தூத்துக்குடி நைட் கிளப் கடைகள்!லன்ச் மேப்

நைட் கிளப் என்றதும் ஏதோ மனமகிழ் மன்றம் என நினைக்க வேண்டாம். தூத்துக்குடியைப் பொறுத்தவரை இரவு நேர பரோட்டாக் கடைகள்  அனைத்துக்கும் நைட் கிளப் என்றுதான் பெயர்! இந்த வகையில் 80க்கும் மேற்பட்ட கடைகள் மாலை ஆறு மணியிலிருந்து இரவு 12 வரை  இயங்குகின்றன. நூற்றாண்டுக்கு முன்பே துறைமுக நகரம் இது. கூடவே தொழில் சார்ந்த ஏற்றுமதி இறக்குமதி என வர்த்தக நகரம். 60 வருடங்களுக்கு  முன்பு சுற்றி இருக்கும் கிராமத்து மக்கள் வேலை சார்ந்து தூத்துக்குடி டவுனுக்கு வந்து செல்வது வழக்கம். அன்றைய தினத்தில் டவுன் மக்களே கூட  அந்தி சாய்ந்ததும் வீட்டுக்குள் முடங்கி விடுவார்கள்.

ஆனால், தொழில் சார்ந்து டவுனுக்கு வந்தவர்கள் ஊருக்குத் திரும்ப இரவு கடைசிப் பேருந்துக்காகக் காத்திருப்பார்கள். அப்போது ‘ஒரு வாய் இங்கயே  சாப்பிட்டுப் போலாம்னு பார்த்தா ஒரு கடை கூட இல்லையே...’ என பெருமூச்சு விடுவார்கள்இதைக் கவனித்த கைலாசபுரத்தைச் சேர்ந்த ராஜமணியும்  அவரது சகோதரரும் சேர்ந்து நைட் கிளப் என்ற பெயரில் இரவுக் கடையை ஆரம்பித்தனர்.தூத்துக்குடியின் முதல் நைட் கிளப் இதுதான். இதன் பிறகே  மற்ற கடைகள் ஆரம்பிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

இதில் சுவாரஸ்யம் என்ன தெரியுமா? இப்போதிருக்கும் நைட் கிளப் கடைகளில் பெரும்பாலானவை ராஜமணி பிறந்த அதே கைலாசபுரத்தைச்  சேர்ந்தவர்களால் நடத்தப்படுபவைதான்!எல்லா கடைகளிலும் ருசியான உணவுகள் கிடைக்கின்றன. என்றாலும் தூத்துக்குடி மக்களின் சாய்ஸ், ‘ராஜமணி  நைட் கிளப்’பும், ‘ஆழ்வார் நைட் கிளப்’பும்தான். இக்கடைகளின் பிரதான உணவு எண்ணெய்யில் பொரித்த பரோட்டா. உடன் ஆறு வகையான சால்னா!  சில வறுவல், பிரட்டல், தொட்டுகை வகைகள். மற்றபடி தோசை, இட்லி, ஃப்ரைட் ரைஸ் என எதுவும் கிடையாது. “1965ல தாத்தா ராஜமணியோட  கை மணத்துல மட்டன் சால்னா மணக்கும். இதுக்காகவே பஸ் போனாக் கூட பரவாயில்லைனு மக்கள் காத்திருந்து சாப்பிட்டுப் போவாங்க. அவர்  சொல்லித் தந்த பக்குவத்துலதான் இப்பவும் சமைக்கிறோம்...’’ என்கிறார் மூன்றாவது தலைமுறையாக கடையை நடத்தும் மோசஸ்.மூன்று பொரித்த  பரோட்டா. வுடன் மட்டன் கிரேவி ப்ளஸ் கெட்டி பதத்திலுள்ள சிக்கன் சால்னா மற்றும் ரசம் பதத்திலிருக்கும் காடை கிரேவி. இந்தப் பதத்தில்  சாப்பிடவே மக்கள் அலைமோதுகிறார்கள்.

பரோட்டா, சால்னா இரண்டும் தூத்துக்குடியின் அடையாளம். தெருவில் வீசும் சால்னாவின் மணம் அவ்வூரின் பெருமையைப் பறைசாற்றுகிறது! பொதுவாக மற்ற ஊர்களில் பரோட்டாவுக்கு சைவ குருமா / அசைவ குருமா என இரண்டு வகைகள்தான் இருக்கும். ஆனால், தூத்துக்குடியில்  மட்டும்தான் ஆறு வகை குருமாக்கள் / சால்னாக்கள் கிடைக்கின்றன! “எல்லா உணவுகள்லயும் எண்ணெய் அதிகமா இருக்கும். அதுதான் ருசியே.  அதேமாதிரி தேர்ந்தெடுத்துதான் மிளகாய் வத்தலை வாங்குவோம். எண்ணெய்யும், மிளகாய் வத்தலும் சரியா இல்லைனா மொத்த உணவும்  சொதப்பிடும். அதனாலதான் இவ்வளவு கவனம் செலுத்தறோம். மத்தபடி கார மசாலா எல்லாம் வீட்டு செய்முறைதான்...’’ என்கிறார் ‘ஆழ்வார்   நைட்கிளப்’ சுப்ரமணியம்.

