உங்கள் ஆதார் பாதுகாப்பானதா? : இல்லை என்கிறார்கள் ஹேக்கர்கள்‘இனி சுடுகாட்டில் தகனம் செய்யக்கூட ஆதார் எண் கட்டாயம்...’ என்று சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. ‘மரித்தவர் ஆதார் கார்டை ஒளித்து  வைத்துவிட்டு காலமானால் என்ன செய்வது?’ என சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்தது ஒரு கூட்டம். நகைச்சுவைகளை விடுங்கள். இன்று  சாதாரணமாக உள்ளூர் பயணம் செய்வதில் தொடங்கி வெளிநாட்டுப் பயணம் வரை, ஏன், இறுதி யாத்திரையான சுடுகாடு வரையுமேகூட ஆதார்  கட்டாயமாகிவிட்டது. கேஸ் எண்ணுடன் ஆதாரை இணையுங்கள்; வாக்காளர் அடையாள அட்டையுடன் இணையுங்கள்; பான் நம்பருடன் இணையுங்கள்;  வங்கிக்கணக்குடன் இணையுங்கள்; பி.எஃப். அக்கவுண்ட்டுடன் இணையுங்கள்... என மத்திய அரசு அறிவித்தபடி இருக்க, திருவாளர் பொதுஜனம்  ஓடியோடி இணைத்துக் கொண்டேயிருக்கிறது.

இந்நிலையில் ஒரு கூட்டம் ‘ஆதார் எண் பாதுகாப்பற்றது; இதன் மூலம் ஒருவரது தனிப்பட்ட தகவல்கள் தனியார் நிறுவனங்களுக்கோ பிறருக்குகோ  தாரை வார்க்கப்பட வாய்ப்புள்ளது...’ என அபாய மணி அடித்துக்கொண்டே இருக்கிறதுஇந்த சந்தேகம் உண்மைதான் என நம்பும்படியாக ஒரு சம்பவம்  சமீபத்தில் அரங்கேறியிருக்கிறது.ஆதார் எண்ணைப் பற்றிய சந்தேகங்கள் தொடர்ந்து எழுப்பப்பட்ட நிலையில், ட்ராய் என்னும் இந்தியத் தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஆர்.எஸ்.சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு சவால்விட்டார். தன் ஆதார் எண்ணைப் பொதுவெளியில்  அறிவித்த அவர் ‘முடிந்தால் இதை வைத்து எனக்கு என்ன தீமையை உருவாக்க முடியும் என்று காட்டுங்கள்!’ என சொடக்குப் போட்டார். வேலியில் போவதை எடுத்து எதற்குள்ளோ விட்ட கதையாகிப் போனது!

முதலில் சர்மாவின் அதிரடி யான டுவீட்டுக்கு வாழ்த்துகளாகக் குவிந்துகொண்டிருந்தன. ஆர்.எஸ்.சர்மாவுக்கும் மகிழ்ச்சி. ஆனால், இவை எல்லாம்  அதிகநேரம் நீடிக்கவில்லை. எலியட் அல்டர்சன், புஷ்பேந்திரா சிங், கனிஷ்க் சஜ்னானி, அனிவார் அர்விந்த், கரண் சாய்னி... என சில ஹேக்கர்கள்  களமிறங்கினார்கள். சர்மாவின் பதினான்கு தனிப்பட்ட ஆவணங்களை அடுத்தடுத்து பகிரங்கப்படுத்தினார்கள். முதலில், ‘இதுதானே உங்கள் ஆதாருடன்  இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்..?’ என மொபைல் எண்ணுடன் ஒரு டுவீட் வந்தது. அடுத்து, ‘இந்த மொபைல் எண் உங்களுடையது அல்ல;  உங்கள் செயலாளருடையது...’ என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் சர்மாவின் பிறந்த தேதி, ஆல்டர்நேட்டிவ் மொபைல் ஆகியவற்றை அறிவித்துவிட்டு, ‘ஆதார் எண்ணைப் பொதுவெளியில் பகிர்வது  பாதுகாப்பானது அல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்’ என்ற வேண்டுகோளுடன் ஒரு ஹேக்கர் ஒதுங்கினார்.சர்மா இதோடு விட்டிருக்கலாம். ஆனால்,  ‘தகவல்களை உருவினால் ஆயிற்றா? எனக்கு என்ன தீமையைச் செய்ய முடியும் என்று நிரூபியுங்கள்!’ என்று வம்படியாக ஒரண்டை இழுத்தார். அவ்வளவுதான். மேலும் சில எத்திக்கல் ஹேக்கர்கள் களத்தில் குதித்தார்கள். சர்மாவின் வாட்ஸ்அப் டி.பி புகைப்படத்தை வெளியிட்டார்கள்.  ‘கவுரவமற்ற ஓர் இணையதளத்துக்காக உங்கள் ஸ்டேட் பாங்கு வங்கிக் கணக்கில் இருந்து சந்தா செலுத்தினீர்கள்தானே?’ என்று மானத்தை  வாங்கினார்கள்.

சர்மாவின் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி போலி ஆதார் கார்டு தயாரித்து வெளியிட்டார்கள். அவரது ஏர் இந்தியா அக்கவுண்ட் தகவல்களை  மாற்றினார்கள். அவரின் ஜி மெயில் கணக்கையே ஹேக் செய்தார்கள். அதிலிருந்த சில உரையாடல்களை வெளியிட்டார்கள். அவரது வங்கிக்  கணக்கை வெளியிடப்போவதாக அறிவித்தார்கள். இறுதியாக, அவரது ஆதார் எண்ணைப் பயன்படுத்தி ஒரு ரூபாயை அவரது வங்கிக் கணக்கில்  செலுத்தி ரசீது வெளியிட்டார்கள். ‘காசு போட முடிந்த எங்களால் அதிலிருந்து எடுக்க முடியாது என்று நினைக்கிறீர்களா...’ என்று கேட்டார்கள்.இதை எல்லாம் பார்த்த சர்மா மட்டுமல்ல,  ஒட்டுமொத்த இந்திய சமூகமும் இப்போது அதிர்ந்து நிற்கிறது.

சர்மா, ட்ராய் நிறுவனத்தின் தலைவர் மட்டுமல்ல; ஆதார் கார்டை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரும்கூட‘ஆதார் கார்டை உருவாக்கிய நிறுவனத்தின் உயர் அதிகாரிக்கே அந்த கார்டு பாதுகாப்பானதாக இல்லை என்ற நிலையில் சாதாரண  குடிமகனின் தகவல்களுக்கு என்ன பாதுகாப்பு?’ என்று கவலையோடும் கோபத்தோடும் கேட்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.‘ஆதார் கார்டு மூலமாகப்  பெறப்படும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். ஒவ்வொரு குடிமகனின் அந்தரங்கமும் தனிப்பட்ட ரகசியமும் பாதுகாக்கப்படும்...’ என்று மத்திய அரசு  திரும்பத் திரும்பச் சொல்லிவருகிறது. மறுபுறம் அது உகாலாண்மையில்லை என்பதைப் போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இரண்டில் எது சரி? விளக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது.

-இளங்கோ கிருஷ்ணன்