காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்



யுவகிருஷ்ணா - 70

இறுதி அத்தியாயம்.ஆம். இத்தொடரின் முதல் அத்தியாயம் நினைவில் இருக்கிறதா?இறுதி அத்தியாயமும் அதுவேதான்.முதல் அத்தியாயத்தின் கடைசி  சில பத்திகள் மட்டும் உங்கள் நினைவுறுத்தலுக்காக…மார்ட்டின் கவலையாக, பிணமாகக் கிடந்தவர்களின் உடலைப் புரட்டி முகங்களைப்  பார்த்துக்கொண்டே வந்தார்.“நோ. அவன் தப்பிச்சிட்டான்னு நெனைக்கிறேன்...” இரண்டு கைகளையும் தலையில் வைத்தவாறு அப்படியே சோபாவில்  சாய்ந்தார்.முதல் தளத்திலிருந்து உற்சாகக்குரல் கேட்டது.“சார், இது பாப்லோ!”வெளிர்நீல ப்ளூ ஜீன்ஸ், கருநீல டீஷர்ட் அணிந்திருந்த அந்தப்  பிணத்தைத் திருப்பிப் போட்டார். கனமான தொப்பை. தாடி மறைத்திருந்த முகத்தை உற்று நோக்கினார்.யெஸ். அவரேதான். தி கிரேட் காட்ஃபாதர்.

கோகைன் மன்னன். குற்றவியல் சக்கரவர்த்தி. அமெரிக்காவுக்குத் தண்ணி காட்டிய அசால்ட்டு தாதா. போதை உலகின் பேரரசன். தி ஒன் அண்ட்  ஒன்லி, பாப்லோ எமிலோ எஸ்கோபார் கேவிரியா.அந்த நாள், டிசம்பர் 2, 1993.முந்தைய நாள்தான் தன்னுடைய 44வது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடியிருந்தார் எஸ்கோபார்.“ஜெய் கொலம்பியா! எஸ்கோபாரை நாம போட்டுட்டோம்...” காவல் தலைவர் மார்ட்டின் உற்சாகமாகப்  பெருங்குரல் எடுத்து கத்தினார்.காட்ஃபாதரின் இறுதிநாள் குறித்து போலீஸ் சொல்லும் கதை இதுதான்.பிறந்தநாள் என்பதால் நல்ல நிறை போதையில்  இரவு அப்பார்ட்மெண்டுக்கு வந்த பாப்லோ எஸ்கோபார், தன்னுடைய நண்பர்கள் சிலரோடு போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருந்திருக்கிறார்மெதிலின் நகர் முழுக்கவே தொலைபேசி பேச்சுகள் அப்போது ஒட்டுக் கேட்கப்பட்டுக் கொண்டிருந்தன. பாப்லோ அன்று கொஞ்சம் அசட்டையாக  இருந்துவிட்டதால் மாட்டிக் கொண்டார்.

உண்மையில் என்ன நடந்தது என்பது இன்றுவரை யாருக்கும் தெரியாது. போலீஸ் என்ன சொல்லுகிறதோ, அதைத்தான் அரசாங்கம் மக்களிடம்  சொல்லும். அரசாங்கங்கள் சொல்லுவதுதான் வரலாறு.“பாப்லோ எஸ்கோபாரை உயிரோடு பிடிக்கத்தான் நினைத்தோம். ஆனால், அவருடன்  இருந்தவர்கள் எங்களிடம் சரணடைய விரும்பாததால்  சுட ஆரம்பித்தார்கள். வேறு வழியின்றி நாங்களும் சுட்டோம்...” என்றுதான் போலீஸ் கதை  விடுகிறது.ஆனால், இறுதி நாட்களில் அரசாங்கத்தோடு சமரசம் செய்துகொண்டு சரணடைய பாப்லோ எவ்வளவு முயற்சித்தார் என்பது, அந்தப்  பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த சிலருக்குத்தான் தெரியும். அந்த சிலரும் கூட அரசாங்கம் மீது இருந்த அச்சத்தால் அப்போது வாய் மூடி  மவுனியாகி விட்டார்கள். வெகுகாலத்துக்குப் பிறகே, ஓரிரு உண்மைகள் வெளியாகின. காலம் கடந்து சொல்லப்படும் உண்மைகள், பொய்களைவிட  மோசமானது.

பாப்லோவின் உடலை அடையாளம் காட்ட அவரது தாயாரும், சகோதரியும் சம்பவ இடத்துக்கே அழைத்துச் செல்லப்பட்டார்கள். அவர்கள் உறுதி  செய்தபிறகே பாப்லோவின் மரணம் அதிகாரபூர்வமாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.பாப்லோ, தன்னுடைய மரணத்தை ஓரிரு நாள் முன்கூட்டியே  அறிந்திருந்தார் என்றும் சொல்கிறார்கள். எனவேதான், இறப்பதற்கு முந்தைய நாள், தன்னுடைய மகளுக்கு ஒலிப்பதிவு செய்திருந்த கேசட் ஒன்றை  அனுப்பியிருந்தார்.அதில், “கடவுள் என்னை விரும்புகிறார். எனவே, கடவுள் வாழும் சொர்க்கத்துக்கு சென்று வாழலாம் என்று நினைக்கிறேன்.  சமூகத்துக்கு நல்ல பெண்ணாக இரு. உன் தாய்க்கு நல்ல மகளாக இரு. எதைப்பற்றியும் எவரைப் பற்றியும் கவலைப்படாதே. நான் சொர்க்கத்தில்  இருந்து உன்னை ஆசீர்வதித்துக் கொண்டே இருப்பேன்...” என்று உருக்கமாகச் சொல்லியிருந்தார்.

