பகவான்



புதிய தொடர் - 1

சாம்ராஜ்யம் சரிந்தது.....?

நவம்பர் 17, 1985. ஒன்பது இருக்கைகள் கொண்ட லியர்ஜெட் விமானம், தில்லி பாலம் விமான நிலையத்தை சோர்வாக வந்தடைந்தது. அதிகாலை பனிமூட்டத்தில் பாலம் விமான நிலையமே குளிரில் கிடுகிடுத்துக் கொண்டிருந்தது. ஆனால், அங்கே, ஐநூறுக்கும் மேற்பட்டோர், கடவுளைக் காணும் பரவசத்தோடு ‘பகவான்... பகவான்...’ என்று குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். பாலிவுட்டின் உச்சநட்சத்திரமாக இருந்த வினோத்கன்னாவின் மெர்சிடிஸ் பென்ஸ் கார், அந்த விமானத்தில் பயணித்த விஐபிக்காக தயாராகக் காத்திருந்தது. விமானத்தின் கதவு திறந்தது. பகவான் தரிசனமாக வெளிப்பட்டார்.

பக்தர்களைக் கண்டதுமே எப்போதும் உற்சாகமாக ஆசி வழங்குபவர், அன்று இறுக்கமான முகத்தோடு காரில் ஏறினார். அவரிடம் பேசுவதற்காக வந்த ஊடகத்தினர் ஏமாற்றம் அடைந்தார்கள். சட்டென்று பகவான் பயணித்த காரைப் பின் தொடர்ந்தனர். பகவானை ஏற்றிக் கொண்டிருந்த மெர்சிடிஸ் கார், ஹயாத் ரீஜென்ஸி ஹோட்டலை எட்டும்போது கிட்டத்தட்ட அந்தப் பயணம் பேரணியாக மாறிவிட்டிருந்தது. நூற்றுக்கணக்கான கார்களும், இரு சக்கர வாகனங்களும் அவர்களைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தன.

ஹோட்டல் லாபிக்குள் பகவான் பிரவேசிக்க, அங்கே ஏற்கனவே தயாராக நிலைகொண்டிருந்த கேமிராக்கள் ஃப்ளாஷ் அடித்தன. தாடி நிறைந்த முகத்துக்குள் வழக்கமான ஒளி குன்றி ஒடுங்கியிருந்த பகவானின் கண்கள், இந்த ஃப்ளாஷ் மழையில் கூச்சமடைந்தன. கையால் முகத்தை மூடியவாறே சட்டென்று லிஃப்டுக்குள் நுழைந்தார். அவரைத் தொடர்ந்து அவரது ஆத்ம நண்பரான மாயோகா விவேக்கும் லிஃப்டில் ஏறினார். ஹோட்டலுக்கு வெளியே ஆயிரக்கணக்கானோர் கூடி ‘பகவான்... பகவான்...’ என்று இட்டுக்கொண்டிருந்த கோஷம், விண்ணுக்கே கேட்டிருக்கும்.

ஆனால் - அன்று பகவான் இதையெல்லாம் கேட்டு மகிழும் நிலையில் இல்லை. ஏனெனில் - மூன்று வாரங்களுக்கு முன்புதான் கடவுளுக்கு நிகராக உலகெங்கும் லட்சக்கணக்கான பக்தர்களால் போற்றப்பட்ட அந்த பகவானின் கை, விலங்கிடப்பட்டிருந்தது. அமெரிக்க போலீஸார், முப்பதுக்கும் மேற்பட்ட வழக்குகளை அவர் மீது தொடுத்திருந்தார்கள். நார்த் கரோலினா மாகாணத்தின் சார்லோட் நகரில் 17 நாட்கள் சிறையில் இருந்தார். போலீஸார் சாட்டியிருந்த குற்றங்கள் முழுமையாக நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு 175 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கிடைத்திருக்கக் கூடும்.

பகவான் என்ன மாயம் செய்தாரோ தெரியவில்லை. கோர்ட்டில் போலீஸார், அவர் மீது சப்பையான இரண்டு குற்றங்களைத்தான் சுமத்தியிருந்தார்கள். அதில் ஒன்று, போலி திருமணங்களை நடத்தி, தன்னுடைய இந்திய பக்தர்களை, அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களாக மாற்றியது. பகவானோ, தன்னையும் தன் புகழையும் ஒழிக்க அமெரிக்க அதிகார வர்க்கம் சூழ்ச்சி செய்தது; உடல் உபாதைகளுடன் இருக்கும் தன்னை சிறையில் வைத்து சித்திரவதை செய்தார்கள் என்று குற்றம் சாட்டினார். கோர்ட்டில் பகவானின் வழக்கறிஞர்கள் மிகவும் திறமையாக வழக்காடினார்கள்.

