சினிமாவைவிட சீரியலில்தான் சம்பளம் அதிகம் கிடைச்சது- தன் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் இயக்குநர் சதாசிவம் பெருமாள்




‘‘குடும்ப விஷயம் என்பது வெறும் நாலு சுவத்துக்குள்ள நடக்கும் விஷயமில்ல. அது வீட்டைத் தாண்டியும் நடக்கும். அதனாலதான் நான் இயக்குற  சீரியல்கள்ல வெளிப்புறக் காட்சிகளை அதிகம் வைக்கறேன். உறவுகளோட உன்னதத்தையும் வெளிப்படுத்த முயற்சிக்கறேன்...’தெளிவாகப் பேச  ஆரம்பிக்கிறார் சேலம் சிவா என்கிற சதாசிவம் பெருமாள். ‘முந்தானை முடிச்சு’, ‘சக்தி’, ‘மாதவி’, ‘பாசமலர்’, சமீபத்தில் 464 எபிசோடுகளுடன்  நிறைவடைந்த ‘கங்கா’ ஆகிய தொடர்களை இயக்கியவர் இவர். இப்போது ‘கண்மணி’ தொடரை இயக்கி வருகிறார். ரஷ்யாவில் படமாக்கப்பட்ட முதல்த்  தமிழ் தொடர் இதுதான்!

‘‘முதன்முதல்ல என்னை இயக்குநராக்கி அழகு பார்த்தவர் சினி டைம்ஸ் சித்திக் சார். சன் டிவி மாதிரியே என் வளர்ச்சில அக்கறை உள்ளவங்க  ‘ஹோம் மூவி மேக்கர்ஸ்’ சுஜாதா விஜயகுமார் மேம். அவங்க நிறுவனத்துல பல பெரிய இயக்குநர்கள் ஒர்க் பண்ணியிருந்தாலும் அங்க அதிக  எபிசோடுகள் இயக்கிய பெருமை எனக்குதான் உண்டு. அவங்களுக்கு ‘மாதவி’, ‘பாசமலர்’, ‘கங்கா’வை அடுத்து இப்ப ‘கண்மணி’யையும்  இயக்கிட்டிருக்கேன். ஒரே தயாரிப்பாளருடன் தொடர்ந்து பயணப்படுவது சாதாரண விஷயமில்ல. அந்த வகைல நான் அதிர்ஷ்டசாலி. விரைவில் சன்ல  வரப்போற ‘கண்மணி’ நிச்சயம் உங்களுக்கு பிடிச்ச தொடரா இருக்கும். சுந்தர்.சி. சார் படங்கள் மாதிரி ஒவ்வொரு எபிசோடும் கலகலனு போகும். இதுல  பூர்ணிமா பாக்யராஜ் நடிக்கிறாங்க! அவங்களோட முதல் சீரியல் இதுதான்...’’ என்ற சதாசிவம் பெருமாள், ‘சேலம் சிவா’வாக சில காலம் வலம்  வந்திருக்கிறார்.   

‘‘என் முழுப்பேரு சதாசிவம் பெருமாள். ‘கோலங்கள்’ல நான் செகண்ட் யூனிட் இயக்குநரா ஒர்க் பண்ணினேன். அப்ப என்னை எல்லாரும் சிவானு  கூப்பிடுவாங்க.  திருச்செல்வம் சார்கிட்ட சிவானு வேற ஒருத்தரும் அசிஸ்டென்ட்டா ஆக இருந்தார். பெயர்க் குழப்பம் வந்தது. எங்க சொந்த ஊர்  ராசிபுரம் பக்கம் முத்தனம்பாளையம். அப்ப அது சேலம் மாவட்டத்துல இருந்தது. அதனால, நான் ‘சேலம் சிவா’ ஆனேன். அந்தப் பெயர்லயே சில  சீரியல்களை இயக்கினேன். அப்புறம் மாவட்டங்கள் பிரிக்கறப்ப எங்க ஊர் நாமக்கல்மாவட்டத்துக்குள்ள வந்துடுச்சு. அதனால என் ஒரிஜினல்  பெயருக்கே திரும்பவும் வந்துட்டேன்!’’ என்று சிரிக்கும் சதாசிவம் பெருமாள், பாடலாசிரியர் ஆகும் கனவுடன் சென்னைக்கு வந்தவர்.‘‘நாங்க விவசாயக் குடும்பம். அப்பா பெருமாள். அம்மா பழனியம்மாள். எனக்கு ஒரு அண்ணன், ரெண்டு தங்கச்சிங்க. குருசாமிபாளையத்துலதான்  ஸ்கூல் படிப்பை முடிச்சேன். படிக்கிறப்பவே கவிதைகள் எழுதுவேன். ப்ளஸ் ஒன் வரும்போது இலக்கிய விழாக்கள், கவியரங்கங்கள்ல கலந்துகிட்டேன்.  அப்ப நண்பர்கள், ‘சினிமால பாட்டு எழுதினா பெரிய ஆளா வருவ’னு உசுப்பி விட்டாங்க!

எனக்கும் அந்த ஆசை இருந்ததால சென்னைக்கு வந்தேன். இங்க எங்க உறவினர்கள் சின்னசாமியும், அவர் மனைவி தனம் அக்காவும் தங்களோட  புள்ளை மாதிரி என்னை கவனிச்சுக்கிட்டாங்க. திரைப்படக் கல்லூரில சேர முயற்சி பண்ணினேன். இடம் கிடைக்கல. தி.நகர்ல இருந்த ஒரு ஸ்வீட்  ஸ்டால்ல சேல்ஸ்மேனா வேலைக்குச் சேர்ந்தேன். பகல்ல கடைல வேலை, மாலைல பாட்டு எழுத சான்ஸ் தேடறதுனு கோடம்பாக்கத்தை சுத்திச்  சுத்தி வந்தேன். கொஞ்சம் கொஞ்சமா உலகம் புரிய ஆரம்பிச்சது. கைல ஒரு டிகிரி இருந்தா ஈசியா வாய்ப்பு கிடைக்கும்னு பச்சையப்பன் கல்லூரில  தமிழ் இலக்கியம் சேர்ந்தேன். அங்க பாடலாசிரியர்கள் நா.முத்துக்குமாரும் இளையகம்பனும் எனக்கு சீனியர்ஸ். கல்லூரி கவியரங்கத்துல  அவங்களோட நானும் பங்கேற்று பரிசுகளும் வாங்கியிருக்கேன்.

