தாவரங்களில் புதைந்திருக்கும் மர்மங்கள் !!ஹோம் அக்ரி - 18

சாம்பல் சத்து என்ற பொட்டாசியம் சத்து, தாவரங்களின் எல்லா விதமான வளர்ச்சிக்கும் அவசியம். இது தாவரங்கள் வேகமாகவும், ஸ்திரமாகவும்  வளர்வதற்கும், பூச்சித் தாக்கலையும் நோய்களையும் எதிர்கொள்வதற்கும், வறட்சியைத் தாங்கிக் கொள்வதற்கும் அத்தியாவசியம். எரித்த  மரச்சாம்பலில் பொட்டாஷ் அதிகமாக இருப்பதால் இது சாம்பல் சத்து என்று வழங்கப்படுகிறது. உணவுக் கழிவில் உண்டான காம்போஸ்ட்டை  பயன்படுத்துவதன் மூலமாகவும், பொட்டாஷ் இரசாயன உரத்தின் மூலமாகவும் இந்த சத்தை செடிகளுக்கு அளிக்கலாம்.

சாம்பலை உபயோகப்படுத்தும்போது குறைந்த அளவில் அதிக முறை அளிப்பதால் தாவரங்கள் பொட்டாஷ் பெறும்படி செய்யலாம். பொட்டாஷ் அல்லது  சாம்பல் சத்து அவசியம் என்று தெரிந்திருந்தாலும், இது எப்படி வேலை செய்கிறது, ஏன் செடியின் முக்கிய வளர்சிதை மாற்றங்களுக்கு பொட்டாசியம்  அவசியமாகிறது என்பது அறிவியல் உலகத்தில் இன்னும் மர்மமாகவே நீடிக்கிறது. நாம் தராத பல ஊட்டங்களை மண்ணிலிருந்து செடிகள்  பெற்றுக்கொள்கின்றன. மண்ணில் இல்லாத ஒருசில நுண்ணூட்டங்களையும் கூட கிரகிக்கின்றன.  இது போன்ற விஷயங்கள் இன்னும் புரியாத  புதிர்தான். என்றாலும் தாவரங்களின் வேதியியல் கட்டமைப்பு என்ன என்பதை ஓரளவாவது நாம் அறிய வேண்டும். இது, வளர்ச்சிக்குத் தேவையான  எல்லா ஊட்டங்களையும் நாம் தரவேண்டும் என்று செடிகள் எதிர்பார்க்கின்றனவா இல்லையா என்பதை நாம் புரிந்துகொள்ளவும் உதவும்.

போலவே, நாம் எல்லா ஊட்டங்களையும் தரவேண்டுமா, ஊட்டிவிட வேண்டுமா, திணிக்க  வேண்டுமா, இப்படி செய்வதால் உயிருள்ள செடி எப்படி  உணரும் என்பது  போன்ற விபரங்களைக் குறித்தும் நாம் சிந்திக்க வாய்ப்பளிக்கும். பொதுவாக தாவர வர்க்கத்தின் வேதிக்கட்டமைப்பில் ஒரு  செடியானது 44% கார்பன் (கரிமம்), 44% ஆக்ஸிஜன் (உயிர் வளி), 6% ஹைட்ரஜன் (நீரக வளி), 1 - 4% நைட்ரஜன் (தழைமம்) ஆகியவற்றைக்  கொண்டுள்ளது.ஆக, குறைந்தது 95% காற்றிலிருந்து பெறக்கூடியதாக இருக்கிறது. மீதமுள்ள 5% மட்டுமே மண்ணிலிருந்து தேவைப்படுகிறது. இந்த 5%  தாதுக்களைத் தருவதைத்தான் நாம் விவசாயம் என்கிறோம். இதற்காகத்தான் இவ்வளவு பாடுபடுகிறோம்.

இந்த 5% இல் ஒருசில சத்துக்கள் செடியோடு தங்கக்கூடியவை. ஒரு சில, செடிகளால் பெறப்பட்டு, மீண்டும் மண்ணுக்கு திருப்பித் தரப்படுபவை.  பொட்டாசியம் என்ற பேரூட்டச்சத்து மற்றும் குளோரின்-இவை செடியில் தங்காதவை. இவை செடிகளால் உறிஞ்சப்பட்டு, மீண்டும் மண்ணுக்கே  திரும்பி வருகின்றன. இப்படி திரும்பிவரக்கூடிய சாம்பல் சத்தை நாம் மீண்டும் மீண்டும் வருடாவருடம் மண்ணில் போடுவது அவசியமா?  நுண்ணூட்டங்களில் போரான், சுண்ணாம்புச் சத்து, மக்னீசியம், கந்தகம், இரும்பு, மாங்கனீஸ், மாலிப்டீனம், தாமிரம், துத்த நாகம் போன்றவை  செடிகளிலும், விளைபொருளிலும் தங்கு கின்றன.
 
