உச்சநீதிமன்றமே உயர்நீதிமன்றமானது!



தல புராணம்

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் உருவாக்கப்பட்டு 156 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. அதன் பழமையும், பாரம்பரியமுமான, ‘இந்தோ சாராசெனிக்’ பாணி  கட்டடத்தின் வயதும் 125ஐ தொட்டு நிமிர்ந்து நிற்கிறது!இப்படி சிறப்புகள் வாய்ந்த மெட்ராஸ் உயர்நீதிமன்றம் முதலில் உச்சநீதிமன்றமாக இருந்த கதை  எத்தனை பேருக்குத் தெரியும்?! மெட்ராஸில் முதல் வழக்காடு மன்றம் 1678ல் வந்ததைக் கடந்த இதழில் பார்த்தோம். அதன்பிறகு நடந்ததெல்லாம்  விறுவிறுப்பான பக்கங்கள். ஆம்; நீதித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. முதலாவதாக சட்டம் படித்த ஒரு வழக்கறிஞரை நியமிப்பது  என முடிவானது. இதற்கான சாசனத்தை இரண்டாம் சார்லஸ் மன்னர் அளித்ததும், மெட்ராஸுக்கு 1687ம் வருடம் முதல் ‘ஜட்ஜ் அட்வகேட்’ ஆக, சர்  ஜான் பிக்ஸ் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் இங்கிலாந்தின் பிளைமவுத் நகரில் பதிவாளராக பணியாற்றியவர்.

இதே வருடம் டிசம்பரில் மெட்ராஸ் மாநகராட்சி உருவாக்கப்பட்டு மேயர், ஆல்டர்மேன் எனப்படும் நகர்மன்ற உறுப்பினர்கள், வழக்கு விசாரணை  நடுவர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அடுத்த வருடமே மேயர் நீதிமன்றம் தொடங்கப்பட்டு சிவில் மற்றும் குற்ற வழக்குகளை விசாரிக்கும்  அதிகாரம் வழங்கப்பட்டது. இந்த மேயர் கோர்ட் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை நடக்கும். மேயர் மற்றும் மூன்று மூத்த நகர்மன்ற  உறுப்பினர்களைக் கொண்ட நீதிபதிகள் குழு வழக்கை விசாரிக்கும்.  தவிர, ஏற்கனவே இருந்த சத்திரம் நீதிமன்றமும் வாரம் இருமுறைகூடி சிறிய  வழக்குகளை விசாரித்தது. 18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மெட்ராஸில் நான்கு விதமான நீதிமன்றங்கள் இருந்தன. முதலாவதாக மேயர் நீதிமன்றம்.  இது அனைத்து சிவில் மற்றும் குற்ற வழக்குகளை விசாரித்தது. இரண்டாவதாக கடற்படை நீதிமன்றம். ஜட்ஜ் அட்வகேட்டைத் தலைவராகக் கொண்ட  இந்த நீதிமன்றம் கடற்கொள்ளை சம்பந்தமான வழக்குகளைக் கவனித்தது.

மூன்றாவதாக பழைய சத்திர நீதிமன்றம். இங்கு சத்திரத்தின் தலைமை அதிகாரி தீர்ப்பு வழங்கினார். நிறைவாக,  கடற்படை நீதிமன்றமும் மேயர்  நீதிமன்றமும் தரும் தீர்ப்புகளை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் இடமாக கவர்னர் நீதிமன்றம் திகழ்ந்தது.இருந்தும், நீதி நிர்வாகத்தில் கடும் சிக்கல்  நிலவியே வந்தது. இதனால், சட்ட ஆலோசகர் ஒருவர் தேவையெனக் கருதப்பட்டது. இப்படியாக உயர்நிலையில் இருந்த நீதிமன்றத்துக்கு அட்டார்னி  ஜெனரலாக டேனியல் பூ பாய் என்பவர் நியமிக்கப்பட்டார். இவரது பணி ஜட்ஜ் அட்வகேட் முன்பு வரும் கொலை மற்றும் கடும்குற்ற வழக்குகளை  ஏற்று நடத்துவது.

