பாக்கெட்உணவுகளில் விஷம்!



டி.ரஞ்சித்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பது பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளைத்தான். அயனாவரத்திலிருந்து ஆக்ரா வரை  இவற்றின் விற்பனை படுஜோராக நடக்கிறது. இந்நிலையில் ‘‘பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளில் நான்கை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டால்,  அதில் ஒன்று மரபணு மாற்றப்பட்டதாக உள்ளது. அந்த ஒன்றும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது...’’ என அதிர்ச்சியளிக்கிறது தில்லியைச் சேர்ந்த  ‘சி.எஸ்.இ’ என்னும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையத்தின் சமீபத்திய ஆய்வறிக்கை.

‘‘இந்திய விவசாயத்தில் மரபணு மாற்றம் செய்ய முயற்சித்த நிறுவனங்கள், தங்களது திட்டம் பலிக்காமல் உணவுப்பொருட்கள் பக்கம்  திரும்பியிருக்கிறார்கள். மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகளை அரசு தடை செய்யும்வரை காத்திருக்காமல் அதை நாம் புறக்கணிக்க வேண்டும்.  அதற்கு எந்தெந்த உணவு வகைகள் மரபணு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை மக்கள் அறிய வேண்டும். இதற்காகவே அறிவியல் மற்றும்  சுற்றுச்சூழலுக்கான மையம் இந்த ஆய்வை செய்திருக்கிறது...’’ மெலிதாகப் பேச ஆரம்பித்தார் அனந்து. பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின்  ஒருங்கிணைப்பாளர் இவர்.

‘‘நம் ஊர்களில் பருத்தி விவசாயம் செழிப்பாக இருந்த காலத்தில் பருத்திப்பால், பருத்திக் கொட்டையில் செய்த அல்வா சுலபமாகக் கிடைத்தது.  இப்போது அவை அரிதாகத்தான் கிடைக்கின்றன. காரணம் ‘பி.டி. காட்டன்’ என்கிற மரபணு மாற்றப்பட்ட பருத்தி. அது இங்கே நுழைந்ததால்தான் நம்  பாரம்பரிய பருத்தி விவசாயம் அப்படியே நின்றுபோனது. பி.டி. காட்டனை அரசு தடை செய்திருக்கவேண்டும். ஆனால், செய்யவில்லை. மட்டுமல்ல,  பி.டி. பருத்தியை ‘உண்பதற்கானது அல்ல’ என்ற லேபிளுடன் விவசாயம் செய்ய அரசே தூண்டியது. இதனால் விவசாயிகள் மனம்போன போக்கில்  பி.டி. பருத்தியை உற்பத்தி செய்தார்கள். ஆனால், பருத்தியை உணவாக உண்டு வந்த இந்தியர்களால் பி.டி. பருத்தியையும் விடமுடிய வில்லை.  அதையும் சாப்பிட ஆரம்பித்தார்கள். இந்தியர்களின் இந்த மனநிலைதான் மற்ற மரபணு மாற்றப்பட்ட உணவுகளும் இங்கே நுழைய முக்கிய காரணம்...’’  உண்மையை உடைக்கிற அனந்து, மரபணு மாற்றப்பட்ட உணவுகள் குறித்து இந்திய சட்டம் சொல்வதையும் பகிர்ந்தார்.

‘‘உணவுகளைக் கட்டுப்படுத்த 6 மத்திய அரசு நிறுவனங்கள் இருந்தாலும், மரபணு மாற்றப்பட்ட உணவுகள் குறித்து இந்திய சட்டத்தில் குழப்பமான  சூழலே நிலவுகிறது. இதுபற்றி ஏதாவது பிரச்னை எழும்போது ‘இது என் எல்லையில் வராது’, ‘அது என் எல்லைக்கு அப்பால் உள்ளது’ என்று  அதிகாரிகள் நழுவி விடுகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் கத்தரிக்காய், கடுகில் மரபணு மாற்றத்தை புகுத்த உலக நிறுவனங்கள் முனைந்தன.  இந்திய அரசும் அதை வரவேற்கத் தயாராக இருந்தது. ஆனால், பல முனைகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பவே அந்தத் திட்டம் நிறைவேறவில்லை.  இந்தச் சூழலில் வெளிநாட்டு பி.டி. பயிர்களிலிருந்து தயாராகும் உணவுகள் பதப்படுத்தப்பட்டு மறைமுகமாக இங்கே நுழைந்துவிட்டன. அரசிடம்  இதைப்பற்றிக் கேட்டால் ‘பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் கட்டுப்படுத்த தங்களிடம் அதிகாரம் இல்லை...’ என்று கைவிரிக்கிறது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கும் போட்டாகிவிட்டது. ஆனாலும் அரசு மவுனமே சாதிக்கிறது. இதுபோக துளசி, கம்பு, கடுகு, அரிசி போன்ற  50 வகையான பயிர்களில் மரபணு மாற்றத்தைக் கொண்டுவர முயற்சிகள் துரிதமாக நடக்கின்றன...’’ என்ற அதிர்ச்சியான செய்தயுடன் அனந்து முடிக்க,  சுற்றுச்சூழல் ஆர்வலரான சுல்தான் இஸ்மாயில் மரபணு மாற்று தொழில்நுட்பம் பற்றி விளக்க ஆரம்பித்தார்.‘‘ஒருவித வெளிநாட்டுக் கடுகிலிருந்து  தயாரிக்கப்படும் ‘கனோலா’ என்னும் எண்ணெய், சோயாவில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள், மக்காச்சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பண்டங்கள், இந்தியாவில் பி.டி. பருத்தியிலிருந்து தயாராகும் பருத்தி எண்ணெய்... உள்ளிட்டவை சி.எஸ்.இ ஆய்வில் முக்கிய  இடங்களைப் பெறுகின்றன.