செடிவகைகள் உயிருள்ளவை, ஆத்மா உள்ளவை, தம் உணவை தாமே தயாரிக்கும் சக்தி கொண்டவை. புவியின் மின்காந்தப் புலத்தை கருத்தில்  கொண்டு தங்களின் வளர்ச்சியையும், வளர்சிதை மாற்றங்களையும் மாற்றிக் கொள்ளக் கூடியவை. நம்மால் காண முடியாத புற ஊதாக் கதிர்களையும்,  அகச்சிவப்புக் கதிர்களையும் உபயோகிக்கத் தெரிந்தவை, நம்மால் கேட்கமுடியாத ஒலி அதிர்வுகளை உணரக்கூடியவை, நம்மைவிட பல  விஷயங்களில் அறிவுத்திறன் அதிகமானவை.இதையெல்லாம் மறந்துதான் இது போன்ற ஊட்டச்சத்து திட்டங்களை நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். இது,  ஒரு குழந்தையோ, செல்லப்பிராணியோ நாம் சொல்வதைக் கேட்டுக்கொள்வதாலோ, அதனால் கேட்டுக் கொள்வதைத் தவிர வேறு ஏதும்  செய்யமுடியாது என்பதாலோ, நாம் கொடுப்பதை உண்ணக்கூடிய கட்டாயத்தில் இருப்பதைப் போன்றதுதான்.

செடிகளும் நாம் கட்டாயமாகக் கொடுக்கக் கூடியவற்றை நமக்குத் தெரியாமலேயே தவிர்த்து விடவும் செய்கின்றன; திணிக்கப்பட்டதை குழந்தை வாந்தி  எடுப்பதைப்போல. தாவரமோ, குழந்தைகளோ, செல்லப்பிராணிகளோ, சுற்றுச்சூழலோ, நம் நம்பிக்கைகளைப் பொறுத்து நம் விருப்பங்களையும், நாம்  நல்லது என நினைப்பதையும் திணிப்பது நிச்சயம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது. ஒரே ஒரு உதாரணம் பார்ப்போம். அரசாங்க மற்றும் விவசாய  ஆராய்ச்சி நிறுவனங்களின் அறிவுரைகளின்படி நெற்பயிருக்கு துத்தநாக (சின்க் / Zinc) சல்பேட் 10 - 12 கிலோ இட வேண்டும். இதை வருடா வருடம்  மற்ற உரங்களோடு விவசாயி களும் இடுகிறார்கள். 10 கிலோ துத்தநாக சல்பேட்டில் குறைந்தது 2.5 கிலோ துத்தநாகம் இருக்கும். மகசூலில்  வரக்கூடிய நெல் / அரிசியில் அதிகபட்சம் 15 கிராம் துத்தநாகமும், வைக்கோலில் 120 கிராம் துத்தநாகமும் இருக்கும்.

135 கிராம் தேவைக்கு நாம் எதற்கு இரண்டரை கிலோ இட வேண்டும்? இப்படி வருடாவருடம் நாம் போடும் துத்தநாக சல்பேட் என்ற உப்பு,  மண்ணையும், மண்ணிலுள்ள நுண்ணுயிரி களையும் வாழ விடுமா? இதுபோலவே தேவைக்கு அதிகமாக நாம் போடும் உரங்களும் மற்ற  ரசாயனங்களும் மண்ணையும், காற்றையும், நிலத்தடி நீரையும், குளம் குட்டைகளிலுள்ள நீரையும் மாசுபடுத்துகின்றன. இதுபோலவே போரான்,  சுண்ணாம்புச் சத்து, மக்னீசியம், கந்தகம், இரும்பு, மாங்கனீஸ், மாலிப்டீனம், தாமிரம் போன்றவற்றுக்கான தேவையை நாம் இரசாயன உரங்களால்  தரும்போது, தேவைக்கு அதிகமான அளவைத் தருகிறோமா, அப்படி தரும்போது என்ன விதமான பக்க விளைவுகள் ஏற்படும் என்பதைத் தெரிந்து  செயல்பட வேண்டும்.

‘அண்டத்திலுள்ளதே பிண்டம் / பிண்டத்திலுள்ளதே அண்டம் / அண்டமும் பிண்டமுமொன்றே / அறிந்துதான் பார்க்கும்போதே’ என்ற சித்தர் பாட்டின்  மூலம் எல்லா உலோகங்களும், தாதுக்களும், வளிச்சத்துக்களும் எல்லா உயிர்களுக்கும் தேவையானவை, பொதுவானவை. மனிதனாகிய நமக்கும்  மற்ற ஜீவராசிகளுக்கும் இந்த தாமிரம், துத்தநாகம், இரும்பு, தங்கம், வெள்ளி, ஈயம், காரீயம், போரான், மாலிப்டீனம், அயோடின், சுண்ணாம்பு,  மெக்னீசியம் உட்பட பல தாதுக்கள் தேவையாக இருக்கின்றன என்பது இன்றைய நாகரிக அறிவியலாலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதற்காக நாம்  அவற்றை உண்பதில்லை. நம்மைவிட பலம் வாய்ந்த மிருகங்கள் எங்கிருந்து இரும்பு, செம்பு ஆகியவற்றை உண்ணும்? நமக்காவது இவற்றை பஸ்பம்,  செந்தூரம் போன்ற வடிவில் உண்பதற்கு வாய்ப்பிருக்கிறது. அவைகளுக்கு அந்த வாய்ப்பும் இல்லை. இருந்தாலும், அவைகளுக்கு எல்லா  நுண்ணூட்டங்களும் கிடைக்கின்றன. இது எப்படி சாத்தியமாகிறது? செடிகளுக்கு மட்டும் நாம் ஏன் இவற்றைத் தரவேண்டும்?

