வருகை



ஹரன் பிரசன்னா

எவரொருவரின் வருகையின்போதும் பூமிநாதனின் வீடு இத்தனை அல்லோலகல்லோலப்பட்டதில்லை. நான்கு நாட்களாக அந்த வருகைக்கு வீடே  தயாராகிக் கொண்டிருக்கிறது. பூமிநாதனின் அக்கா வாய் ஓயாமல் ஆலோசனைகளை அள்ளி வீசிக்கொண்டிருந்தாள். வீட்டின் கடைக்குட்டி ஸ்வேதா  நான்காம் வகுப்பு வரை வாங்கிய அனைத்துப் பரிசுகளும் துடைக்கப்பட்டுகண்பார்வை படும்படியாக அடுக்கப்பட்டிருந்தன. தன் மருமகள் ஸ்வேதா தனது  வாரிசுதான் என்பதை மிகத் தெளிவாகச் சொல்லிடச் சொல்லி பூமிநாதனிடம் மென்மையாகவும் பூமிநாதனின் மனைவியிடம் கடுகடுப்புடனும் சொல்லி  இருந்தாள்.

பூமிநாதனின் மனைவி பூமிநாதனிடம் சொல்வது போன்ற பாவனையில், “எல்லாருக்கும்தான் வாரிசு...” என்று மட்டும் சொன்னதைக் கேட்ட  பூமிநாதனின் அக்கா, “அத்தைய கொண்டிருக்கான்னுதான் ஊரே பேசுது, இதுல இவ வந்துட்டா...” என்றாள்.பூமிநாதனுக்கு லேசாகத் தலை சுற்றியது.  நான்கு நாட்களாகவே இப்படி தலை சுற்றிக் கொண்டிருந்ததால் அது பழகியும்போய்விட்டது. தனது நாற்பதாவது வயதில் இப்படி தன் வரலாற்றையே  வரப்போகும் திடீர் அக்காவுக்குக் காட்டவேண்டியிருக்கும் என அவன் கனவிலும் நினைத்ததில்லை. அங்கங்கே ஒன்றிரண்டு நரை முடி தோன்றிய  நேரத்தில், தன்னை எடுத்து வளர்த்த அம்மாவைத் தீக்கிரையாக்கிவிட்டு இனி தன் வாழ்நாளைத் தான் மட்டுமே எதிர்கொள்ளவேண்டும் என்கிற  தீவிரத்தில் இருந்தவனை திடீர் அக்கா ஃபோனில் திடீரென அழைத்து, எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை தானும் அத்தானும் தங்கள் மகனுடன் வீட்டுக்கு  வருவதாகச் சொன்னாள்.

பின்னர் பூமிநாதனின் சொந்த அக்கா வீட்டையும் இந்த நான்கு நாள்களையும் மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டாள். “ஏல பூமி, ஒனக்கு  முப்பது நாளு நம்ம பெத்தவ சாகும்போது... இதுவரை ஒரு பய எட்டிப் பாத்ததில்ல. நல்லது கெட்டதுக்கு வருவாளுவொ போவாளுவொ. நமக்குன்னு  ஒரு நாயும் ஒண்ணும் பண்ணதில்ல... இப்ப என்ன ஒறவு? வளத்தவ மகராசி போயிட்டா, ஒட்டிக்கலாம்னு பாக்கதுகளா?” பூமிநாதனின் மனைவி  காபியைக் கலந்துகொண்டு வைத்துவிட்டு வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்முடியாமல், “அவங்க எல்லாருமே நம்மள விட நல்லா  இருக்காங்களாமே... நல்ல வேலையாம் காசாம் சொத்தாம்...” என்றுவிட்டுப் போனாள்.

