குட்கா விபரீதம்!உத்திரப் பிரதேச மாநிலம் மதுராவில் சம்போகா கிராமத்தைச் சேர்ந்த பர்தேசி, மளிகைக்கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கி திரும்பிக்  கொண்டிருந்தார். அவரை வழிமறித்த ராஜு, ராகுல் தாக்கூர் என்ற இரு நண்பர்கள் கொஞ்சமே கொஞ்சம் குட்கா இரவல் கேட்க, பர்தேசி  மறுத்திருக்கிறார். டென்ஷனான இருவரும் உடனே பர்தேசியின் பையிலிருந்த கெரசினை எடுத்து அவரது தலையில் ஊற்றி நெருப்பைப்  பற்றவைத்துவிட்டனர். மக்களின் உதவியால் 20% நெருப்புக்காயங்களுடன் உயிர்பிழைத்துள்ளார் பர்தேசி. கொலைமுயற்சி, அமைதிக்கு குந்தகம்  விளைவிப்பது உள்ளிட்ட பிரிவு களில் வழக்குப் பதிவு செய்து வழக்கம்போல குற்றவாளிகளை சேசிங் செய்து வருகிறது போலீஸ்.

சீனாவை வெல்ல 76 சாலைகள்!

டோக்லம் எல்லைப்பகுதியில் சீனா பல்வேறு கட்டுமான வேலைகளைத் தொடங்கியுள்ளது. இதுதொடர்பான அமெரிக்காவின் அறிக்கையை இந்திய  ராணுவம் மறுத்துள்ளது. அறிக்கை நிஜமா, பொய்யா என சரிபார்க்க அப்பகுதிக்குச் செல்ல அங்கு சரியான சாலை வசதிகள் கிடையாது என்பதே  முகத்தில் அறையும் நிஜம். 19 மணிநேரம் நடந்து 120 வீரர்கள் படை டோக்லம் பகுதிக்குச் சென்று எல்லையை பாதுகாக்கும் நிலையில் இந்தியா  உள்ளது. 2005 - 06ம் ஆண்டில் 76 சாலைகள் சீன எல்லைப்பகுதியில் அமைக்க உத்தரவானது.

ஆனால், 2012ம் ஆண்டு தகவல்படி 34 சாலைகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. இதே காலகட்டத்தில் சீனா 4056 கி.மீ. தூரத்திற்கு சாலைகளை  அமைத்து எல்லையை வலுவாக்கியுள்ளது. 2013ம் ஆண்டு இந்திய அரசு, சீனா - பாகிஸ்தான் எல்லைப்புறங்களை ரயில் மூலம் இணைக்கும்  திட்டத்தைக் கொண்டுவந்தாலும் இன்றுவரை சர்வே பணி முடியவில்லை. இதேநேரத்தில் சீனா, நேபாளத்தில் காத்மண்ட் - திபெத் பகுதிகளை  இணைக்கும் ரயில்பணிக்கு ஒப்பந்தமிட்டு வேலையைத் தொடங்கிவிட்டது.

மினிமம் பேலன்சில் லாபம்!

இந்தியாவிலுள்ள 21 பொதுத்துறை வங்கிகள் மற்றும் 3 முக்கிய தனியார்துறை வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்காத  வங்கிக்கணக்குகள் மூலம் ரூ.5 ஆயிரம் கோடி லாபம் பார்த்துள்ளனர். நடப்பாண்டில் மட்டும் பாரத ஸ்டேட் வங்கி மினிமம் பேலன்ஸ் பராமரிக்காத  கணக்குகளுக்கு அபராதம் விதித்து ரூ.2,433.87 கோடி சம்பாதித்துள்ளன. இதற்கடுத்த இடத்தில் ஹெச்டிஎஃப்சி வங்கி (590.84 கோடி) உள்ளது.

2012ல் அமுல்படுத்திய திட்டம் மக்களின் தீவிர எதிர்ப்பால் கைவிடப்பட்டு கடந்தாண்டு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. பின்னர் அபராதம் அதிகம்  என்று குவிந்த மக்களின் புகாரால், அக்டோபரில் அபராதத் தொகை குறைக்கப்பட்டது. பிஎஸ்பிடி மற்றும் பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா  திட்டங்களின் கீழ் தொடங்கப்படும் சேமிப்புக்கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்பு அபராதம் கிடையாது.

தொகுப்பு: ரோனி