இந்த கேசட்டை அவரது மகள் கேட்கும்போது, பாப்லோ உயிரோடு இல்லையென்பது குறிப்பிடத்தக்கதுஅன்றைய தினம் பாப்லோ எஸ்கோபாரின் மகன்  ஜுவான் பாப்லோ, அரசாங்கம் மீது கண்மூடித்தனமான கோபத்தில் இருந்தான். “என் தந்தையின் படுகொலைக்குக் காரணமானவர்கள் அத்தனை  பேரையும் தேடித்தேடி பழிவாங்குவேன்...” என்று ஆவேசமாக வானொலி ஒன்றுக்கு பேட்டி கொடுத்தான்.சிறையில் இருந்த பாப்லோவின் சகோதரர்  ராபர்ட்டோ மற்றும் மெதிலின் கார்டெல்லின் முக்கியஸ்தர்கள் சிலர் ஜுவானைத் தொடர்பு கொண்டு, இந்த சபதத்துக்காக கண்டித்தார்கள். அவனை  ஆசுவாசப்படுத்தியவர்கள் உடனடியாக அரசாங்கத்திடம் மன்னிப்பு கோரச் சொன்னார்கள்.

மறுநாள் சுமார் இருபத்தைந்தாயிரம் மக்கள் பங்கேற்க, கொலம்பியாவின் ராபின்ஹுட் பாப்லோ எஸ்கோபாரின் இறுதி ஊர்வலம் நடந்தது. இறுதி  ஊர்வலத்தின்போது ஆறு பாடல்களைப் பாடும் சடங்கு கொலம்பியாவில் உண்டு. தன்னுடைய மரணத்துக்கு யார் யார் பாடவேண்டும் என்பதையும்  ஏற்கனவே பாப்லோ சொல்லியிருந்தார்.டிசம்பர் 3, 1993 அன்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தலைப்புச் செய்தியாக பாப்லோவின் மரணத்தை  உலகத்துக்கு அறிவித்திருந்தது.“பாப்லோ எஸ்கோபார், கொலம்பிய சேரிகளில் உருவாகி உலகின் மிகக் கொடூரமான கொலைகாரனாகவும், போதை  சாம்ராஜ்யத்தின் அதிபதியாகவும் திகழ்ந்தவன் கொல்லப்பட்டான். இனி போதைத் தொழில் ஒழியும்...”அமெரிக்காவின் குரலையேதான் ஊடகங்களும்  ஒலித்தன.

ஆனால், பாப்லோவின் மரணத்தால் போதைத் தொழில் ஓய்ந்துவிட்டதா என்ன?இன்றும் கூட கோகைன் உற்பத்தியில் நம்பர் ஒன் நாடு  கொலம்பியாதான். அதுபோலவே கோகைன் பயன்பாட்டில் நம்பர் ஒன் நாடாக விளங்குவதும் அதே அமெரிக்காதான். பதினைந்துக்கும் மேற்பட்ட  ஆயுதம் தாங்கிய அமைப்புகள் இன்றும் போதைத் தொழிலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.பாப்லோவை ஒழிக்க ஒட்டுண்ணிகளாக  அரசாங்கத்தோடும், அமெரிக்காவோடும் இணைந்து செயல்பட்ட காலி கார்டெல் உள்ளிட்ட காவாலி அமைப்புகள், எஸ்கோபாரின் மரணத்துக்குப் பிறகு  மென்மேலும் வளர்ந்தன. அவற்றை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் கொலம்பியா திணறியது. எஸ்கோபார் ஒருவரைத் தீர்த்துவிட்டால் நாடு  சுபீட்சமாகிவிடும் என்று அலறிக் கொண்டிருந்த அரசாங்கம் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இந்த சில்லறை கார்டெல்களை எதிர்
கொண்டது.

பாப்லோவின் மீது அவர் வாழ்நாளின் போது அமெரிக்கா மற்றும் கொலம்பிய அரசுகளால் சாட்டப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் பலவும்  பின்னாளில் டுபாக்கூர் என்பது நீதிமன்ற விசாரணைகளில் அம்பலமானது. பாப்லோ எஸ்கோபார் ஒன்றும் உத்தமரல்ல என்றாலும், இவர்கள்  கட்டமைத்தது மாதிரி அயோக்கியரல்ல என்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டதுபாப்லோ வசித்த பண்ணை வீடுகள், நேபோலிஸ் தீவு சாம்ராஜ்யம்  ஆகியவை தீம் பார்க் போல அமைக்கப்பட்டு, இன்று தினமும் ஆயிரக்கணக்கானோர் அவற்றைக் கண்டுவிட்டுச் செல்கிறார்கள்.பாப்லோ மறைந்து  இருபத்தைந்து ஆண்டுகள் ஆகியும் அவர் குறித்து இன்றும் பத்திரிகைகளில் கட்டுரைகள், நூல்கள், டிவி தொடர்கள், சினிமாக்கள் தொடர்ந்து  எடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றை கொலம்பியர்கள் மட்டுமின்றி உலகெங்கும் வாழ்பவர்கள் ஆவலோடு வாசிக்கிறார்கள், பார்க்கிறார்கள்.அமெரிக்கா எதைச் சொன்னாலும் அது ‘டூப்’பாகத்தான் இருக்கும்; அமெரிக்கா எவரை எதிர்த்தாலும் அவர் நல்லவராகத் தான் இருப்பார் என்று  அமெரிக்காவின் மீது உலக மக்களுக்கு அப்படியொரு நம்பிக்கை.

(மிரட்டல் ஓய்ந்தது)

ஓவியம் : அரஸ்