பூமிநாதனின் அக்கா, “பூமி, பாத்தியா நக்கல. என்னங்கா அவ? நாமதான் அவளுவொகிட்ட ஒட்டிக்கறோம்ங்காளா? நீட்டாம ஒடச்சி பேசச் சொல்லுல...  காசு பணம் இருந்தாக்கா ஆச்சா... சொந்தம்னு யாரு நிக்கா அவளுவொகூட. அதான் ஒட்டப் பாக்காளுவொ... பையனை பெத்து வெச்சிருக்கா... நீ  பொண்ணை பெத்து வெச்சிருக்கேல்லா... எனக்குத்தான் பிள்ளையில்லைன்னு போயிட்டு...” என்றவள் காபியைக் குடிக்க ஆரம்பித்தாள். “என்னடான்னு  பாக்கென் நாலு நாளா காக்கா கத்திக்கிட்டே இருந்தது...” என்ற பூமிநாதனின் மனைவிக்கு, “ஒன் காக்கா ஒடனே கத்திருமே...” என்றாள் பூமிநாதனின்  அக்கா.பூமிநாதனுக்கு இவை எதுவுமே ஒட்டவில்லை. ஒருத்தி அழைத்து வீட்டுக்கு வரேன் என்று மட்டும்தான் சொல்லி இருக்கிறாள். அதற்கு இந்த  அக்கா இப்படிக் குதிப்பது அவனுக்குக் கொஞ்சம் புரியாமல்தான் இருந்தது. அதேசமயம் அக்கா கேட்கும் கேள்விகளும் நியாயமானவைதான் என்றும்  தோன்றியது.

முப்பது நாளில் தன்னையும் ஆறு வயதில் தன் அக்காவையும் விட்டுவிட்டுப் போன அம்மாவின் உறவினர்கள் உதவி என்று ஒரு பைசா  நகட்டியதில்லை. பெற்ற அப்பா இன்னொரு கல்யாணம் செய்துகொண்டு போய்விட, பெரியப்பாவும் பெரியம்மாவுமே வளர்த்தார்கள். பெற்ற அம்மாவின்  தங்கை மகள் நாற்பது வருடம் கழித்து திடீர் அக்காவாக வருகிறாள் என்னும்போது, பூமிநாதனுக்கே இந்த வருகை எதற்காக என்று தோன்றத்தான்  செய்தது.தன் கணவனிடம் சொல்லிவிட்டு, தம்பிக்கு ஒத்தாசையாக இருக்க பூமிநாதனின் வீட்டுக்கே வந்துவிட்டாள் சொந்த அக்கா. “எல, வர்றவ  பேராவது ஒனக்கு தெரியுமால?” என்றவள் தொடர்ந்து, “கார்த்திகாவாம்... நம்ம குடும்பத்துல யாருக்காவது கார்த்திகான்னு பேரு வெச்சிருக்கோமா...  நல்ல பேரு வெச்சிருக்காளுவொ. சித்தி எங்கயாச்சும் நம்மளை பாத்தா அம்மாவை பாத்த மாதிரியே இருக்குன்னு அழுவாளே, அவ பேத்திக்கு நம்ம  அம்மா பேரை வெச்சாளா பாத்தியா. பாசம்ன்றது அதுவா வரணும்ல...” என்றாள்.

உள்ளிருந்து பூமிநாதனின் மனைவி சத்தமாக, “ஸ்வேதா, டிவி சத்தத்த கொறட்டி...” என்றாள்.பூமிநாதனின் அக்காவுக்கு சுருக்கென்றிருந்தது.  “ஸ்வேதான்னு நாமளும் அம்மா பேரை வைக்கலைங்கா ஒன் பொண்டாட்டி... என்னா வாயி அவளுக்கு...” என்றவள் சத்தம் குறைவாக, “ஒண்ணும்  சொகப்படாம செத்தவ என்னை பெத்தவளாவே இருந்தாலும் அவ பேரை என் மருமவளுக்கு வைக்க நான் என்ன லூஸா...” என்று சொல்லிவிட்டு,  “ஸ்வேதா, நீ டிவி பாருட்டி...” என்றாள்.அன்று ஒரே நாளில் ஸ்வேதாவைக் கொண்டுபோய் பாட்டு சொல்லிக்கொடுக்கும் வகுப்பிலும் ஆங்கிலம்  சரளமாகப் பேசச் சொல்லிக் கொடுக்கும் வகுப்பிலும் சேர்த்துவிட்டு வந்தாள். “அவ வந்து கேப்பா... ஒம் பொண்ணை எல்லாம் சொல்லச் சொல்லி  கத்துக்குடுட்டி. நம்மள எளக்காரமா நெனச்சிரக்கூடாது. பெரியம்மை உசுரக் கொடுத்து வளத்திருக்கா எங்களை...” என்றவள் பூமிநாதனிடம், “எங்கல நம்ம  அம்மா ஃபோட்டோவைக் காணோம்?” என்று கேட்டாள்.