இதனையடுத்து, 1726ல் முதலாம் ஜார்ஜ் மன்னரால் அளிக்கப்பட்ட சாசனம் மேயர் நீதிமன்றத்துக்குக் கூடுதல் அதிகாரம் அளித்தது. இவையெல்லாம்  கோட்டையிலிருந்து பத்து மைல் தொலைவுக்குள் உள்ள மெட்ராஸ் பட்டினத்துக்கு மட்டுமே செல்லுபடியாகும். இதே வருடம் இங்கிலாந்தில் உள்ளது  போல இங்கும் ெஷஃரீப் என்ற பதவியும், அவருக்கு சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றமும் அமைக்கப்பட்டது. ஆனால், மூன்றாண்டுகளில் இந்த  நீதிமன்றம் கலைக்கப்பட்டது.  

1746ல் மெட்ராஸ் பிரெஞ்சு வசம் சென்றதும் இங்கே எந்தப் பணிகளும் நடக்கவில்லை. பிறகு, 1749ல் மீண்டும் மெட்ராஸ் ஆங்கிலேயரிடம் வந்ததும்  முதல் வேலையாக கருப்பர் நகரம் இடிக்கப்பட்டு அந்த இடத்தை காலியாக விட்டு வைத்தனர். 1753ம் வருடம் மீண்டும் மேயர் நீதிமன்றம்  உருவாக்கப்பட்டது. இந்த நீதிமன்றம் தொடர்ந்து பல ஆண்டுகள் நல்லமுறையில் இயங்கியது. பிறகு, உள்ளூர் மக்களின் அனைத்து சிவில்  வழக்குகளையும் கையாள கச்சேரி நீதிமன்றம் என ஒன்று நிறுவப்பட்டது. ஆனால், சில வருடங்களில் இதுவும் ஒழிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில், நீதி நிர்வாகத்தில் ஒரு புதிய வெளிச்சமாக 1798ம் வருடம் பதிவாளர் நீதிமன்றம் என்பது உருவாக்கப்பட்டது. முதல் பதிவாளராக சர்  தாமஸ் ஸ்ட்ரேஞ்ஜ் என்பவர் நியமிக்கப்பட்டார். இந்நேரம் மெட்ராஸ் நகரமும் பத்து மைல் என்பதிலிருந்து கூடுதலாக விரிவாக்கம் செய்யப்பட்டது.  பின்னர், மேயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தும் இந்தப் பதிவாளர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன. ஆனால், இதுவும்  நீண்டநாட்கள் நீடிக்கவில்லை.1801ம் வருடம் ‘சுப்ரீம் கோர்ட் ஆஃப் மெட்ராஸ்’ தோற்றுவிக்கப்பட்டதும் அதனுடன் பதிவாளர் நீதிமன்றம்  இணைக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டுக்கு ஒரு தலைமை நீதிபதியும் இரண்டு துணை நீதிபதிகளும் நியமிக்கப்பட்டனர்.

இப்படியாக சுப்ரீம் கோர்ட்டின் முதல் தலைமை நீதிபதியாக சர் தாமஸ் ஸ்ட்ரேஞ்ஜே நியமிக்கப்பட்டார். அவருக்குத் துணை நீதிபதிகளாக ஹென்றி  வில்லிம், பெஞ்சமின் சல்லிவன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.மாகாண கவர்னருக்கு அடுத்த இடத்தில் தலைமை நீதிபதி இருந்தார். இதேபோல்,  கவர்னரின் நிர்வாகக் குழுவினருக்கு அடுத்தபடியாக துணை நீதிபதிகள் பணியாற்றினர்.1802ம் வருடம் கொண்டு வரப்பட்ட விதிமுறைகளின்படி  ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்து சிவில் வழக்குகளையும் விசாரிக்க ஜில்லா நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. இந்த நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை  எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாகாண நீதிமன்றமும் அதற்கு மேல்முறையீடாக Sudder Adawlut எனப்படும் தலைமை சிவில் நீதிமன்றமும்,  க்ரைம் வழக்குகளுக்கு சர்க்கியூட் நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டன.இதேபோல், Foujdary Adawlut எனப்படும் தலைமை குற்ற நீதிமன்றமும்  உருவாக்கப்பட்டது. பின்னர், இதில் சர்க்கியூட் நீதிமன்றமும், மாகாண நீதிமன்றமும் 1843ம் வருடம் ஒழிக்கப்பட்டன.

