கூவமும் அடையாறும்...



‘‘வெனிஸ், பாங்காக் நகரங்கள் போல சென்னைக்கும் நீர்வழித்தடங்கள் மூன்று. அவை மக்கள் வசிக்கும் இடங்களின் நடுவில் சென்றாலும் மூன்றும் இன்று கழிவுநீர் எடுத்துச் செல்லவும், வெள்ளத் தடுப்புக் கால்வாய்களுமாகத்தான் உள்ளன...’’ - கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் பற்றி தன்னுடைய, ‘ஒரு பார்வையில் சென்னை நகரம்’ என்ற நூலில் இப்படி வேதனையாகக் குறிப்பிடுகிறார் மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரன். ஆனால், ஒருகாலத்தில் கூவமும், அடையாறும் எப்படியிருந்த நதிகள் தெரியுமா?

கல்விச் செம்மல் எனப் போற்றப்படும் பச்சையப்ப முதலியார் கோமளீசுவரன்பேட்டை அருகே கூவத்தில் நீராடிவிட்டு கந்தகோட்டத்து முருகனை வணங்கியபிறகே அன்றைய நாளைத் தொடங்குவராம். மெட்ராஸில் வாழ்ந்த மக்கள் பலரும் கூவத்தில் குளித்து மகிழ்ந்துள்ளனர். கூவம் ஒரு முக்கிய நீர்நிலையாகவும் இருந்துள்ளது. தவிர, மழைக்காலங்களில் இந்த நதியில் ஏற்படும் வெள்ளத்தால் மக்கள் அவதியும் அடைந்துள்ளனர். இயற்கைத் துறைமுகம் இல்லாத, அலைகள் ஆர்ப்பரிக்கும் மெட்ராஸில் வணிகத்திற்குப் பாதுகாப்பு அளித்தது கூவமே!

அதனாலேயே, பிரான்சிஸ் டே இந்த ஊரைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலேயர்களை இங்கே செட்டிலாக்கினார். அன்று பரந்துவிரிந்து ஓடிய நதியாக கூவம் இருந்தது. அடையாறும் இதுபோலவேதான். இந்த இரண்டு நதிகளும் நுங்கம்பாக்கம் ‘லாங் டேங்க்’ ஏரியின் மூலம் இணைந்திருந்தன. ‘லாங் டேங்க்’ ஏரி தி.நகராக மாறியதும் எல்லாம் முடிந்தது. இன்று கழிவுநீராக மாறிப்போனதால் மக்கள் அடையாறையும் கூட கூவம் என்றே அழைக்கும் நிலை! பரபரப்பான சென்னை மாநகருக்குள் ஓடும் இந்த இரண்டு நதிகளின் தலபுராணத்தை கொஞ்சம் அறிவோம்.

கூவம்

திருவள்ளூர் மாவட்டம் தக்கோலம் அருகே கேசாவரம் என்னும் அணைக்கட்டில் இருந்து தனது பயணத்தைத் தொடங்குகிறது இந்நதி. இதனருகே கூவம் என்ற கிராமமும் உள்ளது. அதனாலேயே ‘கூவம்’ என்றானது. உண்மையில், இது பாலாற்றின் ஒரு கிளைநதி. அங்கிருந்து திருமழிசை, பூந்தமல்லி, மதுரவாயல் வழியாக சென்னைக்குள் நுழைந்து அமைந்தகரை, சேத்துப்பட்டு என எழும்பூரை அடைகிறது. பிறகு, சிந்தாதிரிப்பேட்டை சென்று சென்னை மருத்துவக் கல்லூரி அருகே இரண்டாகப் பிரிகிறது. இவ்வாறு பிரியும் ஒருபகுதியுடன் பக்கிங்ஹாம் கால்வாய் இணைகிறது.

