காஸ்ட்யூம் பைபிள் ரெடி பண்ணினோம்!



சொல்கிறார் வடசென்னை காஸ்ட்யூம் டிசைனர் அம்ரிதா ராம்

பீரியட் ஃபிலிம் அமையும்போதுதான் காஸ்ட்யூம் டிசைனர்களின் திறமை உலகுக்குத் தெரியும். அப்படி வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார் ‘வடசென்னை’ அம்ரிதா ராம். கமல், விக்ரம், தனுஷ், துல்கர் சல்மான், விக்ரம் பிரபு உள்ளிட்ட நடிகர்கள்; தமன்னா, கேத்தரின் தெரசா, பூஜா ஹெக்டே, அஞ்சலி, ஆண்ட்ரியா... என நடிகைகளின் குட் புக்கில் இவர் இருக்கிறார். ‘‘நிறையப் படங்கள் செய்திருக்கேன். ஆனா, ‘வடசென்னை’ ரொம்பவே ஸ்பெஷல். இப்படிப் படங்கள் அமையறது ஒரு டிசைனருக்கு வரம். நல்வாய்ப்பு கொடுத்த வெற்றிமாறன் சாருக்கு தேங்க்ஸ்...’’ நெகிழும் அம்ரிதா ராம், மிஷ்கினின் ‘முகமூடி’யில் அறிமுகமானவர்.

‘‘பூர்வீகம் சென்னை. எங்க ஃபேமிலியில டாக்டர்ஸ், என்ஜினியர்ஸ் நிறையபேர் இருக்காங்க. சினிமா வந்தது நான்தான். அமெரிக்கால ஃபேஷன் டிசைனிங் கோர்ஸ் முடிச்சுட்டு இங்க வந்து விளம்பரங்கள், கார்ப்பரேட் ஃபிலிம்ஸ்னு ஒர்க் பண்ணினேன். அந்த டைம்ல மிஷ்கின் சார் ‘முகமூடி’க்காக ஃபேஷன் பத்தி டெக்னிக்கலாவும் தெரிஞ்ச ஒரு டிசைனரை தேடிட்டிருந்தார். போய்ப் பார்த்தேன். அப்படித்தான் அந்தப் படம் கிடைச்சது.‘முகமூடி’ ஹீரோயின் பூஜாஹெக்டே, இப்ப டோலிவுட்ல கலக்கறாங்க.

இப்பவும் அவங்களோட டச்ல இருக்கேன். ‘நாம சேர்ந்து ஒர்க் பண்ற மாதிரி கண்டிப்பா படங்கள் அமையும் அம்ரிதா’னு சொல்லியிருக்காங்க. அப்புறம் ‘சிவலிங்கா’, ‘காஞ்சனா 2’ல ஸ்பெஷல் லுக்குக்கு ஒர்க் பண்ணினேன். விக்ரம்பிரபுவோட ‘வீரசிவாஜி’, ‘நெருப்புடா’, விக்ரம் சாரோட ‘ஸ்கெட்ச்’னு வரிசையா படங்கள் அமைஞ்சது...’’ என ஆனந்தமாகும் அம்ரி, ‘வடசென்னை’க்கு வந்தது சுவாரஸ்யமான விஷயம். ‘‘‘விசாரணை’ ஷூட்டிங் அப்ப வெற்றிமாறன் சார் கூப்பிட்டு ‘வடசென்னை’ பத்தி சொன்னார். அப்புறம் சில மாதங்களுக்குப் பிறகுதான் அதோட ஷூட்டிங் ஆரம்பமாச்சு. அதுக்குள்ள ஒவ்வொரு கேரக்டரோட லுக், அவங்க தன்மை, காஸ்ட்யூம் பத்தி எல்லாம் வெற்றி சார் விளக்கினார்.

