என்ன நடக்கிறது அசாமில் ?



ஆகஸ்ட் 1, 2018 தேதி கிட்டத்தட்ட 40 இலட்சம் அசாமியர்களுக்கு இனிதாக விடியவில்லை. அன்றைக்குத்தான் தேசிய குடியுரிமை அட்டவணை  (National Register for Citizenship) என்கிற உச்சநீதிமன்றத்தால் கண்காணிக்கப்பட்ட ‘யாரெல்லாம் அசாமிய / இந்திய பூர்வகுடிகள்’ என்கிற  குடியுரிமை சார்ந்த அட்டவணை வெளியானது. அசாமின் தேசிய குடியுரிமை அட்டவணையின் பார்வை மிக எளிதானது. மார்ச் 24, 1971க்கு முன்பு  அசாமில் இருந்ததற்கான சான்றிதழ்களை வைத்திருப்பவர்கள் இந்தியர்கள். அதற்குப் பின்பு வந்தவர்கள் வந்தேறிகள். அவர்களுக்கு இந்திய குடியுரிமை  கிடையாது.

ஏன் மார்ச் 24, 1971


பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ஒன்றுபட்ட வங்கமாக இருந்த இடம் பிரிந்ததில் ஆரம்பிக்கும் வரலாறு இது. சுதந்திரத்துக்குப் பிறகு, இந்தியா மற்றும்  பாகிஸ்தான் என பிரிந்தது. அப்போது வங்காளம் மேற்கு மற்றும் கிழக்காக இரண்டாகப் பிரிக்கப்பட்டது. மேற்கு வங்கம் இந்தியாவுக்கும், கிழக்கு வங்கம்  பாகிஸ்தானுக்கும் போனது. அது அப்போது கிழக்கு பாகிஸ்தான் என்றழைக்கப்பட்டது. இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது கிழக்கு பாகிஸ்தான்  தனிநாடாக உருவாக உதவிகளைச் செய்தார். அதனால் மார்ச் 24, 1971ல் பங்ளாதேஷ் உருவானது. 70களில் பங்ளாதேஷுக்கு கிடைத்த சுதந்திரத்தினை  ஒட்டி, அசாமில் 80களில் மாணவர்கள், பூர்வீக அசாமியர்கள் என அனைவரும் தெருவுக்கு வந்து போராட ஆரம்பித்தார்கள். ‘வங்காள வந்தேறிகள்,  மேற்கு வங்கம் மற்றும் பங்ளாதேஷிகள் அசாமிற்குள் நுழைந்து விட்டார்கள்... அவர்கள் அசாமியர்களுக்கான ஏகப்பட்ட உரிமைகளைப் பெற்றுக்  கொள்கிறார்கள்...’, ‘அசாம் அசாமியர்களுக்கே...’ என்ற கோஷங்கள் எழுந்தன.சாதாரண போராட்டமாக ஆரம்பித்த இது, 1983ல் பெரும் கொலைக் களமாக  மாறியது. வங்காளிகள் எனத் தெரிய வந்த 7000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள்.

அசாம் பற்றி எரிந்தது. அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி, இந்த போராட்டக் குழுவோடும், அசாம் மாநில அரசோடும் ஓர் ஒப்பந்தத்தினை  நிறைவேற்றினார். 1985ல் வந்த ‘அசாம் இசைவு’ என்பதுதான் மார்ச் 24, 1971 என்பதை கட் ஆஃப் நாளாக வைத்தது. உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின்  பேரில், அதே நாளை கையில் எடுத்து மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. அதில்தான் 3.29 கோடியில், 40 இலட்சம் மக்களிடம் போதிய  ஆதாரமில்லை, அவர்கள் தகுந்த ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று இப்போதைய அட்டவணை சொல்கிறது.

‘நானொரு கிளோஞ்சியா’ என்கிற குரலை அசாம் முழுக்க உங்களால் கேட்க முடியும். ‘கிளோஞ்சியா’ என்றால் பூர்வீகக்குடி என்று பொருள். இந்த 40  இலட்சம் மக்களும் தங்களுடைய பெற்றோர்கள், மூத்தோர்கள் அசாமின் பூர்வீகக் குடிகள் என்று அழுத்தம் திருத்தமாக சொல்கிறார்கள். 70களில்  இப்போது இருப்பதைப் போல முழுமையான அரசு ஆவணங்கள் கிடையாது என்பதால், கிராம பஞ்சாயத்து தரும் சான்றிதழ் போதும் என்று முதலில்  உயர்நீதிமன்றம் ஒப்புக் கொண்டது. ஆனால், தேசிய குடியுரிமை அட்டவணை ஆணையம், அதை சாட்சியாக எடுத்துக் கொள்ள முடியாது என்று  சொல்லிவிட்டது.

2015க்கு பின்பான ஓர் அரசியல் திருத்த மாற்றத்தில், மத்திய அரசு வெளிநாடுகளிலிருந்து வரும் இந்துக்களை மட்டும் ஏற்றுக் கொள்ளலாம், மற்ற  மதத்தினர்களை அல்ல என்று மாற்றி இருப்பதும் ஏகப்பட்ட களரீதியான வேறுபாடுகளை உருவாக்கி இருக்கிறது. அசாமின் முன்னாள் முதல்வரும்,  போராட்டக் குழுவினை 80களில் முன்னின்று நடத்தியவருமான பிரபல்லகுமார் மஹந்தா, ‘‘இந்துவோ, முஸ்லீமோ எந்த பங்களாதேஷி மற்றும்  வங்காளிகளையும் அசாமினை சுரண்ட அனுமதிக்க மாட்டோம்...’’ என்று சொல்லி இருக்கிறார்.

‘NRCயைக் காரணம் காட்டி, வங்காளிகளை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள மாட்டோம்’ என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி  எச்சரித்திருக்கிறார். ஏனைய அரசியல் கட்சிகளும் இந்த சிக்கலை கையில் எடுத்துவிட்டன. ஆக, வெறுமனே யார் அசாமியர் என்பதைத் தாண்டி, யார்  குடிமகன் என்கிற சிக்கலை இது உருவாக்கி விட்டது. இந்த நெருப்பு லேசில் அணையப் போவதில்லை. இது எதில் போய் முடியும் என்று  இப்போதைக்கு சொல்ல முடியாது. ‘க்ளோஞ்சியா’க்களுக்கு நல்வழி பிறக்கட்டும் என்று வேண்டுவதைத் தவிர வேறுவழியில்லை.                     

-செனகா