படித்ததோ 10வது... செய்வதோ தினக் கூலி...ஒரு பைசா வாங்காமல் எல்லோருக்கும் தருவதோ மரக்கன்றுகளை!இது ஸ்மார்ட் கைப்பேசி காலம், கம்ப்யூட்டர் யுகம். அருகில் இருப்போரிடம் முகம் கொடுத்துப் பேசக் கூட நேரமில்லை. இதில் எங்கிருந்து இயற்கை  மாற்றத்தையும், புவி வெப்பமயமாதலையும் கண்டுகொள்ளப் போகிறோம்? அவ்வளவு ஏன், நாம் தினமும் பயணம் செய்யும் சாலையில் இருக்கும் ஒரு  மரம் அடுத்த நாள் வெட்டப்பட்டிருந்தால் குறைந்தபட்சம் நின்று வருத்தப்படுவது கூட இல்லை. இச்சூழலில்தான் பொள்ளாச்சி அருகில் இருக்கும்  கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி இலவசமாக மரக்கன்றுகளைக் கொடுப்பதுடன் நேரில் சென்று அதை முறைப்படி வைத்தும் கொடுக்கிறார்.

‘‘அப்படி எதுவும் செய்துடலைங்க...’’ என கூச்சத்துடன் ஆரம்பிக்கிறார் மாசிலாமணி. ‘‘பத்தாவது வரை படிச்சிருக்கேன். சொந்த ஊரு பொள்ளாச்சி பக்கம்  அங்காலக்குறிச்சி. தினமும் ஒரு சவாரி எடுப்பேன். பொள்ளாச்சி போயி திரும்பி வந்தா ரூ.600 முதல் ரூ.800 வரை கிடைக்கும். இதுல நூறு  ரூபாய்க்கு மரக்கன்றுகளை வாங்குவேன். சிலது பக்கத்துலயே நர்சரிகள்ல கிடைக்கும். சில மரக்கன்றுகளை காட்டுக்குள்ள போய் வாங்கிவருவேன்.  ஒரு மரக்கன்று ரூ.10 முதல் ரூ.30 வரை ஆகும்...’’ என்று சொல்லும் மாசிலாமணி, சாலையோரம் சின்ன இடைவெளி தென்பட்டாலும் மரக்கன்றுகளை  நட்டு விடுவாராம்.

‘‘ஒவ்வொரு சனிக்கிழமையும் என் மகனைக் கூட்டிட்டு காட்டுக்குள்ள போவேன். அவருக்கு 8 வயசு. பேரு ஹரிஹரன். என்னை விட ஆர்வமா  இருக்கார். காட்டுக்குள்ள டூரிஸ்ட்டுங்க போடுகிற பிளாஸ்டிக் குப்பைகளை எடுத்து சுத்தப்படுத்துவோம்குரங்குகள் நிலம ரொம்ப மோசமா இருக்கு.  அதனால அதுங்களுக்கு சாப்பாடு கொடுத்துட்டு கைல என்ன விதை இருக்கோ அதை தூவிட்டு வருவோம்...’’ என தன் வார நடவடிக்கைகளைப் பட்டியலிடும் மாசிலாமணியை அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் கேலி கிண்டல் செய்திருக்கிறார்கள். ‘‘‘உனக்கு ஏன் இந்த வேலை...’, ‘பெரிய இவனாட்டம் வாரா  வாரம் கிளம்பிடறான்’னு கேலி பண்ணுவாங்க. எதையும் காதுல வாங்கிக்க மாட்டேன். என் மனைவி முழு ஆதரவு கொடுக்கறாங்க. ஞாயிற்றுக்கிழமை  விடியற்காலைல கிளம்பிடுவோம். சாப்பாட்டை மனைவி கட்டிக் கொடுத்துடுவாங்க.

இதுவரை 400க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டிருக்கேன். கவர்மென்ட்டுல இருந்தும் சாலைகள்ல வைக்க மரக்கன்றுகளை என்கிட்ட கேட்பாங்க.  சந்தோஷமா கொடுப்பேன். என்ன வருத்தம்னா சிலர் ஆர்வத்தோடு வாங்கறாங்களே தவிர அதை பராமரிக்கறதில்ல. அப்படியே காய விட்டுடறாங்க.  ஒரு கவர்மென்ட் டீம் அப்படி செஞ்சது. என் ஒரு வார உழைப்பு அப்படியே போயிடுச்சு.நான் பணக்காரன் இல்ல. கிடைக்கற வருமானத்துல  மரக்கன்றுகளை வாங்கி இலவசமா கொடுக்கறேன். அத வீணாக்காம இருந்தா போதும். பராமரிக்க முடியலைனா பிரச்னையில்ல. என்கிட்ட  சொல்லுங்க. நான் வந்து அதை பராமரிக்கறேன்...’’ என ஆதங்கப்படும் மாசிலாமணியிடம் வேங்கை, கடுக்காய் மரம், ஜாதிக்காய், தான்றிக்காய்,  மாசிக்காய், கருங்காலி, நீர்மருது, மலைவேம்பு, அரளி மஞ்சள், மகிழம், சரக்கொன்றை, செண்பகம், ஃபாரஸ்ட் பிளேம், புன்னை, வில்வம், வேம்பு,  சொர்க்கம், புங்கன், இயல்வாகை, இலுப்பை, நெல்லி, நாவல், நாகலிங்கம், பலா, மாதுளை, கொய்யா, எலுமிச்சை, மாமரம், புளியமரம், கொடுக்காப்புளி  மரம், யானை குன்றிமணி, பெரிய நெல்லி உள்ளிட்ட நம் இந்திய மரக்கன்றுகள் பல உள்ளன. பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் இருப்பவர்கள்  மாசிலாமணியை 9003434108 என்ற எண்ணில் அழைத்தால் போதும், மரக்கன்றுகளுடன் ஆஜாராகி விடுவார். இவர்களைப் போன்றவர்களால்தான் பூமி  இன்னும் சுழல்கிறதோ?!

- ஷாலினி நியூட்டன்
படங்கள்: அஜய்