“எந்த அம்மாவ கேக்க?” என்றான் பூமிநாதன்.அவளுக்கும் கொஞ்சம் குழப்பமாகவே இருந்தது. யோசிக்காமல் சட்டென்று, “ரெண்டு பேரு  ஃபோட்டோவும்தான்...” என்று சாமர்த்தியமாக பதில் சொன்னாள். “அதான் அத்த ஃபோட்டோ அவ்ளோ பெரிசா தொங்குதே, இன்னும் என்ன?” என்றாள்  பூமிநாதனின் மனைவி. பெரியம்மாவின் ஃபோட்டோ மிகப் பெரியதாக அறையின் மத்தியில் தொங்கிக் கொண்டிருந்தது. தோல் சுருக்கங்களுடன் விபூதி  பூசிக்கொண்டு கம்பீரமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள் பெரியம்மா. “அது தெரியுது, பெத்தவ ஃபோட்டோ எங்கலன்னுதான கேக்கென்...” என்று கேட்டாள்  பூமிநாதனின் அக்கா. பாத்ரூமுக்கு மேலே பரணில் இருந்து ஒரு பெட்டியை இறக்கி அதிலிருந்து அவனைப் பெற்ற அம்மாவின் ஃபோட்டோவை  எடுத்தான் பூமிநாதன். பூமிநாதனுக்கும் அவன் அக்காவுக்கும், அம்மாவின் ஃபோட்டோவை வீட்டில் மாட்டி வைக்காமல் இப்படிப் போட்டு  வைத்திருக்கிறோமே என்று இருந்தது. “வீடு மாத்தி வந்தப்பவே மாட்டணும்னு நினைச்சேன், அப்படியே விட்டுப் போச்சு...” என்றான்.
பூமிநாதனின் அக்கா அந்த ஃபோட்டோவைப் பார்த்து, “என்னல, இப்படி அழுக்குப் படிஞ்சு பொகையா இருக்கு...” என்றாள். பூமிநாதன், “இருக்கது இது  ஒரு ஃபோட்டோதான... அதுவும் பழசு, பின்ன எப்பிடி இருக்கும்?” என்றான்.

ஸ்வேதா, “இதை ஸ்டூடியோக்கு கொண்டுபோனா அழகா கலரா மாத்திடுவாங்க...” என்றாள். பூமிநாதன் ஸ்டூடியோவுக்கு ஃபோட்டோவுடன் போனான்.  “நீ சோத்த போடுட்டி...” என்று பூமிநாதனின் மனைவியிடம் சொல்லிவிட்டு ஸ்வேதாவை அழைத்து, “அவங்க வந்தா இங்கிலீஷ்ல பேசுட்டி... அவ  பையன் மெட்ராஸ்ல படிக்காம்...” என்றாள். ஸ்வேதா, “ஐ நோ பாட்டி. யூ டோண்ட் வொர்ரி...” என்றாள். பாட்டி என்றவளை அருகே இழுத்து கன்னம்  தொட்டு நெட்டி முறித்து “பாட்டிங்காதட்டி, மாமாவுக்கு பிடிக்காது...” என்று சொன்னாள்.அடுத்தடுத்து என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று  பூமிநாதனின் மனைவிக்குப் பட்டியலிட ஆரம்பித்தாள் அக்கா. பெரியம்மாவின் ஃபோட்டோவுக்கு பெரிய மாலை ஒன்று போடவேண்டும். பெரியம்மாவும்  பெரியப்பாவும் இருக்கும் ஃபோட்டோவையும் நடு ஹாலில் மாட்டவேண்டும். அதற்கொரு சந்தன மாலை போடவேண்டும். அவளது கல்யாண ஆல்பம்,  பூமிநாதனின் கல்யாண ஆல்பம், ஸ்வேதாவின் முதல் பிறந்த நாள் ஆல்பம் எல்லாவற்றையும் வருகிறவர்கள் கண்ணில்படும்படி வைக்கவேண்டும்.
 
