லவ் இல்லாத லைஃப் போரடிக்கும்! : பியார் பிரேமா காதல் டீம் சொல்லும் மெசேஜ்
யூத்ஃபுல் காதலும் கலர்ஃபுல் கவிதையுமாக பூத்துக் குலுங்கும் ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக புரொமோஷன் ஆகியிருக்கிறார்  இசையமைப்பாளர்  யுவன் ஷங்கர் ராஜா. நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது புது ஸ்டூடியோ, டெக்னோ உலகமாகக் காட்சி யளிக்கிறது. ஹாலின்  உள்ளே ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் ‘Hold me now’ வைரல் ஹிட் பாடலான ‘போதும்டி உன் மின்னல் தட்டி தரை சாயுவேன்... பேசுடி உன்  வாழ்த்து போதும் நான் வாழுறேன்...’ என ஹரீஷ் கல்யாண் கைகளில் ஹார்ட்டின் சிம்பலோடு டான்ஸ் மூவ்மென்ட்டில் ‘ஹம்’மிக் கொண்டிருந்தார்!அதை லாங் ஷாட்டில் இருந்தபடி வைத்த கண் வாங்காமல் தன் மேக்கப் டச்சிங்கை நிறுத்திவிட்டு லுக் விட்டார் ரைசா வில்சன். ‘‘என்ன ஆச்சர்யம்!  நீங்க இவ்வளவு நல்லா பாடுவீங்கனு தெரிஞ்சிருந்தா இந்த ஆல்பத்துல உங்களைப் பாட வைச்சிருப்பேனே பிரதர்!’’ என யுவன் புருவத்தை உயர்த்த...  லேசான வெட்கத்துடன் குஷியானார் ஹரீஷ்.

‘‘சின்ன வயசுல இருந்தே மியூசிக்னா இஷ்டம் சார். இந்துஸ்தானி தெரியும். நடிக்க வரலைனா பாடகராக முயற்சி செய்திருப்பேன். நான் பாடின ‘I’m  single...’ இண்டிபெண்டன்ட் பாடல் நல்லா ரீச் ஆகியிருக்கு! கீபோர்டு கூட நல்லா ப்ளே பண்ணுவேன்....” என யுவனிடம் ரசிகராக சிலிர்த்த ஹரீஷ்,  ‘‘நீங்க லவ்லி பர்சன் சார்... ஒருநாள் கூட தயாரிப்பாளர் யுவனா உங்களைப் பார்த்ததேயில்ல!’’ என நெகிழ்ந்தார். ‘‘என் ரசிகர்களுக்கு ஏதாவது  பண்ணணும்னு ஆசைப்பட்டேன். ஒரு ஆல்பமாகவோ இல்ல கன்சர்ட் ஆகவோ பண்ணினா அது சாதாரணமா போய்டும். அதுவே ரொமான்டிக் ஃபிலிமா  பண்ணினா நிறைய பாடல்கள் வைக்கலாம்னு தோணுச்சு. கதைகள் கேட்க ஆரம்பிச்சேன். முதல் கதையே இளன்கிட்ட இருந்து ஆரம்பமாச்சு.  கேட்டதுமே பிடிச்சுப் போச்சு. உடனே புராஜெக்ட்டை தொடங்கிட்டோம்.   

ராஜராஜன் சாரும், இர்ஃபான் மாலிக்கும் இணைத் தயாரிப்பாளரா கைகோர்த்தாங்க. இப்ப எல்லா பக்கத்துல இருந்தும் வரவேற்பு கிடைக்கிறதைப்  பார்க்கிறப்ப உற்சாகமா இருக்கு!’’ மலர்ச்சியுடன், தான் தயாரிப்பாளரான நிகழ்வை சுருக்கமாகப் பகிர்ந்தார் யுவன். இதற்காகவே காத்திருந்ததுபோல்,  ‘‘தயாரிப்பாளர் அனுபவம் எப்படி இருந்தது சார்..?’’ என்று கேட்டார் ஹரீஷ்.‘‘ரிப்போர்ட்டரா நீங்க ஆகியிருக்கணும்!’’ கலகலவென்று சிரித்தார் யுவன்.  ‘‘கொஞ்சம் ஸ்ட்ரெஸ்ஃபுல்லாதான் இருந்தது ஹரீஷ். ஆனா, முதல் சிங்கிளா ‘High on Love...’ ரிலீஸ் செஞ்சதும் அதுக்கு மக்கள் கொடுத்த  வரவேற்பு இருக்கே... எல்லா ஸ்ட்ரெஸ்ஸும் பறந்து போச்சு!