தொடர்ந்து இரண்டு பகுதி நதிகளும் நேப்பியர் பாலத்தின் அருகே ஒன்று கூடுகின்றன. இந்தப் பாலத்தின் அந்தப் பக்கம் திருவல்லிக்கேணி இருப்பதால் கூவம் நதியை ‘திருவல்லிக்கேணி நதி’ என்றே அன்றைய மெட்ராஸ்வாசிகள் அழைத்தனர். பிரிந்து ஒன்று கூடும் வரை உள்ள வட்டமான நிலப்பரப்பு ஒரு தீவுபோல் காட்சியளித்ததால் ஆங்கிலேயர்கள் ஐலேண்ட் என்றனர். இதுவே தீவுத்திடல்! இந்நதியின் மொத்த நீளம் 72 கிமீ. சென்னைக்குள் மட்டும் 18 கிமீ. தூரம் பயணிக்கிறது.‘‘கூவத்தின் வடிநிலங்களில் 62 குளங்கள் உள்ளன. 13 லட்சத்து 575 ஆயிரத்து 93 ஆயக்கட்டுகளைக் கொண்டது.

இந்த ஆற்றின் மணலில்தான் சென்னை நகரின் பெரும்பாலான கட்டடங்கள் எழுந்தன. 1952 டிசம்பரில் சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திராவைப் பிரிக்க வேண்டும் எனும் முழக்கம் உச்சகட்டத்தில் இருந்தது. அப்போது பிரிவினையாளர்கள் வைத்த கோரிக்கைகளில் ஒன்று, சென்னை நகரை முற்றிலுமாக ஆந்திராவுடன் இணைக்க வேண்டும். இல்லாவிட்டால் கூவம் ஆற்றை மையமாகக் கொண்டு சென்னையை வடசென்னை, தென் சென்னை என பிரித்து வடசென்னையை ஆந்திராவுக்குக் கொடுக்க வேண்டும் என்பதாகும்...’’ எனத் தன்னுடைய ‘கூவம், அடையாறு, பக்கிங்ஹாம்’ நூலில் கூவம் ஆற்றின் முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் கோ.செங்குட்டுவன்.

கூடவே 20ம் நூற்றாண்டின் முற்பகுதி வரை சுத்தமான ஆறாக இருந்த கூவம் சாக்கடையான கதையையும் விவரிக்கிறார். ‘‘சென்னையில் 1,398 பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றின் பெரும்பாலான கழிவுகள் கூவம் ஆற்றில் நேரடியாக விடப்படுகின்றன. மருத்துவமனை மூலமாக மட்டும் 37 டன் ஆபத்தான மருத்துவக் கழிவுகள் கூவம் ஆற்றில் கொட்டப்படுகின்றன...’’ என 2003ம் வருடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வை முன்வைத்து இந்தத் தகவலைத் தருகிறார். இவ்வளவு கழிவுகளை சுமந்ததாலே ‘கூவம்’ இன்று கெட்டவார்த்தையாகி நிற்கிறது. ஆனாலும், இந்தக் கழிவுநீரில் படகுப் போக்குவரத்து நடந்திருக்கிறது!

கடல்நீரை கூவத்தில் செலுத்தி கழிவை வெளியேற்ற வேண்டும் என்கிற பரிந்துரை 1905 முதல் 2000 வருடம் வரை பதினோரு முறை வைக்கப்பட்டது. பின்னர், கூவத்தைச் சுத்தப்படுத்தம் திட்டத்தை வகுத்தவர் தமிழக முதல்வராக இருந்த அறிஞர் அண்ணா. லண்டனுக்கு தேம்ஸ் நதிபோல் சென்னைக்கு கூவம் பெருமை சேர்க்க வேண்டும் என்பது அவர் கனவு. இறுதியில் அந்தக் கனவை விரைவுபடுத்தியவர் மறைந்த முதல்வர் கலைஞர் அவர்கள். 1973ல் கூவத்தில் படகுப் போக்குவரத்தைத் தொடங்கி வைத்தார். சேத்துப்பட்டின் கிரீம்ஸ் சாலையிலிருந்து நேப்பியர் பாலம் வரை கூவத்தைச் சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஏழு இடங்களில் கடையேழு வள்ளல்களின் பெயர்களில் படகுத் துறைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்தும் நடந்தது. இன்று இந்த படகுத் துறைகள் புதர்களுக்கிடையே பாழடைந்து கிடக்கின்றன. அதன்பின்னர், தொடர்ந்து சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 1991ம் வருடம் ‘செவன் டிரெண்ட்’ என்ற நிறுவனமும், 1994ம் வருடம் ‘மக்டொனால்ட்’ நிறுவனமும் நீர்வழித்தடத்தை மேம்படுத்தத் திட்டங்கள் தந்தன. 2000 வரை பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.