இந்நிலையில், 1857ல் நடந்த சிப்பாய்க் கலகம் கிழக்கிந்தியக் கம்பெனியின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அதன் ஆட்சி அஸ்தமனமாக,  பிரிட்டிஷ் அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் இந்தியா வந்தது.1861ம் வருடம் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா உள்ளிட்ட  இந்திய நகரங்களில் உயர்நீதிமன்றங்கள் உருவாக்கும் சட்ட வடிவுக்கு ஒப்புதல் வழங்கப்பட, மெட்ராஸில் சுப்ரீம் கோர்ட் உள்ளிட்ட அனைத்து  நீதிமன்றங்களும் அகற்றப்பட்டன. 1862ம் வருடம் ஜூன் 26ம் தேதி விக்டோரியா மகாராணி வழங்கிய அதிகாரபூர்வ ஒப்புதல் வாயிலாக உச்ச  நீதிமன்றம்உயர்நீதிமன்றமாக செயல் வடிவம் பெற்றது.ஆனால், ஆகஸ்ட் 15ம் தேதிதான் உயர்நீதிமன்றம் முறையாகத் திறக்கப்பட்டது. 85 வருடங்கள்  கழித்து இதே நாளில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது!

உயர்நீதிமன்றத்துக்கு ஒரு தலைமை நீதிபதியும், ஐந்து நீதிபதிகளும் நியமிக்கப்பட்டனர். முதல் தலைமை நீதிபதியாக சர் கோலே ஹர்மன்  ஸ்காட்லாண்ட் என்பவர் வந்தார். இதன்பிறகு நடந்த வரலாற்றை விவரிக்கிறார் மூத்த வழக்கறிஞரும், உயர்நீதிமன்ற கட்டட பாரம்பரியக் குழுவின்  உறுப்பினருமான என்.எல்.ராஜா.‘‘1862ல் தொடங்கப்பட்ட உயர்நீதிமன்றம் கடற்கரைச் சாலையிலிருந்த பென்டிங்க் கட்டடத்தில் இருந்து செயல்பட்டது.  அதற்குமுன்பு அந்தக் கட்டடத்தில் மெட்ராஸ் உச்சநீதிமன்றம் அறுபது ஆண்டுகளாக இயங்கியது. 1980களில் இடிக்கப்பட்ட இந்தக் கட்டடம் இருந்த  இடத்தில், இப்ேபாது மாவட்ட கலெக்டர் அலுவலகம் இருக்கிறது! பென்டிங்க் கட்டடம் சிறியது என்பதால், வழக்குகள் அதிகரிக்க அதிகரிக்க இடம்  போதவில்லை. புதுக் கட்டடத்தின் அவசியத்தை எல்லோரும் உணர்ந்தனர். அதற்கான இடம் தேடும்போது, ஏற்கனவே பிரெஞ்சுப் போரால் காலியான  கருப்பர் நகரம் கண்ணில்பட்டது. அதில், லைட்ஹவுஸ் இயங்கி வந்தது. இதனால், அந்த இடத்தில் ஐகோர்ட் கட்ட தீர்மானிக்கப்பட்டு, 1888ல் புதுக்  கட்டடத்திற்கு அஸ்திவாரம் போடப்பட்டது.

