செவிசெவிகளை சற்றே மேல் ஏற்றுங்கள்
சன்னமாய்
கேட்கிறதுதானே உங்களுக்கும்?!
பூரிப்புகளின் பரம சத்ரு அவன்
சிறு வார்த்தை சூரியில்
ஆழக்கீறும் வித்தையறிந்தவன்
பாலோ கள்ளோ குருதியோ
என் செழித்த மரத்திற்கொரு
கலயத்தை தாலியென
இறுக்கிவிட்டு
இறங்கிவிட்டேன்

‘சொட் சொட்’ என
சொற்கள் வடியும்
ஒலியைத்தான் கேட்கிறீர்கள்.
பொறுங்கள்...
இன்னும் கொஞ்சம் ரணம் ஏறட்டும்
தூக்கமண்டா இரவொன்றில்
கலயத்தை மெல்லயிறக்கி
கவிதை ஒன்று வடிப்பேன்.

- ஜான்ஸி