உணவுகளைக் கட்டுப்படுத்த இந்தியாவில் சட்டம் இல்லை என்றாலும் அந்த உணவுப் பொருட்களில் லேபிள்களை ஒட்டவாவது அரசு சட்டம்  இயற்றலாம். உலகளவில் சைவத்துக்கு பச்சை லேபிளும், அசைவத்துக்கு சிவப்பு லேபிளும் ஒட்டுவது போல் மரபணு மாற்றப்பட்ட உணவுகளுக்கும்  அரசு லேபிள் ஒட்டும் முறையை சட்டப்படி கொண்டுவரலாம்.இதனால் மக்கள் தங்களுக்கு வேண்டிய உணவைத் தேர்வு செய்ய ஒரு வாய்ப்பு  கிடைக்கும்...’’ என்கிற சுல்தான், மரபணு மாற்றப்பட்ட உணவுகள் குறித்து மேலும் சில தகவல்களைப் பகிர்ந்தார்.‘‘ஒரு மாங்காயுடன் இன்னொரு  மாங்காயை ஒட்டினால் ஒட்டுமாங்காய் எனலாம். ஒரு எலுமிச்சைப் பழத்துடன் இன்னொரு எலுமிச்சைப் பழத்தை ஒட்டி விவசாயம் செய்தால் ஒட்டு  எலுமிச்சை கிடைக்கும். ஒரு பயிருடன் அதே குடும்பத்தைச் சேர்ந்த இன்னொரு பயிரை ஒட்டினால் மரபு மாறாது. மாறாக விளைச்சலே அதிக
மாகும்.

ஆனால் ‘பி.டி.’ என்கிற மரபணு மாற்றத்தில் பாக்டீரியா போன்ற ஒரு நுண்ணுயிரியிலிருந்து பயிருக்கான மாற்றம் கொண்டு வரப்படுகிறது. இதனால்  நல்லதையே கொண்டுவந்த ஒரு பயிரின் மரபு கெட்டு, தீயதைக் கொண்டுவரும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. இது தொடர்ந்தால் மண் வளம், நீரின்  தன்மை, மனித ஆரோக்கியம்  உட்பட நம் தேசத்தின் மொத்த சுகாதாரமும் கெட்டுவிடும். பி.டி. மாதிரி ‘எச்.டி.’ என்ற இன்னொரு தொழில்நுட்பத்தையும்  அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார்கள். எச்.டி. என்றால் களைக்கொல்லிகள் எனலாம். இந்த எச்.டி. மருந்தை ஒரு பயிருக்கு செலுத்தும்போது அதன்  மரபணு மாற்றம் அடைந்து இயல்பைவிட ஆரோக்கியமாக வளரும். ஆனால், மற்ற செடிகளை எல்லாம் களைகள் என நினைத்து அது அழித்துவிடும்.

இதனால் எச்.டி. மருந்து செலுத்தப்பட்ட செடிகளைத் தனியேதான் வளர்க்கவேண்டும். இது வெளிநாடுகளில் சாத்தியமாகலாம். காரணம், இந்தியாவில்  ‘ஊடுபயிர்’ விவசாயத்தின்படி பல செடிகளையும் ஒரே நிலத்தில்தான் பயிரிடுகிறோம். இது இந்திய விவசாயத்தின் ஒரு சிறப்பான அம்சம். பல  செடிகளும் ஒரே இடத்தில் வளர்வதால்தான் பயிர்கள் அமோக வளர்ச்சியை அடைகின்றன என்பது இந்திய விவசாயம் கண்டுபிடித்த உண்மை. இதையெல்லாம் மறந்து பி.டி. என்றும், எச்.டி. என்று மரபு மாற்றப்பட்ட விவசாயத்துக்கும், உணவுக்கும் மாறுவது இந்தியாவின் உணவுப்  பாரம்பரியத்தையே கெடுத்துவிடும்...’’ என்கிறார் சுல்தான் இஸ்மாயில்.

ஆய்வு

39 பாக்கெட் உணவுகள், 16 சமையல் எண்ணெய் வகைகள், 8 குழந்தைகளுக்கான உணவுகள், 2 புரோட்டீன் சப்ளிமென்ட் என்று மொத்தம் 65  வகையானஉணவுப் பொருட்களை ஆய்வுக்காக எடுத்துக்கொண்டது அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம். ஆய்வு முடிவில் 21 உணவுப்  பொருட்களில் மரபணு மாற்றப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த 65 உணவுப் பொருட்களில் 35 உணவுகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி  செய்யப்பட்டவை, 30 இந்தியாவில் தயாரானவை.

ரிசல்ட்

மரபணு மாற்றப்பட்ட சில உணவுகள்: ஒரிஜினல் சிரப், டார்க் கார்ன் சிரப், க்ரிஸ்பி கார்ன் ஸ்நேக்ஸ், ஹாட் அண்ட்  ஸ்பைசி பாப்கார்ன், சோய்   இன்ஃபன்ட்  ஃபார்முலா, பட்டர் அண்ட் கார்லிக் க்ரோடன்ஸ், பான் கேக் சிரப் ஒரிஜினல், ஃப்ரூட் லூப்ஸ்.மரபணு மாற்றப்படாத சில உணவுகள்:  கெல்லோக் கார்ன் ஃப்ளேக்ஸ், ஸ்வீட் கார்ன் சூப், சோய் சாஸ் க்ளாசிக், டார்க் சோய் சாஸ், சோயா சங்ஸ், ஸ்வீட் கார்ன் சிக்கன் சூப், பாப்கார்ன்  க்ளாசிக் சால்ட், பிரிங்கில்ஸ் பொட்டேட்டோ கிரிஸ்ப் ஒரிஜினல்.