கவிதை வனம்



பழுது

நெடுநாளாய் நீர்
ஒழுகிக்கொண்டிருந்த
தெருக்குழாயொன்றை
சரிசெய்து திருப்தி
கொள்கிறேன்.
ஏமாற்றத்தோடு
திரும்பிச் செல்கிறது
ஒழுகும் நீரில்
தாகம் தணித்துவந்த
குருவிக் கூட்டம்

- சாமி கிரிஷ்


இறைச்சி கோழிகள் பற்றிய குறிப்புகள்

இறைச்சிக் கடைக்காரனின்
சைக்கிளில் தலைகீழாகத்
தொங்கியபடி
கோழிகளின் பயணம்.
கோழியின் கண்களில்
வழியாது தேங்கி நிற்கும் பயம்.
நான் இறைச்சிக்காகக்
கொல்பவன் கண்களை
ஒருபோதும் நோக்குவதில்லை.
நான் இறைச்சியை விற்பவன்
என் வரையில்
கண்களுக்கு எடையில்லை.
நான் புசிப்பவன்
எனக்கு கண்களே
தேவையில்லை.
நான் கவிதை எழுதுபவன்
எனக்கு கோழியோ
கண்களோ பொருட்டில்லை
அவை உள்ளதான
பாவனை போதும்.
மெய்யில்
சிறகுகள் விரிக்காத
கோழிகளுக்கென யாருமில்லை

- ஷோபனா நாராயணன்