பூமிநாதனின் மனைவி, கார்த்திகா வரும் ஒரு நாளில் நான்கைந்து முறையாவது பெரியம்மாவைப் பாராட்டிப் பேசவேண்டும். பெரியம்மா இறந்த இந்த  ஆறு மாதத்தில் வாழ்க்கையிலேயே ஒரு பிடிப்பில்லை என்று தானும் பூமிநாதனும் சொல்லவேண்டும். பூமிநாதன், பெரியம்மா பெரியப்பா  இல்லையென்றால் தாங்கள் பிச்சையெடுக்கத்தான் போயிருப்போம் என்பதை நிச்சயம் சொல்லியே ஆகவேண்டும்.ஸ்வேதாவின் படிப்பு, அவளது  ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு, பாட்டு சொல்லிக் கொள்ளும் வகுப்பு என எல்லாவற்றையும் சொல்லவேண்டும். அவளது பையனுடன் ஸ்வேதாவை  அதிகம் பேசவிடக்கூடாது.

இதையெல்லாம்விட முக்கியமாக ஸ்வேதா அப்படியே தன்னைப் பெற்ற அம்மாவை உரித்து வைத்திருப்பதாக எத்தனை முறை முடியுமோ அத்தனை  முறை சொல்லவேண்டும். அவர்கள் போனபின்பு வீட்டில் எல்லாருக்கும், தான் திருஷ்டி சுத்திப் போட தன் கணவன் தனக்கு நினைவூட்ட வேண்டும்.இத்தனை விஷயங்களுக்கு மத்தியில் எதையெல்லாம் மறந்தோம் என்று அவள் யோசித்துக்கொண்டிருந்த நாளில் அந்த ஞாயிற்றுக் கிழமை  வந்துவிட்டது. பூமிநாதனின் மனைவி சமையலில் மும்முரமாக இருந்தாள். எல்லாம் சரியாக இருக்கிறதா என்று வீட்டைச் சுற்றிப் பார்த்தவள்  அரக்கப்பரக்க ஓடிவந்து, “ஏல கோட்டி, அம்மை ஃபோட்டோ எங்கல?” என்று சத்தமாகக் கேட்டாள். “இதோ மாட்டப் போறேன்...” என்றான். “எப்ப, ஒன் திடீர் அக்கா குடும்பத்தோட வந்துட்டு போன பின்னாடியா?” என்றாள்.

உறைக்குள் வைத்துப் பொதியப்பட்டிருந்த பெரிய ஃபோட்டோவை பூமிநாதன் வெளியே எடுத்தான். சிறிய ஃபோட்டோவைப் பெரியதாக்கி வண்ணம்  சேர்த்துத் தந்திருந்தான் ஸ்டூடியோக்காரன். கறுப்பு வெள்ளை ஃபோட்டோ, அவர்களது அம்மா கல்யாணத்துக்கு முன்பு எடுத்த ஃபோட்டோ.  ஸ்டூடியோக்காரன் இதில் தாலி சேர்த்து, பூ வைத்து, நீல நிறப் புடவையில் அரக்கு பார்டர் வைத்துத் தந்திருந்தான். அதைப் பார்த்த பூமிநாதனின்  அக்கா, “நீ அம்மையெ பாத்ததில்லேல்லா, அதான் ஒனக்கு ஒண்ணும் தெரியல. பொட்டு இப்படி நீளமா திலகம் மாதிரித்தான் வெப்பா... வட்டப் பொட்டு  வெச்சி நாம் பாத்ததே இல்ல பாத்துக்கொ. கட்டுற சேலைல ஒரு சுருக்கம் இருக்காது. நிறம் கொஞ்சம் மட்டா இருந்தாலும் கண்ணு அப்படியே தீர்க்கமா  இருக்கும்ல... ஒடம்பை சிக்குன்னு வெச்சிருப்பா. நீலக்கலர்னா அவளுக்கு உசிரு. போட்டோலயும் அதுவா அமைஞ்சிருக்கு பாரேன். அம்மை எனக்கு  இன்னும் அப்படியே நினைப்புல நிக்கா...” என்றாள்.