2009ம் வருடம் அன்றைய துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான குழு சிங்கப்பூர் சென்று அங்குள்ள ஆறுகளை சிங்கப்பூர் அரசு எவ்வாறு சீரமைத்தது என்பதை ஆராய்ந்தது. பின்னர், அதேபோல் கூவத்தை சீரமைக்கவும் திட்டம் வகுக்கப்பட்டது. 2015ல் கூவத்தை முழுமையாக சீரமைக்க மூன்று கட்டங்களாக பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், மூன்று வருடங்களில் 60 துணை திட்டங்களாக நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதன் மொத்த மதிப்பு 1934 கோடியே 84 லட்சம் ரூபாய். ரூ.605 கோடிக்கு நிர்வாகம் அனுமதியும் வழங்கியது. இதன் முக்கிய நோக்கங்கள் கழிவுநீர் கூவம் நதியில் கலப்பதைத் தடுப்பதும், நதியின் வெள்ள நீர் கொள்ளளவை மேம்படுத்தி பராமரித்தலும், கூவம் நதிக்கரையில் வாழும் மக்களுக்கான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுக்கான திட்டமிடலும், திடக்கழிவு மேலாண்மை ஏற்படுத்தலும் ஆகும். ஆனாலும், இதுவரை கூவத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

அடையாறு

செம்பரம்பாக்கம் ஏரி அருகே இந்த நதியின் உற்பத்தி தொடங்குகிறது. அதாவது அருகிலுள்ள மலைப்பட்டு நீர்த்தேக்கத்திலிருந்து ஆரம்பிக்கிறது. ஆனால், இதில் பாதிதான் உண்மை என்கிறார் சென்னை ஏரிகளைப் பற்றின ஆய்வாளர் நடராஜன். ‘‘அடையாறு மற்ற ஆறுகளைப் போல ஒரு குறிப்பிட்ட மலையிலோ ஏரியிலோ உற்பத்தியாகவில்லை...’’ என்கிற இவர், ‘‘அடைமழை பெய்தால் உருவாகும் ஆறு என்பதாலே ‘அடையாறு’ என்ற காரணப் பெயரை நம் முன்னோர்கள் சூட்டியுள்ளனர்...’’ என்கிறார். சென்னைக்கு மேற்கே கூடுவாஞ்சேரி அருகில் உருவாகும் ஓடை, சோமங்கலத்தில் இருந்து உருவாகும் மற்றொரு ஓடை, செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீர் ஓடை,

மலைப்பட்டு ஏரியின் உபரிநீர் ஓடை, போரூர் ஏரியின் உபரிநீர் பாயும் மணப்பாக்கம் ஓடை ஆகிய ஓடைகள் இணைந்தே அடையாறு நதியாக மழைக்காலங்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனுடன் மணிமங்கலம் ஏரி, பெருங்களத்தூர் ஏரி, நந்தி வரம் ஏரி, மண்ணிவாக்கம் ஏரி, அத்தனூர் ஏரி, அத்தனேசேரி ஏரி, சோமங்கலம் ஏரி, அமரம்பேடு ஏரி, வெங்காடு ஏரி, வண்டலூர் ஏரி, ஊரப்பாக்கம் ஏரி, இரும்புலியூர் ஏரி, கூடுவாஞ்சேரி ஏரி, நாட்டரசன்பட்டு ஏரி, ஒரத்தூர் ஏரி, கண்ணந்தாங்கல் ஏரி, மாம்பாக்கம் ஏரி, இன்னும் பிற ஏரிகளில் இருந்து வெளியேற்றப்ப்படும் உபரி நீரும், இப்பகுதியில் உள்ள மலைக்குன்றுகளில் மழைக்காலங்களில் பெருகும் நீரும் இந்த அடையாற்றில் சிறு சிறு ஓடைகள் மூலம் வந்து சேர்கின்றன.