காலேஜ் முடிச்சதும் இயக்குநரானா நாமே பாடல்கள் எழுதலாமேனு தோணிச்சு. அப்ப ‘கிழக்குச் சீமையிலே’ ஹிட் ஆகியிருந்தது. பாரதிராஜா சார்கிட்ட  உதவியாளரா சேர முயற்சி செஞ்சேன்.அண்ணா மேம்பாலம் பக்கத்துல இருந்த அவர் ஆபீசுக்கு தினமும் போவேன். ஆனா, அவரைச் சந்திக்க முடியாம  தவிச்சேன். அவ்வளவு கூட்டம் இருக்கும்...’’ அசை போட்ட சதாசிவம் பெருமாள், பழம்பெரும் இயக்குநர் சி.வி.ராஜேந்திரனின் தயாரிப்பு நிறுவனத்தில்  ஆபீஸ் பாயாகவும் இருந்திருக்கிறார். ‘‘பாரதிராஜா சார் அலுவலகத்துக்கு போயிட்டிருந்தப்ப ஒரு நண்பரோட அறிமுகம் கிடைச்சது. ஒருநாள் ‘இயக்குநர்  சி.வி.ராஜேந்திரன் கம்பெனில ஆபீஸ் பையன் வேலை காலியா இருக்கு. போறியா’னு கேட்டார். எப்படியாவது சினிமா கம்பெனிக்குள்ள நுழைஞ்சா  போதும்னு நினைச்சதால தலையாட்டினேன். சொன்னமாதிரியே ஆபீஸ் பாயாக சேர்த்துவிட்டார்.
http://kungumam.co.in/kungumam_images/2018/20180817/19.jpg
அப்ப அவங்க ‘வியட்நாம் காலனி’ தயாரிச்சிட்டிருந்தாங்க. ஒருநாள் என் கையெழுத்தைப் பார்த்து வியந்த சி.வி.ராஜேந்திரன் சார், ‘படிச்சிருக்கேனு  சொல்லக்கூடாதா தம்பி’னு பாசமா கேட்டு இயக்குநர் சந்தானபாரதி சார்கிட்ட உதவியாளரா சேர்த்துவிட்டார். அந்தப் படத்துல நான் ஒர்க்  பண்ணினதுக்கு எனக்கு ஐநூறு ரூபா சம்பளம் கிடைச்சது!‘சினிமாவுல இவ்வளவுதாம்பா கிடைக்கும். அதுவே நீ சீரியலுக்குப் போனா கைநிறைய பணம் புரளும்’னு ஒருத்தர் சொன்னார். கிண்டல் பண்றார்னு நினைச்சேன். ஆனா, அவர் வாக்கு பொன் வாக்கு! நிம்பஸ் நிறுவனம் தயாரிச்ச  ‘சக்தி’, ‘நீதி’, அப்புறம் ராடன் தயாரிச்ச ‘உதயம்’, ‘ராஜுகாரி’ (தெலுங்கு) சீரியல்கள்ல ஒர்க் பண்ணினேன். அந்த அனுபவத்தோடு ‘கோலங்கள்’ தொடர்ல  ஷெட்யூல் டைரக்டரா சேர்ந்தேன். என் ஒர்க்கை கவனிச்ச திருச்செல்வம் சார், என்னை செகண்ட் யூனிட் இயக்குநராக்கினார். என்னை முதன்முதல்ல  ‘ஸ்டார்ட் கட் ஆக்‌ஷன்’ சொல்ல வச்சது அவர்தான்!

கிட்டத்தட்ட ஆறு வருஷங்கள் ‘கோலங்கள்’ல ஒர்க் பண்ணினேன். விகடன் டெலிவிஸ்டாஸ்ல ஸ்கிரிப்ட் ரைட்டரா இருந்த வே.கி.அமிர்தராஜ் சார் நட்பு  கிடைச்சது. அவர் என்னை சினி டைம்ஸ் சித்திக் சார்கிட்ட அறிமுகப்படுத்தினார். சித்திக் சார் தயாரிப்புல ‘முந்தானை முடிச்சு’ தொடர் மூலமா  இயக்குநரானேன். அப்புறம் சுஜாதா விஜயகுமார் மேம் தயாரிப்புல ‘மாதவி’ தொடர் இயக்கினேன். 2014ல மீண்டும் சித்திக் சாரின் ‘சக்தி’ பண்ணினேன்.  முழுக்க கேரளால எடுக்கப்பட்ட தொடர் அது. ‘பாசமலர்’, ‘கங்கா’ தொடர்கள்ல அதிகம் கவனிக்கப்பட்டேன்...’’ என்று சொல்லும் சதாசிவம் பெருமாளின்  மனைவி பெயர் சிவகாமி. இவர்களுக்கு சுருதி என்ற மகளும், நகுல் என்ற மகனும் இருக்கிறார்கள். மகள் சுருதியின் பெயரில் விளம்பரத் தயாரிப்பு  நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.   

- மை.பாரதிராஜா
படங்கள் : ஆ.வின்சென்ட் பால்