இறுதியில் பகவான் விடுதலை ஆனார். ஆனால் - நான்கு லட்சம் டாலர் அபராதம்; நாட்டை விட்டே வெளியேற வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை கோர்ட்  விதித்தது. அமெரிக்காவுக்குள்ளேயே போட்டி அரசாங்கமாக உருவெடுத்த பகவான், சூழ்ச்சிகளின் காரணமாக ஒரு கிரிமினலாக முத்திரை குத்தப்பட்டு, கடுமையான அவமானங்களுக்கு உட்படுத்தப்பட்டு வெளியேறி, தாய்நாட்டுக்கு வந்தார். தில்லி ஹயாத் ரீஜென்ஸி ஹோட்டலின் ஆறாவது மாடியிலிருந்த அறுபது அறைகளுமே பகவானின் பக்தர்களால் ஆக்கிரமிக்கப்பட்டன.

பகவானின் அறைக்கு அருகிலிருந்த பத்து அறைகள், அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து பேருக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. மூன்று மணி நேரம் கழித்து, காலை 9 மணிக்கு பகவான் கீழே இறங்கினார். பிரஸ்மீட் என்று கருதிய பத்திரிகையாளர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். பேச மறுத்தார். ஹோட்டல் வாயிலில், “இனி இந்தியாவில்தான் இருப்பேன்...” என்று ஒரு வார்த்தையை மட்டும் உரக்க முழங்கினார். பக்தர்களின் மகிழ்ச்சி ஆர்ப்பரிப்புக்கு மத்தியில் மீண்டும் மெர்சிடிஸ் பென்ஸ் காரில் ஏறினார். அவர் எங்கே செல்கிறார் என்கிற ஐடியா எதுவுமில்லாமல் மீண்டும் அவரது காரை நூற்றுக்கணக்கான கார்கள் பின்தொடர்ந்தன.

மீண்டும் அதே பாலம் விமான நிலையம். ரன்வேயில் பகவானுக்காக தயாராக வாயுதூத் அவ்ரோ விமானம் ஏற்கனவே ஸ்டார்ட் செய்யப்பட்டு வில்லில் நாணில் இழுத்து பூட்டப்பட்ட அம்பு மாதிரி தயாராக இருந்தது. பகவானும், அவரது நெருங்கிய சகாக்களும் ஏறி அமர்ந்ததுமே விண்ணில் பாய்ந்தது. பனிபடர்ந்த இமாலயத்துக்குள் பிரவேசித்தது. இமாச்சலப் பிரதேசத்தில் குலு பள்ளத்தாக்கில் புந்தார் விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. அங்கும் மெர்சிடிஸ் ஊர்வலம். மணாலியிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் இயற்கை தன்னுடைய மொத்த எழிலையும் கொட்டி உருவாக்கியிருந்த இடத்தில் ஸ்பான் ரிசார்ட்ஸ் என்கிற இடத்துக்கு பகவான் சென்றார்.

அந்த ரிசார்ட்ஸில் இருந்த அத்தனை அறைகளும் அடுத்த நான்கு மாதங்களுக்கு பகவானுக்கும், அவரது நெருங்கிய பக்தர்களுக்குமாக முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. பகவானுக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் பக்தர்கள் பேரில், பகவானுக்குச் சொந்தமான பல நூறு கோடி சொத்துகள் இருந்ததாகவும், அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்ட நிலையில் அவற்றை பைசல் செய்வதற்குத்தான் இந்த ரிசார்ட் திருவிழாவென்று அந்தக்கால ஊடகங்கள் எழுதின. சமீபத்திய கூவத்தூர் ரிசார்ட் கொண்டாட்டங்கள் உங்களுக்கு நினைவுக்கு வருமாயின், அதற்கு நாம் பொறுப்பல்ல.

ரிசார்ட்டுக்கு வந்த சில நாட்கள் பகவானுக்கே உரிய எவ்விதமான ஆடம்பர கூட்டு வழிபாடு களோ, பக்தர்களுக்கு சிறப்பு தரிசனமோ நடைபெறவில்லை. 400 சதுர அடி சொகுசு அறைக்குள்ளேயே பகவான் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தார். மாலை வேளைகளில் மட்டும் ஆற்றோரமாக இயற்கையை சுவாசித்தபடி தகுந்த பாதுகாப்போடு வாக்கிங் சென்றார். சில நாட்கள் கழித்து ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். வழக்கமான உற்சாகமோ, தன்னம்பிக்கையோ அவரிடம் தென்படவில்லை. விரக்தியின் உச்சத்தில் இருந்தார். இயேசு கிறிஸ்துவில் தொடங்கி போப் ஆண்டவர் வரை, மகாத்மா காந்தியில் தொடங்கி இந்திரா காந்தி வரை அத்தனை பேர் மீதுமான அவநம்பிக்கைகளை வெளிப்படுத்தினார்.