மொத்தம் 42 கிமீ நீளம் கொண்டது. சென்னைக்குள் நந்தம்பாக்கத்தில் தொடங்கி சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், அடையாறு வழியாக 12 கிமீ தூரம் பயணிக்கிறது. நிறைவில், பெசன்ட் நகரிலுள்ள புரோக்கன் பிரிட்ஜ் அருகே கடலில் சேர்கிறது. கூவத்தைப் போல இங்கும் ஒரு தீவு உள்ளது. அதன் பெயர் ‘க்யூபில் ஐலேண்ட்’!முதன்முதலாக அடையாற்றில்தான் நிரந்தரமான செங்கல் பாலம் அமைக்கப்பட்டது. மர்மலாங் (மாம்பலம்) பாலம் எனப்பட்ட அந்தப் பாலமே சைதாப்பேட்டையையும், கிண்டியையும் இணைக்கிறது. பின்னர், 1840ல் எல்பின்ஸ்டன் பாலம் முகத்துவாரம் அருகே அமைக்கப்பட்டது.

பொதுவாக, அடையாறு என்றதும் ஆறு என்பதைவிட ஆலமரம்தான் எல்லோர் மனதிலும் நிழலாடும். காரணம், அடையாற்றின் முகத்துவாரத்தில் 260 ஏக்கர் பரப்பில் விரிந்திருக்கும் பிரம்மஞான சபை எனப்படும் தியாசபிக்கல் சொசைட்டியில் உள்ள பெரிய ஆலமரம். 1989ல் அடித்த புயலில் இந்த மரம் சாய்ந்தாலும் புகழ் என்றும் ஓங்கியே நிற்கிறது. கூவத்தைவிட அகன்று விரிந்து ஓடும் நதி, அடையாறு. இதனாலேயே ஆங்கிலேயர்கள் இந்த நதிக்கரையில் நிறைய தோட்ட இல்லங்களை உருவாக்கினர். இதில், படகு சவாரியை யும், படகு விளையாட்டையும் தொடங்கினர். கூடவே, மெட்ராஸ் போட் கிளப்பும் உருவானது.

கடந்த 2015ம் வருடம் பெய்த பெரும் மழையில் செம்பரம்பாக்கத்திலிருந்து உபரிநீர் திறந்து விடப்பட அடையாறு கரைபுரண்டு ஓடியது. அப்போதுதான் சென்னைவாசிகள் அடையாற்றின் அகலத்தைப் பார்த்தனர். இதனால், அரசு கரையோர மக்களை ஊருக்குள்ளிருந்து அப்புறப்படுத்தி ஒதுக்குப்புறத்தில் மறுகுடி யமர்வு செய்தது. தொடர்ந்து அடையாற்றைச் சீரமைக்க திட்டங்கள் தீட்டப்பட்டன. பணிகளை சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.      

அடையாறு போர்


ஆங்கிலேயர்களிடம் இருந்து 1746ம் ஆண்டு மெட்ராஸை பிரஞ்சுப் படைகள் கைப்பற்றின. அப்போது பிரிட்டிஷாருடன் ஆற்காடு நவாப் இணக்கமாக இருந்தார். இதனால், மெட்ராஸை மீட்க நவாப்பின் படைகள் சாந்தோமில் முகாமிட்டன. இதையறிந்த பிரஞ்சுப் படையினர் பாண்டிச்சேரியிலிருந்து ஒரு படையையும், புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து இன்னொரு படையையும் அனுப்பி வைத்தனர். அடையாற்றின் கரையிலிருந்த க்யூபில் தீவில் போர் நடந்தது. ஒரே நாளில் முடிந்த இந்தப் போரில் நவாப் படைகள் தோற்கடிக்கப்பட்டன.

- பேராச்சி கண்ணன்
படங்கள் : ஆ.வின்சென்ட் பால்ராஜா