வித்யா ஷங்கர் கவிதைகள்!!கழிப்பறை தவிர்த்து
கண்காணிப்பு காமிரா
இல்லாத இடமென்று
எதுவுமில்லை
வழிபாட்டுத் தலங்களில்
வணிக வளாகங்களில்
மருத்துவமனைகளில்
ஆச்சர்யமாய்
மயானத்திலும்கூட!
யாரோ யாரையோ
முத்தமிட்டதை
வெட்கப்படாமல்
பதிவுசெய்கிறது
செயின் பறித்தவனை
காட்டிக் கொடுக்கும்
நோக்கமின்றி
பதிவு செய்து விடுகிறது
அதிகாரிகள் பார்க்க
தொடை சொறியும்  
சேலையை
சீர்செய்யும் பெண்ணின்
காட்சிகளையும்
பதிவு செய்து தருகிறது
இப்போதெல்லாம்
குற்றச் செயலில்  
ஈடுபடுபவர்களின்
முதல் கவனம்
கண்காணிப்பு  
காமிரா மீதானதாக
இருக்கிறது
சவாலாக!

சருகுகள் அதிரும்
புலிப் பாத நடையில்
கானக வெளியில்
கைத்துப்பாக்கியை
இயக்கும் விரல்களின்  
நடுக்கம்
வீரமல்ல
உயிர் பயம்

மழை நல்லது
யாவருக்கும் - எனில்
வான் மறைக்கக் கூரையும்
ஒண்டி உறங்க
சுவர் மறைப்புமற்றவர்களுக்கு
மழை ஒரு
துன்பியல் நாடகம்

கண்களில்
கருவட்டம்
மெலிந்த தேகம்
வரவழைத்த சிரிப்பு
நீண்டகால
இடைவெளியில்
சந்தித்தபோது
மௌனமாக
இருவரும்
தேநீரைப் பருகினோம்
காலத்தின்
கசப்போடு