COFFEE TABLEஜிம் ஐஸா!

பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாமின் ‘சதயமேவ ஜெயதே’ படம் இம்மாதம் வெளியாகிறது. அதன் ஹீரோயின் ஐஸா ஷர்மாதான் இப்போது அங்கே  ஹாட் டாபிக். ஐஸாவின் இன்ஸ்டா பக்கத்துக்குச் சென்றால், ஜிம் ஒர்க் அவுட்டில் இத்தனை வகைகள் உள்ளதா... என வியக்க வைக்கிறது பொண்ணு. வகை வகையான ஒர்க் அவுட்களில் லைக்குகளை அள்ளிக்கொண்டிருக்கிறார் அம்மணி. இவர் நேகா ஷர்மாவின் சகோதரி என்பது கூடுதல் தகவல்.

இனி வெப்பம் அதிகரிக்கும்!

‘‘இப்போது இருப்பதைவிட 2080ல் வெயிலின் அளவு அதிகமாக இருக்கும். அப்போது பூமத்திய ரேகைக்குப் பக்கத்தில் உள்ள இந்தியா போன்ற  நாடுகளில் வெயிலின் தாக்கத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை பலமடங்கு உயரும்...’’ என்று எச்சரிக்கிறது ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம்.‘‘வெயில் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் பருவநிலை மாற்றம். பூமியைச் சூடேற்றும் விதமாக நாம் பல்வேறு இரசாயனங்களைவெளியிடுவதால்  தான் பருவநிலையில் மாற்றங்கள் ஏற்படுகிறது...’’ என்கின்றனர் சூழலியல் ஆர்வலர்கள்.‘‘பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப நம் வாழ்க்கைமுறையை  மாற்றிக்கொள்வதுதான் இதற்கு ஒரே தீர்வு...’’ என்று அக்கறையுடன் சொல்கின்றனர் நிபுணர்கள்.

நியூ கேர்ள் ஃப்ரெண்ட்

இப்போது நியூயார்க்கில் டிவி சீரிஸின் படப்பிடிப்பில் இருப்பதால், தனது பிறந்த நாளை அங்கேயே கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா.
சமீபத்தில் நியூயார்க்கின் வீதிகளில் தனது செல்ல நாய்க்குட்டி டயானாவுடன் வாக்கிங் சென்றிருக்கிறார். அதை ‘Me and My Girlfriend’ என்ற  கேப்ஷனுடன் இன்ஸ்டாவில் தட்டிவிட, பத்து லட்சம் லைக்குகளைத் தாண்டி வைரலாகிவிட்டது அந்த ரொமான்ஸ்.

ஒயர்லெஸ் இயர்பட்ஸ்

‘ஆப்பிளி’ன் இயர்போனான ‘ஏர்பாட்ஸு’க்கு போட்டியாக ‘சாம்சங்’ நிறுவனம் ‘கியர் ஐகான்எக்ஸ்’ என்ற இயர்பட்ஸை இந்தியாவில் விற்பனைக்குக்  கொண்டுவந்துள்ளது. காதில் அணிந்துகொண்டிருக்கும் உணர்வே தெரியாத வகையில் இதை மெலிதாக வடிவமைத்திருக்கிறார்கள். ஒயர்லெஸ்  வசதியிருப்பதால் ஜாக்கிங் போகும்போது கூட பிடித்த இசையைக் கேட்டு ரசிக்க முடியும். 4 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் இருப்பதால் பாடல்களைப்  பதிவு செய்துகொள்ள முடியும் என்பது இதன் சிறப்பு. விலை ரூ.13,990.

மெஸ்ஸி ரகசியம்

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் பெரிதாக ஜொலிக்கவில்லை என்றாலும் ரிலாக்ஸாக பயிற்சியில் இறங்கிவிட்டார் அர்ஜெண்டினாவின்  நட்சத்திர கால்பந்து ஆட்டக்காரர் மெஸ்ஸி. அவர் பயிற்சி செய்துகொண்டிருந்ததை ரகசியமாக தனது மொபைலில் பதிவு செய்து இன்ஸ்டாவில் லீக்  செய்துவிட்டார் அவரது மனைவி. அந்த வீடியோவை 60 லட்சம் பேர் பார்த்து ‘மெஸ்ஸியின் வெற்றி ரகசியம் இதுதானா...’ என்று வியந்து  போயிருக்கின்றனர். ஆம்; மெஸ்ஸி பயிற்சி செய்துகொண்டிருந்தது தனது செல்ல நாயுடன்!   
                                                    

- குங்குமம் டீம்