“இங்க இருக்கிற எல்லா கடைகள்லயும் விறகடுப்புலதான் சமைக்கிறாங்க. ஒருநாளைக்குப் பயன்படுத்தின எண்ணெய்யை மறுநாள் பயன்படுத்த மாட்டோம். பரோட்டாவுக்கு நாங்க உபயோகபபடுத்தற மைதா கூட முதல் தரமானதுதான்...’’ என்கிறார் ஆழ்வார் நைட் கிளப் நம்மாழ்வார்.  ‘‘சால்னாவை சைவர்களும் சாப்பிடலாம். ஏன்னா மருந்தளவுதான் கிரேவில அசைவம் சேர்க்கறோம். மத்தபடி மசாலா சேர்மானத்துலயும்  செய்முறைலயும்தான் ருசியைக் கூட்டறோம். சைடுடிஷ்ஷாக நாட்டுக்கோழி, வறுத்த கறி, காடை ரோஸ்ட், புறா வறுவல்னு தனியா வாங்கிக்கணும்...’’  என்கிறார் மோசஸ்.பொன்னிறத்தில் மினுமினுப்புடன் மொறு மொறுப்பாக இருக்கும் எண்ணெய் பரோட்டாவைப் பார்த்ததுமே உமிழ்நீர் சுரக்கிறது.  வெளிப்பகுதி மொறுமொறுப்பாகவும் உட்பகுதி தேவையான அளவு வெந்தும் இருக்கிறது. பெயர்தான் எண்ணெய் பரோட்டா. அதற்காக எண்ணெய்யில்  குளித்த பரோட்டா அல்ல! தூத்துக்குடிக்குச் சென்றால் தவறாமல் இதைச் சாப்பிடுங்கள். அப்போதுதான் தூத்துக்குடிக்குச் சென்ற நிறைவு கிடைக்கும்!  

- திலீபன் புகழ்
படங்கள் : லக்ஷ்மி நரசிம்மன்

பொரிச்ச பரோட்டா


முதல் தரமான மைதா - கால் கிலோ.
உப்பு - தேவையான அளவு.
கடலை எண்ணெய் - 200 கிராம்.
தண்ணீர் - தேவையான அளவு.
சர்க்கரை - ஒரு சிட்டிகை.

பக்குவம்: மைதாவில் உப்பு, சர்க்கரை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரும், 50 கிராம் எண்ணெய்யும் சேர்த்து, கெட்டியாக பிசைய வேண்டும்.  பிறகு ஈரத்துணி கொண்டு ஒரு மணி நேரம் மாவை ஊற விட வேண்டும். பின்னர் எலுமிச்சை அளவு மாவை உருட்டி பரோட்டாவாக வீச வேண்டும்.  சுருட்டி உருட்டி, அடித்து இதையும் அரை மணி நேரம் ஈரத்துணியால் மூடி வைக்க வேண்டும். தோசைக்கல்லில் வெறும் பரோட்டாவை இருபுறமும்  சிறிது சுட்டு எடுத்த பின் மறுபடியும் மீதமுள்ள எண்ணெய்யை அளவாக ஊற்றி, மிதமான தீயில் சுட்ட பரோட்டாக்களைப் பொரித்து எடுக்கவும்.  கடைகளில் ‘எண்ணெய் பரோட்டா’வுக்கு என்று கேட்டு தரமான நைஸ் மைதாவை வாங்க வேண்டும். சாதா பரோட்டாவுக்கு மாவை சற்றுத் தளரவும்  எண்ணெய் பரோட்டாவுக்கு கெட்டியாகவும் பிசைய வேண்டும். மாற்றிப் பிசைந்தால் பொரித்து எடுக்கும்போது எண்ணெய் குடித்துவிடும்!  

நாட்டுக்கோழி சால்னா

நாட்டுக்கோழி - அரைக் கிலோ.
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 250 கிராம்.
தக்காளி - 100 கிராம்.
உப்பு - தேவையான அளவு.
எண்ணெய் - தாளிக்க.
தேங்காய் - (துருவியது) இரண்டு கைப்பிடி.
வறுத்து அரைக்க:
மிளகாய் வற்றல் - 10.
மல்லி - 3 டேபிள்ஸ்பூன்.
சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்.

பக்குவம்: தேங்காயை விழுதாக அரைக்கவும். அடி கனமான கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். வெந்து பேஸ்ட்டாக  வந்ததும், வறுத்து அரைத்த மிளகாய், மல்லி, சீரக விழுதைச் சேர்த்து, தண்ணீர் ஊற்றி நாட்டுக்கோழிக்கறியைச் சேர்க்க வேண்டும். ஐந்து நிமிடங்கள்  கொதித்ததும், அரைத்த தேங்காய் விழுதைக் கொட்டி, உப்பு சேர்த்து குழம்பு பதத்தில் வைக்கவும். குறைவான தீயில் நன்றாக சுண்ட விடவும்.சுண்டும்  பதம்தான் பொரிச்ச பரோட்டாவுக்கு ஏற்றது .