கஜினிகாந்த்



ஞாபக மறதியில் தவிக்கும் ஆர்யாவின் ரகளை ராவடியே ‘கஜினிகாந்த்’.தெலுங்கில் எக்கச்சக்க ஹிட்டடித்த ‘பலே பலே மகாடிவோய்’யை  தமிழ்ப்படுத்தி இருக்கிறார்கள். கேரியர் கிராஃபில் தள்ளாட்டமான இடத்தில் இருந்த ஆர்யாவுக்கு இப்போதைக்கு இதைவிட ‘சேஃப்’ கேரக்டர்  கிடைத்திருக்கவே முடியாது. பெரும்பாலும் கலாய் காமெடி டயலாக் டெலிவரிதான் நடிப்பு. அதனால், உறுத்தாமல் பொருந்திப்போகிறது ஆர்யாவின்  துடிப்பு!

ஆர்யாவிடம் வித்தியாசமான குறைபாடு இருக்கிறது. ஒரு வேலையில் ஆழ்ந்திருக்கும்போது அவரது கவனத்தைத் திசை திருப்பிவிட்டால் பழையது  மறந்துவிடும். அதனால் அவர் படுகிற துயரங்கள் கணக்கில் அடங்காது. பிறருக்குத் தெரியாமல் அதை மறைக்கப் பார்த்தும் முடிந்தபாடில்லை. சாயிஷாவின் அப்பா ஆர்யாவின் ஆபீஸிக்கு வர, அவரது வருகையையும் மறக்கிறார். இடையில் ஆள் மாறாட்டங்கள். கடைசியில் உண்மை  எல்லோருக்கும் தெரிய வரும்போது காதல் ஜோடியினர் இணைந்தார்களா... என்பதே க்ளைமேக்ஸ்.ஒவ்வொரு  தடவையும் போக வேண்டிய இடத்தை  மறந்துவிட்டு தவிக்கும்பொழுது உதறல் இருந்தாலும் நடிப்பில் சமாளித்து பாஸ் மார்க் வாங்குகிறார் ஆர்யா. வருங்கால மாமனாருக்காக வெயிட்  பண்ணி, அவர் வந்த சரியான வேளையில் மறக்கும்போது, மாமனாருக்கு ஏற்படுகிற எரிச்சலும், ஏமாற்றமும், ஆர்வமும் நமக்கும் தொற்றிக்கொள்கிறது.

எப்போதும் சந்தானத்திடம் சேர்ந்தே காமெடியில் பின்னும் ஆர்யா, இந்தத் தடவை எல்லோரையும் பின்னுக்குத் தள்ளி ‘ஒன் மேன் ஷோ’ ஆனதே  முன்னேற்றம்தான்!அந்தப் பெண் சாயிஷாவின் முகத்தை வாரத்துக்கு ஒரு தடவை யாவது பார்த்துவிடுகிறோம். மெனக்கெடாமல் அழகு முகத்தைப்  பார்க்க வைத்துவிட்டு நடிப்பில் ஏகமாகப் பின்வாங்குகிறார். ஆனால், முந்திய படங்களுக்கு பரவாயில்லை! கொஞ்சம் கொஞ்சமாக ஆர்யாவின் காதலை  ரகசியமாக ரசிப்பதும், பிறகு அவருடன் கொஞ்சுவதுமாக ஈர்க்கப் பார்க்கிறார். ஞாபக மறதியில் கார் சாவியையே ஆர்யா பிச்சை போடும்போது  பதற்றப்படாமல் ரசிப்பது அழகு. அவரது நடனத்தின் அசைவுகள் கவன ஈர்ப்பு.

ஆர்யாவின் நண்பர்களாக ஒன்றுக்கு மூன்றாக சதீஷ், கருணாகரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் கூட்டணி அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்கள். அப்பா  அம்மாவாக ‘ஆடுகளம்’ நரேன் - உமா பத்மநாபன் கலகல. திடீரென மாமனார் சம்பத் உள்ளே நுழையும்போது பாத்ரூமில் பதுங்கிக்கொண்டு செய்யும்  காமெடி சிரிப்பு ரவுசு. சம்பத், காளி வெங்கட் பாத்திரங்களும் கதையோடு நல்லவண்ணம் இணைகிறார்கள்.படம் எப்போதோ முடிந்த பிறகும் பிரேக்  பிடிக்காத எக்ஸ்பிரஸாக நழுவி ஓடிக் கொண்டே இருக்கிறது பின்பாதி! அதையும் இயக்குநர் சன்தோஷ் பி.ஜெயக்குமார் சரிப்படுத்தியிருந்தால் இன்னும்  ஓகே ஆகியிருக்கும்.பாலமுரளி பாலுவின் இசை பெரிதாக ஈர்க்கவில்லை. பல்லுவின் ஒளிப்பதிவில் காதல் காட்சிகள் பிரத்யேக அழகு.காமெடியை  ரசித்தால் ‘கஜினிகாந்தை’ ரசிக்கலாம்.

-குங்குமம் விமர்சனக்குழு