இப்ப தொடர்ந்து படம் தயாரிக்கிற ஐடியால இருக்கேன். அடுத்த பட வேலைகள் ஆரம்பிச்சாச்சு!’யுவன் இப்படிச் சொல்லி முடித்ததுமே ‘‘கங்கிராட்ஸ்  சார்’’ என புன்னகை பொக்கே வீசினார் ரைசா. இதுதான் தக்க சமயம் என கொளுத்திப் போட முடிவு செய்தோம்!‘‘டிரெய்லர்ல ‘அப்பா வீட்ல இல்ல. நான்  லேட்டா போனாலும் பிரச்னை இல்ல. மெடிக்கல் ஷாப்ல உனக்கு ஏதாச்சும் வேணும்னா வாங்கிட்டு வந்துடு’னு சிம்பாலிக்கா ஹரீஷ்கிட்ட நீங்க ஏதோ  சொல்றீங்க. ஆனா, அதை புரிஞ்சுக்காத வெகுளியா அவர் இருக்காரே... இதைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க ரைசா..?’’ என்று கேட்டதும் ‘‘பாஸ்...  ஒரு நிமிஷம்!’’ என ஹரீஷ் கத்தினார்!

‘‘டிரெய்லரைப் பார்த்துட்டு முடிவு செய்யாதீங்க. அதுக்குப் பிறகு என்ன நடந்தது தெரியுமா..?’’ கண்களைச் சிமிட்டியவர், ‘‘நோ! சொன்னா சஸ்பென்ஸ்  போயிடும். படம் பார்த்து தெரிஞ்சுக்குங்க. பட ஸ்டில்ஸைப் பார்த்துட்டு எனக்கும் ரைசாவுக்கும் கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆகியிருக்கிறதா  சொல்றாங்க. ஆக்சுவலா என் அப்பாவா நடிச்சிருக்கிற பாண்டியன் சார் (‘ராஜா ராணி’யில் ஜெய் அப்பா வாக நடித்தவர்), அம்மாவா வாழ்ந்திருக்கிற  ரேகா மேம்... இவங்களோடு இருக்கிற பாண்டிங் அவ்வளவு டச்சிங்கா வந்திருக்கு! எங்கப்பா இந்த இண்ட்ஸ்ட் ரிலதான் இருக்கார். குறைவான  படங்கள்லதான் நடிச்சிருக்கேன். ஆனா, சரியான படங்கள்ல என் திறமையைக் காட்டியிருக்கேன்னு நம்பறேன். தப்பான படங்கள் எதுவும் செய்யலை  என்பதே ஆறுதலா இருக்கு!

‘பொறியாளன்’, ‘வில் அம்பு’ல நல்ல பெயர் கிடைச்சது. இந்த ‘பியார் பிரேமா காதல்’ என்னை அடுத்தகட்டத்துக்கு கூட்டிட்டுப் போயிருக்கு. பாடல்  காட்சிகளுக்காக வெளிநாடு போனது இந்தப் படத்துக்குத்தான்! ரெண்டு பாடல்கள் ஜார்ஜியா பக்கம் அசர்பைஜான்ல ஷூட் செய்திருக்கோம். ‘இங்கயே  ஷூட் பண்ணலாமே’னு யுவன் சார் சொல்லவே இல்ல!இயக்குநர் இளன், தெளிவானவர். சின்சியரானவர். ஷூட் போனதும்தான் என்னைவிட அவர்  இளையவர்னு தெரிஞ்சது! ஸ்கிரிப்ட்ல கலக்கியிருக்கார்... எல்லாம் நிறைவா இருக்கு. ஆனா, ஒண்ணே ஒண்ணு மட்டும் புரியலை...’’ என ஹரீஷ் சஸ்பென்ஸ் வைத்தார்.‘‘எதைச் சொல்ற..?’’ புருவத்தை உயர்த்தினார் ரைசா.‘‘என்ன புரியாத மாதிரி கேட்கற? உன் பேருக்கான அர்த்தம்தான்!  ‘ரைஸா’னா லெமன் ரைஸா..?’’