சில மாதங்கள் முன்பு வரைதான் அமெரிக்காவில், ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் அரசர் மாதிரி அமர்ந்து, தனிப்பேரரசை நடத்திக் கொண்டிருந்த சக்தி வாய்ந்த மனிதர் இவர்தான் என்று சொல்லியிருந்தால் யாருமே நம்பியிருக்க மாட்டார்கள். சாம்ராஜ்யங்கள் உருவாவதே பிற்காலத்தில் சரிவதற்குத்தான். அமெரிக்காவையே உலுக்குகிற அளவுக்கு பகவான் என்கிற ஓஷோ எப்படி உயர்ந்தார்? ஏன் சரிந்தார்? மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்ட அவருடைய செக்ஸ் சாமியார் என்கிற இமேஜ் சரியானதுதானா? இன்றும் லட்சக்கணக்கானவர்கள் ஓஷோவின் பக்தர்களாக இருப்பதின் மாயம்தான் என்ன? அவர் அறிவுச்சூரியனா அல்லது அறமற்ற ஆசாமியா?

(தரிசனம் தருவார்)

பகவானின் தினசரி தியானமுறை!


ஓஷோவின் ‘சிறப்பு தியானம்’, காலை 6 மணிக்கு முன்பாக (சூரிய உதயத்துக்கு முன்பாக) நடைபெறும். இது தனியாகவோ அல்லது குழுவாகவோ செய்யப்படலாம். குழுவாக செய்தால் பலன் அதிகம் என்பது பகவானின் எண்ணம். காலை 7.30 மணி வாக்கில் ‘நடபிரம்ம தியானம்’, வெறும் வயிற்றில் கண்களை மூடியவாறே செய்யப்பட வேண்டியது. பழமையான திபெத்திய பவுத்த தியான முறைகளில் இருந்து இதன் அடிப்படையைத் தேர்ந்தெடுத்து, தனக்குரிய பாணியில் இதை வடிவமைத்தார் ஓஷோ. 11.30 மணிக்கு நடன தியானம். வெளிநாட்டு பக்தர்களை ஓஷோவை நோக்கி பெருமளவில் ஈர்த்தது இந்த தியான முறைதான்.

நடனம் மூலமாக மனித வாழ்வை மகிழ்ச்சியாகக் கொண்டாட முடியும் என்பது அவரது வலியுறுத்தல். “என் தியான முறைகளில் நடனத்தைப் போல அற்புதத்தை நிகழ்த்தவல்ல தியானம் வேறெதுவுமில்லை. நீங்கள் உங்கள் உடலை முழுமையாக நடனத்துக்கு ஒப்புக் கொடுக்கும்போது, உடலில் இருந்து வெளியேறும் அற்புதமான உணர்வை எட்டுகிறீர்கள். அதன்பிறகே உண்மையான நடனம் தொடங்குகிறது. உங்கள் உடல் தொடர்ந்து நடனமாடும். நீங்களும் ஆடுவீர்கள். உடலில் இருந்து வெளியேறிய நீங்கள் நடராஜராக, நடனத்தின் அரசராக மாறுவீர்கள்...” என்று விளக்கமளித்திருக்கிறார் பகவான்.

மாலை 4.30 மணியளவில் குண்டலினி தியானம். அதிகாலை தியானத்தைப் போலவே சூரியன் மறையும் வேளையில் செய்யப்படும் இந்த தியானமும், செய்பவரின் உடல் மற்றும் மனதை புத்துணர்வுக்கு உள்ளாக்கும். மாலை 6.30 மணியளவிலான பக்தர்கள் சந்திப்பில் கொண்டாட்டம், நடனம், அமைதியென பல்வேறு விதமான அம்சங்களிலான செயல்பாடுகளை ஓஷோ நிகழ்த்துவார். ஓஷோவின் மாலை சந்திப்பு மிகவும் பிரசித்தி பெற்றது. இதில் கலந்துகொண்டவர்கள் எம்மாதிரியான அனுபவத்தைப் பெற்றோம் என்பதை வார்த்தைகளிலோ, எழுத்துகளிலோ வடிக்கவே முடியாது. ஒட்டுமொத்தமான ஒரு நாளின் உச்சபட்ச கொண்டாட்டமாக இந்த சந்திப்புகளை மாற்றுவார் பகவான்.

- யுவகிருஷ்ணா
ஓவியம்: அரஸ்