இதற்கான பதில்கள் தாவரங்கள் பற்றிய சில மர்மங்களை நாம் புரிந்து கொள்ள முற்படும்போதுதான் கிடைக்கும். இங்கிலாந்தில் உள்ள  ரோத்தம்ஸ்டெட் என்ற தாவரங்கள் குறித்த ஆராய்ச்சி நிறுவனம், பல நீண்ட கால ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. ஒருசில ஆய்வுகள் 1800களிலேயே  ஆரம்பமானவை. இந்த ஆராய்ச்சிகளின் ஒரு பகுதியாக 1956லிருந்து 1972 வரை ‘சிவப்பு க்ளோவர்’ என்ற ஒரு மரத்தை 17 ஆண்டுகளாக தொடர்ந்து  அறுவடை செய்தார்கள். இந்த நிலத்தில் எந்த விதமான உரங்களும் இடப்படவில்லை. 17 ஆண்டுகளாக வெட்டப்பட்ட இந்த மரம் அவ்வப்போது  வேதியல் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, மரத்திலிருந்த நுண்ணூட்டங்களின் அளவு கண்டுபிடிக்கப்பட்டது. பரிசோதனைகளின் கண்டுபிடிப்பு  ஆச்சரியமளிக்கக் கூடியதாக இருந்தது. மொத்தமாக இந்த மரங்கள் 10,000 கிலோ மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்றவற்றை  எடுத்திருக்கிறது. இது அந்த மண்ணிலிருந்த இந்த சத்துக்களின் அளவைவிட மிக அதிகம்!
எங்கிருந்து இவ்வளவு தாதுக்கள் வந்தன?

(வளரும்)
- மன்னர் மன்னன்

Q&A

எங்கள் காய்கறித் தோட்டத்தில் பழ ஈக்களின் தொந்தரவு அதிகமாக இருக்கிறது. இதை இயற்கை முறையில் எப்படி கட்டுப்படுத்தலாம்?
- சிவசாமி, வாடிப்பட்டி.

பழ ஈக்கள் தோன்றுவதற்கு முன்னால் செய்யக்கூடிய இயற்கை வழிகள் வலிமையானவை. பழ ஈ தொந்தரவைக் கட்டுப்படுத்தக் கூடியவை. ஆனால்,  இவை பல்கிப் பெருகிய பின்னர் இயற்கை வழிகளில் கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கும். கடைகளில் கிடைக்கக்கூடிய இனக்கவர்ச்சி பொறிகளை  உபயோகப்படுத்தலாம். நீங்களாக தயாரிக்கும் கருவாட்டுப் பொறியை உபயோகிக்கலாம்.

கருவாட்டுப் பொறியை எப்படித் தயாரிப்பது?
ஒரு ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலில் முக்கால் லிட்டர் தண்ணீர் நிரப்பி, தண்ணீர் இல்லாத மேற்பகுதியில் ஒரு குண்டூசியால் 3 துவாரங்களை  இடவும். பிறகு ஒரு கருவாட்டை நூலில் கட்டி அதை தண்ணீருக்கு மேல் தொங்கும்படி செய்து, மூடி, தோட்டத்தில் கட்டி வைக்கவும்.  பழ ஈக்கள் துளை வழியாக உள்ளே சென்று தண்ணீரில் விழுந்து இறக்கும். ஒரு ஏக்கருக்கு 5 பொறிகள் போதும். 15 நாட்களுக்கு ஒரு முறை  தண்ணீரையும், கருவாட்டையும் மாற்றவும்.

நுங்கு பற்றிய சுவாரசியமான தகவல்கள்..?
- அருள்மேரி, நாகர்கோவில்.

நுங்கு சின்னம்மை வருவதைத் தடுக்கும். வெப்பக்காற்றால் வரும் மரணம், சோர்வு போன்றவற்றை தடுக்கும். மார்பகப் புற்றுநோயைத் தடுப்பதற்கான  ஆற்றலும் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலை கோடையில் குளிர்ச்சியாக வைப்பதற்கும், நீர்ச்சத்து வெளியேறாமல் இருக்கவும்
உதவுகிறது.

அவுரிச்செடி எதற்காக பயன்படுகிறது?
- மாதவி, மயிலாப்பூர்.

அந்தக்காலத்தில் நீல நிற வண்ணத்துக்காக உபயோகப்படுத்தினார்கள். அதனால் இதற்கு ‘Indigo plant’ என்று பெயர். இதன் இலைகள் சிறந்த  மலமிளக்கியாக பயன்படுகின்றன.  பலகோடி மதிப்புக்கு ஏற்றுமதியும் ஆகிறது.