அதை வைச்சு ‘காஸ்ட்யூம் பைபிள்’ ரெடி பண்ணினேன். அதாவது டிரஸ் டிசைன்ஸ், மெட்டீரியல், கலர்ஸ், ஸ்கெட்ச்... இதெல்லாம் சேர்ந்த டைரிதான் எங்க மொழில ‘காஸ்ட்யூம் பைபிள்’!எல்லா படங்களுக்கும் இப்படி ரெடி பண்ண வேண்டியதில்ல. ஆனா, சிலதுக்கு அவசியம். ‘வடசென்னை’ 80களின் பிற்பகுதி, 90கள்ல வாழ்ந்தவங்க கதை. நெட்ல ரெஃபரன்ஸ் கிடைக்கலை. பழைய படங்கள்ல இருந்து எடுக்காதீங்கனு டைரக்டர் ஏற்கனவே சொல்லியிருந்ததால நேரடியா சில ஏரியாக்களுக்கு போனேன். அங்க ஃபீல்ட் ஒர்க் பண்ணினப்ப சில போட்டோ ஆல்பங்கள் கிடைச்சது. வெற்றி சாரும் தன் பங்குக்கு சில ஆல்பங்கள் கொடுத்தார்.

பாரீஸ் கார்னர்ல இருக்கிற சில பழைய குடோன்களுக்கு போய் பல வருஷங்களா விக்காம ஏதாவது துணிகள் இருக்கானு தேடி வாங்கினோம். ஸ்பாட்டுலயே டெயிலர் வச்சு தைச்சு தயார் நிலைல வைச்சோம். சில துணிகள் ரொம்ப பழைய துணியா தெரியணும். இதுக்காக அதை 10 - 15 முறை வாஷ் பண்ணி பயன்படுத்தினோம். ஒவ்வொரு காஸ்ட்யூமுக்குமான அக்சசரீஸையும் தேடிப் பிடிச்சு கொண்டு வந்தோம். மூக்கு குத்திக்காம இருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் அணிஞ்ச மூக்குத்தி, தனுஷ் சாரோட டபுள் பெல்ட் பேன்ட், பவர் ஷூ, டீ ஷர்ட்... எல்லாம் இப்ப பேசப்படறதை கேட்கறப்ப சந்தோஷமா இருக்கு.

ஐஸ்வர்யா ராஜேஷும், ஆண்ட்ரியாவும் ஸ்பாட்ல பழக்கமாகி இப்ப பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸா ஆகிட்டாங்க. லன்ச் பிரேக்குல ‘எந்த ஹோட்டல்ல ஆர்டர் பண்ணலாம்? எது எங்க ஸ்பெஷலா இருக்கும்’னு  டிஸ்கஸ் பண்ணுவோம்! ஈசிஆர் பக்கம் தாபாக்கள், ஷாப்பிங்னு பிரேக் அப்ப சட்டுனு கிளம்பிடுவோம். நானும் ஆண்ட்ரியாவும் விண்டோ ஷாப்பிங் பண்ணிட்டு திரும்பினா... ஐஸ் பை பையா ஷாப்பிங் பண்ணிட்டு வந்து நிப்பாங்க! நான் ப்யூர் வெஜ். ஆனா, அசைவம் நல்லா சமைப்பேன். தனுஷ் சார் ஒரு நாள் லன்ச் அப்ப, ‘எங்கம்மா செய்ற தயிர் சாதம் பிரமாதமா இருக்கும்’னு எங்க எல்லாருக்கும் கொடுத்தார்.

இப்படி பல மறக்க முடியாத நினைவுகளை ‘வடசென்னை’ கொடுத்திருக்கு!’’ என்று சொல்லும் அம்ரி, கமலுக்கும் காஸ்ட்யூம் டிசைனராக இருந்திருக்கிறார். ‘‘‘விஸ்வரூபம்’ புரமோஷன்களுக்கு காஸ்ட்யூம் ஒர்க் பண்ணியிருக்கேன். தனியார் சேனல்ல அவர் நிகழ்ச்சி தொகுத்து வழங்கினப்ப அவர் காஸ்ட்யூம்ஸை டிசைன் பண்ணினேன். காஸ்ட்யூம்ல அவர் அப்டேட்டா இருக்கார். இப்ப ‘லீசா’, ‘மேகாலயா’, ‘நாடோடிகள் 2’, த்ரிஷாவின் ‘பரமபத விளையாட்டு’னு வரிசையா ஒர்க் பண்ணிட்டிருக்கேன்...’’ புன்னகைக்கிறார் அம்ரிதா ராம்.

- மை.பாரதிராஜா