அப்போது அரசின் கட்டடக்கலை ஆலோசகராக இருந்த ஜெ.டபுள்யூ.பிராஸிங்டன் திட்டத்தைத் தயாரித்தார். பின்னர், ஹென்றி இர்வின் மேலும் டிசைன்  செய்ய, நம்பெருமாள் செட்டி அழகாகக் கட்டி முடித்தார். முதலில், ரூபாய் 9 லட்சத்து 45 ஆயிரம் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டது. பின்னர் மற்ற  கோர்ட்டுகள் எல்லாம் கட்டி முடிக்க 12 லட்சத்து 98 ஆயிரத்து 163 ரூபாயாகச் செலவு கூடியது. நான்காண்டுகளில் பணி முடிக்கப்பட்டதும் 1892ம்  வருடம் ஐகோர்ட் திறக்கப்பட்டது...’’ என்னும் ராஜா கடந்த சில வருடங்களாக மெட்ராஸ் தினத்தையொட்டி உயர்நீதிமன்றத்தில் பாரம்பரிய நடை  பயணம் ஒன்றை நடத்தி வருகிறார்.

‘‘ஐகோர்ட்டின் பெரிய டவர் 1896லேயே முடிக்கப்பட்டது. அதன் பிறகே லைட்ஹவுஸ் அங்கே மாறியது. முதலில் லைட்ஹவுஸ் ஐகோர்ட்டின் மையப்  பகுதியில் இருந்து செயல்பட்டது. ஐகோர்ட் கட்ட இடம் தேவையென்றதும் அதை இடிக்காமல் அப்படியே பெயர்த்து தென்கிழக்குப் பக்கமாக நிறுவினர்.  ஐகோர்ட்டின் உள்ளிருக்கும் வளைவுகள்,  விதானங்கள், கோபுரங்கள் என ஒவ்வொன்றும் அழகு வாய்ந்தவை. இதன் ஏரியல் வியூவைப் பார்க்கும்  போது கிராஸ் போல இருக்கும். இதையெல்லாம் என் பாரம்பரிய நடையில் மக்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். அதனுடன் பழமையையும்  பேசுகிறேன்.அன்று, இதனுள் சிறிய வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டுகளும் இருந்ததால் இதனை ஐகோர்ட் காம்ப்ளெக்ஸ் என்றே அழைத்தனர்.  இங்கிலாந்துக்குப் பிறகு உலகின் இரண்டாவது பெரிய ஐகோர்ட் காம்ப்ளெக்ஸ் இதுதான்!’’ எனப் பெருமை பொங்க முடித்தார் என்.எல்.ராஜா!

படங்கள் உதவி: An iconic splendour-THE MADRAS HIGH COURT BUILDING நூல்            
- பேராச்சி கண்ணன்/ராஜா

சில தகவல்கள்

*    முப்பத்தி ஆறு ஏக்கரில் அமைந்திருக்கிறது ஐகோர்ட் வளாகம்.

*    உள்ளே மனுநீதிச் சோழன், பாஷ்யம் ஐயங்கார், முத்துசாமி ஐயர், ராஜமன்னார், அம்பேத்கர் ஆகியோருக்கு சிலைகள் உள்ளன. தவிர,  ஐகோர்ட் புகழைப் பறைசாற்றும் மியூசியமும், நான்கு நூலகங்களும் செயல்பட்டு வருகின்றன.
 
*    இதில், பாஷ்யம் ஐயங்கார் பிரிட்டிஷ் இந்தியாவின் ஆக்டிவ் அட்வகேட் ஜெனரலாக இருந்த முதல் இந்தியர்.

*    உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த முதல் இந்தியர் முத்துசாமி ஐயர். இவர் 1893ல் தலைமை நீதிபதியாகவும் செயல்பட்டுள்ளார்.

*    சுதந்திரத்துக்குப் பிறகு மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதியாக ராஜமன்னார் இருந்தார். இந்தப் பெருமைகளால்  இவர்களுக்கு இங்கே சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

*    இதன் பாரம்பரியத்தைக் காக்க 2007ல் பாரம்பரிய குழு ஒன்று அமைக்கப்பட்டு அதன்மூலம் நிறைய சீரமைப்புப் பணிகள் செய்யப்பட்டு  வருகின்றன.