அவன் தனக்கு இதெல்லாம் ஒன்றுமே தெரியாது என்றும், தனக்கு எல்லாம் பெரியம்மாதான் என்றும், அவதான் அம்மாவே என்றும் சாதாரணமாகச்  சொல்லிவிட்டுப் போனான். பூமிநாதனின் அக்கா, “எனக்கு மட்டும் என்னவாம்...” என்று சொல்லிக்கொண்டே, பெரியம்மா பெரியப்பாவுக்கு அடுத்து இந்த  ஃபோட்டோவையும் மாட்டிவிட்டுக் கொஞ்சம் தள்ளி நின்று பார்த்தாள். பெரியப்பா, பெரியம்மா, அம்மா. பூமிநாதனை இழுத்துக்கொண்டு வந்து தன்னுடன்  நிறுத்திக்கொண்டு சொன்னாள், “நம்ம ஒலகமே இவ்வளவுதாம்ல...” என்றாள். அப்போது அழைப்பு மணி அடிக்கும் ஓசை கேட்டது.“அவங்க  வந்துட்டாங்க...” என்று பரபரத்தாள் பூமிநாதனின் அக்கா. “வரட்டுமே... என்ன இப்போ?” என்று சொல்லிக்கொண்டே பூமிநாதனின் மனைவி சென்று  கதவைத் திறந்தாள். பின்னாலேயே பூமிநாதனும் ஸ்வேதாவும் பூமிநாதனின் அக்காவும் சென்றார்கள். வாசலில் கார்த்திகாவும் அவளது கணவனும்  அவர்களது மகனும் நின்றிருந்தார்கள். பூமிநாதனின் அக்காவுக்குத் தலை சுற்றுவது போலிருந்தது. கார்த்திகா தலை முழுக்க மல்லிகைப் பூ இட்டு,  நெற்றியில் நீளமாகத் திலகமிட்டு, அரக்கு நிற பார்டர் போட்ட நீல நிறப் புடைவை கட்டி மேட்ச்சிங் ஜாக்கெட் அணிந்து, தீர்க்கமான கண்களுடன்  மாநிறத்தில் சிக்கென நறுக்குத் தெறித்தாற்போல் நின்றிருந்தாள். பின்னாலிருந்த மரத்திலிருந்து காகம் கத்தியது.     

முதலைக்கடி!

தாய்லாந்தின் சியாங்ராயிலுள்ள புகழ்பெற்ற வனவிலங்கு பூங்காவான போக்கதாராவில் முதலை சாகசங்கள் வெகு பிரபலம். அன்றும் அப்படித்தான்  பயிற்சி யாளர் குன் புசாவிட் முதலையின் வாயில் கைவைத்து சாகசம் செய்தார். அப்போது திடீரென முதலை வாயை லாக் செய்ய புசாவிட்டின் கை  உள்ளே மாட்டிக்கொண்டது. ஆயிரக்கணக்கான ஆடியன்ஸ் சூழ்ந்திருக்க நடந்த பெரும்போராட்டத்தில் புசாவிட்டின் கையோடு அவரும் உயிருடன்  மீட்கப்பட்டுள்ளார்.கோபம் வர்ற மாதிரி வீரச்செயல் எதற்கு?

சிக்னலில் வேலைவாய்ப்பு!

அமெரிக்காவில் சிலிக்கன் வேலிக்காரரான டேவிட் கஸாரெஸ் ‘‘வீடற்றவன்; பசியோடு இருக்கிறேன். என் ரெஸ்யூமை கொஞ்சம் பாருங்கள்...’’ என  போர்டுடன் ட்ராஃபிக் சிக்னலில் வேலை தேடி நின்றார். உடனே அவரது கோரிக்கை ட்விட்டரில் வைரலாக, இப்போது கூகுள், நெட்ஃபிளிக்ஸ் உட்பட  200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை வழங்க முன்வந்துள்ளன!

சிவப்பு ரோஜா  சந்தேகம்!


லக்னோவில் சாலைவிதிகளைப் பின்பற்றிய டூவீலர் மனிதருக்கு சப்-இன்ஸ்பெக்டர் பிரேம் சகி ரோஜா கொடுத்து வாழ்த்தியது வினையானது. ரெட் ரோஸுடன் வீட்டுக்குச் சென்ற வாலிபரை மனைவி டவுட்டுடன் கேள்விகளால் வறுத்தெடுத்தார். மிரண்ட வாலிபர் பிரேமிடம் அவர் ரோஜா  கொடுத்தபோது எடுத்த போட்டோவை வாங்கி மனைவியை சமாதானப்படுத்திய செய்தியை பிரேம் சமூகவலைத்தளத்தில் வெளியிட, பதிவு காமெடி  நெ.1 ஆகியுள்ளது!