப்பைக் காட்ட மாடாங்க. அன்பாதான் பேசுவாங்க. எங்க நெருங்கிய நட்பு வட்டத்துல பிருந்தா மாஸ்டர், அனு பார்த்தசாரதினு பலரும் இருக்காங்க. எயிட்டீஸ் நட்சத்திரங்கள் குருப்ல நானும் இருக்கேன்!

போன வருஷம் நாங்க எல்லாரும் சைனா போயிட்டு வந்தோம்...’’ குழந்தையைப் போல் குதூகலிப்பவர் நீண்ட இடைவெளிக்குப் பின் ‘அடங்கமறு’ படத்தை தயாரித்திருக்கிறார். ‘‘சுந்தர்.சி. நடிச்ச ‘வீராப்பு’ படத்தை 2007ல தயாரிச்சேன். நல்ல படம்னு பெயர் கிடைச்சும் தொடர்ந்து படத் தயாரிப்புல ஈடுபடல. சீரியல்ல மட்டும் கவனம் செலுத்தினேன். ஏன்னா சீரியல்ல கதை கேட்பதில் தொடங்கி, கேரக்டர்கள், நடிகர்கள், டெக்னீஷியன்கள்னு சகலத்தையும் தயாரிப்பாளர் தீர்மானிக்க முடியும். ஆனா, சினிமால பணத்தை முதலீடு செஞ்சா போதும்னு ஆகிடுச்சு.

பத்தாண்டுகளுக்குப் பிறகு படம் தயாரிக்கலாம்னு கதை கேட்க ஆரம்பிச்சேன். அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் சொன்ன கதை ரொம்ப பிடிச்சிருந்தது. இந்தக் காலத்துக்கான கதை. அதுவும் வலுவான லைன். உடனே ரவியை கதை கேட்கச் சொன்னேன். அவருக்கும் பிடிச்சிருந்தது.‘கதை டிஸ்கஷன்ல இருந்து ஒவ்வொரு கட்டத்துலயும் நீங்களும் கலந்துக்குங்க அத்தை’னு சொல்லி எனக்கும் வேலை கொடுத்தார்.

படம் நல்லா வந்திருக்கு. இனி தொடர்ந்து படங்கள் தயாரிக்கிற ஐடியால இருக்கேன்...’’ என்ற சுஜாதா விஜயகுமாரின் கணவர் விஜயகுமார், கோல்ட் அண்ட் டைமண்ட் ஆன்டிக் கலக்‌ஷன்ஸ் பிசினஸ் செய்கிறார். இந்தத் தம்பதிகளுக்கு ஆர்த்தி, அனுஷா என இரண்டு மகள்கள். இதில் ஆர்த்தி, நடிகர் ஜெயம் ரவியை மணந்திருக்கிறார். சுஜாதாவின் தயாரிப்புப் பணிகளில் அவரது நாத்தனாரின் மகன் ஆனந்தும், இரண்டாவது மகள் அனுஷாவும் உதவி வருகிறார்கள்.

- மை.பாரதிராஜா
படங்கள் : ஆ.வின்சென்ட் பால்