‘‘ஸ்பாட்ல கலாய்க்கறது பத்தாதுனு இங்கயுமா..?’’ செல்லமாக அலுத்துக்கொண்ட ரைசா, ‘‘ஆக்சுவலா என் பெயருக்கான அர்த்தம் எனக்கே தெரியாது!  ஹீப்ரூல ரைசானா குயின், பியூட்டி, ரோஸ்... இப்படி நிறைய அர்த்தம் இருக்கறதா சொல்வாங்க. ஆனா, அதெல்லாமே...’’ என ரைசா சொல்லிக்  கொண்டிருக்கும் போதே, ஹரீஷ் இடைமறித்தார்.‘‘உனக்கு செட் ஆகாதுனு சொல்ல வர்ற! அப்படித்தானே..?’’ சொன்ன ஹரீஷை செல்லமாக  முறைத்துவிட்டு நம்மை நோக்கித் திரும்பினார். ‘‘இப்படித்தான் சார் படத்தையும் ஜாலியா, கேஷுவலா ஷூட் செய்திருக்காங்க. என் முதல் படமே யூத்ஃபுல்லா அமைஞ்சிருக்கு. மொத்தம் 12 பாடல்கள். இதைவிட ஒரு புது ஹீரோயினுக்கு வேறென்ன வேணும் சொல்லுங்க! என் பூர்வீகம் தில்லி. ஸ்கூல்  படிப்பை ஊட்டிலயும், காலேஜ் படிப்பை பெங்களூர்லயும் முடிச்சேன். ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறப்பவே மாடலிங் பண்ண ஆரம்பிச்சுட்டேன்...’’ என  சுருக்கமாக தன் பயோடேட்டாவை ஒப்பித்தார்!

‘‘எல்லாம் சரி... ‘பியார் பிரேமா காதல்’னா என்னனு தெரியுமா..?’’ நம்மைப் பார்த்துக் கண்ணடித்து விட்டு ஹரீஷிடமும் ரைசாவிடமும் பொதுவாக  இந்தக் கேள்வியைக் கேட்டார் யுவன்!‘‘சார்...’’ அலறிய ஹரீஷ், சட்டென கூலானார். ‘‘லவ்னா அது ஒரு பொண்ணைக் காதலிக்கறது மட்டுமில்ல.  நண்பன் மேல வர்ற பாசமும் லவ்தான். நம்ம அப்பா, அம்மாவையும் காதலிக்க முடியும். லவ்தான் இந்த உலகமே! So, Spread Love... இதுதான் என்  பாலிசி...’’ என்றார்.தலையசைத்து இதை ஆமோதித்தார் ரைசா. ‘‘கரெக்ட். லவ் இல்லாம இந்த உலகத்துல வாழ்றதே வேஸ்ட். வேலை வேலைனு  எந்திரத்தனமா வாழ்றது எனக்குப் பிடிக்காது. எதுவா இருந்தாலும் அதை காதலோட அப்ரோச் பண்ணணும்!’’‘‘சரியா சொன்ன ரைசா...’’ துள்ளிக் குதித்த  ஹரீஷ், பக்கத்தில் இருந்த ஃப்ளவர் வாஸிலிருந்து ஒற்றை ரோஜாவை எடுத்து ரைசாவிடம் கொடுத்தார்! ‘‘புரொட்யூசர் முன்னாடியே ரொமான்ஸா?’’  என யுவன் செல்லமாக சவுண்ட் விட... ஹரீஷும் ரைசாவும் ‘பியார் பிரேமா காதல்’ என தங்கள் கட்டை விரலை உயர்த்த... இளமை
அங்கு பூத்துக் குலுங்கியது!

-மை.பாரதிராஜா
படங்கள் : ஆ.வின்சென்ட் பால்